Friday, December 13, 2013

மலேசியா - காட்சியில் அறிமுகம் - 16



கேமரன் ஹைலேண்ட்ஸ் ஆதிவாசிகள்

மலேசிய பழங்குடி மக்கள் பல வகையைச் சேர்ந்தவர்கள். பட்டியலிட்டால் அது நீளும். கிழக்கு மலேசியாவின் பழங்குடி மக்களை விட மேற்கு மலேசிய பழங்குடி மக்கள் வேறுபாடுடையவர்கள். ஒருவகையில் பல வகையான கலப்புகள் இந்த மேற்கு மலேசிய பழங்குடி மக்களிடையே நிகழ்ந்திருக்கின்றது. மேற்கு மலேசியாவில் துரித வளர்ச்சியும் நன்கு ஏற்பட்டு விட்டதால் காடுகளில் குடியிருந்த பழங்குடியினர் நகரங்களுக்கு மாற்றலாகி தங்கள் வாழ்க்கை நிலையில் பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். ஆனாலும் இன்றும் கூட பழங்குடியினர் காடுகளில் வாழ்வதும் தங்கள் பண்டைய வாழ்வியல் நடைமுறைகளை தொடர்ந்து பேணுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.

இங்கே நாம் படத்தில் காண்பது கேமரன் ஹைலேண்ட்ஸ் பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் இனத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவர். இப்பகுதியில் பாத்தேக், சாக்கை, பங்கான் இன பழங்குடியினர் இருக்கின்றனர்.  அரசாங்கம் இம்மக்களைக் காட்டிலிருந்து வெளிப்பகுதிக்கு வந்து புதிய வாழ்க்கை அமைத்துகொண்டு வாழும் வகையில் சில பொருளாதாரா திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இம்மக்களின் குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்வதற்காக பள்ளிகளும் கட்டப்பட்டுள்ளன. பொதுவாக இவர்கள் சாலையோரத்துக் கடைகள் சிலவற்றை அமைத்துக் கொண்டு காடுகளிலிருந்து கொண்டு வரும் மூங்கில், இறைச்சி, தேன், பழங்கள், வேர்கள் ஆகியவற்றை  சாலையில் நாம் பயணித்துச் செல்லும் போது காண முடியும்.

இந்த பழங்குடி இனமக்களைப் பற்றி விபரங்கள் மேலும் அறிந்து கொள்ள விரும்பினால் இப்பக்கத்தை வாசிக்கலாம்.

சுபா

Wednesday, December 11, 2013

மலேசியா - காட்சியில் அறிமுகம் - 14



கேமரன் ஹைலாண்ட்ஸ் தேயிலைத் தோட்டம்

கிளந்தான் மானிலத்தின் எல்லைப் பகுதியாகவும்  பஹாங் மானிலத்தின் வடக்கு முனையில் இருக்கும் ஒரு மலைப்பகுதி இது. ஒரு பகுதி  பேராக் மானிலத்திலும் உள்ளது.

ஆச்சரியப்படுவீர்கள். இப்பகுதியின் அளவு சிங்கப்பூரின் சுற்றளவை ஒத்தது.

காரிலோ அல்லது பஸ்ஸிலோ இப்பகுதிக்கு பயணித்து செல்லலாம். சாலைப்பகுதி மிகத் தரமாக அமைக்கபப்ட்டிருப்பதால் கார் ஓட்டிச் செல்ல எந்த அச்சமும் தேவையில்லை.

இங்கே நிறைய தங்கும் விடுதிகள் இருக்கின்றன. டிசம்பர் மாதத்தை தவிர்த்தால் மக்கள் கூட்டம் அதிகம் இல்லாது கேமரன் ஹைலாண்ட்ஸ் பகுதியை முழுமையாக சுற்றிப்பார்த்து நல்ல சுவையான உணவு உண்டு மகிழ்ந்து வரலாம்.

ஆங்கிலேய காலணித்துவ ஆட்சியின் போது Sir William Cameron என்ற நில அளவையாளர் இப்பகுதியில் சேவையில் ஈடுபட்டிருந்தார். அவர் நினைவாக இந்த இடத்திற்கு Cameron Highlands  எனப் பெயர் வந்தது.
இங்கு மலைப்பகுதியில் 15 டிகிரி செல்ஸியஸ் வரை சாதாரண நாட்களில் அமைந்திருக்கும்.

1925ம் ஆண்டு வாக்கில் இங்கு பசுமை உற்பத்தி என்ற வகையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட ஆரம்பித்த போது தேயிலை, பூக்கள், காய்கறி தோட்டங்கள் விரிவாக வளர்ச்சி பெற ஆரம்பித்தன. தமிழகத்தின் நாமக்கல் பகுதியிலிருந்து வந்து சேர்ந்த பல தமிழர்கள் இப்பகுதியில் வேலைக்காகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களின் சந்ததியினர் பலர் இன்னமும் இங்கேயே வாழ்கின்றனர். மற்ற இடங்களைக் காட்டிலும் தமிழர்களின் எண்ணிக்கை இப்பகுதியில் சற்றே அதிகம். நான் பார்த்ததில் இரண்டு தமிழ் ஆரம்பப் பள்ளிகளும் இங்கிருக்கின்றன. ஆலயங்களோ ஏராளம். மலேசியாவில் எனது மனம் கவர்ந்த இடங்களில் இதுவும் ஒன்று.

Sunday, December 8, 2013

மலேசியா - காட்சியில் அறிமுகம் - 13



மலாக்கா ஆற்றில் போட் பயணம்

மலேசிய நாட்டின் வரலாற்று பெருமை மிக்க ஒரு மானிலம் மலாக்கா. இந்திய சீன இந்தோனீசிய வர்த்தகர்கள் சில ஆயிரம் ஆண்டுகளாக வருகை புரிந்த ஒரு துறைமுக நகரம் இது. 15ம் நூற்றாண்டு இறுதி தொடங்கி போர்த்துக்கீஸியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என வருகை புரிந்து  இன்று சுற்றுப்ப்யணிகளைக் கவரும் ஒரு தலம் என்ற வகையில் புகழ் பெற்று விளங்கும் ஒரு நகரம். இங்குள்ள ஆபாமோசா கோட்டை போர்த்துக்கீஸியர்களால் கட்டப்பட்டது.

இங்கு நாம் காண்பது போட் பயணத்தின் போது மலாக்கா ஆற்றின் இரண்டு கறைகளிலும் இருக்கும் கட்டிடங்கள். இவை இத்தாலியின் வெனிஸை சற்றே ஞாபகப்படுத்தும் ஒரு வடிவம் தான். யுனெஸ்கோ இப்பகுதியை பாதுகக்கப்படும் ஒரு பகுதியாக அறிவித்த பின்னர் இங்குள்ள கட்டிடங்கள் அனைத்தும் மலாய் நாட்டுப் பாரம்பரியத்தை விளக்கும் சித்திரங்கள் தீட்டப்பட்டு காட்சியளிக்கின்றன. 2001ல் பார்த்த  போது இவை இந்த அழகோடு இல்லை.  கண்களைக் கவரும் வர்ணங்களில் சித்திரங்கள் கதை சொல்கின்றன.

சுபா

Monday, December 2, 2013

மலேசியா - காட்சியில் அறிமுகம் - 12



டுரியான் வாங்க வாருங்கள்..!

மலேசிய தேசியப் பழம். 

முட்கள் நிறைந்திருந்தால் என்ன? சுவையை நினைத்துப் பார்க்கும் போது பழத்தின் அருமை புரியும். மலேசிய பழக்காலம் தொடங்குவது ஜூலை மாதத்தில் தான். செப்டம்பர் வரை கடைகளில் தென்படும் டுரியான், மங்குஸ்தீன், ரம்புத்தான் பழங்கள் மீண்டும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் முன்பெல்லாம் ஓரளவு ஆங்காங்கே கிடைக்கும். ஆனால் அதிசயமாக இம்முறை அக்டோபர் நவம்பர் மாதத்தில் செல்லும் இடங்களிலெல்லாம் டுரியான் பழங்கள் விற்பனை அபாரமாக இருந்தது.

டுரியான் பழத்தின் முட்கள் எப்படி பயத்தை உண்டாக்குகின்றனவோ அது போலவே இப்பழத்தின் நாற்றமும் புதியவர்களை நெருங்க விடாது. வாசனைப் பழகிப்போனவர்களுக்கு இது ஒரு தேவ லோகத்து விருந்து தான் :-)

சுபா

Friday, November 29, 2013

மலேசியா - காட்சியில் அறிமுகம் - 11



சாலையின் பெயர் தமிழிலும் மலாய் மொழியிலும்.

மலேசியாவின் கேரித் தீவில் நான் எடுத்த ஒரு புகைப்படம் இது. ஒரு சாலையின், பெயர் தமிழிலும் மலாய் மொழியிலும் எழுதப்பட்டிருக்கின்றது.  லோரோங் என்பதற்கு சந்து என்று தமிழில் பொருள் சொல்லலாம்.  இங்கு லோரோங் என்பதில் ங் புள்ளியில்லாமல் இருக்கின்றது :-)

மலேசியாவில் தமிழில் சாலை பெயர் வேறு தீவுகளிலோ பகுதிகளிலோ நான் பார்த்ததில்லை. இத்தீவில் மட்டும் இன்னமும் தமிழில் சாலை பெயர் போடப்பட்டிருப்பது ஒரு முக்கியமான தகவல் தானே! செம்பனை தோட்டத் தொழிலார்களாக காடுகளில் பணி செய்ய 1930களில் தென் தமிழகத்திலிருந்து அதிலும் குறிப்பாக நாமக்கல் பகுதியிலிருந்து வந்த பல தமிழர்கள் அவர்களின் வாரிசுகள் இன்னமும் இத்தீவில் இருக்கின்றார்கள்.

Thursday, November 28, 2013

மலேசியா - காட்சியில் அறிமுகம் - 10


செயிண்ட் அன் தேவாலயம்

பினாங்கின் புக்கிட் மெர்தாஜம் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு ரோமன் கத்தோலிக்க தேவாலயம் இது. மலேசியா மட்டுமன்றி சிங்கப்பூர் தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் பிரசித்தி பெற்ற ஒரு தேவாலயம் இது. ஆண்டு தோறும் ஜூலை மாத்த்தில் நடைபெறும் ஆலயத்திருவிழாவில் கலந்து கொள்ள பல்லாயிரம் மக்கள் புனிதயாத்திரை செய்து வந்து கொள்வர். கிறிஸ்துவ சமயத்தவர் என்று மட்டுமல்லாமல் தாவோ, புத்த, ஹிந்து மத்தினரும் இந்த புனித யாத்திரயில் வந்து கலந்து கொள்வர்.

1846ம் ஆண்டில் கட்டப்பட்டது இந்த தேவாலயம். காலணித்துவ ஆட்சியின் போது இப்பகுதியில் ஆங்கிலேயர்கள் அதிலும் குறிப்பாக கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுவோர் அதிகரிக்க ஆரம்பித்த வேளையில் செயின் அன் மேரி மாதாவிற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது. இந்த தேவாலயம் அமைந்திருப்பது ஒரு மலைப்பகுதி. இங்கே பெருங்கற்கால பாறை எழுத்துக்களும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன என்பதும் ஒரு செய்தி.

இந்த திருவிழாவை விளக்கும் இரண்டு விழியப் பதிவுகள்:
http://www.youtube.com/watch?v=AIpfPfrwpvQ
http://www.youtube.com/watch?v=pmmlM7eatRc

சுபா

Tuesday, November 26, 2013

மலேசியா - காட்சியில் அறிமுகம் - 9



பூமாலைகளின் வரிசை.

இந்தப்படம் ப்ரிக்ஃபீல்ட்ஸ் பகுதியில் எடுக்கப்பட்ட ஒன்று. மாலையில் அங்கு உலவிக் கொண்டிருந்த வேளை கோயில்களுக்கு முன்புறத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கடைகளில் விற்பனையாளர்கள் வகை வகையாகத் தயாரித்து தொங்க வைத்திருக்கும் பூமாலைகளை நன்கு பார்க்க முடியும். மலேசியாவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்தோமென்றால் சாமந்திப் பூவிலும் ரோஜாவிலும் மல்லிகையிலும் என மட்டுமே உருவாக்கபப்டும் மாலைகளைப் பார்க்க முடியும். இன்றோ, தமது கற்பனைத் திறனைப் புகுத்தி மாலை கட்டுபவர்கள் விதம் விதமான வடிவங்களில் மலர்களையும் இலைகளையும் கொண்டு மாலைகள் தயாரிக்கின்றனர்.  மாலைகளில் பயன்படுத்தப்படுகின்ற மலர்களும் கூட ஆர்க்கிட், துளசி இலைகள், கர்னேஷன் மலர்கள் என்று பலதரப்பட்டவையாக இருக்கின்றன. மாலை கட்டும் பணிகளை தமிழர்களே செய்கின்றனர். என் அனுபவத்தில் சீனர்களோ மலாய் இனத்தவரோ மாலைகள் கட்டி விற்பனை செய்வதை மலேசியாவில் இதுவரை நான் பார்த்ததில்லை.

