Saturday, April 16, 2011

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு - 4

4. பெர்லிஸுக்குப் பயணம்


மலேசியாவில் 13 மானிலங்கள் உள்ளன என்று அறிமுகப் பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். கிழக்கு மலேசியா (போர்னியோவில்) மலேசியாவின் மானிலங்களான சபா சரவாக் இரண்டும் உள்ளன. இதைத் தவிர்த்து புருணை என்னும் தனி ஒரு நாடும் தெற்கு போர்னியோவின் முழுமையும் ஆக நான்கு நாடுகளைக் கொண்ட ஒரு தீவு இந்த போர்னியோ தீவு. போர்னியோ தீவின் 73% பகுதி இந்தோனிசியாவைச் சேர்ந்தது. இப்பகுதி களிமந்தான் எனப் பெயர் கொண்டது. இத்தீவு உலகின் மூன்றாவது பெரிய தீவு. களிமந்தான் (இந்தோனிசியப் பகுதி) புருணை, மலேசியாவின் இந்த இரண்டு மானிலங்கள் ஆகிய இவற்றிற்கு அதிகாரப்பூர்வ மொழி மலாய் மொழியாகும். ஆயினும் பழங்குடி மக்களின் பல்வேறு மொழிகள் இங்கு இன்றளவும் வழக்கில் உள்ளன என்பது குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம். போர்னியோ. சபா சரவாக் மானிலங்களைப் பற்றி பின்னர் மேலும் பார்க்கலாம். இப்போது எனது பயண திட்டத்திற்கு மீண்டும் வருகின்றேன். மேற்கு மலேசியாவில் உள்ள ஏனைய பதினோரு மானிலங்களில் மிகச் சிறியதும் தாய்லாந்தின் எல்லைப் பகுதியில் அமைந்திருப்பதுமான பெர்லிஸ் மானிலத்தை இம்முறை பார்த்து வரலாம் என முடிவானது. நான் எனது பள்ளிக் காலத்திலும் கூட பெர்லிஸ் மானிலம் சென்றதில்லை. அதற்கான வாய்ப்பும் அமையவில்லை.



பினாங்கு தீவைக் கடந்து மானிலத்தின் எல்லையைக் கடந்து வடக்கு நோக்கி பயணித்தால அடுத்து வருவது கெடா மானிலம். கடாரம் எனும் 6ம் நூற்றாண்டு பல்லவப் பேரரசின் பெயரை இன்னமும் தாங்கி நிற்கும் ஒரு மானிலம் இது. கடாரம் 6ம் நூற்றாண்டிலிருந்து 12ம் நூற்றாண்டு வரை ஹிந்து, புத்த மத வழிபாட்டைக் கொண்டிருந்த ஒரு அரசாகத் திகழ்ந்தது. இங்கு அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட புதையுண்ட கோயில்களைப் பற்றிய எனது கட்டுரை ஒன்றினை மரபுவிக்கியில் இங்கே காணலாம். 12ம் நூற்றாண்டுக்குப் பின்னர் பாரசீக, அராபிய தாக்கங்களால் கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாமிய மதத்தைத் தழுவி இஸ்லாமிய ராஜ்ஜியமாக மாறியது கெடா. கெடாவின் இன்றைய சுல்தான் அதே பண்டைய ராஜ்ஜியத்தின் வம்சாவளியைச் சார்ந்தவர் என்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும்.


