Thursday, November 27, 2003

பினாங்கு தமிழ் சினிமா திரையரங்குகள்

பினாங்கில் உள்ள சுற்றுலா தளங்களைப் பற்றி எனது முந்தைய குறிப்புக்களில் கொஞ்சம் சொல்லியிருந்தேன். கலாச்சார மையங்களாக இருந்தாலும் சரி, ஓய்வாக பொழுதைக் கழிப்பதாக இருந்தாலும் சரி, பினாங்கு மிகச் சிறந்த ஒரு ஊர் என்றே சொல்ல வேண்டும். பினாங்கில் ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் இருப்பது போல அடிக்கடி தமிழ் படங்களை திரையிடும் 2 திரையரங்குகள் இருந்தன. ஒன்றின் பெயர் Rex; மற்றொன்று Paramound. இந்த இரண்டு திரையரங்குகளிலும் குடும்பத்தோடு சென்று சில படங்களைப் பார்த்த ஞாபகம் எனக்கு இருக்கின்றது. (ஆட்டுக்கார அலமேலு என்ற சிவகுமார்-ஸ்ரீபிரியா நடித்த ஒரு படம் தான் அப்போது கடைசியாக நான் பார்த்த படம்)

அதற்குப் பிறகு இடையில் சில ஆண்டுகள் தமிழ் படங்களே திரையிடப்படாமல் இருந்தன. ரஜினியின் பாண்டியன், அண்ணாமலை போன்ற படங்கள் வர ஆரம்பித்தவுடன் பினாங்கிலும் சில திரையரங்குகள் தமிழ் படங்களைத் திரையிடுவதில் மீண்டும் ஆர்வம் காட்ட ஆரம்பித்தன. ரஜினியின் படத்தைப்பார்ப்பதற்காகத் திரையரங்கில் கூடிய மக்கள் கூட்டத்தையும் அதிலுள்ள ஆர்வத்தையும் பார்த்த சீன திரையரங்கு உரிமையாளர்கள், தமிழ் படங்களில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தனர். அந்த வகையில் ஓடியன் திரயரங்கு இதில்முன்னோடி. படிப்படியாக இப்போது பினாங்கு முழுவதும் இருக்கின்ற மொத்த திரயரங்குகளில் ஏறக்குறைய நான்கில் தமிழ் படங்கள் காட்டப்படுகின்றன.

பொதுவாகவே மலேசியாவில் இருக்கும் மலாய் இனத்தவர்களுக்கு ஹிந்திப் படங்கள் என்றால் கொள்ளைப் பைத்தியம். இளம் வயதுப் மலாய் பெண்களில் பலர் ஷாருக்கான் மற்றும் கமலஹாசன் பைத்தியங்களாகவே இருக்கின்றனர் இப்போது. மலாய் ஆண்களோ ஐஸ்வர்யாராயின் மேல் தீரா காதல் கொண்டிருக்கின்றனர். ஆக இந்தியக் கலாச்சாரம் என்பது அன்னியமான ஒன்றல்ல மலாய்க்காரர்களுக்கு. அதனால் மலாய் இனத்தவர்களும் கூட விரும்பிப் பார்க்கும் படங்களாக தமிழ் படங்கள் ஆகிவிட்டன.

Monday, November 24, 2003

என் இசை ஆசிரியர் - 2

சங்கீத வகுப்பு ஆரம்பித்த சில மாதங்களிலேயே ஆசிரியர் எங்களை ஹார்மோனியப் பெட்டி வாங்கிக் கொள்ளுமாறு சொல்லிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் தான் இந்தியாவிலிருந்து பினாங்கிற்கு இந்திய ஆடைகள் மற்றும் பல வழிபாட்டு பொருட்களையும் வரவழைக்கும் வியாபாரி ஒருவர் எங்கள் அம்மாவிற்கு தஞ்சாவூரிலிருந்து பொருட்கள் கொண்டு வந்திருந்தார். (எங்கள் அம்மா தஞ்சாவூரிலிருந்து வந்தவர். அவரது தம்பிகள் இருவர் இன்னமும் அங்கு தான் இருக்கின்றனர். ) இவர் வந்திருந்த சமயத்தில் எங்களுக்கு இசைவகுப்பு நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் எங்களுக்கு அடுத்த முறை வரும் போது ஒரு ஹார்மோனியப் பெட்டியைப் கொண்டுவரும்படி அவரிடம் கூறிவைத்தார்.

சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வந்த அந்த வியாபாரி எங்களுக்கு ஒரு ஹார்மோனியப் பெட்டியைக் கொண்டுவர மறக்கவில்லை. அதைப் பார்த்த எங்களுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. ஆனால் அது ஒரு புதிய ஹார்மோனியப் பெட்டி அல்ல. யாரோ பயன்படுத்திய பழைய ஹார்மோனியப் பெட்டிதான் என்பதை சில நிமிடங்களில் கண்டுபிடித்து விட்டோ ம். அதை தெரிந்து கொண்ட அந்த ஆசாமி, அந்த ஹார்மோனியப் பெட்டியின் வரலாற்றைப் பற்றிக் கூற ஆரம்பித்தார்.


