Saturday, September 10, 2011

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 17

பெர்லிஸ் - மீண்டும் சந்திப்போம் (Perlis - Jumpa Lagi)



பெர்லிஸ் ஒரு சிறிய மானிலம் தான். ஆனாலும் இப்பகுதியின் வரலாறு மிகச் சுவரசியமானது. தொடர்ந்து ஆராயப்பட வேண்டியது.

மலேசியாவிற்குச் சுற்றுப் பயணம் செல்பவர்களின் பட்டியலில் பெர்லிஸின் பெயர் நிச்சயமாக இருக்காது என்பதை மலேசியரான நான் அறிவேன். வானளாவி உயர்ந்து நிற்கும் கட்டிடங்களையும் வணிக நிறுவனங்களையும் கேளிக்கை விடுதிகளையும், விதம் விதமான உணவுக் கடைகளையும் விரும்புபவர்களுக்கு ஏனைய மானிலங்கள் ஏராளமான வாய்ப்பினை வழங்குகின்றன என்பதை மறுக்க முடியாது. ஆனால் மலாய் மக்களின் வாழ்க்கை முறை, சேதப்படாத காடுகள், செயற்கயற்ற இயற்கையின் பேரெழில் இவற்றை ரசிக்க வேண்டுமென்றால் தாராளமாக ஒரு சில நாட்கள மலேசியாவின் இந்த வடக்கு எல்லை மானிலத்திற்குச் சென்று வரலாம்.

மலேசிய பழங்களை விரும்பி உண்பவர்கள் குறிப்பாக ரம்புத்தான் டுரியான், லங்சாட், டுக்கு போன்றவற்றை விரும்புபவர்கள் ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் இப்பகுதியில் சுற்றுலா செய்வது மிகச் சிறந்தது. மிகக் குறைந்த விலையில் இப்பழங்கள் இங்கு கிடைக்கின்றன. இங்கிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு வரப்படுகின்றன என்பதும் ஒரு முக்கியச் செய்தி.


பெர்லிஸ் மானிலத்தில் 4 நாட்கள் எங்கள் பயணம். அது முடித்து கெடா வழியாக மீண்டும் பினாங்கு திரும்ப வேண்டும். இடையில் மலேசியாவின் மிகப் பெரிய அரிசி அருங்காட்சியகத்தையும் பார்த்து விட்டு பினாங்கிலிருக்கும் என் சகோதரியின் இல்லம் திரும்ப திட்டம். இந்த டிசம்பர் 2010 - ஜனவரி 2011 மலேசியப் பயணத்தில் பெர்லிஸ் மட்டுமன்றி மலாக்க மானிலத்திலும் சில நாட்களைக் கழிக்க வாய்ப்பமைந்தது. 15ம் நூற்றாண்டு வாக்கில் புகழ் பெற்ற மாலாயாவின் முக்கிய துறைமுக நகரமல்லவா மலாக்கா ? இதனைப் பற்றி எனது அடுத்த மலேசிய தொடர் அமையும். ஆனால் இடையில் குறைந்தது ஆறு மாதங்கள் இடைவெளி நிச்சயம் உண்டு.
மலேசியா என்றால் அது எளிமை..! அழகு..! பசுமை.. ! தோழமை..! தூய்மை..! நேசம் மிக்க மக்கள் .!


மீண்டும் சந்திப்போம் Jumpa Lagi..!


இதுவரை என்னுடன் சேர்ந்து பயணித்த உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் (Terima Kasih!)



அன்புடன்
சுபா

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 16

16. ஆராவ், அரச நகரம்

இவ்வளவு தூரம் போய்விட்டு சுல்தானை பார்க்காமல் வரலாமா..?

பெர்லிஸ் பயணத்தின் இறுதி நாள். காலை உணவுக்குப் பின் தங்கும் விடுதியில் செக் அவுட் செய்துவிட்டு குவாலா பெர்லிஸிலிருந்து ஆராவ் சென்று அரச நகர வலம் வந்து விட்டு அரண்மனையையும் பார்த்து விட்டு பின்னர் கெடா வழியாக திரும்பி பினாங்கு செல்வதாக எங்கள் திட்டம்.

குவாலா பெர்லிஸிலிருந்து ஆராவ் தூரமில்லை. கிழக்கு நோக்கி 25 நிமிட பயணத்தில் ஆராவ் நகரை வந்தடைந்து விடலாம்.

மலாய் மொழியில் இந்த நகர் பண்டார் டி ராஜா ஆராவ் (Bandar Di Raja Arau) என அழைக்கப்படுகின்றது. இதன் தமிழாக்கம் ஆராவ் அரச நகரம் என்பதாகும். பண்டார் டி ராஜா என்ற சிறப்பு அரச குடும்பத்தினர் இங்கு இருப்பதால் அவ்வாறாக அழைக்கப்படுகின்றது. மலேசியா முழுமைக்கும் ஏனைய சுல்தான்கள் உள்ள மற்ற பல நகரங்களும் கூட இந்தச் சிறப்புப் பெயர் சேர்த்தே அழைக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு பண்டார் டி ராஜா பெக்கான், பண்டார் டி ராஜா குவாலா கங்சார் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

பெர்லிஸ் கெடாவின் ஒரு பகுதியாக 19ம் நூற்றாண்டுக்கு முன்னர் இருந்தமை பற்றி முந்தைய பதிவில் தெரிவித்திருந்தேன். மலாயாவின் இந்த வடக்குப் பகுதி அதாவது கெடா தொடங்கி அதற்கு மேல் இப்போதைய தாய்லாந்து வியட்னாம் கம்போடியா ஆகிய பகுதிகள் வரலாற்றில் பற்பல மாற்றங்களைக் கண்ட பகுதிகள். 7ம் நூற்றண்டு தொடங்கி இங்கே பற்பல அரசியல் ரீதியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் குறிப்பாக சில முக்கிய அரச வம்சங்களைப் பற்றி கிட்டும் செய்திகளை ஓரளவு இங்கே பகிர்ந்து கொள்வது இந்தத் தொடருக்கு மேலும் சிறப்பினைச் சேர்ப்பதாக அமையும் என்பதை நம்புகின்றேன்.

9ம் நூற்றாண்டு தொடங்கி 14ம் நூற்றாண்டு வரை தற்போதைய தாய்லாந்து கைமர்(Khmer) பேரரசின் ஒரு அங்கமாக இருந்தமை சிலர் அறிந்திருக்கலாம். தற்போதைய தாய் மக்கள் 13ம் நூற்றாண்டின் மத்தியில் இப்பகுதியை கைப்பற்றிய மங்கோலிய அரசின் ஒரு பகுதி என்றும் நம்பப்படுகின்றது. இவர்கள் தெற்குப் பகுதியில் தங்கள் வலிமையை பெருக்கிக் கொண்டு சுக்கோதை (Sukhothai, 1238 ) லானா (Lanna 1262) பிறகு அயோத்யா (Ayutthaya 1351) ஆகிய அரசுகளை நிர்மானித்து ஆட்சி புரிந்து வந்தனர்.







இதோடு பட்டானி அரசும் அச்சமயத்தில் வலிமை மிக்க ஒரு அரசாக விளங்கியது.

படத்தைப் பார்க்க. (சிவப்பு நிறமிடப்பட்ட பகுதி)

பட்டானி அரசு பழமை வாய்ந்தது. 6ம் 7ம் நூற்றாண்டு காலத்தில் வலிமை மிக்க ஹிந்து அரசாக பட்டானி திகழ்ந்தது. ஆரம்பத்தில் ஹிந்து மத அரசாக விளங்கி வந்த இந்த அரசு 11ம் நூற்றாண்டில் மன்னன் இஸ்லாமிய மதத்தைத் தழுவியதால் இஸ்லாமிய நாடாக மாறியது.

இந்தப் பகுதியே 2ம் நூற்றாண்டில் ஹிந்து புத்த மத ஆதிக்கத்துடன் மிகப் புகழ்பெற்று விளங்கிய பான் பான் அரசு என்றும் கொள்ளலாம். அச்சமயத்தில் இன்றைய தாய்லாந்துப் பகுதியில் பெரும் புகழொடு விளங்கிய லங்காசுகா (Langkasuka) பேரரசின் தாக்கத்தினால் இங்கும் ஹிந்து புத்த மதத்தின் ஆரம்ப கால தாக்கங்கள் ஏற்பட்டு ஹிந்து புத்த மத அரசாக இவை திகழ்ந்துள்ளன. இங்கு வணிகத்திற்காக வந்து சென்ற இந்திய சீன வர்த்தகர்கள் அதிலும் குறிப்பாக சீன வர்த்தகர்களின் குறிப்பிலிருந்து இது தொடர்பான தகவல்கள் கிடைக்கின்றன என்று விக்கிபீடியா கூறுகின்றது.

11ம் நூற்றாண்டில் சோழ மன்னர்களின் படையெடுப்பும் முக்கியம் வாய்ந்த ஒன்று. அக்கால கட்டத்தில் தான் சோழ மன்னர் கெடாவை கைப்பற்றி (கடாரம்) இங்கு சோழ ராஜ்ஜியத்தை சில காலங்கள் நிறுவிய காலகட்டம்.