கெடா மானிலத்தைப் பொருத்தவரை இந்தியத் தாக்கம் என்பது பல்லவப் பேரரசோடு முடிந்து விடவில்லை. 19ம், 20ம் நூற்றாண்டு வாக்கில் காலணித்துவ ஆட்சியின் போது மலேசியாவிற்குத் தென் தமிழகத்திலிருந்து வந்தவர்கள் அதிகம் பேர். மலேசியாவின் ஏனைய பகுதிகளுக்குப் பிரித்தானிய காலனித்துவ அதிகாரிகளால் ரப்பர் செம்பனை தோட்டங்களில் பணி புரியவும், இரயில் பாதை அமைக்கவும் கூலி வேலைக்காக வரவழைக்கப்பட்டவர்கள் போலல்லாமல் கெடா மானிலத்திற்கு வந்தவர்கள் பெரும்பாலும் வியாபாரம் செய்வதற்காக வந்தவர்கள். கெடா மானிலத்தில் கணிசமான அளவில் தமிழர்கள் இருக்கின்றார்கள் என்பதுடன் வியாபாரத்துறையில் ஈடுபட்டு செல்வந்தர்களாகவும் கல்வித்துறையில் மேம்பட்டவர்களாகவும் உள்ளனர் என்பதுவும் உண்மை. கெடா மானிலத்தின் வடக்கு எல்லையைக் கடந்து மேலும் பயணித்தால் வருவது தான் பெர்லிஸ் மானிலம். பெர்லிஸ் மானிலமாகத் தற்சமயம் கருதப்படுவது முன்னர் கெடா மானிலத்தின் ஒரு பகுதியாகவும் 1821க்குப் பிறகு சில காலங்கள் தாய்ந்தின் (சயாம்) ஆட்சிக்குட்பட்டும் இருந்துள்ளது. பெர்லிஸ் மானிலம் அளவில் சிறிதெனினும் தனி சுல்தான், மானிலக்கொடி, சட்டமன்றம் என அனைத்து அதிகாரத்துவ தகுதிகளும் கொண்டு விளங்கும் ஒரு மானிலம். இந்த மானிலத்தின் தலைநகரம் கங்கார்.



பினாங்கிலிருந்து பெர்லிஸ் சென்றடைவதென்றால் பேருந்து அல்லது வாகனத்தில் செல்வது சுலபம். மலேசியாவின் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் வாகனமோட்டிக் கொண்டு பயணிப்பது ஒரு சுகமான அனுபவம் என்பதுடன் இதுவே சிறந்த வழியும் கூட. பினாங்கிலிருந்து கங்கார் ஏறக்குறைய 170 கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. வாகணத்தில் சென்றால் ஏறக்குறைய 2 மணி நேரத்திற்குள் கங்காரை அடைந்து விடலாம்.



பொருளாதார அடிப்படையில் பெர்லிஸ் மானிலம் விவசாயம், காட்டு வளம் ஆகியவற்றை நம்பியிருக்கும் ஒரு மானிலம். பார்க்கும் இடமெங்கும் நெல்வயல்கள் சூழ்ந்து பச்சை பசேலென கண்ணுக்கு குளுமையளிக்கும் ஒரு மானிலம் இது. அடர்ந்த காடுகள் சூழ்ந்தது. சுற்றுலா பயணிகள் வந்தால் பெரும்பாலும் காடுகளில் நடப்பதற்கும் மலையேறுவதற்கும், இயற்கைச் சூழலை ரசிப்பதற்கும் நோக்கமாக கொண்டு வருகின்றனர். இங்குள்ள சுற்றுலா தளங்கள் அனைத்தையுமே இரண்டு நாட்களுக்குள் பார்த்து விடலாம். ஆனால் இதன் இயற்கை அழகை என்றென்றும் ரசித்துக் கொண்டிருக்கலாம். ஆக பெர்லிஸ் மானிலத்தை சுற்றிபார்த்து வர திட்டமிட்டு ஒரு சிறிய கஞ்சில் (Kancil) வாகனம் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு பினாங்கிலிருந்து நான் கங்கார் நோக்கி புறப்பட்டேன்..


தொடரும்..

Saturday, April 9, 2011

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு - 3

3. சீன சமூகம்


மலேசியா ஒரு பண்பாட்டுக் கலவையான் ஒரு நாடு. இங்கு ரமடான் பண்டிகை எவ்வாறு சிறப்பாக கொண்டாடப் படுகின்றதோ அதேபோல நம்மவர்களின் தீபாவளி தைப்பூசப் பண்டிகையும் ஒரு நாள் அரசாங்க விடுமுறையுடன் கொண்டாடப்படுகின்றது. சீனப் புத்தாண்டும் புத்தரின் பிறந்த தினமான விசாக தினமும், கிற்ஸ்மஸ் பண்டிகையும் அரசாங்க விடுமுறையுடன் பாகு பாடின்றி இங்கே கொண்டாடப்படுகின்றன.

தைப்பூசத்திருவிழாவில் ஹிந்துக்கள் மட்டுமன்றி சீனர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற காவடி எடுப்பதும் சீன வர்த்தக நிறுவனங்களும் செல்வந்தர்களும் கூட தங்கள் காணிக்கையைச் செலுத்த குன்று போல தேங்காய்களைக் குவித்து வைத்து முருகப் பெருமானின் தேர் வரும் சாலையில் பட்டாசு வெடிப்பது போல தேங்காய்களை உடைத்து மகிழ்வதும் இந்த நாட்டில் நடக்கும் ஒரு வித்தியாசமான ஒரு நிகழ்வு.