இந்த ஹார்மோனியப் பெட்டியை இளையராஜா வைத்திருந்தாராம். ஆரம்ப காலத்தில் படங்களுக்காக முயற்சி செய்துகொண்டிருந்த போது மற்றும் கலை நிகழ்ச்சிகள் செய்யும் போதெல்லாம் இந்த ஹார்மோனியப் பெட்டியைத்தான் பயன்படுத்துவாராம். பிறகு கொஞ்ச நாள் இதனை மலேசிய வாசுதேவனிடம் கொடுத்திருந்தாராம். அவர் வேறு மற்றொரு ஹார்மோனியப் பெட்டியை வாங்கியவுடன் இந்த ஆசாமியிடம் கொடுத்து எடுத்துக் கொள்ளச் சொன்னாராம். அந்த ஹார்மோனியப் பெட்டியை எங்களுக்குக் கொடுப்பதாக முகம் முழுக்க புன்னகை வழிய எங்களுக்கு கதை (விட்டார்) சொன்னார். அப்போது ஆச்சரியம் தாங்கமுடியாமல் இந்தக் கதையைக் கேட்டு மகிழ்ந்திருக்கின்றோம். இப்போது நினைத்தால் சிரிப்பாகத்தான் இருக்கின்றது.

Thursday, November 20, 2003

என் இசை ஆசிரியர் - 1

என் அம்மா தமிழகத்திலிருந்து வந்தவர். கர்நாடக இசையையயும் ஓரளவுக்குக் கற்றவர்; அதனால் எனக்கும் ஒரு வயதே மூத்தவளான என் அக்காவிற்கும் சங்கீத ஞானம் கொஞ்சமாவது வர வேண்டுமே என்ற ஆதங்கத்தில் எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சில கீர்த்தனைகளைக் கற்றுக் கொடுப்பார். அதோடு தமிழில் அமைந்த தேவாரப் பாடல்களையும் ஆலயங்களுக்குச் செல்லும் போதெல்லாம் பாடுவதும் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கமானது. கர்நாடக இசையை முறையாகப் படிக்க வேண்டும் என்பது அவருக்கு ஆசை. ஆக எங்களுக்காக ஆசிரியரைத் தேட ஆரம்பித்தார். தமிழகத்தில் இருப்பது போல மிகச் சுலபமாக இசை ஆசிரியரை மலேசியாவில் கண்டு பிடிக்க முடியாது. முறையான இசை ஆசிரியர்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் கிடைப்பார்கள்.

என் அம்மாவின் தேடுதல் வீண் போகவில்லை. பேராக் மாநிலத்தில் பல இடங்களில் இசை வகுப்புக்களை நடத்தி வந்த திரு சிவ சுப்ரமணியத்தைப் பற்றி நண்பர்கள் வழியாக கேள்விப்பட்டு அவரை பினாங்கு மாநிலத்திற்கும் வரவழைக்க வேண்டும் என முடிவெடுத்தார். திரு சிவசுப்ரமணியம் அவர்கள் தமிழகத்தில் மிகப் பிரபலமான நாகசாமி பாகவதரின் இளைய சகோதரர். இவர் மலேசியாவிலேயே பல ஆண்டுகளாக தங்கி விட்டவர். இங்கேயே திருமணமாகி குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் வந்து விட்டனர்.


என் அம்மா தீவிர முயற்சி செய்து அவரை பினாங்கு மாநிலத்திலும் இசை வகுப்புகளை ஆரம்பிக்க வைத்து விட்டார். ஒவ்வொரு வாரமும் எங்கள் இல்லத்திலேயே செவ்வாய் கிழமைகளில் இசை வகுப்பு நடைபெறும். எங்கள் இருவரோடு மேலும் பலர் இந்த வகுப்புக்களில் கலந்து பயிற்சி எடுத்து வந்தனர். அதில் ஒரு கிறிஸ்தவ பாதிரியாரும் அடங்குவார். முதலில் அவ்வளவாக ஈட்டுபாடு வரவில்லையென்றாலும் போகப் போக கர்நாடக இசை எனது வாழ்க்கையில் மிக முக்கிய அங்கத்தை வகிக்கும் அளவுக்கு எனக்கு நெருங்கியது. ஆசிரியர் சிவசுப்ரமணியம் அவர்களோடு எப்போதும் அவரது மனைவியும் கூடவே வருவார்கள். இவர் பாடம் நடத்தும் நேரத்தில் கையில் துணியை வைத்து தைத்துக் கொண்டோ பின்னல் செய்து கொண்டோ இருப்பார். இவரோடு சேர்ந்து பாடுவது இல்லை (சிந்து பைரவியில் வரும் பைரவி போல்..:-) ).