பட்டானி அரசு, பலேம்பாங்கில் ஆட்சி செய்து வந்த ஸ்ரீ விஜய பேரரசின் (இன்றைய சுமத்ரா - இந்தோனீசிய பெறும் தீவுகளில் ஒன்று) ஒரு பகுதியாக விளங்கி வந்தது. அக்கால கட்டத்தில் ஸ்ரீ விஜயப் பேரரசே இப்பகுதியில் மிகவும் வலிமை வாய்ந்த ஒரு பேரரசாகவும் திகழ்ந்தது.

இந்தப் பட்டானி அரசின் வலிமை மிக்க காலமாக 16ம் நூற்றாண்டைக் குறிப்பிடலாம். இக்காலகட்டத்தில் நான்கு அரசியர் ஒருவருக்கு அடுத்து ஒருவர் என இந்த நாட்டை ஆட்சி செய்திருக்கின்றனர். அவர்களில் முதலாமவர் ராத்து ஹீஜாவ் (பச்சை அரசி), அடுத்து ராத்து பீரு ( நீல அரசி), அடுத்து ராத்து உங்கு (ஊதா அரசி), இறுதியாக இவ்வரிசையில் இடம் பெறுபவர் ராத்து கூனிங் (மஞ்சள் அரசி). ஏன் இவ்வகை பெயர்கள் என்று காரணம் தெரியவில்லை. ஆயினும் இந்த அரசிகளின் ஆட்சி காலத்தில் தான் சயாமிலிருந்து வந்த நான்கு பெரிய தாக்குதல்களையும் முறியடித்து தொடர்ந்து வளமான ஆட்சியை இங்கு இப்பேரரசிகள் நிலை நிறுத்தி வந்திருக்கின்றனர்.

பெர்லிஸ் அரச பரம்பரை கெடா அரச குடும்பத்திலிருந்து கிளைத்த ஒரு அரச குடும்பம்.

லங்காசுக்கா ஸ்ரீவிஜய பேரரைசின் தாக்கத்தால் அதன் வலிமையை இழந்து வந்த சமயம் 7ம் நூற்றாண்டு எனலாம். யீத்சிங் (Yi-Tsing) எனும் சீன புத்தபிக்குவின் குறிப்புக்கள் கி.பி. 685 -689 வாக்கில் கெடா ஸ்ரீ விஜயப் பேரரசின் ஒரு பகுதியாக வந்தமைக் குறிப்பிடுகின்றன. (pg 102, Early History of the Indonesian Archipelago and the Malay Peninsula, Paul Michel Munoz) இக்கால கட்டத்தில் லங்காசுக்கா மற்றும் கெடா ஆகிய நாடுகள் அனைத்திலும் திருமண இறப்பு சடங்குகள் அனைத்துமே ஹிந்து முறைப்படி நடந்து வருவதே வழக்கமாக இருந்து வந்துள்ளது.

கெடா மற்றும் லங்காசுக்கா பகுதியில் வணிகம் மிகச் செழிப்புற்றிருந்த காலம் அது. வணிகத்தோடு இங்கு வந்து சென்ற வணிகர்களில் பலர் தென்னிந்தியப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 9,ம் நூற்றாண்டு தமிழ் கல்வெட்டு ஒன்று இங்கு நஞ்யீர் உதயன் (Nangyr Udayan) என்பவன் ஒரு குளம் கட்டினான் என்பதைக் குறிப்பிடுகின்றது. இந்த குளம் வர்த்தகம் நடைபெறும் இடத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டது எனவும் இதன் பெயர் மணிக்கரம் (Manikkaram) எனவும் இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே தமிழ் கல்வெட்டு கி.பி.826 - 849ல் தென்னகத்தை ஆண்ட பல்லவ மன்னன் பெயரையும் குறிக்கின்றது. இச்செய்திகள் இக்கால கட்டத்தில் இந்தியாவின் தெற்குப் பகுதியிலிருந்து இங்கு வணிகம் செய்ய வந்த மக்களின் செய்திகளை உறுதி படுத்தும் ஆவணங்களாக உள்ளன. இக்கால கட்டத்தில் கெடா ஸ்ரீவிஜய பேரரசின் ஒரு பகுதியே.

11ம் நூற்றாண்டில் கெடாவில் ஒன்றாம் ராஜேந்திரனின் படையெடுப்பும் அதனை கைப்பற்றி கெடாவை தனது ராஜ்ஜியத்திற்குள் கொண்டு வந்தமையும் கெடா வரலாற்றில் முக்கிய செய்திகள்.

இந்த நிகழ்வுக்கு முன்னர் ஸ்ரீவிஜய பேரரசும் சோழப் பேரரசும் நல்ல உறவில் இருந்து வந்திருக்கின்றன. இதற்கு நல்ல உதாரணமாக ஒரு செய்தியை இங்கு குறிப்பிடலாம். ராஜராஜ சோழன் காலத்தில் சுமத்தாரவில் ஆண்டு வந்த ஸ்ரீ விஜய பேரரசின் மன்னர் சூலமனிவர்மதேவனின் விருப்பத்திற்கேற்ப தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் ஒரு புத்த ஆலயம் ஒன்றினை நிர்மானிப்பதற்காக ராஜராஜ சோழன் ஒரு கிராமத்தை தானமாக வழங்கியிருக்கின்றார். இதனை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

ராஜராஜ ராஜக்கேசரிவர்மன் தனது 21ம் ஆட்சி காலத்தில் நாகபட்டினத்தில் உள்ள ஆனைமங்களம் கிராமத்தை கெடா மற்றும் ஸ்ரீவிஜய பேரரசின் அரசனாகிய ஸ்ரீ மாரவிஜயோத்துங்கவர்மன் மகன் சூலமனிவர்மதேவனின் விருப்பத்த்தின் பேரில் புத்தருக்கு வழங்குவதாக .....

என இக்குறிப்பு வருகின்றது.

ஆனாலும் இந்த நட்புறவு நெடு நாட்கள் நீடிக்கவில்லை.ராஜராஜ சோழனின் படைகள் முதலில் கி.பி. 1007ல் கெடா நாட்டை தாக்கியுள்ளன. கிபி 1014ல் ராஜேந்திர சோழன் பதவியேற்ற பின்னர் இப்பேரரசின் பற்பல வெற்றிகளுக்குப் பின்னர் கெடாவையும் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்ரீ விஜயப் பேரரசோடு போர்தொடுத்து கெடாவை கைப்பற்றினான். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது வணிகம் என்பது ஆய்வாளர்களின் கருத்து என இன்னூலில் குறிப்பிடப்படுகின்றது. (Early History of the Indonesian Archipelago and the Malay Peninsula, Paul Michel Munoz)

இதில் சிறப்பென்வென்றால் இந்தப் போர, கெடாவை கைப்பற்றிய செய்திகள் அனைத்தும் தஞ்சை ராஜாராஜேஸ்வரம் கோயிலில் உள்ள கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளமையாகும். (South India Inscription pg 205)

கெடா மட்டுமின்றி ராஜேந்திர பேரரசனின் படைகள் மலாயா தீபகற்பத்தின் மேலும் ஆறு பகுதிகளை கைப்பற்றியதாகவும் அதே சமயத்தில் நிக்கோபார் தீவுகளையும் கைப்பற்றியதாகவும் இணையத்தில் இப்பக்குதி குறிப்பிடுகின்றது. http://www.pekemas.org.my/index.php?option=com_content&view=article&id=109:kesultanan-negeri-kedah&catid=5:asal-usul&Itemid=2

கெடா நாட்டை ஸ்ரீ விஜய மன்னரின் ஆட்சியிலேயே விட்டு விட்டு தனது ஆட்சிக்குட்படுத்த்்ப்பட்ட ஒரு பகுதியாக ஆக்கி திரை செலுத்தும் வகையில் வைத்துச் சென்ற பின்னர் இப்பகுதி சில காலங்கள் போர் இன்றி அமைதியாக இருந்து வந்தது. ஆனாலும் சோழர்களின் படைகள் கெடாவிலிருந்து சென்ற பின்னர் ஆச்சேயின் தாக்கத்தாலும் ஜம்பி பலேம்பாங் பகுதியில் ஏற்பட்ட மாற்றங்களினாலும் கெடாவை ஆட்சி செய்து வந்த மன்னர் இஸ்லாமிய மதத்தை தழுவி இஸ்லாமிய நாடாக கெடாவை பிரகடனப்படுத்தினார். இந்த மன்னர் ஒன்பதாவதாக இம்மன்னர் பரம்பரையில் வருபவர். மஹாராஜா மஹாஜீவா "ப்ராஓங் மஹாவங்சா" என்ற தனது ஹிந்து பெயரை சுல்தால் முஸ்ஸாஃபார் ஷா என மாற்றிக் கொண்டார். இந்த மன்னர் மலாயாவின் வடக்குப் பகுதியை 1136 முதல் 1179 வரை ஆண்டவர்.

இதற்கு முன்னர் இப்பரம்பரையில் வந்த மன்னர்கள்

-மஹாராஜா தர்பராஜா (லங்காசுக்காஆட்சியை தோற்றுவித்த மன்னன்)
-மஹாராஜா டீராஜா புத்ரா
-மஹாராஜா மஹாதேவா
-மஹாராஜா கர்னடிராஜா
-மஹாராஜா கர்மா
-மஹாராஜா தேவா II
-மஹாராஜா தர்மராஜா I
-மஹாராஜா மஹஜீவா "ப்ராஓங் மஹாவங்சா"

இதற்குப் பிறகு இம்மன்னர் பரம்பரையின் பெயர்களைக் கீழுள்ள பட்டியலில் காணலாம்.