அது போல செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் நாம் நவராத்திரி கொண்டாடும் அதே வேளையில் சீனர்கள் 9 நாட்களில் தங்களின் ஒன்பது கடவுளர்களை வழிபடும் ஒரு பண்டிகையும் நடைபெறும். அந்த 9 நாட்களும் சைவ உணவு உண்டு அவர்கள் விரதமும் கடைபிடிப்பார்கள். அந்தக் கால கட்டங்களில் பினாங்கில் முக்கிய இடங்களான டத்தோ கெராமட் சாலை, குவின் ஸ்ட்ரீட், ஆகிய இடங்களில் சைவ உணவகங்கள் பந்தல்கள் போல போடப்பட்டு நாள் முழுக்க விற்பனைக்கு வைக்கப்படும். இதில் குறிப்பாக சோயாவால் செய்யப்பட்ட பலவித பதார்த்தங்களைக் கொண்டு சமைக்கப்பட்ட சமையல் வகைகள் நிறைந்திருக்கும்.



இப்பண்டிகையின் இறுதி நாளான ஒன்பதாம் நாள் மிகச் சிறப்பான ஒரு திருநாளாக இருக்கும். அன்று மாலை ஹிந்துக்ள் மாரியம்மன் ஆலயங்களில் தீ மிதிப்பது போல சீனர்களும் தீ உருவாக்கி தீமீது நடந்து சென்று தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள். குறிப்பாக இந்தத் திருவிழா பினாங்கு குவாலலும்பூர் ஆகிய இடங்களில் மிகப் பெரிய அளவில் நடைபெறும். மலேசியாவில் வாழும் சீனர்கள் பெரும்பாலும் பௌத்த மதத்தை தழுவியவர்கள். அதற்கு அடுத்த நிலையில் சீன பாரம்பரிய வழிபாட்டினை பின்பற்றுபவர்களும் பெறுவாரியாக உள்ளனர். இதற்கடுத்தார் போல கிறிஸ்துவ மதத்தை தழுவிய சீனர்களும் ஒரு சிறிய விழுக்காட்டினர் உள்ளனர். சீன பாரம்பரிய கடவுளர்களை வழிபடும் சீனர்களும் புத்த மதத்தை பின்பற்றும் சீனர்களும் எந்த தயக்கமுமின்றி ஹிந்து கோயில்களுக்கும் வந்து வழிபடுவார்கள். இவர்களின் வழிபாட்டு முறை ஹிந்து ஆலயங்களில் உள்ளது போன்று அமைந்திருப்பதால் அதே போல ஊதுபத்தியை ஏற்றி தங்கள் கைகளில் வைத்துக் கொண்டு கற்பகிரகத்தை வலம் வந்து பின்னர் சுவாமிப் பிரசாதம் பெற்றுக் கொண்டு செல்வர்.


மலேசிய பழங்குடி மக்களுக்குள் மட்டும் தான் பல்வேறு குழுக்கள் என்பதில்லை. மலாயா வந்து சேர்ந்த சீனர்களுக்குள்ளேயும் பல குழுக்கள் இருக்கின்றன. அதே போல இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து குடியேறிய இந்தியர்களிலும் பல சாதிக் குழுவினர் அடங்கியிருந்தனர். மலேசியாவில் வாழும் பல்வேறு குழுவினரைப் பற்றிய ஒரு பதிவு ஒன்று இணையத்தில் கிடைத்தது. இது இத்துறையில் தகவல் தெரிந்து கொள்ள விழைபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

http://www.joshuaproject.net/countries.php?rog3=MY

19ம் நூற்றாண்டில் மலாயா வந்த தமிழர்கள் பெரும்பாலும் ரப்பர் மரத்தோட்டங்களில் பணிபுரிய வந்தர்கள். அதேபோல அக்காலகட்டத்தில் தெற்கு சீனாவிலிருந்து மலாயாவில் கூலி வேலைகளுக்காக சீனர்கள் அதிகமானோர் வந்தனர். சீனர்களின் இந்த 19ம் நூற்றாண்டில் அமைந்த மலாயாவுக்கான பயணம் முக்கியமாக ஈயம் தேடுதல் தொடர்பானது. மலேசியாவில் அதிகமாக சீனர்கள் நிறைந்திருக்கும் மானிலங்களில் ஒன்று பினாங்கு மானிலம். அதேபோல பேராக் மானிலமும் ஆகும். இங்கு ஈயம் தேடுதல் பணிக்காக வந்தவர்களில் பலர் இங்கேயே தங்கியதன் காரணத்தால் மலேசிய சீனர்களின் வரலாற்றில் மிக முக்கியமான பல நிகழ்வுகள் இப்பகுதியில் நிகழ்ந்துள்ளன.



