Friday, May 20, 2011

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 9

9. கங்கார் ஸ்ரீ ஆறுமுக சாமி



கங்கார் ஸ்ரீ ஆறுமுக சாமி ஆலயத்தைப் பற்றிய அறிமுகத்தை முந்தைய பதிவில் வழங்கியிருந்தேன். இந்தக் கோயில் எப்படி படிப்படியாக மானில அரசின் உதவியுடனும் பொது மக்களின் பெரும் உழைப்பினாலும் வளர்ந்து இன்று பெர்லிஸ் மானிலத்தில் மிக முக்கிய ஹிந்து ஆலயமாகத் திகழ்கின்றது எனபது போன்ற தகவல்களை இன்றைய பதிவில் பகிர்ந்து கொள்கின்றேன்.

ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானம் என பதிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்ட போது கோயிலை அமைப்பதற்காக திரு.எஸ்.பி.எல்.பி.பழனியப்பா செட்டியார் அவர்கள் தனது நிலம் ஒன்றினை அன்பளிப்பாக வழங்க முன்வந்தார்கள். அந்த இடம் கோயில் அமைப்பதற்கு ஆகம முறைப்படி சரியான இடமாக அமையாமல் போனதால் வேறு வகையில் உதவும் பொருட்டு இந்த ஆலயத்தில் எழுந்தருளியுள்ள மூலமூர்த்தி ஸ்ரீ ஆறுமுக சுவாமி, வள்ளி, தேவயானை, மயில் வாகனம், பலி பீடம் ஆகியவற்றை இந்தியாவிலிருந்து கொண்டு வருவதற்கான அனைத்து செலவுகளையும் தனது பொறுப்பில் ஏற்றுக் கொண்டார். அத்துடன் தனது மூதாதையர் பர்மாவில் வழிபாட்டுக்கு வைத்திருந்த தேக்கு மரத்தில் சட்டமிடப்பட்ட தண்டாயுதபாணி படம் ஒன்றினையும் இவ்வாலயத்தில் வைப்பதற்கு அன்பளிப்பாக வழங்கினார்.

தற்போது ஆலயம் எழுப்பப்பட்டுள்ள இடம் பெர்லிஸ் மானில அரசுக்கு சொந்தமான இடத்தில் அமைந்திருந்ததால் இந்த இடத்தை பெருவதற்காக மானிலத்தின் முதலமைச்சரை இந்த ஆலயப் பணிக் குழுவினர் அணுகினர். மத்திய அரசிடமிருந்து $25,000.00 (மலேசிய வெள்ளி) நன்கொடையும் இக்கோயிலை அமைப்பதற்காகக் கிடைத்தது. இதற்கு மானில முதலமைச்சர் டத்தோ ஷேக் அஹமத் மிகவும் உறுதுணையாக இருந்திருக்கின்றார். இடம் கிடைத்ததும் சேற்றுப் பகுதியாக இருந்த அவ்விடத்தை மணலால் கொட்டி நிரப்பி அதனை சரியான நிலைக்குத் தாயாரித்திருக்கின்றனர் கங்காரிலும் ஆராவ் பகுதியிலும் வாழ்ந்த ஹிந்து மக்கள்.

இக்கோயிலின் அடிக்கல் நாட்டு விழா 11.7.1968ம் ஆண்டு துன் வீ.தீ.சம்பந்தன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. இக்கோயில் கட்டுமாணப்பணிகள் தொடங்கப்பட்டதும் பொருளாதாரப் பிரச்சனைகள் எழுந்த போது மானில முதலமைச்சர் அவர்கள் மேலும் $15,000 (மலேசிய வெள்ளி) மானில பொறுப்பிலிருந்து ஏற்பாடு செய்து உதவியிருக்கின்றார். அத்துடன் நாடு முழுவதுமிருந்து திரட்டப்பட்ட நன்கொடைகளிலிருந்து மேலும் கிட்டிய தொகையில் கோயிலின் முழு கட்டுமானப்பணியும் நிறைவு பெற்றிருக்கின்றது.



கட்டுமாணப்பணிகள் முடிவுற்று 14.6.1970 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ஆறுமுகசாமி ஆலயத்தின் முதல் கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது. இவ்வாலயத்தை அதிகாரப்பூர்வமாக பெர்லிஸ் மானில முதலமைச்சர் டத்தோ ஷேக் அஹமது அவர்கள் காலை மணி 11.15க்கு திறந்து வைத்து சிறப்பு செய்திருக்கின்றார்.

28.1.1972 அன்று இவ்வாலயத்தின் முதல் பொதுக் கூட்டம் நடைபெற்று அதில் மறைந்த திரு.வீ.கோவிந்தசாமி நாயுடு அவர்கள் முதல் ஆலயத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார். இவர் தலைமையிலான குழு முக்கியப் பணியாக ஆலயத்தைச் சுற்றிலும் சுவர் எழுப்பும் திட்டத்தை திறம்பட செய்து முடித்துள்ளனர். அத்துடன் ஆலயத்தின் வைகாசி விசாக தேர் திருவிழாவிற்காக ஸ்ரீ ஆறுமுகசாமியின் பஞ்சலோக சிலை ஒன்றினை வாங்க முடிவு செய்து அதனை இந்தியாவிலிருந்து தருவித்தனர். அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் நவக்கிரக சன்னிதியும் அமைக்கப்பட்டது.