* Paduka Sri Sultan Muzaffar Shah I (1136–1179), styled "Phra Ong Mahawangsa" by the Siamese. Styled "Sri Paduka Maharaja Durbar Raja" before his accession.
* Sultan Muazzam Shah (1179–1201)
* Sultan Mohammed Shah (1201–1236)
* Sultan Maazul Shah (1236–1280)
* Sultan Mahmud Shah I (1280–1320)
* Sultan Ibrahim Shah (1320–1373)
* Sultan Sulaiman Shah I (1373–1422)
* Sultan Atadullah Muhammed Shah (1422–1472)
* Sultan Muhammed Jiwa Zainal Abidin I (1472–1506)
* Sultan Mahmud Shah II (1506–1546)
* Sultan Muzaffar Shah II (1546–1602)
* Sultan Sulaiman Shah II (1602–1625)
* Sultan Rijaluddin Shah (1625–1651)
* Sultan Muhiyuddin Shah (1651–1661)
* Sultan Ziauddin Al-Mukarram Shah (1661–1687)
* Sultan Atadullah Muhammed Shah II (1687–1698)
* Sultan Abdullah I Al-Muazzam Shah (1698–1706)
* Sultan Ahman Tajuddin Halim Shah I (1706–1709)
* Sultan Abdullah II (1709–1723)
* Sultan Atadullah Muhammed III (1723–1741)
* Sultan Muhammed Jiwa Zainal Abidin II (1741–1778)
* Sultan Abdullah Makarram Shah III (1778–1797)
* Sultan Ziyauddin Mukarram Shah II (1797–1803)
* Sultan Ahmad Tajuddin II Halim Shah (1803–1843)
* Sultan Zainal Rashid Muadzam Shah II (1843–1854)
* Sultan Ahmad Tajuddin III Mukarram Shah (1854–1879)
* Sultan Zainal Rashid Muadzam Shah III (1879–1881)
* Sultan Abdul Hamid Halim Shah (1881–1943)
* Sultan Badli Shah (1943–1958)
* Sultan Abdul Halim Muadzam Shah (1958-)
( http://www.pekemas.org.my/index.php?option=com_content&view=article&id=109:kesultanan-negeri-kedah&catid=5:asal-usul&Itemid=2 )

இந்த பட்டியலில் Sultan Ziauddin Al-Mukarram Shah (1661–1687) மன்னரே பெர்லிஸ் நகரை உருவாக்கிய மன்னர்.

பெர்லிஸின் தற்போதைய சுல்தான் பரம்பரை ஜலாலுல்லாய் பரம்பரையினர்.
மேலுள்ள பட்டியலில் காணப்படும் சுல்தான் அஹ்மட் தாஜுடின் (Sultan Ahmad Tajuddin II Halim Shah (1803–1843) ) ஜாலாலுல்லாய் பரம்பரையினருக்கு பெர்லிஸை ஆட்சி செய்யும் பொறுப்பை 1843ல் வழங்கினார். மலேசியாவின் ஏனைய அரச பரம்பரையினர் கொண்டுள்ள சுல்தான் என்ற சிறப்புப் பெயர் இல்லாமல் இந்த ஜலாலுல்லாய் பரம்பரையினர் ராஜா என்ற பெயரைத் தாங்கி வரும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

அந்தவகையில் இப்பரம்பரையினரின் ராஜ குடும்பத்தினரின் பெயர்களைக் கீழுள்ள பட்டியலில் காணலாம்.
-Raja Syed Ahmad Jamalullail (1873–1887)
-Raja Syed Saffi Jamalullail (1887–1905)
-Raja Syed Alwi Jamalullail (1905–1943)
-Raja Syed Hamzah Jamalullail (1943–1945)
-Raja Syed Putra Jamalullail (1945–2000)
-Raja Syed Sirajuddin Jamalullail (2000–.)


ஆக தற்சமயம் பெர்லிஸ் மானிலத்தின் ஆட்சிப் பொறுப்பில் அரசராக இருப்பவர் ராஜா சையத் சிராஜூடின் ஜமாலுல்லாய் அவர்கள் ஆவார்.


அரச மாளிகை





அரச குடும்பத்தினரின் படம்





அரச மயானம்








அரச அருங்காட்சியகம்




இந்த அரச மாளிகை, அருங்காட்சியகம், மயானம் அனைத்துமே ஆராவ் நகரின் மையத்திலேயே அமைந்துள்ளன.




நாளை இறுதிப் பகுதி..!

அன்புடன்
சுபா

Friday, September 9, 2011

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 15

தாமான் மெலாத்தி ஏரி
இயற்கை அழகு மட்டும் போதாது. செயற்கையாகவும் இந்த இந்திரனின் கனவு உலகத்தை அழகு படுத்த வேண்டும் என்ற எண்ணம் பெர்லிஸ் அரசாங்கத்திற்கு போலும். சூப்பிங்கிலிருந்து தெற்கு நோக்கி கங்கார் செல்லும் சாலையில் வந்தால் 20 நிமிடத்திற்குள் தாமன் மெலாத்தி ஏரிக்கரைக்கு வந்து விடலாம். பெர்லிஸ் மானிலத்தின் சுற்றுலா தலங்களின் பட்டியலில் இந்த ஏரியின் பெயரும் இடம் பெற்றிருக்கின்றது.


நான் சுப்பிங்கிலிருந்து புறப்பட்ட போதே மணி ஏறக்குறைய மதியம் ஒரு மணியாகி விட்டது. தாமன் மெலாத்தி பகுதிக்கு வந்து அங்கு மதிய உணவு சாப்பிடலாம் என்ற ஆர்வத்துடன் இங்கு வந்து சேர்ந்தேன். ஆனால் ஏமாற்றமே. இங்கு நல்ல உணவுக்கடைகள் எதுவுமே மதிய வேளையில் காணப்படவில்லை. வயிற்றுக்கு உணவில்லையெனினும் கண்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது இந்த மெலாத்தி ஏரிப் பகுதி.


மிக அழகான ஏரி. குடும்பத்துடன் இங்கு பிக்னிக் வந்து மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழிக்கலாம். மிக நேர்த்தியாகப் பாதுகாக்கப்படும் பூங்காவாக இந்தப் பகுதி அமைந்துள்ளது. மாலையில் ஜோகிங் செய்ய வருபவர்களுக்கும் உடற்பயிற்சி செய்ய வருபவர்களுக்கும் நல்ல இடமாக இப்பூங்கா அமைந்துள்ளது.


மதிய வேளையில் மக்கள் நடமாட்டம் இப்பகுதியில் மிகக் குறைவாக இருப்பதால் இங்கு உணவுக்கடைகள் இல்லாமலிருக்கலாம். இதுவே பினாங்கு மானிலமாக இருந்தால் நிச்சயமாக குறைந்தது ஐந்தாறு உணவுக்கடைகளையாவது இங்கே காணலாம்.


அடுத்து பெர்லிஸில் இறுதியாக நாங்கள் செல்லவிருப்பது.. நாளை தொடர்கிறேன்.

அன்புடன்
சுபா

Wednesday, September 7, 2011

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 14

கரும்பும் சீனியும்

சீனி சீனி.. எல்லாவற்றிலும் சக்கரையும் சீனியும் இல்லாத உணவை மலாய் மகக்ளின் உணவில் பார்ப்பது அதிசயம். காலை உணவு பலகாரமாகட்டும், மதிய உணவுக்கான குழம்பாகட்டும் மதியம் சாப்பிடும் பலகாரம், மாலை உணவு என அனைத்திலும் சீனியை தவராமல் சேர்க்கும் குணம் உள்ளவர்கள் இந்த இனிப்பான இதயம் கொண்ட மலாய் மக்கள்.

என்ன சீனி சீனி என பீடிகை போகிறதே என நினைக்கின்றீர்களா.. அடுத்து வருவது பெர்லிஸ் கரும்புகளைப் பற்றிய செய்திதான்.

மலேசியாவில் கரும்பிலிருந்து உற்பத்தி செய்யப்படும் சீனி ஏனைய மிகப்பெரிய பயிர் அல்லது தோட்டங்கள் போன்ற பெரிய அளவில் இல்லையென்றாலும் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு மலேசியாவில் சீனி உற்பத்தி உள்ளது. மலேசியாவில் உள்ள மிகப்பெரிய மூன்று சீனி உற்பத்தி செய்யும் ஆலைகளும் அதனைச் சேர்ந்த கரும்பு தோட்டங்களும் நாட்டின் வடக்குப் பகுதியில் தான் உள்ளன. அதில் இரண்டு ஆலைகள் பெர்லிஸ் மானிலத்தில் அமைந்துள்ளது ஒரு தனிச் சிறப்பு.



பெர்லிஸ் மானிலத்தின் சுற்றுலா சிறப்பு அம்சங்களில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டிருக்கும் சூப்பிங் கரும்பு ஆலை, கருப்பு தோட்டத்திற்கு எங்கள் வாடகை வாகனத்தைச் செலுத்தினோம். கங்காருக்கு வடக்கு நோக்கி பாடாங் பெசார் செல்லும் சாலையில் சென்றால் வரும் சூப்பிங் நகரில் தான் இந்த கரும்பு ஆலை உள்ளது. முந்தைய ஒரு பதிவில் கரும்பு ஆலையில் பணி செய்யும் தமிழர்கள் இருக்கின்றார்கள் என்றும் குறிப்பிட்டிருந்ததை சிலர் ஞாபகம் வைத்திருக்கலாம்.