மாலைகள் ஹிந்து சமயத்தவர்கள் ஆலயத்திற்கும் வீட்டு விஷேஷங்களுக்கும் பயன் படுத்துவது என்பது ஒரு புறமிருக்க பல்லினமக்கள் வாழும் மலேசியாவில் மாலைகள் மற்ற இனத்தோராலும் பல்வேறு சடங்குகளிலும் வைபவங்களும் பயன்படுத்தப்படுகின்றன என்பதும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றே. புத்த மதத்தை பின்பற்றும் சீனர்கள் தங்கள் வீட்டு வழிபாட்டிற்கும் ஆலய வழிபாட்டிற்கும், மலாய் இனத்தோர் பொது நிகழ்ச்சியில் சிறப்பு வருகையாளர்களைக் கௌரவிக்க என்பதற்காகவும் மாலைகளை வாங்குகின்றனர்.  மாலைகள் மலேசிய சூழலில் மக்கள் வாழ்க்கையில் அழகு சேர்க்கும் அணிகலனாக இணைந்து விட்டது!.

மேலும் சில படங்கள்..









சுபா

Sunday, November 24, 2013

மலேசியா - காட்சியில் அறிமுகம் - 8


குவாலாலம்பூரில் உள்ள ப்ரிக் ஃபீல்ட்ஸ் பகுதி இது.

இதற்கு லிட்டல் இந்தியா என்ற பெயரும் உள்ளது. சென்னை ரங்கநாதன்ஸ்ட்ரீட் போல தமிழர்களின் ஆடை அணிகலன்கள், உணவுக் கடைகள் என் நிறைந்திருக்கும் பகுதி இது. இப்பகுதியில் உள்ள ஒரு சாலையில் வரிசையாக கோயில்கள் உள்ளன. கோட்டூர்சாலை முருகன் கோயில் பிரதானமாக இருக்க ஹனுமார் கோயில், முனீஸ்வரர் கோயில் ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் என வரிசையாக 3 கோயில்களும் இங்கேயே அமைந்திருக்கின்றன. ஒரு கோயிலுக்கு வருபவர்கள் அடுத்தடுத்து ஏனைய ஆலயங்களுக்கும் சென்று வரும் வகையில் இப்படி ஒரு அமைப்பு உருவாக்கியிருக்கின்றனர். தற்சமயம் முனீஸ்வரர் கோயில், கிருஷ்ணர் கோயில் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கோயிலில் மக்கள் நின்று வழிபாடு செய்து கொண்டிருப்பதை இந்தப் படத்தில் காணலாம்.

சுபா

Friday, November 22, 2013

மலேசியா - காட்சியில் அறிமுகம் - 7



அறுவடை நடந்து கொண்டிருக்கும் நேரம். மழை பெய்து  நெல் வயல்களில் நீர் தேங்கிக் கிடக்கின்றது. அறுவடை செய்ய உழவர்கள் பயன்படுத்திய ட்ராக்டர், நெல் அறுவடை செய்ததில் வயலில் போட்டு வைத்த கோலம் தெரிகின்றது.

நான் நவம்பர்  மாதம் முதல் வாரம் பினாங்கின் புக்கிட் மெர்த்தாஜம் பகுதியில் இருந்த வேளையில் பதிவாக்கிய புகைப்படம் இது.

சுபா

Wednesday, November 20, 2013

மலேசியா - காட்சியில் அறிமுகம் - 6

இயற்கை காட்சிகளை மட்டும் பார்த்துக் கொண்டேயிருந்தால் மலேசிய உணவுகளை மறந்து விடுவோம். இன்று மலேசிய உணவு ஒன்றின் படத்தை பகிர்ந்து கொள்கிறேன்.



இதன் பெயர் கெத்துப்பாட்.  மலேசியாவின் அனைத்து மானிலங்களிலும் கிடைக்கும் ஒரு பலகார வகை இது. காலை உணவுக்கும் சரி மாலை நேர தேனீர் உணவுக்கும் சரி, இந்த கெத்துப்பாட் மக்கள் உணவு பழக்கத்தில் இடம்பெறும் ஒன்றாக இருக்கின்றது.

தென்னை ஓலைக்குள் சமைத்த சாதத்தை வைத்து அதில் வெவ்வேறு விதமான கலவைகளை இணைத்து வைப்பது வழக்கம். இந்தக் கெத்துபபட்டில் இனிப்பு கெத்துப்பாட்டும் உண்டு. காரமாண கெத்துப்பாட்டும் உண்டு. இனிப்பான கெத்துப்பாட் தேங்காய் ஏலக்காய் சக்கரை சேர்த்து கலந்து வைத்து தயாரிப்பது. காரமானவை அசைவமாகவே இருக்கும். கடல் உணவு, இறைச்சி வகைகள் என்ற வித்தியாசத்தில் இது இருக்கும்.

தென்னை ஓலைக்குள் உணவுக் கலவையை  வைத்து பின்னி  அதனைக் கரி அடுப்பு ஏற்றி அதில் வாட்டி எடுப்பார்கள்.  சுவை.. ஒவ்வொருவரும் சுவைத்துப் பார்த்துத் தான் சொல்ல வேண்டும். :-)

சுபா

Saturday, November 16, 2013

மலேசியா - காட்சியில் அறிமுகம் - 5



ஹோர்ன்பில் (Hornbill) பறவை.  மலேசியாவின்  தீவுகள் பலவற்றில் இவை நிறைந்து காணப்படும். இவற்றைக் காண பறவைகள் பூங்காவிற்குச் செல்ல வேண்டிய அவசியமே இல்லை. மலேசியாவில் மரங்களும் காடுகளும் நிறைந்த எல்லா பகுதிகளிலும் இப்பறவைகள் காணப்படும். சென்ற முறை மலேசியா பயணம் சென்றிருந்த போது வீடியோ பதிவு ஒன்றும் செய்திருந்தேன்.
அதை யூடியூபில் இங்கே காணலாம்.
http://www.youtube.com/watch?v=0_P2F5SXicg

சுபா

Thursday, November 14, 2013

மலேசியா - காட்சியில் அறிமுகம் - 4



பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி  கோயில் அடிவாரப் பகுதி. கீழே விநாயகர் கோயில், நாகர், இடும்பன் கோயில்கள் இருக்கின்றன. புதிதாக பிரமாண்டமான சிவபெருமான் சிலையை வடித்திருக்கின்றார்கள். 18ம் நூற்றாண்டிலேயே இங்கு முருகன் கோயில் அமைந்திருந்தமைக்கான தடயங்கள் கிடைக்கின்றன. ஏறக்குறைய 250 வருடங்கள் பழமை வாய்ந்த, சிறிய வேல் ஏந்தி நிற்கும் பாலதண்டாயுதபாணி கோயில் அருகில் நீர்வீழ்ச்சிப் பகுதியில் இருக்கின்றது. இந்த நீர்வீழ்ச்சிப் பகுதிக்கு பொதுமக்கள் சாதாரணமாகச் செல்ல முடியாது. அனுமதி பெற்று மட்டுமே செல்ல முடியும். பின்னர் 19ம் நூற்றாண்டு வாக்கில் சற்று இடம் மாற்றி தற்போது கோயில் இருக்கும் இடத்தில் ஆங்கிலேய அரசு கொடுத்த நிலத்தில் கோயிலைக் கட்டினார்கள் இங்குள்ள தமிழ் மக்கள். சென்ற ஆண்டு மலையின் மேலே பிரமாண்டமான கோயில் அமைக்கப்பட்டது. ஏறக்குறைய 512 படிகளைக் கடந்து மலை உச்சிக்குச் செல்ல வேண்டும் பாலதண்டாயுதபாணியைத் தரிசிக்க!

சுபா

Wednesday, November 13, 2013

மலேசியா - காட்சியில் அறிமுகம் - 3



கால் நடை வளர்ப்பு மலேசியாவின் பெரிய நகரங்கள் தவிர்த்து ஏனைய எல்லா பகுதிகளிலும் உண்டு. கோழிகள், வான்கோழிகள் வளர்ப்பதை மலேசிய கிராமப்புறங்களில் பரவலாகக் காணலாம். இளம் வயதில் வான் கோழிகளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு மிகுந்த பயமாக இருக்கும். கடித்து விடும் என்று யாரோ சொல்ல அதுவே அப்போது மனதில் பதிந்து  இருந்தது.  கோழிகளைப் போலவே வான்கோழிகளுக்கும் மலேசியாவில் நல்ல வரவேற்பு இருக்கின்றது. அதிலும் குறிப்பாக பண்டிகை காலங்களில்.

இந்தப் படத்தை கேரித் தீவில் ஒரு கிராமத்தில் புகைப்படமாக்கினேன்.

Tuesday, November 12, 2013

மலேசியா - காட்சியில் அறிமுகம் - 2



மலேசிய தலைநகர் குவாலாலம்பூர் - ஒரு கட்டிடத்தின் மேலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம். வர்த்தக நிறுவனங்களின் வானை எட்டித் தொட்டு நிற்கும் கட்டிடங்களுக்கிடையே வெள்ளி  நிறத்திலே காட்சியளிக்கும் கண்ணாடிகளாலும் இரும்பினாலும் கட்டப்பட்ட ட்வின் டவர் ப்ரமாண்டமாக நிற்பதைக் காணலாம். பகலில் ஓர் அழகாகவும் இரவில் வேறொரு காட்சியாகவும் தென்படுவதை நேரில் பார்த்து தான் ரசிக்க வேண்டும்.

Monday, November 11, 2013

மலேசியா - காட்சியில் அறிமுகம் - 1



இப்படத்தில் Kampung Tan Sri Manickavasagam  என்று ஒரு பெயர் குறிப்பு உள்ளதைக் காணலாம். கேரித் தீவில் எடுக்கப்பட்ட படம் இது.   Kampung (Kg)  என்பது கிராமம் என்பதைக் குறிக்கும். டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் (MIC) மலேசிய இந்தியர் காங்கிரஸின் 6 வது தலைவராக இருந்தவர்; தமிழர்.  இவரது பெயரில் கேரித் தீவில் ஒரு கிராமம் அமைந்திருக்கின்றது. இவர் பெயரில் மலேசியாவின் சில மானிலங்களில் சாலைகளும் உள்ளன. செம்பனைத் தோட்டம் நிறைந்த இத்தீவு பார்க்கும் இடமெல்லாம் பச்சை நிறமாகத் திகழ்கின்றது.

சுபா

Sunday, October 20, 2013

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 28

இத்தொடரிற்கு நீண்ட இடைவெளியாகிவிட்டது.

அடுத்த வாரம் மலேசியா செல்கின்றேன்.

அந்த இனிய சிந்தனை மனதை ஆக்கிரமித்திருப்பதில் இந்தத் தொடர் பற்றிய சிந்தனை நினைவில் வந்து எட்டிப் பார்த்ததில் லங்காவியில் என்னைக் கவர்ந்த விஷயங்களை உங்களிடமும் பகிர்ந்து கொள்ளலாமே என்ற யோசனையில் இப்பதிவு.

மலாய் இன மக்களும் தாய்லாந்தைப் பூர்வீகமாகக் கொண்ட மக்களும் மட்டுமே என இன்றைக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த லங்காவி இப்போது உலகத்தரம் வாய்ந்த ஒரு சுற்றுலா தலமாக ஆகி விட்டது. ஐரோப்பியர்கள் சிலர் இங்கேயே தங்கி ஹோட்டல், ரெஸ்டாரெண்ட் என நடத்துகின்றனர். ஐரோப்பிய சுற்றுலா பயணிகளின் தேவையறிந்து, அதே சமயம் எளிமையான இயற்கை சூழல் நிரம்பிய வகையில் ஓய்வு நாட்களை கழிக்க விரும்புவோருக்கு தகுந்த ஏற்பாட்டினை இவர்களால் அமைத்து தரமுடிகின்றது. ஒரு சில இத்தகைய ஐரோப்பியர்கள் உள்ளூர் பெண்களை மணந்து இங்கே குடியும் குடித்தனமுமாக ஆகிவிட்டனர். இப்படிப்பட்ட ஒரு டச்சு இனத்தவர் நடத்தும் ஒரு உணவகத்தில் ஒரு நாளைக் கழித்த போது அவருடன் பேசி சில விவரங்களை அறிந்து கொள்ளவும் முடிந்தது.

மசூரியைப் பற்றி முன்னர் இதே இழையில் குறிப்பிட்டிருந்தேன். மசூரி வாழ்ந்து மடிந்த இடங்கள் இங்கு சுற்றுலா நிமித்தம் வருபவர்கள் பார்த்துச் செல்ல வேண்டிய ஒரு பகுதி.  மசூரி நினைவு இல்லம் மிக நேர்த்தியாக அமைக்கபப்ட்டுள்ளது. பசுமையான தோட்டத்தின் இடையே  மலாய் பாரம்பரிய இல்லம் ஒன்று தான் இங்கே நினைவகமாக இருக்கின்றது. இங்கே மசூரி வாழ்ந்த காலத்தில் அவரது வீட்டுச் சூழல் எப்படி இருந்திருக்கும் எனக் காட்டும் வகையில் வரவேற்பறை அலங்காரம், குழந்தை தூங்கும் கயிற்றுத்தொட்டில், சமையலறை படுக்கயறைகள் என அமைக்கப்பட்டிருக்கின்றன. வாசலிலேயே அக்காலத்து ரிக்‌ஷா வண்டி ஒன்றும் இருக்கின்றது.  