மலேசியாவில் இருந்த வரையில் இவரிடம் பல ஆண்டுகளாக இசை பயின்றிருக்கின்றேன். ஆசிரியருக்குப் பிடித்த மாணவர்களில் நானும் ஒருத்தியாக இருந்தது எனக்கு கொஞ்சம் பெருமையாகவும் இருக்கும். அவரோடு சேர்ந்து 'சபாபதிக்கு வேறு தெய்வம்' என்ற கீர்த்தனையை ஒரு முறை மேடையில் கச்சேரியில் பாடியது எனக்கு மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்று. இவர் மூலமாக எங்களுக்குக் கிடைத்த ஹார்மோனியப் பெட்டியைப் பற்றிய ஒரு கதை உண்டு. அதனை வேறொரு முறை சொல்கிறேன்.

Saturday, November 15, 2003

நவராத்திரி - சீனர்களுக்கும்..??


இந்துக்கள் அனைவருக்கும் தெரிந்த சமையத் திருவிழா நவராத்திரி. இதனை சீனர்களும் வேறு வகையில் கொண்டாடுகின்றார்கள் என்பது தெரியுமா.?


மலேசியாவில் குறிப்பாக நவராத்திரி வருகின்ற செப்டம்பர் அக்டோ பர் மாதங்களில் சீனர்களும் தொடர்ச்சியாக 9 நாட்கள் தங்களின் தெய்வத்திற்காக சிறப்பான வழிபாடுகளில் ஈடுபடுவர். சில வேளைகளில் இந்தத் திருநாள் நமது நவராத்திரி நாளோடு சேர்ந்தே வரும். முக்கிய வழிபாட்டு தெய்வமாக ஒரு பெண் தெய்வமே வடிக்கப்பட்டிருக்கும். சீனர்களின் ஆலயங்களில் பெரிய 2 மீட்டர் நீளம் கொண்ட ஊதுபத்திகள் நாள் முழுக்க எரிந்து கொண்டே இருக்கும். அந்த 9 நாட்களும் சீனர்கள் சுத்த சைவ உணவு பழக்கத்தையே கடைபிடிப்பார்கள்.



தெருக்களில் சீனர்களின் விதம் விதமான சைவ உணவு வகைகள் விற்கப்படும். இந்த சமயத்தில் பினாங்கில் சாலை மூலைகளிலெல்லாம் தற்காலிக உணவுக் கடைகள் புதிதாக முளைத்திருக்கும். நமக்கும் இந்த நாள் திருநாள் தான். நமது நவராத்திரி வழிபாட்டிற்கும் இந்த பூஜைக்கும் நிச்சயம் தொடர்பிருக்கின்றது. ஆனால் அதன் தொடர்பு இப்போது ஞாபகத்திற்கு வரவில்லை.

பொதுவாகவே மலேசியாவில் உள்ள சீனர்கள் அதிலும் குறிப்பாக புத்த மதத்தைச் சார்ந்தவர்கள் இந்துக்களின் கோவிலுக்கு வருவது சர்வ சாதாரணமான ஒரு விஷயம். வெள்ளிக்கிழமைகளில் ஆலயங்களில் பார்த்தால் ஒரு சீனராவது பக்தர்கள் கூட்டத்தில் நின்று கொண்டிருப்பார். தைப்பூசத்திருவிழாவில் சொல்லவே வேண்டியதில்லை. பால்காவடி, நீண்ட அலகுக் காவடி போன்றவற்றை இந்துக்களைப் போலவே விரதமிருந்து எடுப்பார்கள்.

Wednesday, November 12, 2003

My friend - Seok Hwa

பல நாட்களுக்குப் பிறகு எனது மலேசியத் தோழி சியோக் ஹூவா மின்னஞ்சல் அனுப்பியிருந்தாள். எனது மலேசிய நண்பர்களில் பலர் சீனர்கள் தான். மலேசியாவில் சீன மலாய் இனத்தவருடன் பழக வேண்டிய சூழல் ஆரம்பப் பள்ளியிலேயே தொடங்கி விடுவதால் எந்த பாகுபாடும் இல்லாமல் நல்ல நட்போடு பழகும் வாய்ப்பு அமைந்து விடுகின்றது. சியோக் ஹூவா ஒரு சீனப் பெண். என்னோடு பல்கலைக்கழகத்திலிருந்து ஒன்றாகப் படித்தவள். சீனர்களில் ஹொக்கியான் எனச் சொல்லப்படும் மொழியைப் பேசுபவள். பல ஆண்டுகளாக எங்கள் நட்பு விடாமல் தொடர்ந்து வருவது ஒரு வகையில் வரப்பிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும். இயற்கையிலேயே சாந்த குணம் படைத்தவள் சியோக் ஹூவா. எங்கள் நண்பர்கள் கூட்டத்திலேயே மிக மிக அமைதியானவள். சத்தமாகக் கூட பேச மாட்டாள். பெரிய குடும்பத்தில் கடைசிப் பெண்ணாகப் பிறந்தவள்.