வரைபடத்தில் வடக்கில் இருக்கும் சூப்பிங் நகரைக் காணலாம்.

குவாலா பெர்லிஸில் தங்கும் விடுதியிலிருந்து இங்கு செல்ல ஏறக்குறைய 40 நிமிடங்கள். சூப்பிங் நகரின் உள்ளே நுழைந்து பயணித்தால் தூரத்திலிருந்தே நீண்டு செல்லும் கரும்புத் தோட்டத்தின் பச்சை பசேலெனும் தோற்றம் நம்மை வரவேற்பது தெரியும். வீடுகளே இல்லாத சூழல் சாலையின் இரண்டு பக்கங்கலும் கரும்புச் செடிகள்.


சாலையில் வாகனத்தை மெதுவாகப் பயணித்துக் கொண்டு இந்த ரம்மியமான சூழலை ரசித்த நிமிடங்களும் இப்போதும் கூட மனதில் வந்து செல்கின்றன. ஒரே பச்சை. கம்பளம் விரித்தார் போல.


கரும்புகளை வெட்டி ஏற்றிக் கொண்டு வரும் வாகனம்


இந்த சூப்பிங் சீனி உற்பத்தி ஆலை (Chuping Sugar Cane Plantation) தான் பெர்லிஸ் மானிலத்தில் மட்டுமல்ல, மலேசியாவிலேயே மிகப் பெரிய சீனி உற்பத்தி ஆலை என்பது குறிப்பிடத்தக்கது. 22,000 ஹெக்டர் நிலப்பரப்பில் இங்கு கரும்பு பயிரிடுதல் நடைபெறுகின்றது. சூப்பிங் ஆலையில் தினம் 5500 மெட்ரிக் டன் எடை சீனி உற்பத்தி செய்யபப்டுகின்றது என இந்த ஆலையின் வலைப்பக்கம் குறிப்பிடுகின்றது.



வாகனத்தை சற்று நிறுத்தி விட்டு சாலையில் இறங்கி சற்று தூரம் நடந்தோம். வேலை செய்து விட்டு ஓய்வுக்காக மரத்தின் நிழலில் அமர்ந்திருக்கும் வங்காளதேசத்து கூலித் தொழிலாளர்களை அங்கு பார்க்க முடிந்தது. இவ்வகையில் தொழில்சாலைகளில் வேலை செய்வதற்காக இந்தோனீசீயாவிலிருந்தும் வங்காள தேசத்திலிருந்து பல தொழிலாளர்கள் மலேசியாவில் வேலைக்காக அழைத்து வரப்படுகின்றனர். இவரகளே சொற்ப சம்பளத்திற்காக உழைக்க சம்மதிப்பதாலும் அரசாங்கமும் இந்த இரண்டு நாடுகளுக்கும் மிகப் பெரிய அளவில் தொழிலாளர்களை இறக்குமதி செய்ய சம்மதித்திருப்பதாலும் குறைந்த சம்பளத்தில் வேலையாட்களைப் பெற்றுக் கொள்வதில் இது போன்ற பல தொழிற்சாலைகள் தயக்கம் காட்டுவதில்லை. இவர்களை கொண்டு வருவதற்காக சில பிரத்தியேக ஏஜென்சிகள் இருக்கின்றன. இவைகள் சில நேரங்களில் நேர்மையாகவும் பல நேரங்களில் மோசமாகவும் நடந்து கொள்வது வருந்ததக்க செய்தி.



இந்த ஆலையை வெளியிலிருந்தவாறே பார்த்து விட்டு மீண்டும் தெற்கு நோக்கி புறப்பட்டோம். அடுத்து செல்லவிருப்பது தாசேக் மெலாத்தி ஏரி.


தொடரும்..

அன்புடன்
சுபா

Tuesday, September 6, 2011

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 13

13. கோத்தா காயாங் அருங்காட்சியகம்



கோத்தா இந்திரா காயாங்கான் (Kota Indera Kayangan) எனப் பெயர் சூட்டி இந்த நகரை வளமாக்கி இதனை அன்றைய கெடா நாட்டின் தலநகரமாக மன்னர் சுல்தான் தியாவுடின் அல்-முக்கராம் ஷா இப்னி அல்மர்ஹூம் சுல்தான் முஹையிடின் மன்சூர் ஷா அவர்கள் ஆக்கினார்கள் என்று நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இந்த மன்னரின் பெயர் மிக நீளமாக அமைந்திருப்பதை கவனித்திருப்பீர்கள் என நம்புகின்றேன். இவ்வாறான நீண்ட அடைமொழிகளுடன் கூடிய அரச சிறப்புப் பெயர் இன்றளவும் அரசருக்குச் சிறப்பாக வழங்கப்பட்டாலும் நடைமுறையில் சுருக்கி சிறிதாக்கி அழைக்கும் வழக்கம் தான் தற்சமயம் பயன்பாட்டில் உள்ளது.

மன்னர் சுல்தான் தியாவுடின் அல்-முக்கராம் ஷா இப்னி அல்மர்ஹூம் சுல்தான் முஹையிடின் மன்சூர் ஷா அவர்கள் பெர்லிஸை கெடா நாட்டின் தலைநகரமாக ஆக்கியதோடு மட்டும் இருந்து விடவில்லை. அன்றைய கெடா நாட்டில் பல மேம்பாடுகளை உருவாக்கியவர் என்ற பெறுமையும் இவருக்கு உண்டு.

இவரது சமாதிக்கு அருகில் உள்ள கற்சுவரில் இவரைப் பற்றிய தகவல்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதன் படி, இம்மன்னர்,

-வெள்ளியினாலும் செம்பினாலும் ஆன காசுகளை அறிமுகப்படுத்தியவர்
-கெடா சட்டம் (The Kedah Laws) எனக் குறிப்பிடப்படும் 16 பாகங்கள் கொண்ட புதிய சட்டங்களை உருவாக்கி அறிமுகப்படுத்தியவர்
-செயற்கை நீர்ப்பாசனம் ஒன்றினை பெர்லிஸ் நதியின் தெற்குப் பகுதியிலிருந்து கெடாவின் அனாக் புக்கிட் பகுதி வரை வரும் வகயில் நிர்மானித்தவர்

என பட்டியல் விளக்கம் அமைந்துள்ளது.


இந்தச் சிறப்பு மிக்க மன்னரின் சமாதி பெர்லிஸ் மானிலத்தில் குவாலா பெர்லிஸ் நகருக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இந்தச் சமாதியைச் சேர்ந்தார் போல பெர்லிஸ் மானிலத்தின் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்தச் சமாதி ஏறக்குறைய 400 ஆண்டுகள் ஆகி விட்ட பொழுதும் மிகவும் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டு சுற்றுலா பயணிகளும் பார்த்துச் செல்லும் வகையில் இச்சமாதி பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இந்தச் சமாதியைச் சேர்ந்தார் போல உள்ள அருங்காட்சியகம் நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்டு பல் வேறு காலகட்டங்களில் பெர்லிஸ் மானிலத்தின் நிலை பற்றியும் இம்மானிலம் இப்போதுள்ள பகுதியில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுகள் பற்றியும், இங்கு பல்லாயிரம் ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் மக்கள் போக்கு வரத்து, வாழ்க்கை முறை பற்றியும், அரசியல் பற்றியும், ஹிந்து புத்த மத இஸ்லாமிய மத தாக்கம் பற்றியும் மலாய் மக்களின் வாழ்க்கை கல்வி முறை பற்றியும் விளக்கும் பல்வேறு தகவல்களை வழங்கும் களைக் களஞ்சியமாக அமைந்துள்ளது.



இந்த அருங்காட்சியகத்தின் பெயர் கோத்தா காயாங் அருங்காட்சியகம் (மலாய் - Muzium Kota Kayang)

பெர்லிஸ் மானிலத்தைச் சுற்றிப் பார்க்கச் செல்பவர்களின் பட்டியலில் தவறாமல் இந்த அருங்காட்சியகம் இடம் பெற வேண்டும். இங்கே வரலாற்று விஷயங்களை அறிந்து கொள்வதோடு மட்டுமல்லாது அருங்காட்சியத்தின் பின் புறத்தில் அமைந்துள்ள பூந்தோட்டத்தில் அமர்ந்து தூய காற்றை சுவாசித்து இயற்கை அழகில் ஒன்றிப்போகலாம்.

இயற்கையான மலையடிவாரக் காட்டுப் பகுதியில் செயற்கையாக வடிவமைக்கப்பட்ட பூந்தோட்டம் இங்கு வருவோர் கண்களைக் கவரும், மனதைக் கொள்ளைக் கொள்ளும். விதம் விதமான செடிகள், மரங்கள், ஆங்காங்கே சிறிய குளங்கள் அவற்றைச் சுற்றிலும் பூத்துக் குலுங்கும் செடிகள் என்று இது இயற்கை அழகு நிரம்பிய இந்திர லோகமாகத் தான் காட்சியளிக்கின்றது.




அரேபிய மொழியில் கையெழுத்தில் அமைந்த பழம் நூல் ஒன்று.