வீட்டினுள்ளே தூளி


இந்த நினைவு இல்லத்திற்கு வருவதற்கு முன்னர் கண்காட்சிப் பகுதி உள்ளது. மலாய் பாரம்பரிய இசை பின்னனியில் இசைக்க மசூரி கதை மலாய் மொழியில் பின்னனி இசையோடு கலந்து சொல்லப்படுவை கேட்டுக் கொண்டே இங்கே கண்காட்சியைப் பார்த்துக் கொண்டு சுற்றி வரலாம். லங்காவித் தீவின் ஓர் அங்கமாக மசூரி நினைத்துப் பார்க்கப்படுகின்றார் என்றால் அது மிகையில்லை.

துரித வளர்ச்சி பெற்றூ இத்தீவு பொருளாதார மேண்மையைக் கண்டு வரும் போதும் இயற்கையின் எழில் இன்னமும் குறையவில்லை என்பது உண்மை. பசுமை.. பசுமை.. கிராமத்து அழகு.. இவை லங்காவியில் இன்னமும் இருக்கவே செய்கின்றன.




வாகனத்தை ஓட்டிக் கொண்டு லங்காவித்தீவை சுற்றி வரப் புறப்பட்டால் கண்கொள்ளா இயற்கை எழில் காட்சிகளைக் கண்டு மகிழலாம். தீவு முழுமைக்கும் பிரமாதமான தரம் வாய்ந்த சாலை அமைக்கப்பட்டிருக்கின்றது. இதனால் வாகனப் பயணம் என்பது தடையின்றி விரைவில் ஓரிடத்திலிருந்து மற்றோரிடம் செல்ல உதவுவதாகவே உள்ளது. இங்கு சுற்றுலா வருபவர்கள் கார் வாடகைக்கு எடுத்துக் கொள்வது நல்லது.  நாள் வாடகை என்ற வகையில் குவா துறைமுகப் பகுதியிலேயே வாடகைக்கு வாகனங்கள் பெற்றுக் கொள்ளலாம். விலையில் பல வேறுபாடுகள் உண்டு. இங்கே பஸ் பொதுப் பேருந்து வசதி அவ்வளவு சிறப்பாக இல்லை என்ற காரணத்தினால் நமது விருப்பத்திற்கு ஏற்ப ஒரு வாகனத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டு எல்லா முக்கிய இடங்களையும் சென்று பார்த்து வருவது சிறப்பு.

தீவில் உள்ளே பயணிக்க ஆரம்பித்தால் சாலையின் இரண்டு பக்கங்களிலும் நீண்ட வயல் வெளிகளும்.. புதர்களும் எங்கனும் காட்சியளிக்கும். ஓடைகள்.. சிறு குளங்கள்.. குளங்களில் நிரம்பிய தாமரையும் அல்லியும் என மலர் பூங்கா இயற்கையாகவே அமைந்திருக்கும் இடம் லங்காவி.



வயலின் பசுமை நம்மைக் கவர்வதைப் போலவே அந்த வயலில் புல் மேய்ந்து கொண்டிருக்கும் பசு மாடுகள், எருதுகள் ஆகியவையும் நம் கண்களுக்கு விருந்துதான். இங்கே படத்தில் பார்ப்பது போல எருமை மாடுகளுடன் இணைந்து உணவு தேடிக் கொண்டிருக்கும் நாரைகளும் இத்தீவில் ஏராளம். தரையில் நின்று உணவு தேடும் நாரைகள்,  எருமை மாடுகளின் முதுகில் ஏறிக் கொண்டும் பயணம் செய்யும். மீன்களைக் கொத்திக் கொண்டு வேகமாகப் பறக்கும் பறவைகளும் ஆங்காங்கே தென்படும்.  இவற்றையெல்லாம் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தால் நேரம் செல்வதே தெரியாது. ஆனால் மதிய வெயில் கொளுத்தினால் இதையெல்லாம் நிச்சயமாக ரசிக்க முடியாது. காலையிலும்  மாலையிலும் இது சுவர்க்கபுரிதான்.

லங்காவித் தீவுக்கு மக்கள் விரும்பி வருவதற்கு முக்கிய காரணம் இங்குள்ள கடற்கரை என்றும் சொல்லலாம். பளிங்கு போன்ற கடல்,  நண்டுகள் ஒடும்  கடற்கரை , கரையோரம் ஒதுங்கிக் கொடக்கும் சிப்பிகள் .. இவற்றைப் பார்க்க வரும் பயணிகள் கடலில் குளித்து மகிழவே பெரும்பாலும் இங்கு வருகின்றனர்.



நண்பர்களே... மாலைப் பொழுது மனதை மயக்க இங்கே அமர்ந்து இந்த  ரம்மியமான காட்சியை ரசிக்க வேண்டுமென்றால் ஒரு முறையேனும் மலேசியா செல்லுங்கள்.. அப்படியே மலேசியா சென்றாலும் .. மறக்காமல் லங்காவி செல்லுங்கள் ..:-)

அன்புடன்
சுபா

Thursday, August 22, 2013

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 27

27. லங்காவித்தீவில் பார்க்க வேண்டிய இடங்கள்

இப்பதிவை எழுதுவதற்காக லங்காவித்தீவின் எனது கடந்த பயணங்களின் படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். படங்களின்  அழகில் மயங்கி எந்தப் படத்தைத் தேர்ந்தெடுப்பது என்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டு விட்டது. ஒவ்வொரு படமும் லங்காவியின் எழில் சொல்லும் வகையிலும் இத்தீவின் சிறப்பினை வெளிப்படுத்தும் வகையிலும் அமைந்திருப்பதால் குறிப்பிட்ட சில படங்களை மட்டுமே இப்பதிவில்இணைக்கின்றேன். அடுத்த பதிவிலும் படங்கள் தொடரும்.

லங்காவிக்கு வருகையளிப்பவர்களைக் கடந்த சில ஆண்டுகளாக மிகக் கவர்வது கேபிள் கார் பயணம். இந்தக் கேபிள் கார் அமைப்பு லங்காவியின் மலைப்பயண தொழில்நுட்ப அமைப்பை உலகுக்கு எடுத்துக் காட்டும் ஒன்று எனச் சொன்னால் அது மிகையாகாது. லங்காவித்தீவின் இரண்டாவது மிக உயரமான குன்றான மாட் சினாங் மலைக்குச் செல்லும் வகையில் இக்கேபிள் கார் பயணம் அமைக்கப்பட்டிருக்கின்றது. கரும்பச்சை நிறத்திலான அடர்ந்த காடுகளுக்கிடையே மிக வேகமாக ஊர்ந்து செல்லும் இக்கேபிள் கார் பயணத்தில் இரத்த அழுத்தம் உள்ளவர்களோ மாரடைப்பு போன்ற வகையிலான உடல் நோய் அறிகுறிகள் உள்ளவர்களோ வருவது தவிர்க்கப்பட வேண்டும் என்று கேபிள் கார் பயணக்கட்டணம் பெறும் போதே பயணிகள் அறிவுறுத்தப்படுவர். மலை உச்சிக்குச் சென்ற பின்னர் புது உலகமாக லங்காவித்தீவு காட்சியளிப்பது ஒரு கண்கொள்ளா காட்சி.


Inline image 5

600 மீட்டர் பயணம் செய்த பின்னர் கேபிள் கார் முதல் ஸ்டேஷனை வந்தடையும். அங்கிருந்து மலையின் காட்சியை ரசித்து விட்டு அடுத்த கேபிள் காரில் பயணத்தைத் தொடர வேண்டும். மேலும் உயரமான பகுதிக்குச் சென்ற பின்னர் லங்காவித்தீன் அடர்ந்த மலைத்தொடரை அங்கிருந்து காணலாம். லங்காவித்தீவிலிருந்தே தாய்லாந்தின் மலைப்பகுதியின் தொடர்ச்சியும் தெளிவாகக் கண்களுக்குப் புலப்படும்.

Inline image 3

இதனை அடுத்ததாக இத்தீவில் என்னைக் கவர்வது தீவுக்குத் தீவு தாவிச் செல்லும் போட் சவாரி. இத்தொடரின் முதல் பதிவிலேயே லங்காவி 99 குட்டித்தீவுகளையும் தன்னுள்ளே கொண்டுள்ள தகவலையும் குறிப்பிட்டிருந்தேன். ஆக இத்தீவுகளுக்குப் பயணம் சென்று வருவது மிக மிக சுவாரசியமான ஒரு அனுபவம். இதில் ஓரிரு தீவுகள் தவிர்த்து ஏனையவற்றில் மனிதர்கள் இல்லை. Island hopping tour என துறைமுகப்பகுதியில் கேட்டுப் பார்த்து தினம் சில முறை பயணிக்கும் இவ்வகை மோட்டார் போட் பயணத்தில் சுற்றுப்பயணிகள் கலந்து கொள்ளலாம். 

Inline image 2

மோட்டார் போட் கடலின் நீரைக் கிழித்துக் கொண்டு வேகமாகப் பயணிப்பதே பயணத்திற்கு மேலும் ஆர்வத்தைக் கூட்டுவதாக அமையும். சில தீவுகளில் கழுகுகள் நிறைந்திருக்கின்றன. மோட்டார் போட் ஓட்டுநர் ஒவ்வொரு பயணத்தின் போதும் கழுகுகள் நிறைந்துள்ள ஏதாவது ஒரு தீவின் முன்னே படகினை நிறுத்தி சுற்றுப்பயணிகளைப் பார்த்து மகிழச் செய்வார். கழுகுகள் காலை நேரத்தில் நிச்சயமாக கண்களுக்குத் தென்படும். 

Inline image 4

லங்காவித்தீவே இயற்கை எழில் நிறைந்ததோர் தீவு. இங்கே அதிகமான குரங்குகள் இருப்பது ஆச்சரியம் இல்லையே. இங்குள்ள குரங்குகளில் பல மிகுந்த தொல்லை தருபவை. இவற்றிடம் மிக ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். நான் பயணிப்பதற்காக ஒரு வாடகைக் கார் (புரோட்டான் சாகா) தீவில் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்திருந்தேன். அந்த வாகனத்தை ஓரிடத்தில் குரங்குகளைப் பார்த்து படம் பிடிக்க வேண்டும் என நிறுத்தி விட்டு சென்று படம் பிடித்துக் கொண்டிருக்கும் வேளையில் குரங்குகள் அந்தக் காரில் தங்கள் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்து விட்டன. 

காரின் ரப்பர் வளைவுகள், ரேடியோ அண்டெனா, வைப்பர் என ஒவ்வொன்றாக கழற்றிப் போட ஆர்மபித்து விட்டன. நான்   அதனை விரட்ட முயற்சித்து எந்தப் பலனும் இல்லை. அவை என்னிடமே சண்டைக்கு சீறிப்பாய்ந்து கொடு வர ஆரம்பித்து விட்டன. நல்லவேளையாக அப்பக்கமாக வந்த ஒரு மற்றொரு வாகனமோட்டி வாகனத்தை நிறுத்தி குரங்குகளை விரட்டி அடித்து விட்டு அந்த வாகனத்தைக் காப்பாற்றிக் கொடுத்தார். இல்லையென்றால் அன்று அந்த வாடகை வாகனம் பல கோளாறுகளுக்குட்பட்டிருக்கும். பெரும்பாலான குரங்குகள் சேட்டை செய்பவையாக இருந்தாலும் லங்காவி ஜியோலோகி பார்க்கில் நாங்கள் பார்த்த குரங்குகள் அமைதியாக இருந்ததையும் வருகின்ற பார்வையாளர்களைத் தொல்லை செய்யாமல் இருந்ததையும் நிச்சயம் குறிப்பிடத்தான் வேண்டும். 


Inline image 1

மனிதர்களில் பல குணங்களைப் பார்க்கின்றோம். அப்படியே குரங்குகளிலும் சாதுக்களும் உண்டு, வம்பு செய்து பிரச்சனை செய்யும் குரங்குகளும் உண்டு என்பதை லங்காவித்தீவிலும் காணலாம். :-)

தொடரும்..


சுபா

Friday, July 19, 2013

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 26

26. லங்காவி தீவு

ஐரோப்பாவில் மலேசியாவைத் தெரிகின்றதோ இல்லையோ.. சுற்றுலாப்பயண விரும்பிகளுக்கு லங்காவித் தீவை மிக நன்கு தெரியும். தமிழகத்து சினிமா துறையினர் பலரும் சினிமா காட்சிகளைப் படமாக்க லங்காவித்தீவிற்குச் சென்று இத்தீவின் இயற்கை அழகை பாடலோடு சேர்த்து இணைத்துக் கொடுத்திருக்கின்றார்கள்.  மலேசியா முழுமைக்குமே மிகப் பிரபலமான ஒரு சுற்றுலா மையமாகத் திகழும் இத்தீவும் இதனைச் சுற்றி அமைந்திருக்கும் 99 குட்டித் தீவுகளும் கெடா மானிலத்துக்குச் சொந்தமானவையே. வருடத்தின் எல்லா நாட்களிலும் சுற்றுலா பயணிகளைக் கவர்ந்திழுக்கும் இந்தத் தீவில் பார்க்கவும் ரசிக்கவும் ருசிக்கவும் பல விஷயங்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி அடுத்த பதிவில் குறிப்பிடுகின்றேன். இந்தப் பதிவு லங்காவி தீவு பற்றிய அறிமுகமாக மட்டும் அமைகின்றது.




