கணினித் துறைக்கு வருவதற்கு முன் நான் ஆசிரியர் பயிற்சிக்காகப் படித்து ஏறக்குறைய ஒரு வருடம் ஆசிரியராகவும் பணியாற்றினேன். பயிற்சியை முடித்தவுடன் எனக்கு பினாங்கிலேயே உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் வேலையைச் செய்வதற்கு அரசாங்கம் நியமித்திருந்தது. இது ஒரு தமிழ்பள்ளி. பினாங்கு (தீவு) மாநிலத்தில் மட்டும் மொத்தம் 7 தமிழ் பள்ளிகள் அப்போது இருந்தன. நான் ஆசிரியராக வேலைபார்த்த பள்ளியின் பெயர் இராமகிருஷ்ணா தமிழ் பள்ளி.
தமிழ் பள்ளி என்றால் இங்கு தமிழ் மாத்திரம் கற்றுக் கொடுக்கப்படும் என்பதல்ல. மலேசியாவைப் பொருத்தவரை மலாய், சீன, தமிழ் மொழிகளில் ஆரம்பப்பள்ளிகள் உண்டு. இப்பள்ளிகளில் அரசாங்கம் அங்கீகரித்த எல்லா பாடங்களும் போதிக்கப்படும். தமிழ் பள்ளி என்று சொல்லும் போது தமிழ்தான் முக்கியப் பாடமாகப் போதிக்கப்படும். 7 வயது முதல் 12 வயதுவரை உள்ள ணவர்கள் தான் தொடக்க நிலைப்பள்ளியில் பயில்வார்கள். பணிரெண்டு வயதிற்குப் பின்னர் இந்த மாணவர்கள் தேசியப்பள்ளிக்குச் செல்லவேண்டும். இங்கு மலாய் மொழிதான் முக்கிய பாடமொழியாக அமைந்திருக்கும். நான் வேலை செய்த இராமகிருஷ்ணா பள்ளிக்கு ஒரு சிறப்புண்டு. இந்தப் பள்ளியோடு சேர்ந்து இராமகிருஷ்ணா மண்டபமும் அதனால் நிர்வாகிக்கப்படும் குழந்தைகள் அநாதை ஆசிரமும் இங்கு இருந்தது. ஆசிரமத்தில் வசிக்கும் குழந்தைகள் (எல்லோரும் தமிழர்கள்) இந்த தொடக்கப்பள்ளிக்குத் தான் வருவார்கள். ஆசிரம குழந்தைகள் தவிர்த்து, மற்றவர்களும் சேர்ந்து படிக்கக் கூடிய ஒன்றாகத்தான் இந்தப்பள்ளி இயங்கி வருகின்றது.
இங்கு நான் ஆசிரியராக வேலை செய்த அந்த நாட்கள் எனது வாழ்க்கையில் மறக்கமுடியாதவை. எத்தனையோ இனிமையான நிகழ்வுகள். தோழமையான ஆசிரியர்கள், அன்பைப் பொழியும் மாணவர்கள், மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகள் இப்படிப் பல விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
வந்தவுடனேயே எனக்கு வகுப்பு ஆசிரியர் என்ற பதவி கிடைத்து விட்டது. 42 மாணவர்கள் கொண்ட மூன்றாம் வகுப்பிற்கு ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்டேன். மூன்றாம் வகுப்பில் படிக்கும் குழந்தைகளுக்கு 9 வயது. வகுப்பில் ஆண் பெண் குழந்தைகள் சேர்ந்தே படிப்பார்கள். என்னுடைய வகுப்பில் இராமகிருஷ்ணா ஆசிரமத்தைச் சேர்ந்த 6 குழந்தைகளும் இருந்தார்கள். இவர்களில் விஜி, புவனேஸ்வரி இரண்டு பேரையும் என்னால் நிச்சயமாக மறக்கமுடியாது. [இவர்களைப் பற்றி அடுத்த கட்டுரையில் தொடர்வேன்.] காலையில் பள்ளி 7:45க்கு தொடங்கி விடும். மதியம் 1:10 அளவில் பள்ளி முடிந்து விடும். சில மாணவர்கள் அதற்குப் பிறகு மதியம் நடைபெறும் பிரத்தியேக வகுப்பில் கலந்து கொள்ள வருவார்கள்.
நான் அங்கு ஆசிரியராக இருந்த போது என்னுடன் வேலை பார்த்த சக ஆசிரியர்கள் கல்யாணி, சரஸ்வதி, சங்கரா, கலைச்செல்வி, ஜெயலெக்ஷ்மி, புஷ்பா, மகேஷ்வரி, சிவகாமி மற்றும் சிலர். இவர்களில் சிலர் இப்போது வேறு பள்ளிகளுக்கு மாற்றலாகிச் சென்று விட்டனர். வேலை முடிந்த பிறகு நாங்கள் பல முறை தமிழ் சினிமா படம் பார்க்கச் சென்றிருக்கின்றோம். படம் பார்ப்பதற்கு முன்னர் சுவையான உணவு சாப்பிடச் செல்வது வழக்கமாகிப் போனது. அதிலும் அடிக்கடி Dato Keremat சாலையில் இருக்கும் சீன சைவ உணவகத்தில் (இங்கு சோயாவைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சைவ கோழி, மீன், முட்டை போன்றவை புகழ்பெற்றவை) சாப்பிட்டு செல்ல மறப்பதில்லை. வேலை செய்கின்றோம் என்ற சிந்தனையே வராதவாறு மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இந்த கால கட்டம் அமைந்திருந்தது.