Friday, January 10, 2014

மலேசியா - காட்சியில் அறிமுகம் - 20

லிட்டல் இந்தியா



படத்தில் நாம் காண்பது குவாலம்பூரின் ப்ரீக்ஃபீல்ட்ஸ் சாலையில் அமைந்திருக்கும் லிட்டல் இந்தியா வர்த்தகப் பகுதி.  விரிவாக்கப்பட்ட சாலைகளின் மேல் கோலம் தீட்டப்பட்டும் சாலையின் ஓரங்களில் கோயில் மதில் சுவர் போன்ற அமைப்பினை அமைத்தும் இங்கு அழகு படுத்தியிருக்கின்றனர். இங்கே அமைந்திருக்கும் கடைகளுக்குச் சென்றால் ஒன்றும் வாங்காமல் வர முடியாது. தமிழர்கள் பயன்படுத்தும் எல்லா விதமான பொருட்களும் கிடைப்பதோடு நல்ல உணவகங்கள் பல அமைந்த பகுதி இது.

சுபா

Thursday, January 9, 2014

மலேசியா - காட்சியில் அறிமுகம் - 19

மலேசியக் குரங்குகள்



ஆசிய நாடுகள் பலவற்றிலும் குரங்குகள் காடுகளில் திரிவதை பலரும் பார்த்திருக்கின்றோம். மலேசிய குரங்குகளுக்கு என்ன தனிச் சிறப்பு என்று கேட்க வேண்டாம். மலேசியாவில் இந்தப் புகைப்படம் எடுத்ததால் இது மலேசியக் குரங்கு. அவ்வளவே. :-)

இது பத்து மலை கோயில் கீழ் பகுதியில் பதிவு செய்யப்பட்ட படம். தூங்கும் தன் குட்டியை ஒரு கையால் அரவணைத்துக் கொண்டு எதையோ பார்க்கும் பார்வை அழகு. குரங்குக் குட்டியின் தலை மயிர் சிறு மனித குழந்தையின் தலைமயிரை ஒத்ததாகவே எனக்குத் தெரிகின்றது. தாயின் அனைப்பில் கவலையின்றி தூங்கும் குட்டி தன் தூக்கத்திலும் கூட தன் தாயை இறுக்கி கட்டிக் கொண்டேதான் இருக்கும்.

மலைப்பகுதிகளில் அமைந்திருக்கும் கோயில்களில் காணப்படும் குரங்குகளுக்கு பக்தர்கள் நிச்சயம் தனக்கு ஏதாவது உணவுகளைக் கொடுப்பார்கள் என்று நன்கு தெரியும். வாழைப்பழம் தேங்காய், பாக்கு  உலர்ந்த திராட்சை பழங்களை தேடிக் கொண்டு கோயிலில் பூஜை செய்து விட்டு வரும் பக்தர்களின் வருகைக்காக இவை கூட்டமாக காத்துக் கொண்டிருக்கும். சில நேரங்களில் நம் கைகளில் பழங்கள் தென்பட்டால் வந்து பிடிங்கிச் செல்லவும் இவை தயங்காது.

சுபா

Monday, January 6, 2014

மலேசியா - காட்சியில் அறிமுகம் - 18

மலாக்கா நகர ரிக்‌ஷா வண்டி



மலேசியாவின் வரலாற்று சிறப்பு மிக்க நகரங்களில் மலாக்கா முதல் இடம் பெறுவது. இங்கு போர்த்துக்கீஸியர்கள் காலத்து கட்டிடங்களும் மலாக்கா ஆறும் அதனை ஒட்டி அமைந்த வரிசையான கட்டிடங்களும் சுற்றுப்பயணிகளின் கவனத்தை ஈர்ப்பன.  சுற்றுப்பயணிகள் அமர்ந்து நகரை வலம் வர உதவும் வகையில் நகரின் மையப் பகுதியில் ரிக்‌ஷாக்கள் இயங்குகின்றன. இந்த ரிக்‌ஷா வண்டிகளை அலங்கரித்திருக்கும் விதம் நம் கவனத்தை ஈர்க்கத் தவறுவதில்லை. ப்ளாஸ்டிக் மலர்களையும் அலங்காரப் பொருட்களையும் கொண்டு ரிக்‌ஷா வண்டிக் காரர்கள் தங்கல் வண்டிகளை தங்கள் விருப்பத்திற்கேற்ப வடிவமைத்திருப்பர். இங்கு நாம் இப்படத்தில் காண்பதும் அத்தகைய ஒரு ரிக்‌ஷா வண்டி தான்.

சுபா

Sunday, January 5, 2014

மலேசியா - காட்சியில் அறிமுகம் - 17



மலாய் காலை உணவு பலகாரங்கள்

படத்தில் நாம் காண்பது மலேசிய நாட்டில் காலை உணவில் இடம் பெறும் பலகாரங்களில் சில வகை.
Kuih Muih என்பது மலாய் மொழியில் பலகாரங்களைக் குறிப்பிடச் சொல்லப்படும் சொல். மலேசிய காலைப் பலகாரங்கள் கண்களைக் கவரும் வர்ணங்களினாலானவை என்பது மட்டுமல்லாமல் சுவையில் அபாரமானவை. கரிப்பாப், குவே லாப்பீஸ், பேங்காங், நாசி லெமாக், புரு மயோங், என ஒரு நீள பட்டியலே இடலாம்.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிச் சுவை கொண்டவை.

பெரும்பாலும் மலேசிய பலகாரங்களான இவை காலை உணவிலும் மாலை நேர தேனீர் மேசையிலும் இடம்பெறுபவை. பெறும்பாலானவை கோதுமை மாவு, மரவள்ளிக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு மாவு, சர்க்கரை, தேங்காய், அரிசி என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டவை.

சுபா