மேலுள்ள படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள லங்காவி, பூலாவ் தூபா இரண்டையும் தவிர ஏனையவை அனைத்துமே மிகச் சிறிய தீவுகள். இவ்விரண்டு தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். ஏனையவை மக்கள் வசிப்பிற்கு ஏற்ற நிலையில் இல்லையென்றாலும் சுற்றுலா நோக்கில் பயணிகள் படகில் சுற்றி வரும் வகையிலும் இறங்கி மணலில் விளையாடி கண்ணாடி போல காட்சியளிக்கும் கடற்கரையில் ஓரம் வரை வந்து செல்லும் சிறு மீன்களையும் பார்த்து மகிழ ரசிக்கச் செல்லலாம்.

லங்காவித் தீவிற்கு அலுவலக விஷயமாக 2 முறையும் சுற்றுலா நிமித்தம் மூன்று முறையும் சென்று வந்துள்ளேன். ஏறக்குறைய தீவின் எல்லா பகுதிகளையும் வாகனத்திலேயே சுற்றிப் பார்த்து ரசித்திருக்கின்றேன். சுற்றுலா துறை விரிவடைந்து விட்ட போதிலும் வயல் வெளிகளுக்கும் பசுமைக்கும் இயற்கைக்கும் இந்தத் தீவில் குறைவு கிடையாது.



லங்காவித்தீவிற்கு இப்பெயர் வர இரண்டு காரணங்களைக் குறிப்பிடுவது வழக்கம். இன்றைக்கு 1800 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் பிரசித்தி பெற்றிருந்த லங்காசுக்கா பேரரசின் பெயரின் அடிப்படையில் இப்பெயர் அமைந்திருக்கின்றது என்பது ஒரு காரணம். மற்றொன்று, helang + Kawi  என்ற இரண்டு மலாய் சொற்களின் கூட்டாக அமைந்த பெயர்  என்பது. helang என்பது கழுகைக் குறிப்பது.  Kawi  என்பது காவி நிறத்தைக் குறிப்பது. ஆக பழுப்பு/காவி நிறத்திலான கழுகு என்ற பொருள் கொள்வது.

லங்காவித் தீவின் சின்னமும் கழுகுதான்.

1987ம் ஆண்டு வரி இல்லா சலுகை இத்தீவிற்கு வழங்கப்பட அதுவரை உலகம் அறியாத வரைபடத்தில் மட்டும் தெரிந்ததாக இருந்த  இத்தீவு இப்போது உலகப் புகழ்பெற்ற சுற்றுலா மையங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.  பல 5 நட்சத்திர ஹோட்டல்கள் கடற்கறையை ஆக்கிரமித்திருந்தாலும் பற்பல விலைகளிலும் தரங்களிலும் ஏராளமான தங்கும் விடுதிகளைக் காணமுடியும். மலேசிய அரசாங்க நிகழ்வுகள் பல லங்காவித் தீவுகளில் உள்ள ஏதாகினும் ஒரு 5 நட்சத்திர ஹோட்டல்களில் நடைபெறுவது மிக சகஜம்.

மலேசிய மக்கள் லங்காவியின் பெயரைக் கேட்கும் போது மசூரியை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. இந்தத் தீவிற்கு ஒரு கதாநாயகி உண்டு என்றால் அது மசூரிதான். மசூரி பற்றிய தகவல்கள் ஏராளமாக இணையத்தில் கிடைக்கின்றன.  உங்கள் வாசிப்பிற்காக சுருக்கமாக இங்கே தருகிறேன்.

தாய்லாந்தின் புக்கெட் பகுதியில் வசித்து வந்த மலாய் பெண்ணான மசூரி தன் பெற்றோருடன் பிழைப்புத் தேடி இந்தத் தீவிற்கு வருகின்றார். லங்காவித் தீவில் மசூரியின் அழகுக்கு இணையான வேறு பெண்களே இல்லையெனும் அளவிற்கு அவர் அழகுடன் திகழ்கின்றார். அங்கே போர் வீரன் வான் டாரூஸை சந்திக்க திருமணமும் நடக்கின்றது. கணவன் போர் வீரன் என்பதால் போருக்குச் செல்ல அச்சமயத்தில் மசூரியின் மாமனாரே மசூரியைத் திருமணம் செய்ய விரும்புகின்றார். இதனைக் கண்ட மாமியார் தன் கணவன் மேல் கோபம் கொள்வதை விடுத்து மசூரியின் மேல் கோபம் கொண்டு பண்பு குறைந்தவர் என்ற பெயர் சேர்த்து அவமானப் படுத்தி அவளை தண்டனைக்கு உள்ளாக்குகின்றார்.

அச்சமயம் மசூரி ஒரு குழந்தைக்குத் தாயாகவும் இருக்கின்றார். வேறொரு நபருடன் நட்பில் இருக்க அதனைக் கண்டு கோபப்படும் மாமனார் மசூரிக்கு தண்டனை தர வேண்டும் என முடிவு செய்கின்றார். தன்னை ஒதுக்கி விட்டு வேறொருவருடன் நட்பு கொண்டிருக்கின்றார் என்ற ஆதங்கம் மாமனாருக்கு; மாமியாருக்கோ கணவனின் கவனத்தை மசூரி கவர்ந்து விட்டாரே என்ற வருத்தம். இரண்டும் சேர மசூரி குற்றம் சாட்டப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்படுகின்றார்.



தண்டனையாக ஒரு மரத்தில் கட்டிப் போட்டு கத்தியால் குத்திக் கொல்ல முயற்சிக்கின்றனர். ஆனால் மசூரி இறக்கவில்லை. மசூரி தனது குடும்ப கெரிஸ் (வாள்) பயன்படுத்தி கொன்றால் மட்டுமே தன் உயிர் போகும் என்று சொல்ல அதனைக் கொண்டு வந்து அதனால் குத்தி கொலை செய்கின்றனர்.   மசூரியைக் குத்திக் கொலை செய்த போது வெள்ளை இரத்தம் அவர் உடம்பிலிருந்து வழிந்ததாகவும் பறவைகள் கூட்டம் அலைமோதியதாகவும், வெள்ளை மேகங்கள் சூழ்ந்ததாகவும் கதைகள் குறிப்பிடுகின்றன. மசூரி இறக்கும் தருவாயில் இந்தக் கொடுமைக்குக் காரணமாக அமைந்த இந்தத் தீவில் 7 தலைமுறைக்கு வளம் இருக்காது  என சாபம் கொடுத்து இறந்தார் என்பதாகவும் அதனால் கெடா அரச பரம்பரையில் 7 தலைமுறை காலத்திற்கு லங்காவித் தீவு வெறிச்சோடிக் கிடந்ததாகவும் கதை சொல்வார்கள்.

பல முறை சியாம் (அன்றைய தாய்லாந்து) நாட்டின் தாக்கத்திற்குள்ளாகி பல உயிர் இழப்பையும் இத்தீவு கண்டது.  7 தலைமுறைக்குப் பின்னர் சென்ற நூற்றாண்டில் தான் லங்காவித் தீவு சிறிது சிறிதாக அமைதியான நிலையடைந்து தற்சமயம் வளர்ந்து பிரசித்து பெற்று விளங்குகின்றது. மசூரியின் சாபத்தை உள்ளூர் மக்கள் ஒதுக்குவதில்லை. அவரது சாபமே இத்தீவின் புகழ்மங்கியிருந்த நிலைக்குக் காரணம் எனப் பலர் நம்புகின்றனர்.

இன்றைய லங்காவி எழில் நிறைந்த  ஒரு தீவு. அடுத்த பதிவில் எனது தொகுப்பில் இருக்கும் பல படங்களை வழங்க நினைத்திருக்கின்றேன். மலேசியா செல்ல நினைப்பவர்கள் குறைந்தது இங்கு ஐந்து நாட்களாவது தங்கி இயற்கை எழிலில் தன்னை மறக்கச் செல்ல வேண்டிய  இடம் லங்காவித் தீவு.



தொடரும்..

சுபா

படங்கள்: இணையத்தில் எடுத்தவை.
குறிப்புக்கள்:
http://en.wikipedia.org/wiki/Mahsuri
http://www.neosentuhan.com.my/langkawi/support/le001.htm

Friday, July 12, 2013

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 25

25. கெடா - கோயில் உள்ள ஊர்

சென்ற பதிவில் கெடா மானில ஆண்கள் பெண்களின் உடைகளைப் பற்றி விவரித்திருந்தேன். இந்தப் பதிவில் கெடா மானிலத்தில் உள்ள சில இந்துக் கோயில்களைப் பற்றிய சில தகவல்கள் தரலாமே என நினைக்கின்றேன்.

கெடா மானிலத்தை எடுத்துக் கொண்டால் மலேசியா முழுமைக்கும் அறியப்படுவதும் மிகப் பிரசித்தி பெற்றதுமாக அமைந்திருப்பது இம்மானிலத்தின் சுங்கை பெட்டானி நகரில் அமைந்திருக்கும் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயம். இந்த ஆலயம் முதன் முதலில் 1914ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதன் முதல் கும்பாபிஷேகம் 1924ம் ஆண்டு இந்த மானிலத்து இந்து மக்களால் செய்யப்பட்டது.  ஆண்டிக் கோலத்தில் இருக்கும் முருகக்கடவுளே இவ்வாலயத்தின் பிரகார தெய்வம்.



இது தவிர பல ஹிந்து தெய்வங்களுக்கானக் கோயில்கள் இந்த மானிலத்தில் அமைந்திருக்கின்றன. விக்கிப்பீடியாவில் கெடா மானிலக் கோயில்களைத் தொகுத்து ஒரு பட்டியலிட்டிருக்கின்றனர். அதில் உள்ள ஒரு பட்டியல் இங்கு 23 ஹிந்து ஆலயங்கள் இருப்பதாகக் குறிப்பிடுகின்றது. http://en.wikipedia.org/wiki/List_of_Hindu_temples_in_Malaysia


இப்பட்டியலைப் பார்ப்பவர்களுக்குக் கோயில் வகைகளில் மானில வாரியாக ஒரு ஒற்றுமை இருப்பது தென்படலாம்.  பொதுவாக மலேசியாவின் எல்லா மானிலங்களிலும் மாரியம்மனுக்கும், முருகக் கடவுளுக்கும், விநாயகக் கடவுளுக்கும், முனீஸ்வரருக்கும் என்றே அதிகமான கோயில்கள் அமைந்திருக்கும். இந்தியாவில் மிகப் புகழ்பெற்றும் பழம் பெறுமைகளைக் கொண்டும் விளங்கும் சிவன் மஹாவிஷ்ணு போன்ற தெய்வங்களின் ஆலயங்கள் இங்கு மிகக் குறைவு. 27 வெவ்வேறு அம்மன் கோயில்கள் உள்ள பினாங்கு மானிலத்தில் 1 சிவன் கோயில் மட்டுமே இருக்கின்றது. சிவன் விஷ்ணு போன்ற தெய்வங்களின் முக்கியத்துவத்தை வீரபத்திரர், முனீஸ்வரர்  போன்ற தெய்வங்கள் எடுத்துக் கொண்டனர் என்பது தெளிவு.

12ம் நூற்றாண்டு வரை மலேசிய தீபகற்பத்திற்கு வந்து சென்றவர்கள் ஹிந்து சமயத்தையும் புத்த சமயத்தையும் சார்ந்தவர்கள். இவர்கள் கட்டிய கோயில்கள் மலேசிய தீபகற்பத்தில் இன்றைக்கு முழுமையாக இல்லை. ஆனால் இறைவடிவச் சிலைகளும் கோயில்களின் சில பகுதிகளும் சிவன் விஷ்ணு துர்க்கை அம்மன் சிலைகளும் நாடு முழுமைக்கும் உள்ள அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பழம் பெருமைகள் மலேசியாவைப் பொருத்தவரை அங்கு வாழும் மக்களுக்கும் தெரிவதில்லை. அதனைத் தெரிந்து கொண்டு வரலாற்றை ஆராய்வதில் நாட்டமும் பெரிதாக இருப்பதில்லை. 12ம் நூற்றாண்டிற்குப் பிறகு வந்து சேர்ந்து முழுமையாக ஆக்ரமித்துக் கொண்ட இஸ்லாமிய மத சம்பந்தப்பட்ட வரலாற்றின் அடிப்படையில் மலேசிய வரலாற்றைப் புரிந்து கொள்ளவே பலர் விரும்புகின்றனர். இது வரலாற்று ஆய்விற்கு முற்றிலும் எதிரான ஒரு கொள்கை என்பதை உண்மையான வரலாற்று ஆய்வாளர்கள் அறிவர்.