ஹொக்கியன், ஹாக்கா, கண்டோனிஸ், தியோச்சு, மாண்டரின், ஹைனனிஸ் ஆகிய குழு சீனர்கள் தான் பெரும்பாலும் மலாயா வந்த குழுவினர். சீனர்களின் மலாயாவுக்கான வருகை 18, 19ம் நூர்றண்டில் தன் தொடங்கிழது என்பதல்ல. 3ம் 4ம் நூற்றாண்டுகளில் கூட வர்த்தகத்துக்காக சீனர்கள் மலாயா வந்து இங்கேயே சிலர் தங்கி வாழ்ந்து விட்டமையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒரு விஷயம்.


சுமத்ரா பலேம்பாங்கிலிருந்து வந்த பரமேஸ்வரா மலாக்கவை நிறுவினார். அவரது பரம்பரையில் ஆறாவதாக வந்த மன்சூர் ஷா என்ற சுல்தான் வணிக வளத்தை பெருக்குவதற்காக சீன அரசனுடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் பொருட்டு சீன அரசர் ஒருவரின் மகள் ஹங் லி போவை திருமணம் செய்து கொண்டார். அப்போது ஹங் லீ போவுடன் சீனாவிலிருந்து குழுவாக பல சீனர்கள் மலாக்கா வந்து சேர்ந்தனர். அச்சமயத்தில் சீனாவுக்கும் மலாயாவுக்கும் இடையிலான வர்த்தக் உறவு சிறந்த நிலையில் இருந்தது. 1459 - 1477 வரை ஆட்சி செய்தவர் சுல்தான் மன்சூர் ஷா. சீனர்கள் பலர் வர்த்தகம் தொடர்பாக அக்கால கட்டத்தில் மலாயா வந்தனர். இவ்வகையில் 16, 17ம் நூற்றாண்டு வாக்கில் மலாக்கா வந்து இங்கேயே தங்கி வாழ்ந்து வரும் சீனர்கள் தங்களை பாபா-ஞோன்யா (Baba-Nyonya) என அடையாளப்படுத்திக் கொண்டு தனித்துவத்துடன் வாழ்கின்றனர். இவர்கள் அடிப்படையில் சீனர்கள். வர்த்தகம் செய்ய வந்தவர்கள் மலாக்கவிலேயே தங்கி அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையோடு தங்களை இணைத்துக் கொண்டவர்கள். இந்த இன மக்கள் சற்று தனித்த இயல்புடன் இன்றளவும் மலாக்க மானிலத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் உடை, உணவு பழக்க வழக்கங்கள் பொதுவான சீனர்களை விட வித்தியாசமானது. மிக அதிகமாக இந்தோனீசிய, மலாய் இன மக்களின் பழக்க வழக்கங்கள் கலந்த ஒரு முறையாகத் திகழ்வது.




பெரும்பாலும் ஹொக்கியான் தியோச்சு, கண்டனிஸ் குழு மக்களே அக்கால கட்டத்தில் மலாக்கா வந்து பின்னர் பாபா-ஞோன்யாவாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு இன்றளவும் வாழ்பவர்கள். இவர்கள் திருமணம் என்று வரும் போது பெரும்பாலும் தெற்கு சீனாவில் பெண்ணெடுத்து திருமணம் செய்யும் வழக்கத்தை கொண்டிருந்தனர். இதில் முக்கியமான அம்சம் யாதெனில் இவர்கள் அடிப்படையாக தங்கள் மொழியை விட்டு, உள்ளூர் வழக்கு மொழியான மலாய் மொழியை தங்கள் மொழியாக கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக் கொண்டவர்கள். இவர்கள் பேசும் மொழி பாபா மலாய என அழைக்கப்படுவது. இது முழுமையாக தூய்மையான மலாய் மொழி இல்லாவிட்டலும் சீன மொழிக் குடும்பத்தின் ஒரு மொழின ஹிக்கியான் மொழியின் பல சொற்கள் கலந்தது.