பெர்லிஸ் நகருக்கு கோத்தா இந்திரா காயாங்கான் என்னும் பெயர் பொறுத்தமானதுதான். சந்தேகமேயில்லை!

தொடரும்
சுபா

Monday, September 5, 2011

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 12

பெர்லிஸ் சயாமியர் ஆட்சியில்

இத்தொடரின் முந்தைய பகுதிகளில் மலேசிய சுதந்திரத்திற்கு முன்னர் பெர்லிஸ் முன்னர் கெடா மானிலத்தின் இணைந்த நிலப்பரப்பாகவும் பின்னர் சில காலம் சயாமின் (தாய்லாந்து) ஒரு பகுதியாகவும் இருந்தது என்று குறிப்பிட்டிருந்தேன். இதனை சற்று விரிவாக இப்பகுதியில் விளக்க முயற்சிக்கிறேன்.

பெர்லிஸ் மானிலத்தின் முந்தைய பெயராக குறிப்பிடப்படுவது கோத்தா இந்திரா காயாங்கான் (Kota Indera Kayangan). இதனை தமிழில் "இந்திரனின் சுவர்க்க நகரம்" எனச் சொல்லலாம். 17ம் நூற்றாண்டில் ஆட்சியில் இருந்த கெடா நாட்டின் (இன்றைய கெடா மானிலத்தின்) மன்னர் சுல்தான் தியாவுடின் அல்-முக்கராம் ஷா இப்னி அல்மர்ஹூம் சுல்தான் முஹையிடின் மன்சூர் ஷா 1661 - 1678க்கிடையில் உருவாக்கிய நகரம் தான் கோத்தா இந்திரா காயாங்கான். கெடா (கடாரம்)வின் தலைநகரமாக கோத்தா இந்திரா காயாங்கான் அமைந்திருந்தது.இந்த நகரம் அரச நகரமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. இதற்கு மிக முக்கிய காரணம் இந்த நகர் அமைந்திருக்கும் பகுதி. இயற்கை அழகு நிறம்பியதோடு சியாமிற்கு அருகாமையிலும் இருந்ததால் இந்த நகரம் மன்னரின் தலைநகர தேர்விற்கு மிக முக்கிய இடம் வகித்தது. இந்த நகரில் அப்போது இரண்டு பெரிய நுழைவாயில்களும் அமைக்கப்பட்டன.

ஆனால் நீண்ட காலங்கள் இந்த நகரின் வளர்ச்சியும் செழிப்பும் நிலைத்திருக்க வில்லை. இந்த மன்னரின் மரணத்திற்குப் பின்னர் முடிசூடிய இவரது பேரன் தெங்கு ஙா புத்ரா (Tengku Ngah Putra) தனது தலைநகரத்தை கோத்தா புக்கிட் பினாங் எனும் பகுதிக்கு மாற்றி விட்டார். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக இந்திரனின் சுவர்க்க நகரம் எனப் பெயர் கொண்ட அன்னாளைய பெர்லிஸ் தனது முக்கியத்துவத்தை இழக்கும் நிலை ஏற்பட்டது. ஆனாலும் தொடர்ந்து கெடாவின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது.

1821 - 1839ல் நடந்த பல்வேறு குழப்பங்களில் சயாம் படைகள் கெடா நாட்டை கைப்பற்றிக் கொண்டன. அது சமயம் பெர்லிஸ் முழுதாக சயாம் நாட்டினரின் ஆட்சிக்குட்படுத்தப்பட்டிருந்தது. இந்த அடிமை நிலையில் தொடர்ந்து இருக்க விரும்பாத கெடா மக்கள் 1838, 1839ம் ஆண்டுகளில் பல்வேறு வகையில் கிளர்ச்சிகளையும் தாக்குதல்களையும் நடத்தி வந்தனர். ஆனால் பெரிய அளவில் வெற்றி ஏதும் கிட்டவில்லை. பாங்கோக் நகரிலிருந்து வந்த சயாமின் பலம் பொருந்திய ஆயிரம் போர் வீரர்கள் கொண்ட படை இந்த உள்ளூர் கிளர்ச்சிக் காரர்களை அடக்கி வைத்திருந்தது. அத்துடன் மலாயாவை முழுதாக கைப்பற்றிக் கொள்ள காத்திருந்த பிரித்தானிய அரசும் சயாமியர்களுக்கு உதவி வந்தது.

இந்தக் காலகட்டத்தில் கெடா மன்னர்களின் ஆட்சி மறைந்து சயாமிய மன்னரின் ஆட்சி வரம்புக்கு உட்பட்டிருந்தது கெடாவும் அதன் அன்றைய ஒரு பகுதியான பெர்லிஸும். லிகோர் ராஜா (Raja Ligor) அவர்களின் மறைவுக்குப் பின்னர் (மே 1839) சயாமிய அரசு இந்தப் பகுதியின் ஆட்சி முறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. இந்தப் புதிய ஆட்சி முறையில் உள்ளூர் மலாய் மகக்ளின் பிரதி நிதிகளையும் இணைத்துக் கொள்வது என முடிவாகி ஆட்சி அமைப்பில் மலாய் பிரதினிதிகளைச் சேர்த்துக் கொண்டது. இந்த வகையில் இக்குழுவில் இடம் பெற்றவர்கள் சயாம் அரசுக்கு சார்பாக இருந்த மலாய் இனத்தவர்கள். இந்தக் காலகட்டத்தில் கெடா நான்கு மானிலங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மானிலங்களுக்கும் ஒரு கவர்னர் என்ற வகையில் ஆட்சி செலுத்தப்பட்டு வந்தது.

1941 டிசம்பர் 8ம் தேதி ஜப்பானிய ராணுவம் அன்றைய மலாயாவிற்குள் நுழைந்த நாள். சயாமிய அரசு ஜப்பானிய படையினருடன் இணைந்து இந்த ஆக்கிரமிப்பிற்கு உதவ முன்வந்திருந்தது. ஆக மலாயாவின் வடக்கு நுழைவாயிலாகக் கருதப்படும் பெர்லிஸ் வழியாக 1941ம் வருடம் டிசம்பர் 8ம் தேதி ஜப்பானிய படைகள் பெர்லிஸ் நகரில் கால் வைத்து நுழைந்தன. இந்த தாக்குதலை எதிர்ந்து ஜப்பானியப் படைகள் நுழைவதைத் தடுக்க பிரித்தானிய வீரர்கள் பதில் தாக்குதல் அளித்தனர். ஆயினும் டிசம்பர் 12ம் தேதி பாடாங் பெசார் வழியாக ஜப்பானிய படைகள் மலாயாவிற்குள்ளே நுழைந்தன. இந்தத் தாக்குதலை பிரித்தானிய படைகளால் எதிர்கொள்ள முடியவில்லை. அதிவேகமாகப் பரவிய ஜப்பானிய படைகள் கெடா மட்டுமன்றி மலாயா முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டன.

ஜப்பானிய படைகளின் ஆக்கிரமிப்பின் போதும் அதற்கு முன்னரும் பெர்லிஸ் பகுதிக்குப் பொறுப்பாக இருந்தவர் ராஜா சைட் அல்வி (Raja Syed Alwi). 1943ம் ஆண்டு இந்த மன்னர் இறக்கவே ஜப்பானிய அரசு இந்த மன்னரின் தந்தையின் சகோதரராகிய துவான் ஹம்ஸா இப்னு அல்-மர்ஹும் சைட் சாஃபி ஜாமாலுல்லைல் அவர்களை மன்னராக்கி ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தது. இதனால் மனமுடைந்த ராஜா சைட் அல்வியின் நேரடி வாரிசான மனன்ர் ராஜா சைட் புத்ரா பெர்லிஸை விட்டு கிழக்குப் புற மானிலமான கிளந்தான் பகுதிக்குச் சென்று விட்டார். 1945ம் ஆண்டு வரை இந்த நிலை நீடித்தது.

ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது மலாயா மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளுக்கும் கொடுமைகளுக்கும் அளவில்லை எனலாம். அந்தக் கொடுமைகளை இன்றைய மலேசிய மக்களும் வரலாற்றைப் பள்ளியில் பாடமாகப் படித்து மனதில் நிலை நிறுத்திக் கொண்டுள்ளனர். அதனை நிச்சயமாக விரிவாக வேறொரு பகுதியில் விளக்க முயற்சிக்கிறேன்.

ஜப்பானிய ஆக்கிரமிப்பில் பெர்லிஸ் சயாம் அரசின் பொறுப்பில் விடப்பட்டிருந்தது. கெடா, கிளந்தான், திரங்கானு ஆகிய இன்றைய மலேசியாவின் மூன்று மானிலங்களும் அச்சமயத்தில் சயாமின் பொறுப்பில் இருக்கும்படி ஜப்பானிய அரசு அமைத்திருந்தது. மலாயாவைக் கைப்பற்ற சயாம் செய்த உதவிக்கு பிரதி உபகாரமாக இந்த நிலை. 1945ல் ஜப்பானிய பிடியிலிருந்து மலாயா விலகிய பின்னர் அடுத்த 25 மாதங்கள் தொடர்ந்து இந்த மூன்று மானிலங்களும் தொடர்ந்து சயாமின் ஆட்சிக்குட்பட்டே இருந்து வந்தன.