இக்கோயிலுக்கு தவத்திரு கிருபானந்த வாரியார் சுவாமிகளும் வந்து சிறப்பித்திருக்கின்றார் என்பதுவும் ஒரு பெருமை தரும் செய்தி. 15.12.1981 அன்று முதன் முதலில் தவத்திரு கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவு இவ்வாலயத்தில் நிகழ்ந்துள்ளது. 1983ம் ஆண்டு திரு.வி. கோவிந்த சாமியின் மறைவுக்குப் பின்னர் மறைந்த திரு.அழகுமலை அவர்கள் ஆலய தலமை பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அதற்குப் பின்னர் 1987ம் ஆண்டு நடைபெற்ற ஆலயப் பொதுக்கூட்டத்தில் திரு.ராமையா நரசிம்மலு நாயுடு அவர்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.





இவ்வாலயத்தில் கிருபானந்த வாரியார் சுவாமிகள் உரையாற்றிக் கொண்டிருக்கின்றார்


இவ்வாலயத்திற்கு மீண்டும் கிருபானந்த வாரியார் சுவாமிகள் 1982ம் ஆண்டு வருகை புரிந்து ஆன்மீகச் சொற்பொழிவாற்றியிருக்கின்றார்.

2002ம் ஆண்டு இக்கோயிலின் பெயர் ஸ்ரீ ஆறுமுகசாமி தேவஸ்தானம் என பெயர் மாற்றம் கண்டது. அதே ஆண்டு இக்கோயில் முழுதும் சீரமைக்கப்பட்டு 11.9.2002ம் அன்று மூன்றாவது கும்பாபிஷேகம் நிகழ்த்தப்பட்டது. இகோயில் சீரமைப்பு மற்றும் கும்பாபிஷேகத்துக்கு தேவைப்பட்ட $200,000.00 (மலேசிய வெள்ளி) பொது மக்கள் வழங்கிய நன்கொடையின் வழி சேகரிக்கப்பட்டது.

இக்கோயிலின் தேர் இலங்கையிலிருந்து (கொழும்பு) ஆகம முறைப்படி தயாரிக்கப்பட்டு இங்கு கொண்டு வரப்பட்டது. தேக்கு, மஹொகானி, சந்தன மரத்தினால் உருவாக்கப்பட்ட தேர் இது. இலங்கையிலிருந்து தயாரித்து கொண்டுவரப்பட்ட தேரின் தனித்தனி பாகங்களைத் திரு.ஜெயகாந்தன் என்பவர் ஆலயத்திலேயே இருந்து அவற்றை பொறுத்தி முழுமைபடுத்தி முடித்திருக்கின்றார். 31.5.2004 அன்று ஆலயத்தில் ஒரு பொன்னாலான வேல் மட்டும் வைத்து இத்தேரினை ஆலயத்ததைச் சுற்றி வலம் வரச் செய்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து 2.6.2004 அன்று ஆலயத்தில் மிகச் சிறப்பான முறையில் ஷண்முக அர்ச்சனை நிகழ்த்தப்பட்டுள்ளது.


ஆலயத் தேர்

அத்துடன் திருமதி.சுசீலா ராமையா என்பவர் இவ்வாலயத்தில் தற்போதுள்ள 250 கிலோ எடையுள்ள பஞ்சலோக ஸ்ரீ ஆறுமுகசாமி, வள்ளி தெய்வானை சிலைகளை நன்கொடையாக வழங்கியிருக்கின்றார். இச்சிலைகள் இலங்கையில் தயாரிக்கப்பட்டவை. இந்த சிலைகளே தற்சமயம் வைகாசி விசாக தேர் திருவிழாவில் ஊர்வலத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த உற்சவ மூர்த்தி சிலைகளை வைத்து முதன் முதலாக 2.6.2004 அன்று முதல் முறையாக இத்தேர் கங்கார் நகரை வலம் வந்தது. பினாங்கு மானிலத்திலிருந்து ஏற்பாடு செய்து கொண்டுவரப்பட்ட இரண்டு காளைகள் இந்த தேரினை இழுத்துச் சென்றன. இத்திருவிழாவும் ஆலய பூஜை வைபவங்களும் ஆலய ஆகம் முறைப்படி செய்விக்கப்பட்டிருக்கின்றன.



வைகாசி விசாக விழாவோடு, கந்தர் சஷ்டி, திருக்கார்த்திகை ஆகிய விழாக்களும் இவ்வாலயத்தில் சிறப்பாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகின்றன.

மலேசியாவைப் பொறுத்தவரை பொதுவாகவே ஆலயத்திருப்பணிகளுக்கு ஆதரவு தர பொது மக்கள் என்றும் தயங்குவதில்லை. ஆலயங்களில் நடைபெறும் பல திருவிழாக்கள், கலாச்சாரப் போட்டிகள் போன்றவை மக்கள் தரும் நன்கொடைகள் சமூக ஆர்வலர்களின் உழைப்பு ஆகியவற்றால் நிகழ்த்தப்படுபவை. பெரும்பாலான ஆலயங்களில் ஆலயப் பொதுக் குழு, இளைஞர் குழு, மகளிர் குழு என தனித்தனி பிரிவுகளை அருகாமையில் உள்ள மக்களாகவே சேர்ந்து உருவாக்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். அதில் குறிப்பாக ஆலயத் துப்புரவுப் பணி, திருவிழா ஏற்பாடுகள், கலாச்சார போட்டிகள், பொங்கள் திருவிழா ஏற்பாடுகள், ஆலய பஜனைக் குழுவினர் என அமைந்திருக்கும். மலேசிய ஹிந்து மக்களில் பலர் தங்கள் வார இறுதி நாட்களையையும் வெள்ளிக் கிழமையையும் இவ்வகை பணிகளுக்காக ஒதுக்குவதும் உண்டு. எனது அனுபவத்திலேயே இவ்வாறு பல நடவடிக்கைகளில் நானும் ஈடுபட்டிருக்கின்றேன். அவை அனைத்தைம் மனதை விட்டு அகலாத இனிய நிகழ்வுகள்.