இதே போல இக்காலகட்டத்தில் தென்னிந்தியாலிருந்து வர்த்தகம் புரிய மலாயா அதிலும் குறிப்பாக மலாக்கா வந்தவர்களும் தமது இயல்பு மாறாமல் இன்றளவும் மலாக்காவில் வாழ்கின்றனர். இந்த மக்கள் மலாக்கா செட்டிகள் என அழைக்கப்படுகின்றனர். இவர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்கு முன்னர் எனது பயண திட்டத்தைப் பற்றியும் கொஞ்சம் பகிர்ந்து கொள்கின்றேனே..

குறிப்பு-

சில விழியங்கள் இங்கே உள்ளன.

http://www.youtube.com/watch?v=fzLkkm0dQIY

http://www.youtube.com/watch?v=_Fi5UL9UmCM

http://www.youtube.com/watch?v=27ugLLNgUCw&feature=related

இந்த விழியங்களைப் பாருங்கள். சீன பக்தர்கள் இந்த 9ம் நாள் பண்டிகையின் போது அலகு குத்திக் கொண்டு சாமி வந்து ஆடுவதை!.

http://www.youtube.com/watch?v=dUpfpL-Vex4&feature=player_embedded#at=35
(கொதிக்கும் எண்ணையை எடுத்து குடிக்கும் பக்தர்கள்)


http://www.youtube.com/watch?v=VQL9TWISGss
(தீ உருவாக்கி அதில் தீமிதிக்கும் பக்தர்கள்)


இந்த விழாவைப் பற்றிய ஒரு ஆய்வுக் கட்டுரை ஒன்று ! http://nirc.nanzan-u.ac.jp/publications/afs/pdf/a1098.pdf


அடிப்படையில் துரதிஷ்டம் மறைந்து சந்தோஷம் பெற வேண்டும் என வேண்டிக் கொண்டு மக்கள் வழிபடும் ஒரு பண்டிகை இது. ஒன்பது கடவுளர்கள் பற்றி விக்கி பீடியாவில் இங்கே காணலாம். http://en.wikipedia.org/wiki/Nine_Emperor_Gods_Festival Nine Emperor Gods என தேடிப் பாருங்கள். பல தகவல்கள் கிடைக்கும். Zhou Yu Dou Fu Yuan Jun விற்கும் Dou Mu Yuan Jun இருவருக்கும் தோன்றிய இந்த ஒன்பது குழந்தைகளான
Tan Lang
Tai Xing Jun
Ju Men Yuan Xing Jun
Lu Cun Zhen Xing Jun
Wen Qu Niu Xing Jun
Lian Zhen Gang Xing Jun
Wu Qu Ji Xing Jun
Po Jun Guan Xing Jun
Zuo Fu Da Dao Xing Jun
You Bi Da Dao Xing Jun

ஆகியோரை வரவேற்பதும் பின்னர் அவர்களை வழியனுப்பி வைப்பதுமே இந்த விழா.


எனது இளம் வயதில் நீளமான அலகு குத்திக் கொண்டு இவ்வகையில் இந்த விழா நடைபெறுவதை நான் பார்த்ததில்லை. பல மாற்றங்கள் படிப்படியாக சேர்ந்திருகின்றன. ஹிந்துக்கள் கொண்டாடும் தைப்பூச விழாவில் உள்ளது போனற காவடி எடுத்தலின் தாக்கம் தற்சமயம் இந்த விழாவில் ஒரு அங்கமாகியிருப்பது தெரிகின்றது. 1998க்குப் பிறகு இந்த விழாவை நான் நேரில் பார்க்க வாய்ப்பு அமையவில்லை.


தொடரும்...

Thursday, April 7, 2011

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு - 2

2. மக்கள்


பினாங்கு - ஏராளமான ஞாபங்களை எனக்கு தந்த ஒரு ஊர். எனது மலேசிய வாழ்க்கையின் பெரும் பகுதி இந்த மானிலத்தில் தான். எனது முந்தைய சில பதிவுகளில் பினாங்கில் எனது சில நினைவுகளை நான் பதிந்திருக்கின்றேன். பினாங்கு மானிலம் மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூரிலிருந்து ஏறக்குறைய 450 கிமீ வடக்கில் அமைந்துள்ளது. மலேசியாவைப் பற்றி கேட்டால் முதலில் பலருக்கும் ஞாபகம் வருவது கோலாலம்பூர் தான். நாட்டின் தலைநகரம் அது. ஒட்டு மொத்த மலேசியாவுக்கே சிறப்பை கூட்டும் பல அம்சங்கள் இங்கே உள்ளன. பெரிய கேளிக்கை விடுதிகள், கோயில்கள், மசூதிகள், புத்தர் ஆலயங்கள், விற்பனைக் கூடங்கள் என கண்ணைக் கவரும் பல விஷயங்களுடன் வனங்களும் பாதுகாக்கப்படும் இயற்கையான காடுகளும் கூட அமைந்துள்ள ஒரு பகுதியாக விளங்குகின்றது.