19ம், 20ம்  நூற்றாண்டில் தென் இந்தியாவிலிருந்து வந்து சேர்ந்த தமிழகத்தினர் பெரும்பான்மையோர் ரப்பர் செம்பனைத்தோட்டங்களில் உழைப்பதற்காகவும், சிறைக் கைதிகளாக வந்து சாலை அமைக்கும் பணிகளில் ஈடுபடுவதற்காகவும், ரயில் பாதைகள் அமைப்பதற்காகவும் அழைத்துக் கொண்டு வரப்பட்டவர்கள். ஒரு சிலர் வணிகம் செய்வதற்காக வந்தவர்கள். குறிப்பிடத்தக்கவகையில் தமிழக செட்டியார் சமூகத்தினரைக் கூறலாம். இச்சமூகத்தினர் வணிகம் செய்யும் பொருட்டு மலேசியா வந்து ஏராளமாக பொருள் சேர்த்து இந்தியாவிற்கு கொண்டு போவது என்பது ஒரு புறமிருக்க தாங்கள் வாழ்கின்ற இந்த மலாயாவிலேயே இறைவனுக்கும் கோயில்கட்டி மகிழ வேண்டும் என நினைத்து ஆங்காங்கே பல கோயில்களைக் கட்டினர். இவர்கள் கட்டிய கோயில்கள் பெரும்பாலும் முருகன் கோயிலாக இருக்கும் அல்லது சிவன் கோயிலாக இருக்கும். உதாரணமாக பினாங்கில் இருக்கும் சிவன் ஆலயம் செட்டியார் சமூகத்தினர் கட்டிய பழம் கோயில்களில் ஒன்று.

மலேசியக் காடுகளை அழித்து சீராக்கி ரப்பர் தோட்டங்களாகவும் செம்பனைத் தோட்டங்களாகவும் பரிமளிக்கச் செய்ய அழைத்து வந்த தென்தமிழக மக்கள் தங்கள் ஆன்மீகத் தேவைக்காகவும் கோயில் கட்டி குலதெய்வ வழிபாடும், திருவிழாக்களும் கொண்டாடி மகிழ மறக்கவில்லை. இவர்களைக் கவர்ந்த தெய்வமாக அமைந்தது காளியம்மனும் மாரியம்மனும் வீரபத்திரனும் முனீஸ்வரனும். இது ஒரு தனித்துவம் என்றே நான் கருதுகின்றேன். அல்லல்களும் துயர்களும் மிக நிறைந்த தங்கள் வாழ்வில் துன்பத்தைப் போக்கி இறைவன் கருணையில் மகிழ்ச்சி கிடைக்கும் என நம்பும் மக்கள் ஆக்ரோஷமாக பல ஆயுதங்களுடன் காட்சியளிக்கும் இவ்வகை தெய்வ உருவங்களை மிக விரும்பி அதற்குக் கோயில்கட்டி பாதுகாத்து கும்பாபிஷேகம் செய்து வழிபாடு செய்து வருவதை இன்னமும் காணலாம். இவ்வகைக் கோயில்களில் வேதம் பயின்ற குருக்களும் பட்டர்களும் இருப்பதில்லை. மாறாக அம்மக்கள் கூட்டத்தில் ஒருவர், ஆலய பணிகளில் ஆர்வம் கொண்டிருந்தால் அவரே கோயில் பூசாரியாக தன்னை ஈடுபடுத்திக் கொள்வார். உதவிக்கு ஒரிருவர் உடன் இருப்பர்.  மக்களே தங்கள் சொந்தச் செலவில் கோயிலில் விளக்கேற்ற எண்ணெய், திரி, விளக்கு போன்ற பொருட்களையும் பூஜைக்கு சந்தனம் குங்குமம், ஊதுபத்தி பால், தயிர், பூக்கள், பழங்கள் என்றும் வாங்கித் தருவார்கள். ஆக மொத்தம் இது அந்தச் சிறிய தோட்டத்து மக்களின் கோயில். இப்படி சிறிதாக ஏற்படுத்தப்பட்ட பல நூறு மாரியம்மன், முனீஸ்வரன், காளியம்மன் கோயில்கள் தற்சமயம் பெரிதாக்கப்பட்டு கும்பாபிஷேகங்கள் செய்யப்பட்டு பெரிய கோயில்களின் பட்டியலில் இடம்பெறும் நிகழ்வும் அவ்வப்போது மலேசியாவில் நிகழும் ஒன்றே.

18ம் நூற்றாண்டிலும் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் கெடா மானிலத்தில் ஆயிரக்கனக்கானத்  தமிழர்கள் தோட்டங்களில் பணிபுரிவதற்காகக் கப்பல்களில் கொண்டுவரப்பட்டனர். கூலிம், பாடாங் செராய், லூனாஸ், அலோர்ஸ்டார், போன்ற நகரங்களில் இப்படி வந்து குடியேறிய தமிழர்கள் படிப்படியாக தங்கள் தொழில் வாழ்க்கை என்பதை தோட்டங்களில் மட்டுமே என முடக்கிக் கொள்ளாமல் தங்கள் குழந்தைகளை படிக்க வைத்து  பலவகைத் தொழில்களில் ஈடுபடும் நிலையை ஏற்படுத்திக் கொண்டனர். பொருளாதார ரீதியில் தங்கள் வாழ்க்கையைப் பன்மடங்கு உயர்த்திக் கொண்டனர் இம்மக்கள். கூலி வேலைக்காக வந்து சேர்ந்த இம்மக்கள் பலரின் சந்ததியினர் தற்சமயம் பல்வேறு அரசாங்கப் பணிகளிலும், வணிகர்களாகவும், கல்விகற்று உயர் பதவிகள் வகிப்பவர்களாகவும் அமைந்திருப்பது தமிழர்கள் அனைவருக்குமே பெருமை சேர்க்கும் ஒரு விஷயம் தானே.

தொடரும்..

சுபா

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 24

25. கெடா - கோயில் உள்ள ஊர்

சென்ற பதிவில் கெடா மானில ஆண்கள் பெண்களின் உடைகளைப் பற்றி விவரித்திருந்தேன். இந்தப் பதிவில் கெடா மானிலத்தில் உள்ள சில இந்துக் கோயில்களைப் பற்றிய சில தகவல்கள் தரலாமே என நினைக்கின்றேன்.

கெடா மானிலத்தை எடுத்துக் கொண்டால் மலேசியா முழுமைக்கும் அறியப்படுவதும் மிகப் பிரசித்தி பெற்றதுமாக அமைந்திருப்பது இம்மானிலத்தின் சுங்கை பெட்டானி நகரில் அமைந்திருக்கும் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயம். இந்த ஆலயம் முதன் முதலில் 1914ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதன் முதல் கும்பாபிஷேகம் 1924ம் ஆண்டு இந்த மானிலத்து இந்து மக்களால் செய்யப்பட்டது.  ஆண்டிக் கோலத்தில் இருக்கும் முருகக்கடவுளே இவ்வாலயத்தின் பிரகார தெய்வம்.


இது தவிர பல ஹிந்து தெய்வங்களுக்கானக் கோயில்கள் இந்த மானிலத்தில் அமைந்திருக்கின்றன. விக்கிப்பீடியாவில் கெடா மானிலக் கோயில்களைத் தொகுத்து ஒரு பட்டியலிட்டிருக்கின்றனர். அதில் உள்ள ஒரு பட்டியல் இங்கு 23 ஹிந்து ஆலயங்கள் இருப்பதாகக் குறிப்பிடுகின்றது. http://en.wikipedia.org/wiki/List_of_Hindu_temples_in_Malaysia


இப்பட்டியலைப் பார்ப்பவர்களுக்குக் கோயில் வகைகளில் மானில வாரியாக ஒரு ஒற்றுமை இருப்பது தென்படலாம்.  பொதுவாக மலேசியாவின் எல்லா மானிலங்களிலும் மாரியம்மனுக்கும், முருகக் கடவுளுக்கும், விநாயகக் கடவுளுக்கும், முனீஸ்வரருக்கும் என்றே அதிகமான கோயில்கள் அமைந்திருக்கும். இந்தியாவில் மிகப் புகழ்பெற்றும் பழம் பெறுமைகளைக் கொண்டும் விளங்கும் சிவன் மஹாவிஷ்ணு போன்ற தெய்வங்களின் ஆலயங்கள் இங்கு மிகக் குறைவு. 27 வெவ்வேறு அம்மன் கோயில்கள் உள்ள பினாங்கு மானிலத்தில் 1 சிவன் கோயில் மட்டுமே இருக்கின்றது. சிவன் விஷ்ணு போன்ற தெய்வங்களின் முக்கியத்துவத்தை வீரபத்திரர், முனீஸ்வரர்  போன்ற தெய்வங்கள் எடுத்துக் கொண்டனர் என்பது தெளிவு.

12ம் நூற்றாண்டு வரை மலேசிய தீபகற்பத்திற்கு வந்து சென்றவர்கள் ஹிந்து சமயத்தையும் புத்த சமயத்தையும் சார்ந்தவர்கள். இவர்கள் கட்டிய கோயில்கள் மலேசிய தீபகற்பத்தில் இன்றைக்கு முழுமையாக இல்லை. ஆனால் இறைவடிவச் சிலைகளும் கோயில்களின் சில பகுதிகளும் சிவன் விஷ்ணு துர்க்கை அம்மன் சிலைகளும் நாடு முழுமைக்கும் உள்ள அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பழம் பெருமைகள் மலேசியாவைப் பொருத்தவரை அங்கு வாழும் மக்களுக்கும் தெரிவதில்லை. அதனைத் தெரிந்து கொண்டு வரலாற்றை ஆராய்வதில் நாட்டமும் பெரிதாக இருப்பதில்லை. 12ம் நூற்றாண்டிற்குப் பிறகு வந்து சேர்ந்து முழுமையாக ஆக்ரமித்துக் கொண்ட இஸ்லாமிய மத சம்பந்தப்பட்ட வரலாற்றின் அடிப்படையில் மலேசிய வரலாற்றைப் புரிந்து கொள்ளவே பலர் விரும்புகின்றனர். இது வரலாற்று ஆய்விற்கு முற்றிலும் எதிரான ஒரு கொள்கை என்பதை உண்மையான வரலாற்று ஆய்வாளர்கள் அறிவர்.

19ம், 20ம்  நூற்றாண்டில் தென் இந்தியாவிலிருந்து வந்து சேர்ந்த தமிழகத்தினர் பெரும்பான்மையோர் ரப்பர் செம்பனைத்தோட்டங்களில் உழைப்பதற்காகவும், சிறைக் கைதிகளாக வந்து சாலை அமைக்கும் பணிகளில் ஈடுபடுவதற்காகவும், ரயில் பாதைகள் அமைப்பதற்காகவும் அழைத்துக் கொண்டு வரப்பட்டவர்கள். ஒரு சிலர் வணிகம் செய்வதற்காக வந்தவர்கள். குறிப்பிடத்தக்கவகையில் தமிழக செட்டியார் சமூகத்தினரைக் கூறலாம். இச்சமூகத்தினர் வணிகம் செய்யும் பொருட்டு மலேசியா வந்து ஏராளமாக பொருள் சேர்த்து இந்தியாவிற்கு கொண்டு போவது என்பது ஒரு புறமிருக்க தாங்கள் வாழ்கின்ற இந்த மலாயாவிலேயே இறைவனுக்கும் கோயில்கட்டி மகிழ வேண்டும் என நினைத்து ஆங்காங்கே பல கோயில்களைக் கட்டினர். இவர்கள் கட்டிய கோயில்கள் பெரும்பாலும் முருகன் கோயிலாக இருக்கும் அல்லது சிவன் கோயிலாக இருக்கும். உதாரணமாக பினாங்கில் இருக்கும் சிவன் ஆலயம் செட்டியார் சமூகத்தினர் கட்டிய பழம் கோயில்களில் ஒன்று.

மலேசியக் காடுகளை அழித்து சீராக்கி ரப்பர் தோட்டங்களாகவும் செம்பனைத் தோட்டங்களாகவும் பரிமளிக்கச் செய்ய அழைத்து வந்த தென்தமிழக மக்கள் தங்கள் ஆன்மீகத் தேவைக்காகவும் கோயில் கட்டி குலதெய்வ வழிபாடும், திருவிழாக்களும் கொண்டாடி மகிழ மறக்கவில்லை. இவர்களைக் கவர்ந்த தெய்வமாக அமைந்தது காளியம்மனும் மாரியம்மனும் வீரபத்திரனும் முனீஸ்வரனும். இது ஒரு தனித்துவம் என்றே நான் கருதுகின்றேன். அல்லல்களும் துயர்களும் மிக நிறைந்த தங்கள் வாழ்வில் துன்பத்தைப் போக்கி இறைவன் கருணையில் மகிழ்ச்சி கிடைக்கும் என நம்பும் மக்கள் ஆக்ரோஷமாக பல ஆயுதங்களுடன் காட்சியளிக்கும் இவ்வகை தெய்வ உருவங்களை மிக விரும்பி அதற்குக் கோயில்கட்டி பாதுகாத்து கும்பாபிஷேகம் செய்து வழிபாடு செய்து வருவதை இன்னமும் காணலாம். இவ்வகைக் கோயில்களில் வேதம் பயின்ற குருக்களும் பட்டர்களும் இருப்பதில்லை. மாறாக அம்மக்கள் கூட்டத்தில் ஒருவர், ஆலய பணிகளில் ஆர்வம் கொண்டிருந்தால் அவரே கோயில் பூசாரியாக தன்னை ஈடுபடுத்திக் கொள்வார். உதவிக்கு ஒரிருவர் உடன் இருப்பர்.  மக்களே தங்கள் சொந்தச் செலவில் கோயிலில் விளக்கேற்ற எண்ணெய், திரி, விளக்கு போன்ற பொருட்களையும் பூஜைக்கு சந்தனம் குங்குமம், ஊதுபத்தி பால், தயிர், பூக்கள், பழங்கள் என்றும் வாங்கித் தருவார்கள். ஆக மொத்தம் இது அந்தச் சிறிய தோட்டத்து மக்களின் கோயில். இப்படி சிறிதாக ஏற்படுத்தப்பட்ட பல நூறு மாரியம்மன், முனீஸ்வரன், காளியம்மன் கோயில்கள் தற்சமயம் பெரிதாக்கப்பட்டு கும்பாபிஷேகங்கள் செய்யப்பட்டு பெரிய கோயில்களின் பட்டியலில் இடம்பெறும் நிகழ்வும் அவ்வப்போது மலேசியாவில் நிகழும் ஒன்றே.