ஆலயத்தில் திருவிளக்குப் பூஜை




இவ்வாலயத்தில் அமைந்துள்ள நவக்கிரகக் கோயில்




கோயிலைச் சுற்றியுள்ள குன்றிலிருந்து பல குரங்குகள் இவ்வாலயத்தில் அங்கும் இங்கும் தாவி விளையாடிக் கொண்டிருக்கும் காட்சி..

தொடரும்..

அன்புடன்
சுபா

Sunday, May 15, 2011

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 8

8. பெர்லிஸ் மானிலத்தில் கோயில்கள்

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று எண்ணம் கொண்டு செல்லும் இடங்களிலெல்லாம் கோயில்களை அமைத்து வளம் சேர்ப்பவர்கள் தமிழர்கள். மலேசியாவிலேயே மிகக் குறைவாக தமிழர்கள் வாழும் இச்சிறிய மானிலமான பெர்லிஸிலும் ஆலயங்கள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ளும் போது மனம் பரவசமடைகின்றது இல்லையா?

பெர்லிஸ் மானிலத்தில் 4 கோயில்கள் இருக்கின்றன. அவை,
- கங்கார் நகரிலுள்ள ஆறுமுகசாமி ஆலயம்
- கங்காரிலேயே உள்ள ஸ்ரீ வீர மஹா காளியம்மன் ஆலயம்
- ஆராவ் நகரிலுள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம்
- பாடாங் பெஸார் நகரிலுள்ள ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயம்

ஆகிய நான்குமாகும்.

ஆராவ் அரச நகரம். இங்கு தான் பெர்லிஸ் சுல்தானின் அரண்மணையும் ஏனைய அரசாங்க அலுவலகங்களும் உள்ளன. இங்கு சமீபத்தில் கடந்த ஆரேழு ஆண்டுகளுக்குள் தான் புதிதாக ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம் கட்டப்பட்டுள்ளது.


பாடாங் பெஸார் நகர் பற்றி முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். தாய்லாந்தின் எல்லையில் அமைந்த நகரம் இது. இங்கு மீனாட்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை. அதனால் விரிவாக இப்பதிவில் குறிப்பிட இயலவில்லை.

அடுத்ததாக கங்கார் நகரிலுள்ள ஆறுமுகசாமி ஆலயம். இந்த ஆலயத்தின் பக்கத்திலேயே தான் ஸ்ரீ வீர மஹா காளியம்மன் ஆலயமும் அமைந்துள்ளது. ஆக இரண்டையுமே பக்கத்திலேயே பார்க்கலாம்.



கங்கார் ஒருமுக்கிய நகரம் என்ற போதிலும் பசுமை எழில் கொஞ்சமும் குறையாத ஒரு நகரம். இந்த ஆறுமுக சாமி கோயில் பசுமையான சிறு குன்று போன்ற ஒரு பகுதியில் தான் அமைந்துள்ளது. கங்கார் நகரின் முக்கிய சாலையைக் கடந்து உள்ளே சென்றால் சுலபமாக இக்கோயிலை நாம் கண்டுபிடித்து விடலாம்.



இக்கோயிலுக்கு மதியம் நேரம் செல்வது போல எங்கள் பயணம் அமைந்தது. ஆக ஆலயம் பூட்டப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் இருந்தது. ஆனாலும் ஆலயத்தின் வாசல் திறந்திருந்தது. அத்துடன் எங்களைப் பார்த்த ஆலய பொறுப்பாளர் ஒருவர் எங்களை ஆலயத்தின் அலுவலகத்துக்கும் அழைத்துச் சென்று தேனீர் பானமும் பழங்களும் வழங்கி அன்புடன் உபசரித்தார். அவறுடன் மேலும் சிலரும் எங்களுடன் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல் கோயில் பற்றிய தகவல் அடங்கிய சிறு கையேடு, மாசி மகம் திருவிழா அழைப்பிதழ் ஆகியவற்றோடு ஒரு தேவார பாடல்கள் அடங்கிய நூல் ஒன்றையும் எங்களுக்கு வழங்கினர்.

பெர்லிஸ் நகரில் அமைந்திருக்கும் ஒரே முருகன் கோயில் இது தான். ஆறு முகங்களுடன் கூடிய ஆருமுகசாமியாக இங்கே இறைவன் கருவரையில் வள்ளி தேவையானைசயுடன் அமைந்திருக்கின்றார். மூலமூர்த்தியின் சிலை கருங்கல்லால் அமைக்கப்பட்ட சிலை.