மலேசியாவை பல்லின மக்கள் வாழும் ஒரு நாடு என்று பொதுவாகக் குறிப்பிட்டாலும் இங்கு முக்கியமாக மூன்று இனத்தவர்கள் பெரும்பாண்மையாக வாழ்கின்றனர். மலாய் இனத்தவர்கள் 51விழுக்காட்டினரும், அத்துடன் மேலும் 11 விழுக்காட்டினர் ஏனைய பழங்குடி இனத்தவரும் சேர்ந்து ஏறக்குரைய 62விழுக்காட்டு ள் என்ற நிலையில் பூமிபுத்திரர்கள் (Bumiputera) பெரும்பாண்மை இனமாகத் திகழ்கின்றது. இதற்கடுத்தாற் போல எண்ணிக்கையில் வருபவர்கள் சீனர்கள். ஏறக்குறையை 28 விழுக்காட்டினர். மக்கள் தொகையில் குறைந்திருந்தாலும் மலேசியாவின் பொருளாதாரத்தின் மூல நாடி இவர்கள் என்பதே உண்மை. அதற்கடுத்தாற் போல தமிழர்கள். இவர்களின் எண்ணிக்கை 7.5% என்ற அளவில் உள்ளது. இதைத்தவிர மேலும் ஐரோப்பியர், தாய்லாந்துக்காரர்கள், அராபியர்கள் என சிறு விழுக்காட்டினர் அமைந்து மொத்த மகக்ள தொகையை உருவாக்கியுள்ளது. இதில் பூமிபுத்திரர்கள் (Bumiputera) குழுவில் இடம்பெருபவர்கள், மலாய் இனத்தவர்களும் மலேசியாவின் பூர்வக் குடியினரும்தான்.


மலேசிய பூர்வக் குடியினர் பல குழுக்கள் உள்ளனர். நெக்ரித்தோ, செனாய் போன்ற குழுக்கள் அதிக எண்ணிக்கையிலானவர்கள். நெக்ரித்தோவின் உட்பிரிவுகளான ஜாஹாய், லானோ, போன்றவர்கள் இன்றளவும் நாடோடிகளாக் வாழ்பவர்கள். காடுகள் அழிக்கப்பட்டு நகரமயமாக்கலில் பலர் காடுகளை விட்டு வெளிவந்து நகரங்களில் தொழிலில் ஈடுபட்டும் பள்ளிகளில் குழந்தைகளை படிக்க வைத்தும் வாழ்க்கை தரத்தில் மேம்பாடு அடைந்து வருகின்றனர். செனாய் குழுக்களின் உட்பிரிவுகளான தெமுவான், ஜக்கூன், செமாய், தெமியாட், தே வோங், ஜாஹூட், செம்மலாய் போன்றவர்கள் கடற்கரைகருகிலேயும் சில குழுக்கள் காடுகளிலும் மீன்பிடித்தும் வேட்டையாடியும் வருவதை வாழ்க்கை முறையாக கொண்டவர்கள். கிழக்கு மலேசியா (போர்னியோ தீவில்) சரவாக் மானிலத்தில் அதன் மக்கள் தொகையில் 50 விழுக்காட்டுக்கும் மேலானவர்கள் பூர்வகுடி மக்களே. அதே போல சபா மானிலத்தை எடுத்துக் கொண்டால் ஏறக்குறைய 60 விழுக்காட்டினர் பூர்வ குடி மக்கள் தான். இந்த மானிலத்தில் மாத்திரம் ஏறக்குறைய 30க்கும் மேற்பட்ட பூர்வகுடி இனத்தவர்கள இருக்கின்றனர். ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு தினுசான குழுக்கள். டூசூன், கடஸான், மூரூட் என பல குழுக்கள். சரவாக் மானிலதத்தை எடுத்துக் கொண்டால், ஈபான், கென்யா, காபாட், கெலாபிட், பூனான் பா, லாஹானான், செகாப்பாக் என பல குழுக்கள். ஒவ்வொரு குழுக்களுக்கும் அவரவர் மொழிகள், வட்டார வழக்குகள் என பல உள்ளன. மலேசியாவைப் பொருத்த வரை மலாய் மொழி தேசிய மொழி என்ற போதிலும் இந்த இனக்குழுக்கள் தங்கள் மொழியை மறக்கவில்லை, என்பதுடன் மிக உறுதியாக தங்கள் இனத்தின் மொழியை வழக்கில் கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு முக்கிய விஷயம்.