முன்பெல்லாம் வாரம் ஒரு முறையாவது எங்கள் நண்பர்கள் எல்லோரும் சந்தித்துக் கொள்வோம். பொதுவாக எங்கள்பேச்சு பொருளாதாரம் மற்றும் கணினித் துறை சார்ந்ததாகவே இருக்கும். சீனர்கள் கடமையில் கண்ணானவர்கள் என்பது ஒவ்வொரு மலேசியத் தமிழருக்கும் தெரிந்த ஒரு மறுக்க முடியாத உண்மை. அதை மெய்ப்பிக்கும் வகையில் எங்களது பேச்சும் அமைந்து விடும். இந்த நண்பர்கள் குழுவில் இவள் கொஞ்சம் வித்தியாசமானவள். இவளுக்கு உலகியல் விஷயங்களுக்கும் மேலாக சமுதாய சிந்தனை, இறை வழிபாடு என்பதெல்லாம் கொஞ்சம் முக்கியம்.

சியோக் ஹூவா புத்த மதத்தைச் சேர்ந்தவள். ஒரு முறை விசாக தினத்தன்று என்னையும் அவள் குடும்பத்தாரோடு பினாங்கில் மிக முக்கிய புத்த விகாரமான Sleeping Buddha ஆலயத்திற்கு என்னை அழைத்துச் சென்றாள். புத்த மதத்தினருக்கு இது மிக முக்கிய சமயத் திருவிழா என்பதால் சாலைகளை எல்லாம் ஸ்தம்பிக்கச் செய்யும் வகையில் கூட்டம் அமைந்திருக்கும். பூஜைக்கு வருபவர்களுக்கெல்லாம் புத்தபிக்கு சுவாமி மந்திரம் ஜெபித்த அருள் நூலை கையில் கட்டிவிடுவார். அந்த கூட்டத்தில் மாட்டிக் கொண்டு கஷ்டப்பட்டாலும் இறுதியில் புத்தபிக்குவிடமிருந்து நூலை, வாங்கி கையில் எனக்கு கட்டி விட்ட பிறகு தான் அவளுக்கு நிம்மதியே தோன்றியது. நண்பர்களின் அன்பான வார்த்தைகள் மனதிற்கு இன்பமளிக்கக் கூடியவை அல்லவா? விடுமுறைக்கு மலேசியா திரும்பும் போது நிச்சயம் அவளைச் சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தை இப்போதே உறுதி செய்து கொண்டு விட்டேன்.

Tuesday, November 11, 2003

Penang - Little India (3)

பினாங்கின் பல மூலைகளில் தமிழர்கள் வர்த்தகத்தில் ஈட்டுபட்டிருந்தாலும் Little India என்று சொல்லப்படும் பகுதியில்தான் ஏராளமான இந்தியர்களுக்கானப் பொருட்கள் விற்கப்படும் கடைகளைக் காண முடியும். தீபாவளி, தைப்பூசம் மற்றும் பிற விழாக்காலங்களில் இந்தப் பகுதியில் நடப்பதற்கே இடம் இல்லாத வகையில் கூட்டத்தைக் காண முடியும். மலேசியாவிலேயே மிகப் பிரபலமான வர்த்தகப் பகுதிகளில் ஒன்றாக இது கருதப்படும் அளவுக்கு இங்கு கிடைக்கும் பொருட்கள் தரத்திலும் விதத்திலும் சிறந்து விளங்குவதைக் காண முடியும்.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சேலைகளையும் துணி வகைகளையும் விற்பனை செய்யும் சேலைக் கடைகள் இங்கு மிகப் பிரபலம். ஹனீபா, அனிதா, V.K.N., உமையாள், குமரன்'ஸ் என பல கடைகள் இங்கே. சென்னையின் பாண்டி பஜார், ரங்கநாதன் தெருக்களில் கிடைக்கக் கூடிய எல்லா துணிகளும் இங்கேயும் கிடைக்கின்றன.
மற்றும் புதிய தமிழ், ஹிந்தி பாடல் ஒலிப்பேழைகள், படங்கள், பாத்திரங்கள், அலங்காரப் பொருட்கள் என பல தினுசுகளில் இங்கே பொருட்களைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த சாலைகளில் நடக்கும் போதே தமிழ் பாடல்கள் பல திசைகளிலும் ஒலிப்பதைக் கேட்க முடியும். இது முற்றிலும் தமிழர்களின் தெருவாகவே மாறிவிட்டிருக்கின்றது.
இந்திய உணவுகளுக்கும் இங்கு பஞ்சமில்லை. இப்பகுதியிலுள்ள எல்லா தெருக்களிலும் இந்திய பலகாரங்கள் விற்கப்படும் கடைகள் உள்ளன. சுடச் சுட தோசை, பரோட்டா, சாதம் எல்லாம் கிடைக்கக் கூடிய இடம் இது.

தமிழர்கள் நகைப் பிரியர்கள் என்பதால் இங்கு தங்க வைர நகைகள் விற்கப்படும் கடைகளுக்கும் பஞ்சமில்லை. மக்கள் கூட்டம் விழாக்காலங்களில் ஈக்கள் மொய்ப்பது போல இங்கு கூடியிருப்பது தவிர்க்க முடியாத ஒரு காட்சி.

இந்தப்பகுதிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இந்தப் பகுதியின் ஆரம்பத்திலேயே மகாமாரியம்மன் ஆலயம் ஒன்றும் இருக்கின்றது. மிகப்பழமையான இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு அழகாக பாதுகாக்கப்படுகின்றது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் நடைபெறும் ராகு கால துர்க்கை அம்மன் பூஜை மிகச் சிறப்பானது. தமிழகத்தில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தக் கூடிய வகையில் பினாங்கின் மையப்பகுதியில் அமைந்துள்ள பகுதி இது. தொடரும்...