பெர்லிஸ் மானிலத்தில் இக்கோயில் அமைக்கும் எண்ணம் முதலில் 1965ம் ஆண்டு வாக்கில் எழுந்துள்ளது. இப்பணியில் முழுமையாகத் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்களில், மறைந்த திரு.எம்.கே.கோவிந்தசாமி அவர்கள், மறைந்த திரு.எஸ்.சதாசிவம் அவர்கள், மறைந்த திரு.வி.கோவிந்த சாமி நாயுடு அவர்கள், மறைந்த திரு.கேஜி.ராவ் அவர்கள் மற்றும் மறைந்த திரு. அழகுமலை ஆகியோர் மிக முக்கியமானவர்கள். இக்கோயில் அமைப்பதற்கான முதல் சந்திப்பினை இவர்கள் ஆராவ் நகரிலிருக்கும் மறைந்த திரு. எஸ் சதாசிவம் அவர்கள் இல்லத்தில் 3.6.1965 அன்று நடத்தினர். கங்கார் நகரில் ஒரு ஹிந்து ஆலயம் அமைக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் இச்சந்திப்பின் வழி முதன் முதலாக உருவாக்கம் கண்டது.



இதனை அடுத்து 2.7.1965 அன்று பெர்லிஸ் மானிலத்திலுள்ள ஹிந்துக்கள் பெர்லிஸ் இந்தியர் சங்கத்தில்ஒன்று கூடி இந்த எண்ணம் பற்றி விரிவாக பேசப்பட்டது. இக்கூட்டத்தினை மறைந்த டாக்டர்.சிவசம்பந்தன் அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்திருக்கின்றார். இதற்கு அடுத்த சில நாட்களிலேயே டாக்டர்.சிவசம்பந்தன் அவர்கள் பினாங்கு மானிலத்திற்குத் தொழில் நிமித்தம் மாற்றலாகிச் சென்றதால் மறைந்த திரு.வி.கே.கோவிந்த சாமி நாயுடு அவர்கள் கோயில் கட்டுமான குழுவின் தலைவராக நியமனம் செய்யபப்ட்டு இப்பணியை ஆரம்பித்திருக்கின்றனர். கோயில் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானம் என பதிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.





தொடரும்..

அன்புடன்
சுபா

Tuesday, May 10, 2011

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 7

7. பெர்லிஸ் தமிழ்ப் பள்ளியும் தமிழ்ச்சங்கமும்

2005ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்குப்படி பெர்லிஸ் மானிலத்தின் மக்கள் தொகையில் 1.3 விழுக்காட்டினர் தமிழர்கள். பெரும்பாலும் அரசாங்க வேலை, மருத்துவம், மற்றும் தேசிய பாதுகாப்புப் படை ஆகிய துறைகளில் பணி நிமித்தமாக வந்தவர்களும் சூப்பிங் சீனி ஆலையில் உழைக்கும் தொழிலாளர்களும் இங்கு வசிக்கின்றனர். கெடா மானிலம் போல இங்கு வர்த்தகம், ரப்பர் மரத்தோட்டங்களிலோ அல்லது செம்பனைக் காடுகளிலோ வேலை செய்ய வந்தவர்கள் இங்கு மிக மிக குறைவு என்றே குறிப்பிட வேண்டும்.


இங்கு ஒரு தமிழ் பள்ளி இருப்பதாக நண்பர்கள் வழி கேள்விப்பட்டேன். ஜாலான் பாடாங் கோத்தா பகுதியில் கங்கார் தேசிய மாதிரி தமிழ்ப்பள்ளி ஒன்று உள்ளது. இணையத்தில் குறிப்புக்கள் கொடுத்து தேடிப்பார்த்த போது இப்பள்ளியின் பழைய மாணவர்கள் பேஸ்புக் வைத்திருக்கின்றார்கள் என்று தெரிய வந்தது. மேலும் இணையத்தில் தேடியதில் வலைப்பூ ஒன்றும் யாரோ உருவாக்கியுள்ளது கிடைத்தது. http://psssjktkangar.blogspot.com/ என்ற முகவரியில் இந்த வலைப்பூவைக் காணலாம். இதில் உள்ள தகவல்படி இந்த ஆரம்ப நிலை தமிழ் பள்ளிக்கூடம் முதன் முதலில் 1936ம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.

2003ம் ஆண்டின் கணக்குப் படி மூன்று மாடி கட்டிடமாகக் கட்டப்பட்டு 12 ஆசிரியர்களும் இந்தப் பள்ளியில் பணியாற்றி வருவதாக இந்த வலைப்பூ குறிப்பிடுகின்றது. கங்கார் நகரிலேயே அருகாமையில் இந்தப் பள்ளிக்கூடம் அமைந்திருக்கின்றது. பெர்லிஸில் இருந்த சமையம் இப்பள்ளிக்கூடத்தைப் பார்க்கும் வாய்ப்பும் எனக்கு அமையவில்லை. இங்கு தமிழ்ப்பள்ளி இருக்காது என்று நினைத்திருந்த எனக்கு இத் தகவல் வியப்பாகத்தான் இருக்கின்றது. திருமதி.குணமதி என்பவரின் முயற்சியில் 2007ம் ஆண்டில் இப்பள்ளியின் நூலகத்தின் தரம் மேம்படுத்தப்பட்டதாக இந்த வலைப்பூ தெரிவிக்கின்றது.