இதில் நெக்ரித்தோ குழுவினர் மலேசியாவில் வாழும் குடிகளில் மிகப் பழமையான குடிகளுல் ஒன்று. இவர்கள் இன்றைய மலேசியாவின் பூர்வகுடிகளில் அடங்கினாலும் இவர்கள் வேறு பகுதியிலிருந்து பெயர்ந்து குடியேறிவர்கள் எனக் கருதப்படுகின்றனர். நெக்ரித்தோ (ஸ்பேனீஷ் மொழியில் நீக்ரோ என்பதைக் குறிக்க பயன்படும் சொல், அதவது சிறிய கருப்பர்கள் என்ற பொருளில்) என்பது ஐரோப்பியர்கள் இம்மக்களை குறிக்க பயன்படுத்திய பெயர். இவர்கள் பல்லண்டுகளுக்கு முன்னர் நியூ கீனியிலிருந்து ஆசியாவிற்கு குடியேறிய மக்களாகவும் இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இவ்வினமக்களைப் பற்றிய மேலும் சில செய்திகள் இங்கே.. http://lazacode.com/place-empire/negrito-history மலேசிய பூர்வ குடிகள் பற்றி பகிர்ந்து கொள்ள பல சுவையான தகவல்கள் இருக்கின்றன. வாய்ப்பு அமையும் போது அம்மக்கள் பற்றிய எனக்குத் தெரிந்த சில தகவல்களை மேலும் பகிர்ந்து கொள்கின்றேன்.


தொடரும்....

Tuesday, April 5, 2011

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு

1.அறிமுகம்

கலாச்சாரக் கலவையும் அழகும் புதுமையும், நாகரிகமும் இயற்கை எழிலும், தூய்மையும் ஒருங்கே அமைந்த ஒரு நாடு மலேசியா. எனது இளமை காலம் தொட்டு சுதந்திர மலேசியாவின் படிப்படியான வளர்ச்சியை பார்த்தும் அனுபவித்தும் வருகின்றேன். எண்ணற்ற நினைவுகள் அவ்வப்போது மனதில் ஞாபகமாக நிழலாடும் போது அந்தச் சில கணங்கள் நேரத்தில் பின்னோக்கிச் சென்று அக்கணங்கள் அந்த ஞாபங்களில் வாழ்ந்து பின்னர் அவை முடிந்தவை என் தெளிவடைந்து வியந்து நான் நிற்பதுண்டு.


மலேசியாவில் அதிலும் குறிப்பாக பினாங்கில் எனது அங்கிருந்த காலகட்டத்திலேயே நான் நினைவு தெரிந்து பார்த்து அனுபவித்த பல விஷயங்கள் மனதில் ஆழத்தில் பதிந்து கிடக்கின்றன. 1970களில் இருந்த மலேசியா, பின்னர் 1980களில் அதற்குப் பின்னர் 1990களில் பின்னர் 2000ம் ஆண்டுகளில் என பகுத்துப் பார்த்தால் மலேசியாவின் வளர்ச்சி என்பது மிக அபரிதமானது. 1969ம் ஆண்டு நிகழ்ந்த இனக்கலவரம் சுதந்திர மலேசியாவின் சரித்திரத்தில் மறைக்கப்பட முடியாத ஒரு துயர நிகழ்வு.