Thursday, November 6, 2003

மலாய் உடைகள்

மலேசியர்கள் பல வித வர்ணங்களில் ஆடைகளை உடுத்திக் கொள்ள விரும்புவர். மலாய்க்காரர்களில் ஆண்களும் சரி பெண்களும் சரி விதம் விதமான வர்ணங்களில் ஆடைகளை உடுத்திக் கொள்வர். பெண்களைப் பொறுத்தவரையில் மலேசியாவின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் என்று சிறப்பான ஆடைகள் உண்டு. ஆனால் ஆண்களுக்கு ஒரே விதம் தான்.



ஆண்கள் அணியும் ஆடையை Baju Melayu (உச்சரிக்கும் போது பாஜு மெலாயூ என்று சொல்ல வேண்டும்) என்பர். பெண்களின் உடைகளுக்குப் பல பெயர்கள் உண்டு, அதன் விதத்தைப் பொறுத்து. பொதுவாகவே சிறப்பு நாட்களில் விலையுயர்ந்த பட்டுத் துணியால் செய்யப்பட்ட ஆடைகளையே மலாய்க்காரர்கள் அணிவார்கள். விழாக்காலங்களிலும், சிறப்பு விருந்துகளுக்கும், திருமண வைபவங்களுக்கும் பட்டாடைகளில் வருவதை கடைபிடிப்பார்கள்.


இந்த வகை உடை பாஜு கெடா என அழைக்கப்படும். மிக எளிமையான முறையில் தைக்கப்பட்ட ஆடை இது. கெடா என்பது ஒரு மாநிலத்தின் பெயர். இந்த மாநிலத்தில் நெல் வயல் அதிகம். வயலில் வேலை செய்யும் பெண்கள் அணிவதற்கு ஏதுவாக அமைந்த ஆடை இது. ஆனால் நாளடைவில் எல்லா பெண்களும் (நானும் தான்) அணியும் நவநாகரிக ஆடையாக இது மாறிவிட்டிருக்கின்றது.


இந்த வகை ஆடை தான் பெரும்பாலான மலேசியப் பெண்கள் விரும்பி அணியும் ஆடை. இதை பாஜு கெபாயா என்று சொல்வோம். Batik வகை துணியால் அமைக்கப்படும் இவ்வகை ஆடைகள் மலேசியாவில் மிகப் பிரபலம். Malaysian Airlines பணியாளர்கள் அணிந்திருக்கும் ஆடையும் இந்த வகைதான்.




பாஜு கூரோங் என்று அழைக்கப்படும் இந்த வகை ஆடைதான் பல மலாய் பெண்களால் அணியப்படும் ஆடை. மலேசியாவின் எல்லா மூலைகளிலும் இந்த வகை ஆடைகள் கிடைக்கும். மிகச் சாதாரணமாக மலேசிய ரிங்கிட் 40 லிருந்து இந்த வகை ஆடைகளை வாங்க முடியும். அலுவலகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் செல்லும் பெண்கள் பரவலாக அணியும் ஆடை இதுதான்.

உங்களுக்கும் இந்த ஆடைகளை அணிந்து கொள்ள ஆசையாக இருக்கின்றதா? இன்றே கிளம்புங்கள், மலேசியாவுக்கு!

Wednesday, November 5, 2003

மலேசிய ரப்பர் தோட்டங்கள்

19ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து மலேசியாவின் ரப்பர் தோட்டங்களில் உழைப்பதற்காகச் சென்ற இந்தியத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகம். இக்கால கட்டத்தில் மலேசியாவில் பெருமளவில் குடியேறிய தமிழர்கள் தோட்டங்களில் வேலை செய்வதற்காகவே அழைத்து வரப்பட்டவர்கள் என்பதை மறுக்க முடியாது. உலகின் மிகப் பெரிய ரப்பர் உற்பத்தி நாடாக மலேசியா தற்பொழுது விளங்குகின்றது. இந்த வெற்றிக்கும் சிறப்பிற்கும் உழைத்தவர்கள், உழைத்துக் கொண்டிருப்பவர்கள் இந்நாட்டில் வாழும் தமிழர்கள் தான்.


தொழிற்புரட்சிக்காலம் அது. 1876-ல் சர் ஹென்றி விக்ஹம் India office-ன் கட்டளைப்படி பிரேஸில் நாட்டிலிருந்து 70,000 ரப்பர் விதைகளைச் சேகரித்து இங்கிலாந்திற்குக் கொண்டு வந்தார். பின்னர் இந்த ரப்பர் விதைகளை லண்டனிலுள்ள Kew Garden-ல் பயிரிட்டு அவை வளர்க்கப்பட்டன. இதில் உயிர் பிழைத்த ரப்பர் மரக்கன்றுகள் 1877-ல் இலங்கைக்கும் பின்னர் மலேசியாவிற்கும் எடுத்துச் செல்லப்பட்டு பயிரிடப்பட்டன.