மேலும் ஒரு சுவாரசியமான விஷயத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

கெடா (பெர்லிஸும் சேர்த்து) சயாமின் ஆட்சிக்குட்பட்டிருந்த கால கட்டத்தில் சயாமிற்கு கப்பம் கட்ட வேண்டும் என சட்டம் கொண்டு வரப்பட்டது. கப்பமாக தங்கத்தாலும் வெள்ளியாலும் செய்யபப்ட்ட தங்க மரம்/ தங்க பூக்கள் சயாம் மன்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பெர்லிஸ் ஆராவ் நகரில் அமைந்திருக்கும் அரச கோட்டையிலிருந்து யானைகள் அணிவகுத்து இந்த தங்கத்தாலும் வெள்ளியாலும் ஆன மரங்களை கொண்டு செல்வார்களாம். முதலில் ஆராவிலிருந்து சிங்கோரா Singgora (இன்றைய சொங்காலா - Songkhala) வரை பாதுகாப்பாக எடுத்துச் சென்று பின்னர் அங்கிருந்து பாங்கோக் நகர் வரைக்கும் இந்த பயணம் தொடருமாம்.



படத்தில் தெற்கில் கீழே அமைந்திருக்கும் ஆராவ் நகரையும் சிங்கோரா நகரையும் வடக்கே அமைந்துள்ள பாங்காக் நகரையும் காணலாம்



1821 லிருந்து 1906 வரை இவ்வகையில் கெடாவிலிருந்து 32 தங்கப் பூக்கள் சயாம் மன்னருக்குக் கொடுக்கப்பட்டனவாம்.



தங்க மரம் /தங்கப் பூ (Bunga Emas) தற்சமயம் இவற்றில் சில பங்காக்கில் அமைந்துள்ள அருங்காட்சி நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.



இந்த வரலாற்று செய்தியை ஞாபகப் படுத்தும் வகையில் ஆராவ் நகரிலிருந்து கங்கார் நகர் வரும் சாலை சந்திப்பில் அமைந்திருக்கும் செயற்கையாக வடிவமைக்கப்ப்ட்ட ஒரு பெரிய தங்க நிற்த்திலமைந்த மரத்தைக் காணலாம்.

அன்புடன்
சுபா

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 11

குவாலா பெர்லிஸ்




பெர்லிஸ் மானிலத்தில் கங்காருக்கு அடுத்த பெரிய நகரம் குவாலா பெர்லிஸ். பெர்லிஸுக்குச் சுற்றுப் பயணம் செய்பவர்கள் கொசுக்கடிக்கு பயப்படுபவர்களாக இருந்தால் நிச்சயமாக நீங்கள் குவாலா பெர்லிஸ் நகரில் தங்கி பெர்லிஸ் மானிலத்தைச் சுற்றிப் பார்ப்பது சிறந்தது என்பது என் அனுபவப் பூர்வமான கருத்து. முதலில் இணையத்தின் வழியாக தங்கும் விடுதியைத் தேடி பதிவு செய்திருந்த நான் முதல் நாள் நாங்கள் பதிவு செய்திருந்த அந்த அழகான காட்டுப் புற தங்கும் விடுதியில் தங்க வேண்டாம் என முடிவெடுத்து குவாலா பெர்லிஸுக்கு மாறினேன். பச்சை பசுமையான காட்டின் ஓரமாக அமைந்திருந்த அந்த சுற்றுப் பயணிகள் தங்கும் விடுதியில் அத்தனை கொசுக்கள். குளிர்சாதன வசதியிருந்தாலும் அதனையும் மீறி அறைக்குள் வந்து சாகசம் செய்யும் அசுர கொசுக்கள் அவை. :-)


குவாலா பெர்லிஸ் ஒரு கடற்கரையோர நகர். துறைமுகம் உண்டு. இங்கிருந்து நேராக பெர்ரி மூலம் லங்காவித் தீவுக்காண பயணச் சேவையும் தினம் பலமுறை என்ற வகையில் வழங்கப்படுகின்றது.


தாய்லாந்துக்கு அருகில் என்பதாலும் இங்கே வியாபரத்திற்காக வந்து போவோரும் இருப்பதால் கூட்டம் நிறைந்த ஒரு நகராக இது இருக்கின்றது.




குவாலா பெர்லிஸின் சிறப்பே இங்குள்ள கடல் உணவுகள் தான். மீன்கள், இரால்கள், கடல் சிப்பிகள், நண்டுகள் என பல வகையான கடல் உணவுகளை இங்கு விற்பனைக்காக மக்கள் வைத்திருப்பதைக் காண முடிகின்றது.



கடற்கரையோரத்தில் தலையை எட்டிப் பார்க்கும் நண்டுகள்


தினம் மாலையில் 6 மணிக்கு மேல் இங்கு கடற்கரையோரமாக அமைந்துள்ள திறந்த வெளி ரெஸ்டோரண்ட்களில் மக்கள் தூரத்திலிருந்தெல்லாம் சாப்பிட வருகின்றனர். இந்த திறந்த வெளி உணவுக் கடைகள் நீளம் ஏறக்குறைய 2 கிலோமீட்டர் தூரம் இருக்கும். மாலை ஆறு மணிக்குமேல் உள்ளூர் மக்களும் சுற்றுப் பயணிகளும் இங்கே நிரம்பியிருக்கின்றனர்.

நண்டு பிடிக்கும் மீனவர் ஒருவர்

உள்ளூர் மலாய் மக்கள் கடல் உணவுகளை ரசித்து ருசித்து உண்பவர்கள். இங்குள்ள கடைகளில் அன்று கடலில் பிடிக்கப்பட்ட கடல் உயிரிணங்களைக் கடைக்காரர்கள் வைத்திருக்கின்றனர். அதில் அவரவருக்குத் தேவையான மீன், இரால், கடல் சிப்பி என தேர்ந்தெடுத்து கொடுத்தால் அதனை விரும்பும் வகையில் சமைத்துக் கொடுக்கின்றனர்.

இப்படி சமைக்கப்படும் மீன் சமையல் வகையோடு மலாய்க்காரர்களின் உணவில் எப்போதும் முக்கிய அங்கம் பெறும் பெத்தாய் (இது அவரைக்காய் போன்ற அமைப்பில் இருக்கும். மிகுந்த கசப்பு சுவை கொண்டது மற்றும் பெலாச்சான் சம்பால் (மிளகாயை காய்ந்த இராலோடு சேர்த்து அரைத்து வைத்த சட்னி) கட்டாயம் இடம் பெறும். இதோடு மூலிகை இலைகள், நெருப்பில் வாட்டிய கத்தரிக்காய் ஆகியவையும் கூட இடம் பெறும்.

நாங்கள் தங்கியிருந்த புத்ரா ப்ராஸ்மான் ஹோட்டலில் அடிக்கடி அரசாங்க அலுவலக சந்திப்புக்கள் நிகழும் போல. நாங்கள் தங்கியிருந்த சமையத்திலேயே ஒரு இஸ்லாமிய மாநாடு ஒன்றும் ஆசிரியர்கள் சந்திப்பு கருத்தரங்கம் ஒன்றும் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் பல அரசாங்க ஊழியர்களின் நடமாட்டத்தைக் காலையில் காலை உணவின் போதும் மாலையில் இங்கே இந்த கடற்கரையோர திறந்த வெளி உணவகங்களிலும் காண முடிந்தது.


டுரியான் பழம் மிகவும் கடுமையான வாசம் உடையது. இதனை மலேசியர்கள் விரும்பிச் சாப்பிடுவோம். இதனை தங்கும் விடுதிக்குள் எடுத்து வரக்கூடாது என தடை செய்யப்பட்ட படத்தைப் பாருங்கள்.




தொடரும்...

அன்புடன்
சுபா

Wednesday, June 1, 2011

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 10


10. பண்டைய பெர்லிஸில் ஹிந்து, புத்த மதங்களின் தாக்கம்

பெர்லிஸ் மானிலத்தைப் பொருத்த வரையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திற்கு முன்னர் வரை எழுதப்பட்ட ஆவணங்கள் குறைவாகவே கிடைத்துள்ளன என்ற போதிலும், இப்பகுதிக்கு வந்து சென்ற இந்திய, அராபிய, சீன வணிகர்களின் குறிப்புக்களில் பல செய்திகள் பதிவாக்கப்பட்டுள்ளன என்பதை அருங்காட்சியகத்தில் உள்ள குறிப்பிலிருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. அதிலும் குறிப்பாக ஸ்ரீ விஜய பேரரசு செழிப்புற்றிருந்த கால கட்டத்தில் இங்கு ஹிந்து மதமும் புத்த மதமும் மிகப்பரவலாக வழக்கில் இருந்துள்ளது. ஐ.ஹெச்.என்.இவான்ஸ், ஹெச்.டி.கொலின்ஸ் இருவரது தொல்பொருள் ஆய்வுகள் பெர்ஹாலா குகை, பிந்தோங், கூரூங் பத்தாங் குகை போன்ற பகுதிகளில் புத்த, ஹிந்து மத இறை வழிபாட்டு சின்னங்கள் கிடைக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிடுகின்றன.






இங்கே கிடைக்கப்பட்ட களி மண்ணாலான ஒரு சின்னத்தில் போதிசத்வர் அவலோகிதர் பதிக்கப்பட்ட ஒரு சின்னமும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்த மக்கள் மஹாயண புத்தத்தைப் பின்பற்றியவர்களாக இருந்திருக்க வாய்ப்புண்டு என்பதும் பெர்லிஸ் அருங்காட்சியகத்தில் இச்சின்னத்தோடு இணைத்து வைக்கப்பட்டுள்ள விளக்க அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது.