கங்கார் நகர மையத்தில் சாலையில் பயணித்துக் கொண்டிருக்கும் போது தற்செயலாக தமிழில் எழுதப்பட்ட ஒரு பெயர்ப்பலகையைக் கண்னுற்றேன். பெர்லிஸ் இந்தியர் சங்கம் என அழகாக தமிழில் குறிப்பிடப்பட்டு ஒரு சிறு கட்டிடம் ஒன்று; நகர மையத்திலேயே இந்த கட்டிடத்தைப் பார்ப்பதிலும் சந்தோஷம் தானே..!

Sunday, May 8, 2011

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 6

6. குவா கெலாம்




ஈய வளமுள்ள தென்கிழக்காசிய நாடுகளில் மலேசியாவும் ஒன்று. 18ம் நூற்றாண்டின் இறுதியில் குறிப்பாக 19ம் நூற்றாண்டில் பல சீனர்கள் மலேசியா நோக்கி ஈயம் கண்டெடுக்கும் பணிக்காக வந்தனர் என்பது வரலாறு. ஆண்களும் பெண்களுமாக ஈயம் தோண்டும் தொழிலில் ஈடுபட்ட தகவல்கள் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. பெர்லிஸ் மானிலத்தில் காக்கி புக்கிட் பகுதியில் (இது தாய்லாந்துக்கு மிக அருகாமையில் உள்ள் அடர்ந்த காடுகள் கொண்ட ஒரு பகுதி) ஈயம் கண்டெடுக்கும் தொழிலில் ஈடுபட்ட சீனமக்களின் கதை கேட்பவர் மனதை உறுக்கும்.

உலகில் வேறெங்கு ஈயம் குகைகளில் கண்டெடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் மலேசியாவில் பெர்லிஸ் மானிலத்திலும் சபா சரவாக் காடுகளில் உள்ள குகைகளிலும் ஈயம் கண்டெடுக்கும் தொழில் மிக விரிவாக 19ம் நூற்றாண்டில் நிகழ்ந்தது. பெர்லிஸின் காக்கி புக்கிட் பகுதியில் ஈயம் இருப்பதை யார் முதன் முதலில் கண்டுபிடித்தார்கள் எனபது ஒரு புதிர். ஆங்கிலேயர்களின் மூலமாகவா, அல்லது உள்ளூர் மற்றும் சயாமிய (தாய்லாந்து) மக்களா அல்லது வணிகத்துக்கு வந்த சீனர்களா என்பது தெரியவில்லை. ஆனால் இங்கு ஈயம் உள்ளது என்ற செய்தி கிடைத்த்துமே சீனாவிலிருந்து ஆண்களும் பெண்களுமாக இப்பகுதிக்கு வந்து குவிந்திருக்கின்றனர். இந்த குகைகளுக்குள் ஈயம் தோண்டி எடுத்துக் கொண்டு வருவது என்பது சாதாரண காரியமல்ல. குகைக்குள் மிக நீண்ட தூரம் சென்று அங்கே குழிகளைத் தோண்டி அங்கே ஈயத்தை கண்டெடுத்து தூய்மை செய்து அங்கிருந்து கொண்டு வருவது மிகக் கடிணமான ஒரு தொழில். இதனை சீன ஆண்களும் பெண்களும் செய்திருக்கின்றனர். ஈயம் அக்கால கட்டத்தில் செல்வம் தரும் ஒரு பொருளாக இருந்திருக்கின்றது. யார் ஈயம் உள்ள இடத்திற்கு சொந்தக்காரராக இருக்கின்றாரோ அவர் மிக விரைவில் செல்வந்தராகி விடலாம் என்ற சூழலே இங்கு சீனர்கள் பலரை இந்தக் கடினமான வேலைக்கு வருவதற்கு காரணமாக இருந்திருக்கின்றது.


குவா கெலாம் குகைக்குள்


இந்த குகைகௌக்குள்ளேயே பல மாதங்கள் ஆண்களும் பெண்களும் தங்கியிருந்து பணி புரிவார்களாம். இரண்டு மூன்று மாதங்கள் தொடர்ந்து உள்ளேயே இருந்து பணியாற்றிவிட்டு சிறிய இடைவெளிக்கு வெளியே வருவார்களாம். சூரிய ஒளியே தெரியாமல் பல நாட்கள் இருட்டில் இருந்து வேலை செய்வார்களாம். பலர் இந்த பணிகளின் போதே பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆட்பட்டு இறந்திருக்கின்றனர். இக்குறிப்புக்கள் குவா கெலாம் அருங்காட்சியகத்தில் உள்ள விளக்க அட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.



மலாய் மக்களும் ஆரம்ப கால கட்டத்தில் சீன மக்களும் ஈயம் தோண்டவும் சுத்தம் செய்யவும் பயன்படுத்திய பாரம்பரிய கருவிகள்


