கேமரன் ஹைலேண்ட்ஸ் ஆதிவாசிகள்
மலேசிய பழங்குடி மக்கள் பல வகையைச் சேர்ந்தவர்கள். பட்டியலிட்டால் அது நீளும். கிழக்கு மலேசியாவின் பழங்குடி மக்களை விட மேற்கு மலேசிய பழங்குடி மக்கள் வேறுபாடுடையவர்கள். ஒருவகையில் பல வகையான கலப்புகள் இந்த மேற்கு மலேசிய பழங்குடி மக்களிடையே நிகழ்ந்திருக்கின்றது. மேற்கு மலேசியாவில் துரித வளர்ச்சியும் நன்கு ஏற்பட்டு விட்டதால் காடுகளில் குடியிருந்த பழங்குடியினர் நகரங்களுக்கு மாற்றலாகி தங்கள் வாழ்க்கை நிலையில் பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். ஆனாலும் இன்றும் கூட பழங்குடியினர் காடுகளில் வாழ்வதும் தங்கள் பண்டைய வாழ்வியல் நடைமுறைகளை தொடர்ந்து பேணுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.
இங்கே நாம் படத்தில் காண்பது கேமரன் ஹைலேண்ட்ஸ் பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் இனத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவர். இப்பகுதியில் பாத்தேக், சாக்கை, பங்கான் இன பழங்குடியினர் இருக்கின்றனர். அரசாங்கம் இம்மக்களைக் காட்டிலிருந்து வெளிப்பகுதிக்கு வந்து புதிய வாழ்க்கை அமைத்துகொண்டு வாழும் வகையில் சில பொருளாதாரா திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இம்மக்களின் குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்வதற்காக பள்ளிகளும் கட்டப்பட்டுள்ளன. பொதுவாக இவர்கள் சாலையோரத்துக் கடைகள் சிலவற்றை அமைத்துக் கொண்டு காடுகளிலிருந்து கொண்டு வரும் மூங்கில், இறைச்சி, தேன், பழங்கள், வேர்கள் ஆகியவற்றை சாலையில் நாம் பயணித்துச் செல்லும் போது காண முடியும்.
இந்த பழங்குடி இனமக்களைப் பற்றி விபரங்கள் மேலும் அறிந்து கொள்ள விரும்பினால் இப்பக்கத்தை வாசிக்கலாம்.
சுபா