இங்கு கண்டு பிடிக்கப்பட்ட இறை வழிபாட்டு சின்னங்கள் 10ம், 11ம் 12ம் நூற்றாண்டு சின்னங்களாக இருக்கலாம் என இத்தொல்பொருள் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பண்டைய மலாயாவில் குறிப்பாக பெர்லிஸ் மானிலத்தில் இந்திய தாக்கம் இருந்தமைக்கான சான்றுகளில் இவையும் குறிப்பிடத்தக்கவை என நாம் மனதில் கொள்ளலாம்.




அன்புடன்
சுபா

Friday, May 20, 2011

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 9

9. கங்கார் ஸ்ரீ ஆறுமுக சாமி



கங்கார் ஸ்ரீ ஆறுமுக சாமி ஆலயத்தைப் பற்றிய அறிமுகத்தை முந்தைய பதிவில் வழங்கியிருந்தேன். இந்தக் கோயில் எப்படி படிப்படியாக மானில அரசின் உதவியுடனும் பொது மக்களின் பெரும் உழைப்பினாலும் வளர்ந்து இன்று பெர்லிஸ் மானிலத்தில் மிக முக்கிய ஹிந்து ஆலயமாகத் திகழ்கின்றது எனபது போன்ற தகவல்களை இன்றைய பதிவில் பகிர்ந்து கொள்கின்றேன்.

ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானம் என பதிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்ட போது கோயிலை அமைப்பதற்காக திரு.எஸ்.பி.எல்.பி.பழனியப்பா செட்டியார் அவர்கள் தனது நிலம் ஒன்றினை அன்பளிப்பாக வழங்க முன்வந்தார்கள். அந்த இடம் கோயில் அமைப்பதற்கு ஆகம முறைப்படி சரியான இடமாக அமையாமல் போனதால் வேறு வகையில் உதவும் பொருட்டு இந்த ஆலயத்தில் எழுந்தருளியுள்ள மூலமூர்த்தி ஸ்ரீ ஆறுமுக சுவாமி, வள்ளி, தேவயானை, மயில் வாகனம், பலி பீடம் ஆகியவற்றை இந்தியாவிலிருந்து கொண்டு வருவதற்கான அனைத்து செலவுகளையும் தனது பொறுப்பில் ஏற்றுக் கொண்டார். அத்துடன் தனது மூதாதையர் பர்மாவில் வழிபாட்டுக்கு வைத்திருந்த தேக்கு மரத்தில் சட்டமிடப்பட்ட தண்டாயுதபாணி படம் ஒன்றினையும் இவ்வாலயத்தில் வைப்பதற்கு அன்பளிப்பாக வழங்கினார்.

தற்போது ஆலயம் எழுப்பப்பட்டுள்ள இடம் பெர்லிஸ் மானில அரசுக்கு சொந்தமான இடத்தில் அமைந்திருந்ததால் இந்த இடத்தை பெருவதற்காக மானிலத்தின் முதலமைச்சரை இந்த ஆலயப் பணிக் குழுவினர் அணுகினர். மத்திய அரசிடமிருந்து $25,000.00 (மலேசிய வெள்ளி) நன்கொடையும் இக்கோயிலை அமைப்பதற்காகக் கிடைத்தது. இதற்கு மானில முதலமைச்சர் டத்தோ ஷேக் அஹமத் மிகவும் உறுதுணையாக இருந்திருக்கின்றார். இடம் கிடைத்ததும் சேற்றுப் பகுதியாக இருந்த அவ்விடத்தை மணலால் கொட்டி நிரப்பி அதனை சரியான நிலைக்குத் தாயாரித்திருக்கின்றனர் கங்காரிலும் ஆராவ் பகுதியிலும் வாழ்ந்த ஹிந்து மக்கள்.

இக்கோயிலின் அடிக்கல் நாட்டு விழா 11.7.1968ம் ஆண்டு துன் வீ.தீ.சம்பந்தன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. இக்கோயில் கட்டுமாணப்பணிகள் தொடங்கப்பட்டதும் பொருளாதாரப் பிரச்சனைகள் எழுந்த போது மானில முதலமைச்சர் அவர்கள் மேலும் $15,000 (மலேசிய வெள்ளி) மானில பொறுப்பிலிருந்து ஏற்பாடு செய்து உதவியிருக்கின்றார். அத்துடன் நாடு முழுவதுமிருந்து திரட்டப்பட்ட நன்கொடைகளிலிருந்து மேலும் கிட்டிய தொகையில் கோயிலின் முழு கட்டுமானப்பணியும் நிறைவு பெற்றிருக்கின்றது.



கட்டுமாணப்பணிகள் முடிவுற்று 14.6.1970 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ஆறுமுகசாமி ஆலயத்தின் முதல் கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது. இவ்வாலயத்தை அதிகாரப்பூர்வமாக பெர்லிஸ் மானில முதலமைச்சர் டத்தோ ஷேக் அஹமது அவர்கள் காலை மணி 11.15க்கு திறந்து வைத்து சிறப்பு செய்திருக்கின்றார்.

28.1.1972 அன்று இவ்வாலயத்தின் முதல் பொதுக் கூட்டம் நடைபெற்று அதில் மறைந்த திரு.வீ.கோவிந்தசாமி நாயுடு அவர்கள் முதல் ஆலயத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார். இவர் தலைமையிலான குழு முக்கியப் பணியாக ஆலயத்தைச் சுற்றிலும் சுவர் எழுப்பும் திட்டத்தை திறம்பட செய்து முடித்துள்ளனர். அத்துடன் ஆலயத்தின் வைகாசி விசாக தேர் திருவிழாவிற்காக ஸ்ரீ ஆறுமுகசாமியின் பஞ்சலோக சிலை ஒன்றினை வாங்க முடிவு செய்து அதனை இந்தியாவிலிருந்து தருவித்தனர். அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் நவக்கிரக சன்னிதியும் அமைக்கப்பட்டது.

இக்கோயிலுக்கு தவத்திரு கிருபானந்த வாரியார் சுவாமிகளும் வந்து சிறப்பித்திருக்கின்றார் என்பதுவும் ஒரு பெருமை தரும் செய்தி. 15.12.1981 அன்று முதன் முதலில் தவத்திரு கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவு இவ்வாலயத்தில் நிகழ்ந்துள்ளது. 1983ம் ஆண்டு திரு.வி. கோவிந்த சாமியின் மறைவுக்குப் பின்னர் மறைந்த திரு.அழகுமலை அவர்கள் ஆலய தலமை பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அதற்குப் பின்னர் 1987ம் ஆண்டு நடைபெற்ற ஆலயப் பொதுக்கூட்டத்தில் திரு.ராமையா நரசிம்மலு நாயுடு அவர்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.





இவ்வாலயத்தில் கிருபானந்த வாரியார் சுவாமிகள் உரையாற்றிக் கொண்டிருக்கின்றார்


இவ்வாலயத்திற்கு மீண்டும் கிருபானந்த வாரியார் சுவாமிகள் 1982ம் ஆண்டு வருகை புரிந்து ஆன்மீகச் சொற்பொழிவாற்றியிருக்கின்றார்.

2002ம் ஆண்டு இக்கோயிலின் பெயர் ஸ்ரீ ஆறுமுகசாமி தேவஸ்தானம் என பெயர் மாற்றம் கண்டது. அதே ஆண்டு இக்கோயில் முழுதும் சீரமைக்கப்பட்டு 11.9.2002ம் அன்று மூன்றாவது கும்பாபிஷேகம் நிகழ்த்தப்பட்டது. இகோயில் சீரமைப்பு மற்றும் கும்பாபிஷேகத்துக்கு தேவைப்பட்ட $200,000.00 (மலேசிய வெள்ளி) பொது மக்கள் வழங்கிய நன்கொடையின் வழி சேகரிக்கப்பட்டது.

இக்கோயிலின் தேர் இலங்கையிலிருந்து (கொழும்பு) ஆகம முறைப்படி தயாரிக்கப்பட்டு இங்கு கொண்டு வரப்பட்டது. தேக்கு, மஹொகானி, சந்தன மரத்தினால் உருவாக்கப்பட்ட தேர் இது. இலங்கையிலிருந்து தயாரித்து கொண்டுவரப்பட்ட தேரின் தனித்தனி பாகங்களைத் திரு.ஜெயகாந்தன் என்பவர் ஆலயத்திலேயே இருந்து அவற்றை பொறுத்தி முழுமைபடுத்தி முடித்திருக்கின்றார். 31.5.2004 அன்று ஆலயத்தில் ஒரு பொன்னாலான வேல் மட்டும் வைத்து இத்தேரினை ஆலயத்ததைச் சுற்றி வலம் வரச் செய்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து 2.6.2004 அன்று ஆலயத்தில் மிகச் சிறப்பான முறையில் ஷண்முக அர்ச்சனை நிகழ்த்தப்பட்டுள்ளது.