ஈயம் கண்டுபிடித்தல் சற்று பிரபலமானவுடனேயே அப்போதைய ஆங்கிலேய அரசாங்கம் இப்பகுதியிலும் தனது ஆளுமையை செலுத்தியிருக்கின்றது. ஈயம் உள்ள பகுதிகளை தங்கள் வசமாக்கிக் கொண்டு அங்கு உழைப்பதற்காக பல சீனர்களை சீனாவிலிருந்து இப்பகுதிக்கு ஆங்கிலேயர்கள் வரவழைத்திருக்கின்றனர். உள்ளூர் மலாய் மக்கள் ஈயம் கண்டெடுக்க பயன்படுத்திய டூலாங் தட்டை தான் முதலில் சீனர்களும் பயன்படுத்தி ஈயம் தோண்டி கண்டெடுத்து சுத்தம் செய்து விற்பனை செய்து வந்திருக்கின்றனர். பின்னர் ஆங்கிலேயர்களின் நாட்டம் இப்பகுதியில் அதிகரிக்க பல புதிய கருவிகளை இத்தொழிலில் அறிமுகப்படுத்தியிருக்கின்றனர். சர்.ஜே. கேம்பல் என்ற ஆங்கிலேய அதிகாரி ஒருவரும் திரு.ஈ.க்ராஃப் என்ற சுவிட்சர்லாந்துக்காரர் ஒருவரும் இவ்வகையில் புதிய நவீனக் கருவிகளை இப்பகுதியில் இத்தொழிலில் அறிமுகப்படுத்தியதில் மிக முக்கியமானவர்கள். இரண்டாம் உலகப் போருக்கு சற்று முன்னர் ஜப்பானியர்கள் இப்பகுதிக்கு வந்து தங்கள் வசமாக்கிக் கொள்ள முயற்சிகள் மேற்கொண்டிருந்த சமயத்தில் சர்.ஜே. கேம்பல் இங்கிலாந்துக்கு திரும்பிச் செறு விட்டார். ஆனால் திரு.ஈ.க்ராஃப் தொடர்ந்து இருந்து இப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்திருக்கின்றார். இரண்டாம் உலகப் போரின் போது இப்பகுதி முழுவதும் முற்றிலுமாக மூடப்பட்டு விட்டது. காக்கி புக்கிட் பகுதியில் எந்த ஈயம் தோண்டும் பணிகளும் நடைபெறவில்லையாம். ஆனால் போர் முடிவுற்ற பின்னர் மீண்டும் ஈயம் தோண்டும் பணிகள் தொடங்கிய போது திரு.ஈ.க்ராஃப் தானே முன்னின்று இப்பணிகளை மேற்பார்வை செய்து மீண்டும் தொடக்கி வைத்திருக்கின்ரார். அத்துடன் ஈயம் கண்டெடுக்கும் பணியாளர் குழுவின் தலவராகவும் பதவி வகித்திருக்கின்றார்.

இந்தக் கால கட்டத்தில் சர்.ஜே. கேம்பலின் உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த லோ ஆ தோங், சர்.ஜே. கேம்பல் இங்கிலாந்து திரும்பியவுடன் அவருடைய சொத்துக்களில் குறிப்பிடத்தக்க அளவை தனதுடைமையாக்கிக் கொண்டார். இவர் லோ செங் ஹெங் என்ற போராட்டவாதியின் மகனுமாவார். இவரது கூர்மையான மதியினாலும், திறமையினாலும் அபார உழைப்பினாலும் காக்கி புக்கிட் பகுதியில் மிகப்பெரிய ஈய உற்பத்தி சாம்ராஜ்ஜியத்தையே ஏற்படுத்தினார். பின்னர் டத்தோ என்ற உயர்னிலை பட்டமும் கூட இவருக்கு வழங்கப்பட்டது. டத்தோ லோ ஆ தோங்கின் குடும்பத்தினர் பெர்லிஸின் காக்கி புக்கிட் பகுதியின் மிக முக்கியஸ்தர்களாக இருகின்றனர். டத்தோ லோ ஆ தோங் சுதந்திர மலேசியாபவில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பின்னர் சில காலங்கள் பதவி வகித்தார். இவரது குடும்பத்தினர் ஏறக்குறைய 600 பேர் இன்னமும் காக்கி புக்கிட் பகுதியில் இருக்கின்றனர் என்பது தகவல்.


தற்சமயம் இந்த காக்கி புக்கிட் பகுதியில் ஈயம் கண்டெடுக்கும் பணிகள் நடைபெறவில்லை. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதி தற்சமயம் சுற்றுப்பயணிகள் பார்ப்பதற்காக மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது.



இந்த காக்கி புக்கிட் பகுதியில் ஈயம் தோண்டும் தொழில் நடைபெற்ற குவா கெலாம் குகையை பார்த்து வருவதும் எங்கள் திட்டத்தில் ஒன்றாக இருந்ததால் அங்கு பயணித்தேன். குவாலா பெர்லிஸிலிருந்து ஏறக்குறைய 28 கிமீட்டர் தூரம் வடக்கு நோக்கிய பயணம். குகைக்குள் சென்று பார்வையிடமும் அருங்காட்சியகத்தைப் பார்க்கவும் கட்டணம் செலுத்த வேண்டும். உள்ளே செல்வதற்கு ஒரு ரயில் பெட்டி உள்ளது. அதில் ஏறி ஏறக்குறைய 2 கி.மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். அதன் பின்னர் குகையின் உட்பகுதிக்குப் பயண வழிகாட்டி அழைத்துச் செல்கின்றார்.