மலேசியாவின் சீதோஷ்னத்திற்கு ரப்பர் கன்றுகள் நன்றாக வளர்வதைக் கண்ட பிரித்தானியர்கள், பல காடுகளை அழித்து ரப்பர் பயிரிட ஆரம்பித்தனர். 19ம் நூற்றாண்டின் இறுதியிலேயே மேற்கு மலேசியாவில் ஏறக்குறைய 2500 ஹெக்டர் நிலப்பரப்பில் ரப்பர் பயிரிடப்பட்டிருந்தது. ரப்பரின் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கவே காடுகளை அழித்து அங்கு தோட்டங்களை உருவாக்க தென்னிந்தியாவிலிருந்து அதிலும் குறிப்பாக தமிழர்களை இறக்குமதி செய்தனர்.

ரப்பர் காடுகளில் வாழும் மலேசியத் தமிழர்களின் வாழ்க்கை பற்பல சிரமங்களை உள்ளடக்கியதே. குறைந்த ஊதியம்; பற்பல சமூகப் பிரச்சனைகள்; தரமற்ற கல்வி போன்ற பற்பல சிரங்களுக்கு தோட்டப்புற தமிழர்கள் ஆளாகியிருக்கின்றனர். சுதந்திரத்திற்குப் பின்னர் படிப்படியாக இப்போது பரவலாக நல்ல வளர்ச்சியைக் காணமுடிந்தாலும் முற்றாக இவர்களின் கஷ்டங்கள் தீர்ந்து விட்டன என்று சொல்வதற்கில்லை.



மலேசியத் தமிழர்களின் அதிலும் குறிப்பாகத் தோட்டத் தொழிளாலர்களின் வாழ்க்கை முறையைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் மலேசிய இலக்கியங்களை அதிலும் குறிப்பாக சிறுகதைகளைதான் அலசவேண்டும். மலேசிய தமிழ் எழுத்தாளர்களின் பட்டியல் ஒன்றுனை தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் நீங்கள் காணலாம். முகவரி http://www.tamil-heritage.org/photoarc/malaysia/msiawri.html

Tuesday, November 4, 2003

அப்பாவின் தோட்டம்

மலேசியா இயற்கை வளம் நிறைந்த ஒரு நாடு என்று எனது முந்தைய குறிப்பில் சொல்லியிருக்கின்றேன் அல்லவா? மலேசியாவின் சீதோஷ்ன நிலை சாதகமாக இருப்பதால் இங்கு பல விதமான காய்கறித்தோட்டங்கள், பழத் தோட்டங்கள் ஆகியவை அதிகம். பொதுவாக இல்லங்களிலும் தோட்டங்கள் வைத்திருப்பதைக் காண முடியும்.

என் அப்பாவுக்கு தாவரங்களை வளர்ப்பதென்றால் கொள்ளைப் பிரியம். வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பியதும் தனது நேரத்தையெல்லாம் வீட்டுத் தோட்டத்தில் தான் செலவிடுவார். அவரது கைவண்ணத்தில் பல பழமரங்களும் செடிகளும் வீட்டைச் சுற்றி காய்த்துக் குலுங்கும் அழகைக் காணலாம். அவரிடமிருந்து தான் எனக்கும் தாவரங்கள் மீது ஆர்வம் வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவரைப் போலவே எனக்கும் இந்த ஆர்வம் இருந்ததால் பிற்காலத்தில் நானும் எனது நேரத்தைத் தோட்டத்தில் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். [இப்போது அதற்கு வாய்ப்பில்லை. இங்கு ஜெர்மனியில் apartment-ல் இருந்து கொண்டு எங்கே தோட்டத்தைப் பற்றி நினைப்பது..:) ]

எங்கெங்கிருந்தோ பூச்செடிகளையும் பழமரங்களையும் தேடிப் பிடித்துக் கொண்டுவருவார். நண்பர்கள் வீட்டிற்குச் செல்லும் போது அவர்கள் வீட்டில் தனக்குப் பிடித்த ஏதாவது ஒரு செடி வகையைப் பார்த்து விட்டால் அதை வாங்கிக் கொண்டுவராமல் விடமாட்டார். அவ்வளவு தீவிரமான ஆசை அவருக்குச் செடிகளின் மேல்.



எங்கள் தோட்டத்தில் எங்களது தூரத்து உறவினர் ஒருவரிடமிருந்து வாங்கி வந்திருந்த தாய்லாந்து வகை பப்பாளி மரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அதில் என்ன ஆச்சரியம் என்றால் இந்த பப்பாளிப் பழத்தில் உள்ளே விதை இருக்காது. நல்ல சுவையான பழ வகை அது. அந்த மரம் பெரிதாகி காய்க்க ஆரம்பித்தவுடன் தான் ஆரம்பித்தது தொல்லையே. ஏற்கனவே எங்கள் தோட்டத்தில் ஒன்றுக்கு மூன்று பப்பாளி மரங்கள். அதில் இதுவும் சேர்ந்து கொண்டது. இப்போது நான்கு மரங்களும் காய்க்க ஆரம்பித்தால் அதை என்ன செய்வது? காய்க்கின்ற பழத்தை எல்லாம் சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்துவார் என் அப்பா. பழத்தை நன்றாக தோல் நீக்கி சுத்தம் செய்து நீளமான துண்டுகளாக வெட்டி எங்களுக்கு தட்டுக்களில் வைத்து பரிமாறி அதை நாங்கள் கோபத்தோடு சாப்பிட முடியாமல் சாப்பிடுவதை பார்க்க அவருக்கு அப்படி ஒரு ஆசை.