18ம் நூற்றாண்டிலும் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் கெடா மானிலத்தில் ஆயிரக்கனக்கானத்  தமிழர்கள் தோட்டங்களில் பணிபுரிவதற்காகக் கப்பல்களில் கொண்டுவரப்பட்டனர். கூலிம், பாடாங் செராய், லூனாஸ், அலோர்ஸ்டார், போன்ற நகரங்களில் இப்படி வந்து குடியேறிய தமிழர்கள் படிப்படியாக தங்கள் தொழில் வாழ்க்கை என்பதை தோட்டங்களில் மட்டுமே என முடக்கிக் கொள்ளாமல் தங்கள் குழந்தைகளை படிக்க வைத்து  பலவகைத் தொழில்களில் ஈடுபடும் நிலையை ஏற்படுத்திக் கொண்டனர். பொருளாதார ரீதியில் தங்கள் வாழ்க்கையைப் பன்மடங்கு உயர்த்திக் கொண்டனர் இம்மக்கள். கூலி வேலைக்காக வந்து சேர்ந்த இம்மக்கள் பலரின் சந்ததியினர் தற்சமயம் பல்வேறு அரசாங்கப் பணிகளிலும், வணிகர்களாகவும், கல்விகற்று உயர் பதவிகள் வகிப்பவர்களாகவும் அமைந்திருப்பது தமிழர்கள் அனைவருக்குமே பெருமை சேர்க்கும் ஒரு விஷயம் தானே.

தொடரும்..


சுபா

Friday, June 28, 2013

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 24

24. கெடா உடைகள் - பாஜு மெலாயு கெடா

பெண்களுக்கான உடைகள் அது எந்த நாடாக இருந்தாலும் சரி அழகிய வர்ணங்களில்  அமைந்து கண்களைக் கவரும் வகையில் அமைந்திருப்பது பெண்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரு வரப்பிரசாதம் தான். அழகு என்றாலே பெண்கள்; அந்த  அழகுக்கு அழகு சேர்க்கும் உடைகளை  அமைக்க கற்பனைகளைச் செலுத்தி விதம் விதமாக  அமைத்து மகிழ  ஒவ்வொரு சமூகமும் மறப்பதில்லை.

இந்தியப் பெண்கள் அணியும் சேலைகளை எடுத்துக் கொண்டால் கைத்தறி சேலைகளிலேயே எந்தனை எத்தனை வகை? பட்டுச் சேலைகளில் பல வகை.. சிண்டேட்டிக் வகை சேலைகள்  என்றால் அவற்றிலும்  பல வகை. ஒவ்வொரு மானிலத்துக்கும் சிறப்பு சேர்க்கும் வகை சேலைகள்.. தமிழகத்தை எடுத்துக் கொண்டாலே ஒவ்வொரு பகுதிக்கும் சிறப்பு சேர்க்கும் வகையில் பல விதங்கள்.. சுங்குடி சேலை, செட்டி நாட்டு கைத்தறி, என விதம் விதமாகப் பெண்கள் ரசித்து வாங்கி அணிந்து மகிழ கிடைக்கின்றன.

மலாய் சமூகத்திலும் இம்மக்களின் உடை விஷயத்தில் இப்படி வேறுபாடுகளைப் பார்க்க முடியும். கிழக்கு மாகணங்களான திரெங்கானு, கிளந்தான் போன்ற வகை உடையிலிருந்து தெற்கு மாகாண உடைகளில் வேறு பாடு உண்டு. வடக்கு மாகாணங்களில் தனிச்சிறப்புடன் உடை அலங்காரம் பெண்களுக்கும் ஆண்களுக்கும் உண்டு. அந்த  வகையில் கெடா மானிலத்தின்  பெண்களுக்கான பாஜு மெலாயு தனி அழகு கொண்ட வடிவத்தில் அமைக்கப்படுவது.



பெண்களுக்கான பாஜு மெலாயு  இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கும். மேல் பகுதியில் அணியப்படும் பகுதியானது பாரம்பரிய மலாய் உடையிலிருந்து மாறுபட்டு சற்றே குட்டையாக அமைவது. பாரம்பரிய மலாய் உடையின் மேல் பகுதியானது சற்று இருக்கமான அமைப்பு கொண்ட வகையிலோ அல்லது தொள தொளவென்ற வகையிலோ அமைந்தாலும் அதன் நீளம் முட்டிக் கால் பகுதிக்கும் கீழே வரை செல்வதாக அமைந்திருக்கும்.

ஆனால் பாஜு மெலாயு கெடா  மேல்பகுதி குட்டையாக அடிப்படையில் சற்றே தென் தாய்லாந்து உடைபோல   அமைந்திருக்கும் . கழுத்துப் பகுதி வட்டமான அமைப்பிலும் கைப் பகுதி நீளமாக ஆனால் படத்தில் இருப்பது போல கைப்பகுதி வரை நீளாமல் அமைந்திருக்கும். இதனை கைத்தறி வகை, பாத்தேக் வகை, பட்டுத்துணி, சிந்தேட்டிக் வகை துணிகளைக் கொண்டு அமைப்பது வழக்கம். நெல் வயல்களில் பணிபுரியும் பெண்கள் பாத்தேக்கில் அமைந்த இந்த ஆடைகளை அணிந்து வயல்களில் பணி புரிவார்கள். அவர்கள் மேல் பகுதியில் குட்டையான இவ்வகையான  மேல்பகுதி ஆடை அணிந்து  கீழ்பகுதிக்குப் பாத்தேக்கில் அமைந்த சாரோங்கை அணிந்திருப்பார்கள். வெயில் காலத்தில் இவ்வகை துணிகளால் செய்யப்பட்ட ஆடை உடலுக்கு மிக சௌகரியமாக அமைந்திருக்கும்.

பாத்தேக் சாரோங் வகை வகையாக (கைலிகள்)

பாஜு மெலாயு கெடா தற்காலத்தில் மிக அழகிய வேலைப்பாடுகளுடன் அலுவலகங்களுக்குச் செல்லும் பெண்கள் விரும்பி அணியும் வகையிலும் அமைக்கின்றனர். நான் மலேசியாவில் இருந்த காலங்களிலும் இவ்வகையில் ஆடைகள் தைக்கச் செய்து அணிந்து அலுவலகம் செல்வதுண்டு.

ஆண்களுக்கான உடையோ பொதுவான மலாய் ஆடையை ஒத்ததாக இருக்கும். ஆண்களின் மலாய் ஆடைகள் மூன்று பகுதிகளில் அமைந்திருப்பவை. மேல் பகுதியில் மெல்லிய பருத்தித் துணியால் அமைந்த குர்தா போன்ற தொள தொள என்ற அமைப்பில் அமைந்த சட்டை, ஒரு கால்சட்டை என அமைந்து இடுப்பில் சாரோங் அல்லது ஒரு துண்டு போன்ற ஒரு துணியைக் கட்டிக் கொள்வார்கள்.


மலாய் பாரம்பரிய உடையில் ஒரு ஆண் குழந்தை

ஆனால் திருமணம் அல்லது ஏதேனும் சிறப்பு வைபவங்கள் என வரும் போது பட்டுத் துணிகளில் இவ்வகையான ஆடைகளைத் தயாரித்து உடுத்துவதே வழக்கம். இப்போதெல்லாம் மணிகள் இணைத்து விதம் விதமாக அழகு செய்து இந்த  உடைகளைத் தயாரிக்கின்றார்கள். ஆண்கள் பிரத்தியேகமாக கோட் போன்ற ஒன்றினை வெல்வெட் துணியில் தங்க நிறத்திலான மலர் வடிவங்களை கழுத்துப் பகுதி கை பகுதிகளில் இணைத்துத் தைத்து இந்த ஆடைக்கு மேலே போட்டுக் கொள்வர். கீழ்காணும் படத்தில் ஒரு இளைஞன் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்ட ஒரு மலாய் பாரம்பரிய உடையை அணிந்திருப்பதையும் ஒரு இளம்பெண் கெடா மானிலத்திற்கானப் பிரத்தியேகமான பாஜு மலாயு அணிந்திருப்பதையும் காணலாம்.




ஆண்கள் இவ்வகை ஆடைகளைப் பணிபுரியும் இடங்களுக்கு அணிந்து செல்வதில்லை. இல்லங்களில் ஓய்வாக இருக்கும் போதும், சமய விழாக்களின் போதும், தொழுகை செல்லும் போதும் குடும்ப விழாக்களின் போதும் பாஜு மெலாயு அணிகின்றனர். காலம் மாறிக் கொண்டிருந்தாலும் கூட மலாய் ஆண்களும் பெண்களும் ஆடை விஷயத்தில் தங்கள் உடைகளை மறக்கவில்லை. தங்களின் பாரம்பரிய உடைகளை அவர்கள் தவறாமல் அணிகின்றார்கள். ஆனால் அவை முன்பிருந்த  வகை மாடல்களிலிருந்து மாறி காலத்தின் தேவைக்கேற்ப அழகியல் விஷயங்களை உள்ளடக்கியதாக அமைந்து இருக்கின்றன.

தொடரும்..

சுபா

Sunday, June 23, 2013

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 23

கெடா மானிலம்

இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அரசியல் செய்திகளைக் கடந்த இரண்டு பதிவுகள் வழங்குவதாக அமைந்திருந்தன. இந்தப் பதிவில் சுதந்திரத்திற்குப் பின் இந்த மானிலம்  எவ்வகையில்அமைக்கப்பட்டது, அதன் தற்போதைய அரசியல் பொருளாதார நிலை போன்ற விஷயங்களை  வழங்கலாம் என  நினைக்கின்றேன்.

மலேசிய சுதந்திரத்திற்கு முன்னரே பினாங்கு கெடாவின் ஒரு பகுதி என்ற நிலையிலிருந்து பிரிந்து தனி மானிலமாகி விட்டது. கெடாவை சார்ந்து அமைந்ததாக பெர்லிஸ் மானிலம் வடக்குப் பகுதியில் உள்ளது. கிழக்குப் பகுதியில் பெருமளவு தாய்லாந்து நாட்டினை எல்லையாக இந்த மானிலம் கொண்டுள்ளது. தெற்குப் பகுதியில் பேராக் மானிலமும் பினாங்கு மானிலமும் எல்லையாக அமைந்திருக்கின்றன.

சுற்றுலா பயணிகளுக்குச் சுவர்க்கபுரியாகத் திகழும் லங்காவித் தீவும் அதனை ஒட்டி அமைந்திருக்கும் 99 தீவுகளும் கெடா மானிலத்தைச் சேர்ந்தவையே.



கெடா மானிலக் கொடி மிக எளிமையான அமைப்பில் சிவப்பு நிறத்தில் அமைந்தது. சிவப்பு நிறம் இம்மானிலத்தின் பாரம்பரிய வர்ணம். அத்துடன் வளத்தையும் செழிப்பையும் குறிக்கும் வர்ணம் என்பதாக அமைவதால் இந்த வர்ணமே கொடியின் நிறமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. மன்னரின் அதிகாரத்தைக் காட்டும் மஞ்சள் நிற பட்டயமும்,  இஸ்லாமிய மதமே அதிகாரப்பூர்வ மதம் என்பதைக் குறிக்கும் பச்சை நிறத்திலமைந்த இளம் பிறையும், நெல் பயிர் இம்மானிலத்தின் பிரதான பொருளாதாரச் சின்னமாக இருப்பதால் நெல்கதிர்களும் கொடியின் சின்னத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றன.

மக்கள் தொகையைப் பொருத்த அளவில் மலேசிய மானிலங்களில்   1,890,098 மக்கள் எண்ணிக்கையுடன்   எட்டாவதாக இம்மானிலம் இடம்பிடிக்கின்றது. மலாம், சீன, இந்திய, தாய்லாந்து  எனப் பல இன மக்கள் கலந்து வாழும் ஒரு மானிலம் இது. 2010ம் ஆண்டின் கணக்கின் படி 77.2% இஸ்லாமியர்களும், 14.2% புத்த மதத்தினரும், 6.7% இந்து மதத்தினரும், 0.8% கிறிஸ்துவ மதத்தினரும் என்ற வகையில் மக்கள் மதச் சார்பு அமைந்திருக்கின்றது.

மன்னராட்சி என்பது மானிலத்தின் தலைவர் என்ற வகையிலும் மானிலத்தின் இஸ்லாமிய மதத் தலைவர் என்ற வகையிலும்  மட்டுமே அமைகின்றது. மானில அரசு என்று தனியாக அமைந்து மானில முதலமைச்சர் அவரைச் சார்ந்த அமைச்சு என மக்களாட்சி சட்டப்பூர்வமாக 1950ம் ஆண்டே நிர்ணயிக்கப்பட்டு சுதந்திரத்தின் போது அதாவது 1957ல் இது வழக்கில் அமைந்தது.மானிலத்தின் ஆட்சி முறையாக நடைபெறும் பொருட்டு 12 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அந்த 12 வட்டாரங்களாவன பாலிங், பண்டார் பஹாரு, கோதா  ஸ்டார், குவாலா மூடா, கூபாங் பாசு, கூலிம், லங்காவித்தீவு, பாடாங் தெராப், பெண்டாங், பொக்கோக் செனா, சிக், யான் ஆகிய வட்டாரங்களாகும்.