குகைக்குள் பயணிகளை ஏற்றிச் செல்லும் ரயில் வண்டி

ஈயம் தோண்டும் பணி நடைபெற்ற இடங்கள், சிறிய குகைப் பாதைகள், சீனர்கள் குகைகளில் எழுதி வைத்த எழுத்துக்கள், நீர் தேங்கிக் கிடக்கும் சிறு குளங்கள் ஆகியவற்றைக் காட்டி பயண வழிகாட்டி மலாய் மொழியில் விளக்கம் அளிக்கின்றார். ஈயம் தோண்டும் பணியில் உபயோகப்படுத்திய கருவிகள் அங்கே உள்ளேயே காட்சிக்கும் வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குகையில் பல சிறிய குகைப்பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் வழியாக வெளியே நிலப்பகுதிக்கு வருவதற்கு ஏற்பாடு செய்திருக்கின்றார்கள். அதில் ஒரு குகைப்பகுதி ஏறக்குறைய 3 கி.மீட்டர் தூரம். இதன் வழியாக நடந்து சென்றால் தாய்லாந்து நாட்டிற்குச் சென்று விடலாம் என்றும் பயண வழிகாட்டி விவரித்தார்.


தாய்லாந்து வரை செல்லக்கூடிய குகைப் பாதை


இதனைப் பார்த்து மீண்டு ரயில் பெட்டியில் ஏறி அமர்ந்து வெளியே வந்தேன். குகையின் உள்ளே அரை மணி நேரம் இருப்பது எவ்வளவு சிரமம் என்பதை அறிந்து கொண்டபோது இங்கே மாதக் கணக்கில் இருந்து உழைத்த மனிதர்களை நினைத்து மனம் கணத்தது.

இந்த குவா கெலாம் குகையைப் பார்க்க வருபவர்கள் முக்கியமாக நுழைவாயிலின் வலது புறத்தில் உள்ள அருங்காட்சி நிலையத்திற்கும் வந்து செல்ல வேண்டும். காக்கி புக்கிட் பகுதி பற்றி நல்ல பல தகவல்கள் இங்கு உள்ளன. ஈயத்தொழிலில் பயன்படுத்திய நவீன கருவிகளையும் இங்கே வைத்திருக்கின்றனர். இவையனைத்தையும் பார்த்து விட்டு அங்கேயுள்ள் சிறு உணவகத்தில் காப்பி அருந்தி மலாய் பலகாரங்களும் சுவைத்து வர சுற்ருப்பயணிகள் மறக்கக் கூடாது.



குறிப்பு- காக்கி புக்கிட் என்பதற்கு தமிழில் மலையடிவாரம் என்பது பொருள்.

தொடரும்...


அன்புடன்
சுபா

Saturday, May 7, 2011

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 5

5. பாடாங் பெசார்

மலேசியாவின் வடக்கில் தாய்லாந்து நாட்டின் எல்லையில் அமைந்திருக்கும் மானிலங்களில் பெர்லிஸ் மானிலமும் ஒன்று. இந்த எல்லைப் பகுதி முழுக்க அடர்ந்த காடுகள் அமைந்துள்ளன. தாய்லாந்திலிருந்து மலேசியா நுழைவதற்கும் இங்கிருந்து தாய்லாந்து செல்வதற்கும் பாடாங் பெசார் நகரின் வழியாகச் செல்ல வேண்டும். பாடாங் பெசார் செல்வதற்கு முன்னர் பெர்லிஸ் மானிலத்தில் பார்க்கக் கூடிய இடங்களைப் பற்றி சற்று தெரிந்து கொள்வோம்.

பெர்லிஸ் மானிலத்தின் தலைநகரமான கங்கார் மிகச் சிறிய ஒரு நகரம். அரசரின் அரண்மனை கூட இங்கு இல்லை. வர்த்தக நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், விற்பனை அங்காடிகள் அரசாங்க அலுவலகங்கள் ஆகியவை இங்கு உள்ளன. நல்ல உணவுக் கடைகளைக் கூட இங்கே காண முடியவில்லை. அடுத்ததாக சற்று பெரிய நகரம் என்றால் கடற்கரை நகரமான குவாலா பெர்லிஸ் நகரத்தைச் சொல்லலாம். இங்கு தான் எங்கள் தங்கும் விடுதியும் அமைந்திருந்தது. இது தவிர பெர்லிஸ் மானிலத்தில் பார்ப்பதற்கு குவா கெலாம் (கெலாம் குகை), கோத்தா காயாங் அருங்காட்சியகம், பாம்புப் பண்ணை, தீமா தாசோ ஏரி, சூப்பிங் கரும்பு வயல், வாங் கெலியான் ஞாயிற்றுக் கிழமை சந்தை, அரச மாளிகை ஆகிய பகுதிகளைக் குறிப்பிடலாம். இவை அனைத்தையுமே மூன்று நாட்களில் பார்த்து விடலாம். பெர்லிஸ் அவ்வளவு சிறிய ஒரு மானிலம்.

பெர்லிஸ் மானிலத்தில் தமிழர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. இங்கு தமிழர்கள் இருக்கவும் வாய்ப்பு குறைவு என்பதால் இங்கே கோயில்களோ தமிழ் பள்ளிகளோ ஏதேனும் அமைப்புக்களோ இருக்க வாய்ப்பில்லை என நினைத்திருந்தேன். ஆனால் அதிசயமாக அங்கே ஒரு ஹிந்து கோயிலைக் கானும் வாய்ப்பும் அமைந்தது என்னால் மறக்க முடியாத ஒரு அனுபவம்.