13 மே என்பது மலேசியாவை பொறுத்தவரை இன்றளவும் கூட ஒரு துரதிஷ்டம் தரும் நாளாக கருதப்படும் ஒன்று. மலேசிய மக்கள் தொகையில் இரண்டு பெரிய குழுக்களான மலாய் இன மக்களுக்கும் சீன இன மக்களுக்கும் இடையே நிகழ்ந்த கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர். அரசாங்கம் அமுல்படுத்திய புதிய அரசாங்கக் கொள்கை மலாய் இனத்தவருக்குப் பல சலுகைகளை வழங்கும் வகையில் அமைக்கபப்ட்டதை தொடர்ந்து எழுந்த அதிருப்தி இனக்கலவரமாக வெடித்தது. நாடெங்கும் பயங்கரம் சூழ்ந்திருந்ததாக எனது தந்தையார் கூறுவார். தமிழர்கள் நேரடியாக இந்த கலவரத்தில் பாதிக்கப்படவில்லையென்றாலும் ஒரு வகையில் நாட்டு மக்கள் அனைவருமே பாதிக்கப்பட்டிருந்த கால கட்டம் தான் அது. சாலையில் செல்லும் போதே மிகக் கோரமாக, பார்க்கும் சீனர்களை வெட்டிசாய்த்து விட்டும் செல்லும் மலாய் இனத்து மக்களையும், பார்க்கும் மலாய் இனத்தவரை தாக்கி அருவாளால் வெட்டும் சீனர்களைப் பார்த்தது பற்றி தகவல்கள் என் தந்தையார் கூறிக் கேட்டிருக்கின்றேன். இந்த காலகட்டத்தில் மலேசியாவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு சில மாதங்கள் அவசரகாலம் பிரகடனப்படுத்தப்பட்டு மக்கள் பீதியுடன் சில காலம் இருந்திருக்கின்றனர். மலேசியாவின் சுதந்திரத் தந்தை என அழைக்கப்படும் துங்கு அப்துல் ரஹ்மான் இந்த இனக்கலவரத்தின் அடிப்படையில் தனது பிரதமர் பதவியைத் துறந்தார்.


அதற்குப் பிறகு அவ்வப்போது உள்பூசல்கள் பல இருந்தாலும் கலவரம் மலேசியாவில் மீண்டும் தோன்றியதில்லை. 1969 மே 13 என்பதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு வளர்ச்சி நோக்கி மலேசியாவை கொண்டு செல்ல அனைவரும் பயணம் செய்த காலம் அது. எனது மலேசிய அனுபவம் முழுதும் இந்த காலகட்டத்தில் தான் அமைந்தது. ஆனாலும் கடந்த சில ஆண்டுகளில் மீண்டும் பறபல விஷயங்கள் சிறு சிறு கலவரங்களாக தோன்றி மறைவதை பலரும் நாளிதழ்களிலும் இணையத்திலும் கூட வாசித்தும் கேள்விப்பட்டும் இருக்கலாம். இவை ஒரு புறம் இருப்பினும் மலேசியாவின் வளர்ச்சியும் அதன் எழிலான சூழலும் அனைவரையும் பிரமிக்க வைப்பது என்பதை மறுக்க முடியாது.



மலாயா 1957ல் ஆங்கிலேய காலணித்துவ ஆட்சியிலிருந்து மீண்டு சுதந்திரம் பெற்றது. மலாயா தீபகற்பம், சிங்கப்பூர் தீவு, வடக்கு போர்னியோ பகுதியான சபா, மேற்கு போர்னியோவின் பெரும் பகுதியான சரவாக் ஆகியவற்றை உள்ளடக்கி மலேசியாவாக 1963ல் உருபெற்றது. அதற்கு அடுத்த ஆண்டில் ஏற்பட்ட இணங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளில் ஏற்பட்ட திருப்தியின்மை அதனால் ஏற்பட்ட உள்ளூர் கலவரங்களால் சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து செல்ல முடிவாகி தனி நாடாக 1965ல் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டது.



மலேசியக் கொடியை உற்று நோக்கினால் அதில் இருக்கும் நட்சத்திரம் 14 கதிர்களைக் காட்டுவதைக் காணலாம். அவை 14 மானிலங்களைக் குறிப்பது. சிங்கப்பூர் இந்த அமைப்பிலிருந்து வெளியேறிய பின்னர் 13 மானிலங்கள் மட்டுமே இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. நான் மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்து கல்வி கற்றிருந்தாலும் கூட மலேசியா முழுமையையும் இது வரை பார்த்ததில்லை. அதிலும் தற்சமயம் தாய்நாட்டை விட்டு அயல்நாட்டில் குடியேறிய பின்னர் இதற்கான வாய்ப்பு சற்று குறைந்து விட்டது. அவ்வப்போது மலேசியா செல்லும் போது நான் இதுவரை சென்றிராத சில மானிலங்களுக்குச் சென்று பார்த்திராத புதிய இடங்களை காண நான் முயற்சிப்பதுண்டு. அந்த வகயில் சென்ற 2010ம் ஆண்டு இறுதியில் மலேசியா சென்ற போது எங்கு செல்லலாம் என யோசித்த போது மனதில் தோன்றியது ஒரு எண்ணம்...!


தொடரும்....