என் அப்பாவின் தொல்லை நாலுக்கு நாள் அதிகமாகும் வகையில் ஒவ்வொரு நாளும் பழங்கள் அதிகமாகக் காய்த்துக் கொண்டே தான் இருந்தன. சலிக்கச் சலிக்க பப்பாளிப் பழங்களை அப்போது சாப்பிட்டிருக்கின்றேன்.

இங்கு ஜெமனி வந்த பிறகு பப்பாளிப் பழத்தை வாங்குவதென்பது குதிரைக் கொம்பாக இருக்கின்றது. இது exotic fruits வகையைச் சார்ந்தது என்பதால் ஏகப்பட்ட கிராக்கி இந்தப்பழத்துக்கு. நண்பர் ஒருவர் வீட்டில் சென்ற சனிக்கிழமை இரவு உணவிற்குச் சென்றிருந்தேன். குட்டியான ஒரு பப்பாளிப்பழத்தைக் குட்டி குட்டி துண்டுகளாக வெட்டி வைத்திருந்தார்கள். என்ன செய்வது விலையான பழமாயிற்றே. பப்பாளிப் பழங்களை பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொண்டு எங்களை ஓட ஓட விரட்டும் அப்பாவின் ஞாபகம் அப்போது வராமல் இருக்குமா? ஏக்கம் தரும் நினைவுகள் அவை!

Monday, November 3, 2003

Penang - 2



பினாங்கில் உள்ள Botanical Garden பற்றி சில குறிப்பூக்களை முந்தைய குறிப்பில் கொடுத்திருந்தேன் அல்லவா. இன்று மேலும் சில அழகிய இடங்களைப் பற்றி உங்களுக்குச் சொல்லலாம் என நினைக்கிறேன்.


பினாங்கில் Air Itam (உச்சரிக்கும் போது ஆயர் ஈத்தாம் என்று சொல்ல வேண்டும்) என்ற ஒரு பகுதி இருக்கின்றது. வணிகர்கள் அதிகமாக இருக்கும் பகுதி என்று கூட இதனைச் சொல்லலாம். இந்தப் பகுதியில் வசிக்கும் மக்களில் பெரும்பாலோர் சீனர்கள். வாகனங்களில் இங்கு மதிய வேளைகளில் செல்வது என்பது ஒரு கஷ்டமான அனுபவம் என்று தான் சொல்ல வேண்டும். அவ்வளவு ஜன நெரிசல்; மற்றும் வாகன நெரிசல் உள்ள ஒரு பகுதி இது.


இதன் ஒரு பகுதியில் தான் Penang Hill என்று சொல்லப்படும் கொடிமலை இருக்கின்றது. இந்த மலை மிக மிக ரம்மியமான ஒரு பிரதேசம். மலையின் உச்சிக்குச் செல்வதற்கு cable train இருக்கின்றது. 2 ரயில்களில் ஏறித்தான் மலை உச்சிக்குச் செல்ல முடியும். மலையின் மேல் ரயில் பெட்டி ஏறும் போது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கும். இதே போன்ற இரயில் சுவிஸர்லாந்தில் Jungfrau மலைப் பகுதியிலும் இருக்கின்றது. வித்தியாசம் என்னவென்றால் இங்கே சுவிஸர்லாந்தில் மலை பனியால் முற்றாக மூடப்பட்டிருக்கும். ஆனால் பினாங்கில் அப்படியில்லை. குளிர்ச்சியாக இருந்தாலும் பச்சை பசேலென எங்கு பார்த்தாலும் பசுமையாக இருக்கும். இந்த மலையின் உயரம் 830 மீட்டர் நீளமாகும். மலை உச்சியில் மதிய நேரம் கூட மிகக் குளிர்ச்சியாகத்தான் இருக்கும். மலைக்கு மேல் அழகான பூங்காக்கள், உணவு விடுதிகள் விளையாட்டு மையங்கள் ஆகியவற்றோடு அழகான முருகன் கோவில் ஒன்றும் இருக்கின்றது. இலங்கையில் கண்டி எனும் ஊரில் இதே போன்ற ஒரு கோவிலை நான் பார்த்திருக்கின்றேன். அதை குறிஞ்சிக் குமரன் கோயில் என்று சொல்வார்கள். பினாங்கிலேயே இரண்டு மலைகளில் முருகன் ஆலயத்தைக் காணமுடியும். தண்ணிர்மலையில் ஒன்று மற்றொன்று இந்தக் கொடிமலையில் இருக்கும் கோவில்.