சரி - பாடாங் பெசார் நகரத்திற்கான எங்கள் பயணத்திற்கு இப்போது வருவோம். குவாலா பெர்லிஸ் நகரிலிருந்து ஏறக்குறை 45 கிமீட்டர் தூராத்தில் இந்த நகரம் உள்ளது. வாகனத்தில் பயணித்தால் ஏறக்குறைய 30 நிமிடத்தில் இங்கே வந்து சேர்ந்து விடலாம். பாடாங் பெசார் எல்லைப்பகுதிக்கு 2 கிமீட்டர் தூரத்திலேயே காவல் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு தாய்லாந்து செல்பவர்களும் மலேசியாவிற்குள் வருபவர்களும் தகுந்த நுழைவு பத்திரங்கள் வைத்திருப்பதை உறுதி செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல பாடாங் பெசார் தாய்லாந்தின் எல்லையில் தாய்லாந்து சுங்க வரி நிலையத்தைக் கடந்து அங்கேயும் தகுந்த நுழைவுப் பத்திரங்களைக் கொண்டிருந்தால் மட்டுமே அனுமதிக்கின்றனர்.




இந்த பாடாங் பெசார் என்பது மலேசிய மக்களுக்கு ஷாப்பிங் செய்வதற்கு மிகவும் பிடித்தமான ஒரு ஊர். அதிலும் குறிப்பாக மலாய் இன மக்களுக்குப் பாடாங் பெசார் சென்று ஆடை அணிகலன்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கி வருவதில் மிகுந்த நாட்டம் கொண்டவர்களாக உள்ளனர். இதற்கு முக்கியக் காரணம் இங்கே பொருட்களின் விலை மலேசியாவை விட மிக மிக மலிவு என்பதே. எனது பள்ளிக் காலத்திலேயே எனது சக மாணவர்கள் வார இறுதி நாட்களில் தங்கள் குடும்பத்தினருடன் இங்கே சென்று ஆடைகள் வீட்டு அலங்காரப் பொருட்கள் வாங்கி வருவதைப் பற்றி குறிப்பிடுவார்கள்.



பாடாங் பெசாரைப் பற்றி நிறையவே கேள்விப் பட்டிருந்ததால் எனக்குள் பெரிய எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் எல்லையைக் கடந்து உள்ளே நுழைந்ததும் எதிர்பார்த்த அளவில் அங்கிருந்த நிலை அமைந்திருக்கவில்லை. எனக்கு இது பெரும் வியப்பு தான். பெரும்பாலும் மலேசிய கிராமத்து மக்கள் பெரிய வேன்களில் வந்து இங்கு மூட்டை மூட்டையாக துணிகளை வாங்கிச் செல்ல வருகின்றனர். அதிகமாக பெரிய ரக வேன்களையே இங்கே காண முடிகின்றது. கடைகளின் தரம், விற்கப்படும் பொருட்களின் தரம் என பார்க்கும் போது மலேசியாவில் உள்ளூரில் தயாரிக்கப்படும் பொருட்களின் தரத்துடன் ஒப்பிட முடியாத நிலையில் உள்ளது உண்மை. நாங்கள் ஓரளவு சுற்றிப்பார்த்து விட்டு கடைகளில் சற்று ஏறி இறங்கி பின்னர் ஒரு உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு திரும்பினோம்.



தாய்லாந்து உணவு வகை மிகச் சுவையானது. குறிப்பாக அதிகமாக தேங்காய்ப்பால் கலந்து சமைக்கின்றனர். மலாய் உணவுகளில் உள்ள தேங்காய்ப்பாலின் அளவை விட அதிகம் என்றே சொல்ல வேண்டும். அத்துடன் இவர்கள் உணவில் பயன்படுத்தும் சிறிய மிளகாய் (ஊசி மிளகாய்) சில்லி பாடி (cili padi) வித்தியாசமான சுவையைத் தரக்கூடிய ஒன்று.




இவை மிகச் சிறியதாக ஏறக்குறைய மூன்றிலிருந்து ஐந்து செண்டிமீட்டர் அளவில் பச்சை, சிவப்பு இரண்டு நிறங்களிலும் கிடைக்கும். இந்தப் பச்சை மிளகாயை மட்டும் எடுத்து தனியாக அறைத்து அதை மிளகாய் விழுதாக பயன்படுத்தி அதிக தேங்காய்ப்பால் அத்துடன் "அசாம் கெப்பிங்" (Asam keping) ( இதற்கு தமிழ் பதம் தெரியவில்லை) சேர்த்து குழம்பு வகைகளை சமைக்கின்றனர். உறைப்பும் புளிப்பும் தேங்காய்ப்பாலின் இதமான கொழுப்பும் கலந்து அது வித்தியாசமான சுவையைத் தரும் உணவு என்று கூறலாம். ஜெர்மனியிலும் குறிப்பிடத்தக்க வகையில் தாய்லாந்து உணவகங்கள் உள்ளன.

நமது சமையலில் எப்படி மல்லி தழைகளைப் பயன்படுத்துகின்றோமோ அது போல இவர்கள் பயன்படுத்தும் துளசி மிக வித்தியாசமானது; மிகச் சுவை சேர்ப்பது.





இந்த துளசி ஜெர்மனியிலும் கூட கிடைக்கின்றது. இதற்கு Thai Basilicum என்று பெயர். தாயலாந்து உணவு வகைகளை இதுவரை சுவைத்திராதவர்கள் ஒரு முறை முயற்சி செய்து பாருங்களேன். அதிலும் குறிப்பாக தாய்லாந்து துளசி சேர்த்த உணவை சுவைக்க மறக்க வேண்டாம்!

தொடரும்..