இம்மானிலத்தின் பொருளாதாரம் எனப் பார்க்கும் போது நெற்பயிரிடுதலே பிரதான வருவாய் தரும் பொருளாதாரக் காரணியாக அமைகின்றது. இம்மானிலத்திற்கு என்று இல்லாமல் மலேசியா முழுமைக்குமே இம்மானிலத்தில் விளைகின்ற அரிசி, வினியோகம் செய்யபப்டுகின்றது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்து அமைந்திருப்பதால் கெடா  மலேசியாவின் அரிசிப்பாத்திரம் (Jelapang Padi - Rice Bowl)  என்றும் குறிப்பிடப்படுகின்றது.



இதற்கு அடுத்ததாக சுற்றுலா துறையைக் குறிப்பிடலாம். உலகம் முழுமையிலிருந்தும்  பிரத்தியேகமாக லங்காவித்தீவிற்குச்  சுற்றுலா நிமித்தம் வந்து கூடும் மக்களின் எண்ணிக்கை வருடா வருடம் அதிகரித்துக் கொண்டுதானிருக்கின்றது. இதனைத் தவிர்த்து தொழிற்சாலைகள், வணிகம் என்ற வகையிலும் இம்மானிலத்தின் பொருளாதார நிலை அமைந்திருக்கின்றது.

கெடா மானிலத்தில் உலகத் தரம் வாய்ந்த சில பல்கலைக்கழகங்கள் கடந்த 30 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றோடு போலி டெக்னிக், தனியார் பள்ளிகள் என்பனவும் இங்கு அமைந்திருக்கின்றன. அரசாங்கப் பள்ளிகள் இங்கு ஆரம்பப்பள்ளி,  தொடக்கப்பள்ளி என்ற நிலையில் அமைந்திருக்கின்றன. மலேசியாவைப் பொருத்த வரை அனைவருக்கும் கட்டாயக் கல்வி என்பது சட்டமாக்கப்பட்டுள்ளது. ஆரம்பப்பள்ளி என்ற நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மலாய், சீன அல்லது தமிழ் ஆரம்பப்பள்ளிகளுக்கு 6 ஆண்டுகால அடிப்படைக் கல்விக்கு தாங்கள் விரும்பும் பள்ளிகளுக்கு அனுப்ப சுதந்திரம் இருக்கின்றது. அந்த வகையில் ஆரம்பப்பள்ளியில் படிக்கும் குழந்தைகள் தங்கள் தாய்மொழியில் கல்வி கற்று பின்னர் இடைநிலைப்பள்ளிக்குச் செல்கையில் மலாய் மொழியில் முழுதும் அமைந்த கல்விக்குச் செல்கின்றனர்.

பொதுப் போக்குவரத்து எனும் போது வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை இந்த மானிலத்திற்கு வருவதற்கான சிறந்த சாலை வசதியை வழங்குகின்றது. மானிலம் முழுமைக்குமே தரமான சாலைகள் அமைந்திருக்கின்றன.  இந்த மானிலத்திற்கென்று பிரத்தியேகமாக ஒரு விமான நிலையம் இல்லை. பினாங்கு மானிலத்தில் அமைந்திருக்கும் அனைத்துலக விமான நிலையமே இந்த  மானிலத்திற்கான விமான போக்குவரத்திற்கான பயன்பாட்டிற்கும் அமைகின்றது.


தொடரும்...
சுபா

Thursday, June 20, 2013

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 22

கெடா - மன்னராட்சி காலத்தில்

பூஜாங் பள்ளத்தாக்கு பற்றி குறிப்பிட்டு கடாரத்தில் சோழர்களின் ஆட்சி பற்றியும் சில குறிப்புக்களை முந்தைய பதிவில் அளித்திருந்தேன். இந்தப் பதிவில் கெடா மானிலத்தைப் பற்றிய பொதுவான சில தகவல்களை வழங்குவதும் அவசியம் எனக் கருதுகின்றேன்.

கெடா மானிலத்தைப் பற்றிய குறிப்புக்களைப்  பதிய ஆரம்பித்த முதல் பதிவில் தற்சமயம் மலேசியாவின் மன்னராக முடிசூடிக்கொண்டிருப்பவர் கெடா மானிலத்தின் சுல்தான் என்ற விஷயத்தைக் குறிப்பிட்டிருந்தேன். மலேசிய மன்னர்கள் தேர்வு பற்றி  பலர் அறியாதிருக்கலாம்.

மலேசியாவில் உள்ள மொத்தம் 13 மானிலங்களில் 9 மானிலங்களில் மட்டுமே சுல்தான்கள் ஆட்சி இருக்கின்றது. மலாயாவிற்கு 15ம் நூற்றாண்டு அதன் பின்னர் போர்த்துக்கீஸியர்கள், ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்னர், அதாவது 14ம் நூற்றாண்டு வரை  இந்த ஒன்பது மானிலங்களிலும் மன்னர் ஆட்சியே இருந்தது. ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் மன்னராட்சி தான் என்றாலும் கூட ஐரோப்பியர் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கிய பின்னர் மன்னராட்சியின் ஆதிக்கம் குறைந்து வந்தது. அச்சமயத்தில் இப்போது தனி மானிலமாக இருக்கும் பினாங்கு கெடாவின் ஒரு பகுதியாக இருந்தது. இப்படி ஒன்பது மன்னர்கள் ஆட்சி செய்து வந்த மானிலங்களை எல்லாம் ஒன்றாக இணைத்து ஒரே மலேசியா என்ற ஒரு குடைக்குள் வைப்பது என முடிவான போது இந்த  ஒன்பது சுல்தான்களும் 5 ஆண்டு தவணை என்ற வகையில் சுற்றின் அடிப்படையில் மலேசியாவின் மன்னராக தேர்ந்தெடுக்கப்படும் வகையில் அரசியல் சாசனம் எழுதி வைத்தனர். அந்த வகையில் தற்சமயம் மலேசியாவின் மன்னராக இருப்பவர் கெடா மானிலத்தின் அரச பரம்பரையைச் சேர்ந்த சுல்தானே.

இம்மானிலத்தின் தற்போதைய அரச பரம்பரைச் செய்திகளைச் சொல்வது மெரோங் மஹாவம்சா காவியம். (Hikayat Merong Mahawangsa). இக்காவியத்தின் குறிப்புக்களின் படி கி.பி.1146ம் வருடம் இந்த அரச பரம்பரையைத் தோற்றுவித்தவர் ஒரு ஹிந்து மன்னரான மெரோங் மஹாவம்சா. இந்த மன்னரின் முழுப் பெயர் ப்ரா ஓங் மஹாவங்சா. பின்னர் இவர் இஸ்லாமிய மதத்தைத் தழுவி தன் பெயரை சுல்தான் முஸாபர் ஷா என மாற்றிக் கொண்டார்.


ராஜேந்திர சோழனின் படைத்தலைவன் பீமசேனனின் படைகள் கடாரத்தின் கோட்டையைத் தாக்கி கைப்பற்றி சோழ ஆட்சியை இங்கு தொடக்கினர். அப்போர் காட்சி ஓவியமாக.

சோழ மன்னர்களின் ஆட்சி ராஜேந்திர சோழன் கடாரத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்த காலம் தொடங்கி ஏறக்குறைய 90 ஆண்டுகள் இப்பகுதியில் நீடித்திருந்தது. ஆக அவ்வாட்சியின் இறுதி காலகட்டத்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களின் விளைவாக உருவான ஒரு புது மன்னராட்சியில் அதன் தலைவரான ப்ரா ஓங் மஹாவங்சா தனது ஆட்சியை நிறுவியிருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.

ப்ரா ஓங் மஹாராஜா மன்னராக மூடிசூடிக் கொண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஆட்சி செய்த மன்னர்களின் பெயர்கள் இந்திய தாக்கம் கொண்ட பெயர்களாகவே அமைந்திருக்கும். கெடா அரசர்களின் பெயர்களை விளக்கும் விக்கி பகுதியில் உள்ள தகவலின் படி இந்த கீழ்க்காணும் பட்டியல்  அமைகின்றது.


  • ஸ்ரீ படுக்கா மஹாராஜா டர்பார் ராஜா 1(கி.பி 630 வாக்கில்)
  • ஸ்ரீ படுக்கா மஹாராஜா டிராஜா புட்ரா
  • ஸ்ரீ படுக்கா மஹாராஜா மஹாதேவா 1
  • ஸ்ரீ படுக்கா மஹாராஜா கர்ணாதிராஜா
  • ஸ்ரீ படுக்கா மஹாராஜா  கர்மா
  • ஸ்ரீ படுக்கா மஹாராஜா மஹாதேவா 2
  • ஸ்ரீ படுக்கா மஹாராஜா தர்மராஜா
  • ஸ்ரீ படுக்கா மஹாராஜா மஹாஜீவா
  • ஸ்ரீ படுக்கா மஹாராஜா டர்பார் ராஜா 2 (இவருக்குப் பின்னர் ப்ரா ஓங் மஹாராஜா பரம்பரையினர் ஆட்சி தொடங்குகின்றது) இந்த மன்னர் காலம் வரை கடாரம் ஒரு ஹிந்து புத்த மதத்தை முதன்மையாகக் கொண்டிருந்த ஒரு பகுதியே என்பதில் சந்தேகமில்லை.

நன்றி: http://en.wikipedia.org/wiki/Kedah_Sultanate

தொடரும்..

சுபா

Saturday, June 15, 2013

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 21

21. பூஜாங் பள்ளத்தாக்கு

தென் தாய்லாந்து தொடங்கி கீழே தெற்கில் ஜாவா சுமத்ரா என அனைத்து இந்தோனீசிய தீவுகளையும் ஸ்ரீவிஜய பேரரசு ஆட்சி செய்து கொண்டிருந்த சமயம் அது. புத்த  மதமும் ஹிந்து மதமும் பிரதான மதங்களாக அமைந்து இந்த நிலப்பரப்பில் ஆங்காங்கே புத்த விகாரைகளும் சிவ விஷ்ணு தெய்வங்களின் ஆலயங்களும் பரவி இருந்தன. தென்னிந்தியாவில் ராஜராஜ சோழனின் ஆட்சி செழிப்புடன் இருக்க, பல போர்களில் தொடர்ந்து வெற்றி பெற்று சோழ ராஜ்யத்தின் பரப்பு விரிந்து வளர்ந்து கொண்டே வந்த சமயம் அது.

ஸ்ரீ விஜய சாம்ராஜ்ஜியத்தின் பேரரசுக்கும் ராஜராஜசோழனின் சோழப் பேரரசிற்கும் நல்ல இணக்கமான உறவு இருந்து வந்தது. ராஜராஜனின்  நோக்கமானது பிற நாடுகளை கைப்பற்றி தம் ஆளுமைக்கு கொண்டு வரவேண்டும் என்பதாக மட்டும் அமைந்து விடவில்லை. மாறாக தென்கிழக்கு ஆசியாவில் இருந்த  ஏனைய நாடுகளின் அரசுகளோடு நல்ல இணக்கமான நட்புறவையும் வளர்த்து வர வேண்டும் என்ற வகையில் இந்த அரசியல் நிலைத்தன்மை அமைந்திருந்தது.இதற்கு ஒரு நல்ல சான்றாக ஆனைமங்கலம் பகுதியில் ராஜராஜன் ஸ்ரீ விஜய பேரரசின்  மன்னனுக்கு பரிசாக அமைத்த  புத்த விகாரையைக் குறிப்பிடலாம்.

ஆனால் இந்த நட்பு நிலை அப்படியே தொடரவில்லை. ராஜராஜன் காலத்திலேயே  கி.பி1007ல் சோழர்களின் போர்க்கப்பல் கடாரத்திற்கு வந்தமையை வரலாற்று நூல்களில் காண்கின்றோம். (Paul Michel Munoz - Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula) இது போர்செய்து கடாரத்தைக் கைப்பற்ற நிகழ்த்திய முயற்சியா என்பது வரலாற்றாசிரியர்களிடம் இன்னமும் தெளிவு பெறாத ஒரு தகவல் தான் என்றாலும் போர்க்கப்பல் கடாரத்திற்கு வந்ததற்கான சான்றுகள் ராஜராஜேஸ்வரத்தில் உள்ள கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன.

நன்றி - விக்கிபீடியா

ராஜராஜனுக்குப் பிறகு முடிசூட்டப்பெற்ற ராஜேந்திர சோழன் கடாரம் கொண்டான் என்ற பெயருடனே அழைக்கும் தகுதி பெற்றவன். ராஜராஜேச்சுரத்தில் உள்ள கல்வெட்டில் கிபி1025ம் ஆண்டு பொறிக்கப்பட்ட கல்வெட்டில் ஸ்ரீவிஜய பேரரசின் முக்கியப் பகுதிகள் சோழ மன்னனின் ஆட்சிக்கு வந்தமைப் பற்றிய குறிப்புக்கள்  உள்ளன. அந்த வகையில் ஸ்ரீவிஜய பேரரசின் வடக்கு பெரும் நகரமாகத் திகழ்ந்த கடாரம், தெற்கில் பலேம்பாங், லங்காசுக்கா, ஜாம்பி, பானல் ஆகிய நகரங்கள் இந்த முழு ராஜ்ஜியமும் ராஜேந்திர சோழன் ஆளுமைக்குக் கீழ் வந்தமையைச் சான்று கூறி நிற்கின்றன.

நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கின்றது. இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி ஒரு மாபெரும் படையை வைத்துக் கொண்டு கிழக்காசிய பெரும் வணிகப் போக்குவரத்துப் பகுதியை ஆக்ரமித்து தம் ஆளுமைக்குக் கீழ்படுத்தி வைக்கும் அளவிற்கு பலம் பொருந்திய ஒரு பேரரசாக ராஜேந்திர சோழனின் அரசு திகழ்ந்தது.  அது இன்னமும் தொடர்ந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் மனதில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. தமிழர் ஆட்சி, தமிழ் பேசும் மக்கள், ஹிந்து பௌத்த ஆலயங்கள்  என மனம் கற்பனை செய்து பார்க்கவும் தவிரவில்லை. ஆனால் வரலாறு எப்போதும் எல்லாம் ஒரே வகையில் அமைந்திருக்காது என்பதை அவ்வப்போது நமக்கு நினைவுருத்திக் கொண்டுதானே இருக்கின்றது. ராஜேந்திர சோழன்  காலத்திலும் அவனுக்கு முந்திய கால கட்டத்திலும் ஸ்ரீ விஜய சாம்ராஜ்ஜியமும் இப்பகுதி மக்களும் ஹிந்து மத பௌத்த மதத்தை பின்பற்றி இருந்தவர்கள் என்பதால் இங்கே ஆங்காங்கே பல கோயில்கள் இருந்தமையை இன்றும் காணமுடிகின்றது. ஆனால் இந்தோனீசியாவில் இன்றளவும் பரவலாக தென்படும் ஆலயங்கள் போல மலேசிய நாட்டில் இப்பழங்  கோயில்கள் பாதுகாக்கப்படவில்லை என்பது உண்மை.

இன்றைக்கு 700 ஆண்டுகளுக்கு முன் தென்கிழக்காசிய பகுதிகளுக்குக் குறிப்பாக கடாரப் பகுதிக்கு அரேபிய இஸ்லாமிய வருகை அதன் பின்னர் படிப்படியாக இப்பகுதி முழுமையும் இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்டு ஏனைய கலாச்சார பண்பாட்டு விஷயங்கள் படிப்படியாக குறைந்து மறைந்து போய் விட்ட நிலையை காண்கின்றோம்.

கடாரம் என்ற பெயர்கொண்டிருந்த நகரம் படிப்படியாக கெடா என்ற பெயர் மாற்றமும் பெற்றமையும் இந்த மாற்றங்களில் ஒன்றாகவே அமைகின்றது. ஆனால் கடாரத்தை நினைவு படுத்தும் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாக கெடா மானிலத்தின் பூஜாங் பள்ளத்தாக்கு அமைகின்றது. இந்த பூஜாங் பள்ளத்தாக்கு பற்றி நான் எழுதிய ஒரு கட்டுரை மரபுவிக்கியில் இங்கே உள்ளது.

பினாங்கு எனக்கு எவ்வளவு பரிச்சயமோ அதே அளவிற்கு கெடாவும் எனச் சொல்லலாம். பலமுறை கெடாவில் உள்ள பல பகுதிகளுக்குச் சென்று வந்திருக்கின்றேன். எனது ஒவ்வொரு முறை மலேசியாவிற்கான பயணங்களிலும் கெடாவிற்குச் செல்வது தவிர்க்கமுடியாத ஒரு விஷயமாகிவிட்டது.

பூஜாங் பள்ளத்தாக்குப் பகுதியில் கெடாவின் ஆற்றங்கரைப் பகுதிகளில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட கோயில்களை பெயர்த்துஎடுத்து மிக ழகாக அதனைத் தனித்தனியாக அமைத்து பார்வைக்கு வைத்திருக்கின்றார்கள். இப்பகுதியில் முதலில் வருவது ஒரு அருங்காட்சியகம். மிகச் சிறப்பாக ஆங்கிலேயர் காலத்திலேயே அமைக்கப்பட்ட அருங்காட்சியகம் இது. சுற்றுச் சூழலே மனதைக் கவரும் வகையில் மிக ரம்மியமாக மைந்த ஒரு மலைப்பகுதியில் பூஜாங் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. ஜெராய் மலைப்பகுதி இதற்குமிக அருகாமையில் இருப்பதால் பசுமைக்குக் குறைவேதும் இல்லை.

மலேசியா செல்பவர்கள் அதிலும் கெடா செல்பவர்கள் தவிர்க்காமல் இப்பகுதிக்குச் சென்று வரவேண்டியது அவசியம்.














தொடரும்...
சுபா

Friday, June 7, 2013

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 20

20. மஹாதீர்



மலேசிய சுதந்திரம் பற்றியும் துங்கு அப்துல் ரஹ்மான் பற்றியும் முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். 1957க்கு முந்தைய சில ஆரசியல் நிகழ்வுகளையும் துங்கு அப்துல் ரஹ்மான் வாழ்க்கையோடு தொடர்பு படுத்தி அமைந்த அரசியல் விஷயங்களையும் அப்பதிவில் குறிப்பிட்டிருந்தேன். மலேசியாவின் சுதந்திரத்திற்குப் பின்னர் மலேசியாவின் வளர்ச்சி மிக துரிதமாக அமைந்தது. அதில் முக்கியப் பங்கு வகித்த ஒருபிரதம மந்திரியாக டாக்டர்.மஹாதீர் முகமது அவர்களே  விளங்குகின்றார்கள். இந்தப் பதிவு துன் டாக்டர்.மஹாதீர் முகமது பற்றியதாக அமைகின்றது. அதற்குச் சிறப்புக் காரணம் இவரும் கெடா மானிலத்தின் மண்ணின் மைந்தர் என்பதே.


சுதந்திர மலேசியாவில் 22 வருடங்கள் தொடர்ந்து பிரதம மந்திரி பதவியைத்  தக்க வைத்துக் கொண்ட பெருமை இவரையே சேரும். 1981 தொடங்கி 2003ம் ஆண்டு வரை இவர் மலேசியாவின் பிரதம மந்திரியாகப் பதிவி  வகித்தார். அதற்குப் பின்னரும் தொடர்ந்து அம்னோவில் அங்கத்தினராக  இருந்து வருகின்றார். உலக அரங்கில் பல்வேறு அரசியல் விஷயங்களைத் தயக்கமின்றி பேசி புகழ்பெற்றவர் இவர் என்பது மலேசிய மக்கள் அறிந்த விஷயமே.

கெடாவின் தலைநகரான அலோர் ஸ்டாரில் 1925ம் ஆண்டு  ஜூலை 10ம் தேதி பிறந்தவர் இவர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்.
இவரது தந்தையார்  இந்திய மலையாள, மலாய் இனக்கலப்பு; தாயார் மலாய் இனத்துப் பெண். இப்படிப்பட்ட  இனக்கலப்புக்களை மலேசிய சூழலில் அடிக்கடி காணலாம். நல்ல முறையில் ஆங்கிலமும் கற்று பின்னர் சிங்கப்பூரில் தனது மருத்துவப் பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்து மருத்துவராகப் பணியாற்றியவர் இவர்.



இவரது துணைவியார் சித்தி ஹஸ்மா முகமது அலி அவர்கள் அழகும் அறிவும் நிறைந்தவர். மஹாதீர் படித்த அதே பல்கலைக்கழகத்தில் படித்து  பட்டம் பெற்று மருத்துவராகப் பணிபுரிந்தவர் இவர். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உண்டு. இவரது மூத்த மகள் மரீனா மஹாதீர் சமூக நல எழுத்தாளர்.  மலேசியாவில் பல தன்னார்வல சங்கங்களில் குறிப்பாக எய்ட்ஸ் ஒழிப்பு நிறுவனத்தில் தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருபவர்.

துன் டாக்டர் மஹாதீர் முகமது அவர்கள் ஜப்பானிய படைகள் தோல்வி கண்டு அன்றைய மலாயாவிலிருந்து வெளியேறிய சமயம் தொடங்கி அரசியலில் ஈடுபாட்டுடன் இருந்து வந்தார். 1964 முதல் அம்னோ கட்சியில் தீவிர அங்கத்துவம் வகித்து படிப்படியாக வளர்ந்து 1981ம் ஆண்டு நாட்டின் முதலமைச்சர் பதவியைப் பெற்றார். ஐந்து முறை தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து முதலமைச்சராகப் பதிவி வகித்தவர் இவர்.

ஒரு வகையில் மலாய் இனத்து மக்களின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர் இவர் என்று சொன்னால்  அது மிகையாகாது. இது மற்ற இனமக்களுக்குப் பாதிப்பினைத் தரத்தவறவில்லை. சுதந்திர மலேசியாவில் பல்வேறு வேலை வாய்ப்புக்களும் சலுகைகளும் தொடர்ந்து மலாய் இன மக்களுக்கே என்ற  வகையில் அமைந்திருக்கும் நிலை அன்று தொடங்கி இன்று வரை இருப்பது. கல்விக்கூடங்களில் இடமாகட்டும், அரசாங்கப் பணியாகட்டும், சொத்துக்கள் வாங்குவதில் முன்னுரிமையாகட்டும்; அனைத்திலும் மலாய் இனத்து மக்களுக்குச் சலுகைகள் என்பதை சட்ட ரீதியில் வலுவாக்கி தொடர்ந்து இவரது ஆட்சியில் செயல்முறைப்படுத்தப்பட்டு வந்தது. அது இன்றும் தொடர்கின்றது.

மஹாதீரின் அதிரடி  நடவடிக்கைகள் என்றால் பொருளாதாரக் கொள்கைகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். மலேசிய மக்களுக்கு உள்ளூர் தயாரிப்பாக  சொந்தக் கார் உற்பத்தி இடம்பெற வேண்டும் என முடிவெடுத்து ஜப்பானின் மிட்ஷுபிஷி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து உள்ளூர் தயாரிப்பாக ப்ரோட்டோன் காரை உள்ளூரிலேயே உருவாக்கி உற்பத்தி செய்யும் திட்டம் இவரது ஆட்சி காலத்தில் அறிமுகத்திற்கு வந்தது.  உள்ளூர் கார் தயாரிப்பு ஆரம்பத்தில் புகழ் பெறவில்லையென்றாலும் சில ஆண்டுகளில் மிகப் பிரபலமடைந்தது. இப்போதும் ப்ரோட்டோன் சாகா, வீரா, ஈஸ்வரா என் வெவ்வேறு தயாரிப்புக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.



இது மட்டுமன்றி free trade zone  எனும் திறந்த மய பொருளாதார வர்த்தக முயற்சிகளை   அறிமுகப்படுத்தி அதன்  வழி சர்வதேச தொழில் நிறுவனங்கள்  மலேசியாவில் நிறுவனங்கள் அமைத்து தொழில் நடத்த அனுமதி வழங்கியதோடு மிக கவர்ச்சிகரமான வருமானவரி  சலுகைகளையும் இந்த நிறுவனங்களுக்கு வழங்கி ஊக்குவித்ததும்  இவரது முயற்சிகளில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒன்று  எனலாம். இதனால் லட்சக்கணக்கான மக்கள் தொழில் வாய்ப்பை பெற்றனர் என்பதுவும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். கிராமப்புறத்து ஆண்களும் பெண்களும் சர்வதேச தொழிற்சாலைகளில் பல்வேறு வகை தொழில்களில் ஈடுபடும் வாய்ப்பும் இதனால் அமைந்தது.

அதோடு மலேசியாவில் சாலை போக்குவரத்து , நெடுஞ்சாலை என அடிப்படை தேவைகளை இன்றைக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே திட்டமிட்டு செயல்படுத்தியவர் இவர். மலேசிய இந்தியர் காங்கிரசின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த டத்தோ சாமிவேலு அவர்கள்  மஹாதீர் ஆட்சிகாலத்தில் பல ஆண்டுகள் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். அ[ப்போது இவர்கள்  இருவர் திட்டத்தில் அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகள் தாம் இப்போது பயன்பாட்டில் இருப்பவை. உலகத்தரம் வாய்ந்த நெடுஞ்சாலைகள் இவை. கொரிய தொழில்நுட்பத்தைப்  பயன்படுத்தி  நெடுஞ்சாலைகள் மலேசியா முழுமைக்கும் அமைக்கப்பட்டன. இது மிகப் பாராட்டப்பட வேண்டிய  ஒரு செயல் என்பதில் ஐயமில்லை.



மஹாதீரின் அரசியல் ஆளுமையை எளிதாக விவரித்து விட முடியாது. அவர் ஒரு கைதேர்ந்த அரசியல் தலைவர். சில  உடல் நலக் குறைவுகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட தொடர்ந்து இவர் அரசியல் ஆலோசகராக அம்னோவில் இன்றும்  செயல்பட்டு வருகின்றார்.

மஹாதீர் கெடா மானிலத்திற்கு மட்டுமல்லாமல்  மலேசியாவிற்கும் பெருமை சேர்க்கும் ஒருவர் இவர் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

தொடரும்...

சுபா