கொடி மலையின் அடிவாரத்திலேயே மிகப் பெரிய புத்தர் ஆலயம் ஒன்று இருக்கின்றது. Kek Lok Si ஆலயம் என்று இது அழைக்கப்படுகின்றது. இந்த புத்தர் ஆலயத்தில் பர்மா, தாய்லாந்து மற்றும் சீன வகை புத்த வழிபாட்டு வகையிலான பூஜைகள் தினமும் நடந்து கொண்டிருக்கும். தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புத்த பீடத்தை தினமும் பார்க்க முடியும். பல பூஜை மண்டபங்கள், தியான அறைகள் இங்கு உள்ளன. இந்த புத்த ஆலயத்தை அடைவதற்கு நீளமான செங்குத்தான படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். படிகளில் சிறிய சிறிய கடைகளில் நினைவுச் சின்னங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும். இவற்றை பார்த்துக் கொண்டே படியேறி விடலாம். நடந்த களைப்பே தெரியாது. இந்த ஆலயத்தில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் இங்கிருக்கும் ஆமை குளம் தான். நூற்றுக்கனக்கான ஆமைகளை இங்கு குளங்களில் வைத்து வளர்க்கிறார்கள். பெரிய பெரிய ஆமைகள் இங்கும் அங்குமாக நகர்ந்து கொண்டிருப்பதை பார்ப்பதற்கே அழகாக இருக்கும். தொடரும்..

Saturday, November 1, 2003

Dr.Mahathir


மலேசியாவின் நான்காவது பிரதமராக நேற்று வரை இருந்து இந்த நாட்டின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர் துன் மாஹாதீர். 22 ஆண்டுகள் மலேசியாவின் பிரதமராக இருந்திருக்கின்றார். பல ஆண்டுகள் பிரதமராக இருந்து விட்டதால் இளைய தலைமுறையினர் நாட்டை ஆள வேண்டுமென அறிவித்து விட்டு ஓராண்டுக்குப் பின்னர் நேற்று பதிவியிலிருந்து ஓய்வு பெற்றிருக்கின்றார்.

டாக்டர். மஹாதீர் மருத்துவராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர். மலேசிய அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு, மலேசியாவின் ஈடு இணையற்ற தலைவராக செயல்பட்டு வந்திருக்கின்றார். இவரது தலைமையின் கீழ் மலேசியா கண்ட வளர்ச்சி மிகப் பெரிது. மலேசிய நாட்டில் இருக்கும் ஒவ்வொரு தனி மனிதரும் (எதிர் கட்சியினரும் கூட) இவர்மேல் வைத்திருக்கும் அன்பு அதிசயமான ஒன்றுதான். மலேசியா மற்றும் ஆசிய நாடுகள் மட்டுமின்றி உலகளாவிய அளவில் தைரியமாக தனது எண்ணங்களைப் பேசக்கூடியவர் என்று பெயரெடுத்தவர்.


மலேசியாவை வளர்ச்சியடைந்து வரும் நாடு என்ற நிலையிலிருந்து வளர்ச்சியடைந்த ஒரு நாடாக மாற்றியதில் இவரது பங்கு அதிகம். புதுமை விரும்பியான இவரது திட்டங்கள் அனைத்துமே நாட்டின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தன. வெளிநாட்டு பத்திரிக்கைகள் அதிலும் குறிப்பாக அமெரிக்க பத்திரிக்கைகள் மலேசியாவை மட்டம் தட்டி பேசுவதைக் குறியாகக் கொண்டு பல முறை செயல்பட்டிருக்கின்றன. மஹாதீரின் வெளிப்படியான தைரியமான பேச்சுக்களை கிரஹிக்க முடியாத பல நாளிதள்கள் கூட இவரைத் தாக்கி எழுதுவதில் அதிலும் குறிப்பாக இவரை ஒரு கொடுங்கோலராக வர்ணிப்பதில் அதிகமாக செயல்பட்டிருக்கின்றன. ஆனால் மலேசியாவிற்கு வந்து பார்த்து மக்களின் சுபிட்சம் நிறைந்த வாழ்க்கையைப்பார்ப்பவர்களுக்குத்தான் திரித்து எழுதப்படும் இவ்வகைச் செய்திகளில் இருக்கும் பொய் தெரியவரும்.



SIGNING OFF: Dr Mahathir, surrounded by ministers, putting down his signature to the minutes of the Cabinet meeting which he chaired for the last time in Putrajaya Wednesday.


டாக்டர் மஹாதீரைப் பற்றி சொல்வதற்கு நிறையவே இருக்கின்றது. கிழக்காசிய நாடுகளின் மிகப்பிரபலமான அரசியல் தலைவர் இவர். இவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழ்க்கானும் வலைத்தளத்தைப் பாருங்கள். http://pmproject.doubleukay.com/biography.html இது வரை பதவியில் இருந்தது போதும்; அடுத்தவர் தலைமைப் பதவிக்கு வரவேண்டும் என்று எத்தனைத் தலைவர்களால் நினைக்க முடியும். இவர் ஒரு அபூர்வ மனிதர்தானே!