ஆலயத் தேர்

அத்துடன் திருமதி.சுசீலா ராமையா என்பவர் இவ்வாலயத்தில் தற்போதுள்ள 250 கிலோ எடையுள்ள பஞ்சலோக ஸ்ரீ ஆறுமுகசாமி, வள்ளி தெய்வானை சிலைகளை நன்கொடையாக வழங்கியிருக்கின்றார். இச்சிலைகள் இலங்கையில் தயாரிக்கப்பட்டவை. இந்த சிலைகளே தற்சமயம் வைகாசி விசாக தேர் திருவிழாவில் ஊர்வலத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த உற்சவ மூர்த்தி சிலைகளை வைத்து முதன் முதலாக 2.6.2004 அன்று முதல் முறையாக இத்தேர் கங்கார் நகரை வலம் வந்தது. பினாங்கு மானிலத்திலிருந்து ஏற்பாடு செய்து கொண்டுவரப்பட்ட இரண்டு காளைகள் இந்த தேரினை இழுத்துச் சென்றன. இத்திருவிழாவும் ஆலய பூஜை வைபவங்களும் ஆலய ஆகம் முறைப்படி செய்விக்கப்பட்டிருக்கின்றன.



வைகாசி விசாக விழாவோடு, கந்தர் சஷ்டி, திருக்கார்த்திகை ஆகிய விழாக்களும் இவ்வாலயத்தில் சிறப்பாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகின்றன.

மலேசியாவைப் பொறுத்தவரை பொதுவாகவே ஆலயத்திருப்பணிகளுக்கு ஆதரவு தர பொது மக்கள் என்றும் தயங்குவதில்லை. ஆலயங்களில் நடைபெறும் பல திருவிழாக்கள், கலாச்சாரப் போட்டிகள் போன்றவை மக்கள் தரும் நன்கொடைகள் சமூக ஆர்வலர்களின் உழைப்பு ஆகியவற்றால் நிகழ்த்தப்படுபவை. பெரும்பாலான ஆலயங்களில் ஆலயப் பொதுக் குழு, இளைஞர் குழு, மகளிர் குழு என தனித்தனி பிரிவுகளை அருகாமையில் உள்ள மக்களாகவே சேர்ந்து உருவாக்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். அதில் குறிப்பாக ஆலயத் துப்புரவுப் பணி, திருவிழா ஏற்பாடுகள், கலாச்சார போட்டிகள், பொங்கள் திருவிழா ஏற்பாடுகள், ஆலய பஜனைக் குழுவினர் என அமைந்திருக்கும். மலேசிய ஹிந்து மக்களில் பலர் தங்கள் வார இறுதி நாட்களையையும் வெள்ளிக் கிழமையையும் இவ்வகை பணிகளுக்காக ஒதுக்குவதும் உண்டு. எனது அனுபவத்திலேயே இவ்வாறு பல நடவடிக்கைகளில் நானும் ஈடுபட்டிருக்கின்றேன். அவை அனைத்தைம் மனதை விட்டு அகலாத இனிய நிகழ்வுகள்.



ஆலயத்தில் திருவிளக்குப் பூஜை




இவ்வாலயத்தில் அமைந்துள்ள நவக்கிரகக் கோயில்




கோயிலைச் சுற்றியுள்ள குன்றிலிருந்து பல குரங்குகள் இவ்வாலயத்தில் அங்கும் இங்கும் தாவி விளையாடிக் கொண்டிருக்கும் காட்சி..

தொடரும்..

அன்புடன்
சுபா

Sunday, May 15, 2011

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 8

8. பெர்லிஸ் மானிலத்தில் கோயில்கள்

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று எண்ணம் கொண்டு செல்லும் இடங்களிலெல்லாம் கோயில்களை அமைத்து வளம் சேர்ப்பவர்கள் தமிழர்கள். மலேசியாவிலேயே மிகக் குறைவாக தமிழர்கள் வாழும் இச்சிறிய மானிலமான பெர்லிஸிலும் ஆலயங்கள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ளும் போது மனம் பரவசமடைகின்றது இல்லையா?

பெர்லிஸ் மானிலத்தில் 4 கோயில்கள் இருக்கின்றன. அவை,
- கங்கார் நகரிலுள்ள ஆறுமுகசாமி ஆலயம்
- கங்காரிலேயே உள்ள ஸ்ரீ வீர மஹா காளியம்மன் ஆலயம்
- ஆராவ் நகரிலுள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம்
- பாடாங் பெஸார் நகரிலுள்ள ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயம்

ஆகிய நான்குமாகும்.

ஆராவ் அரச நகரம். இங்கு தான் பெர்லிஸ் சுல்தானின் அரண்மணையும் ஏனைய அரசாங்க அலுவலகங்களும் உள்ளன. இங்கு சமீபத்தில் கடந்த ஆரேழு ஆண்டுகளுக்குள் தான் புதிதாக ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம் கட்டப்பட்டுள்ளது.


பாடாங் பெஸார் நகர் பற்றி முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். தாய்லாந்தின் எல்லையில் அமைந்த நகரம் இது. இங்கு மீனாட்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை. அதனால் விரிவாக இப்பதிவில் குறிப்பிட இயலவில்லை.

அடுத்ததாக கங்கார் நகரிலுள்ள ஆறுமுகசாமி ஆலயம். இந்த ஆலயத்தின் பக்கத்திலேயே தான் ஸ்ரீ வீர மஹா காளியம்மன் ஆலயமும் அமைந்துள்ளது. ஆக இரண்டையுமே பக்கத்திலேயே பார்க்கலாம்.



கங்கார் ஒருமுக்கிய நகரம் என்ற போதிலும் பசுமை எழில் கொஞ்சமும் குறையாத ஒரு நகரம். இந்த ஆறுமுக சாமி கோயில் பசுமையான சிறு குன்று போன்ற ஒரு பகுதியில் தான் அமைந்துள்ளது. கங்கார் நகரின் முக்கிய சாலையைக் கடந்து உள்ளே சென்றால் சுலபமாக இக்கோயிலை நாம் கண்டுபிடித்து விடலாம்.



இக்கோயிலுக்கு மதியம் நேரம் செல்வது போல எங்கள் பயணம் அமைந்தது. ஆக ஆலயம் பூட்டப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் இருந்தது. ஆனாலும் ஆலயத்தின் வாசல் திறந்திருந்தது. அத்துடன் எங்களைப் பார்த்த ஆலய பொறுப்பாளர் ஒருவர் எங்களை ஆலயத்தின் அலுவலகத்துக்கும் அழைத்துச் சென்று தேனீர் பானமும் பழங்களும் வழங்கி அன்புடன் உபசரித்தார். அவறுடன் மேலும் சிலரும் எங்களுடன் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல் கோயில் பற்றிய தகவல் அடங்கிய சிறு கையேடு, மாசி மகம் திருவிழா அழைப்பிதழ் ஆகியவற்றோடு ஒரு தேவார பாடல்கள் அடங்கிய நூல் ஒன்றையும் எங்களுக்கு வழங்கினர்.

பெர்லிஸ் நகரில் அமைந்திருக்கும் ஒரே முருகன் கோயில் இது தான். ஆறு முகங்களுடன் கூடிய ஆருமுகசாமியாக இங்கே இறைவன் கருவரையில் வள்ளி தேவையானைசயுடன் அமைந்திருக்கின்றார். மூலமூர்த்தியின் சிலை கருங்கல்லால் அமைக்கப்பட்ட சிலை.



பெர்லிஸ் மானிலத்தில் இக்கோயில் அமைக்கும் எண்ணம் முதலில் 1965ம் ஆண்டு வாக்கில் எழுந்துள்ளது. இப்பணியில் முழுமையாகத் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்களில், மறைந்த திரு.எம்.கே.கோவிந்தசாமி அவர்கள், மறைந்த திரு.எஸ்.சதாசிவம் அவர்கள், மறைந்த திரு.வி.கோவிந்த சாமி நாயுடு அவர்கள், மறைந்த திரு.கேஜி.ராவ் அவர்கள் மற்றும் மறைந்த திரு. அழகுமலை ஆகியோர் மிக முக்கியமானவர்கள். இக்கோயில் அமைப்பதற்கான முதல் சந்திப்பினை இவர்கள் ஆராவ் நகரிலிருக்கும் மறைந்த திரு. எஸ் சதாசிவம் அவர்கள் இல்லத்தில் 3.6.1965 அன்று நடத்தினர். கங்கார் நகரில் ஒரு ஹிந்து ஆலயம் அமைக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் இச்சந்திப்பின் வழி முதன் முதலாக உருவாக்கம் கண்டது.



இதனை அடுத்து 2.7.1965 அன்று பெர்லிஸ் மானிலத்திலுள்ள ஹிந்துக்கள் பெர்லிஸ் இந்தியர் சங்கத்தில்ஒன்று கூடி இந்த எண்ணம் பற்றி விரிவாக பேசப்பட்டது. இக்கூட்டத்தினை மறைந்த டாக்டர்.சிவசம்பந்தன் அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்திருக்கின்றார். இதற்கு அடுத்த சில நாட்களிலேயே டாக்டர்.சிவசம்பந்தன் அவர்கள் பினாங்கு மானிலத்திற்குத் தொழில் நிமித்தம் மாற்றலாகிச் சென்றதால் மறைந்த திரு.வி.கே.கோவிந்த சாமி நாயுடு அவர்கள் கோயில் கட்டுமான குழுவின் தலைவராக நியமனம் செய்யபப்ட்டு இப்பணியை ஆரம்பித்திருக்கின்றனர். கோயில் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானம் என பதிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.





தொடரும்..

அன்புடன்
சுபா