3. சீன சமூகம்
மலேசியா ஒரு பண்பாட்டுக் கலவையான் ஒரு நாடு. இங்கு ரமடான் பண்டிகை எவ்வாறு சிறப்பாக கொண்டாடப் படுகின்றதோ அதேபோல நம்மவர்களின் தீபாவளி தைப்பூசப் பண்டிகையும் ஒரு நாள் அரசாங்க விடுமுறையுடன் கொண்டாடப்படுகின்றது. சீனப் புத்தாண்டும் புத்தரின் பிறந்த தினமான விசாக தினமும், கிற்ஸ்மஸ் பண்டிகையும் அரசாங்க விடுமுறையுடன் பாகு பாடின்றி இங்கே கொண்டாடப்படுகின்றன.
தைப்பூசத்திருவிழாவில் ஹிந்துக்கள் மட்டுமன்றி சீனர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற காவடி எடுப்பதும் சீன வர்த்தக நிறுவனங்களும் செல்வந்தர்களும் கூட தங்கள் காணிக்கையைச் செலுத்த குன்று போல தேங்காய்களைக் குவித்து வைத்து முருகப் பெருமானின் தேர் வரும் சாலையில் பட்டாசு வெடிப்பது போல தேங்காய்களை உடைத்து மகிழ்வதும் இந்த நாட்டில் நடக்கும் ஒரு வித்தியாசமான ஒரு நிகழ்வு.
அது போல செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் நாம் நவராத்திரி கொண்டாடும் அதே வேளையில் சீனர்கள் 9 நாட்களில் தங்களின் ஒன்பது கடவுளர்களை வழிபடும் ஒரு பண்டிகையும் நடைபெறும். அந்த 9 நாட்களும் சைவ உணவு உண்டு அவர்கள் விரதமும் கடைபிடிப்பார்கள். அந்தக் கால கட்டங்களில் பினாங்கில் முக்கிய இடங்களான டத்தோ கெராமட் சாலை, குவின் ஸ்ட்ரீட், ஆகிய இடங்களில் சைவ உணவகங்கள் பந்தல்கள் போல போடப்பட்டு நாள் முழுக்க விற்பனைக்கு வைக்கப்படும். இதில் குறிப்பாக சோயாவால் செய்யப்பட்ட பலவித பதார்த்தங்களைக் கொண்டு சமைக்கப்பட்ட சமையல் வகைகள் நிறைந்திருக்கும்.
இப்பண்டிகையின் இறுதி நாளான ஒன்பதாம் நாள் மிகச் சிறப்பான ஒரு திருநாளாக இருக்கும். அன்று மாலை ஹிந்துக்ள் மாரியம்மன் ஆலயங்களில் தீ மிதிப்பது போல சீனர்களும் தீ உருவாக்கி தீமீது நடந்து சென்று தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள். குறிப்பாக இந்தத் திருவிழா பினாங்கு குவாலலும்பூர் ஆகிய இடங்களில் மிகப் பெரிய அளவில் நடைபெறும். மலேசியாவில் வாழும் சீனர்கள் பெரும்பாலும் பௌத்த மதத்தை தழுவியவர்கள். அதற்கு அடுத்த நிலையில் சீன பாரம்பரிய வழிபாட்டினை பின்பற்றுபவர்களும் பெறுவாரியாக உள்ளனர். இதற்கடுத்தார் போல கிறிஸ்துவ மதத்தை தழுவிய சீனர்களும் ஒரு சிறிய விழுக்காட்டினர் உள்ளனர். சீன பாரம்பரிய கடவுளர்களை வழிபடும் சீனர்களும் புத்த மதத்தை பின்பற்றும் சீனர்களும் எந்த தயக்கமுமின்றி ஹிந்து கோயில்களுக்கும் வந்து வழிபடுவார்கள். இவர்களின் வழிபாட்டு முறை ஹிந்து ஆலயங்களில் உள்ளது போன்று அமைந்திருப்பதால் அதே போல ஊதுபத்தியை ஏற்றி தங்கள் கைகளில் வைத்துக் கொண்டு கற்பகிரகத்தை வலம் வந்து பின்னர் சுவாமிப் பிரசாதம் பெற்றுக் கொண்டு செல்வர்.
மலேசிய பழங்குடி மக்களுக்குள் மட்டும் தான் பல்வேறு குழுக்கள் என்பதில்லை. மலாயா வந்து சேர்ந்த சீனர்களுக்குள்ளேயும் பல குழுக்கள் இருக்கின்றன. அதே போல இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து குடியேறிய இந்தியர்களிலும் பல சாதிக் குழுவினர் அடங்கியிருந்தனர். மலேசியாவில் வாழும் பல்வேறு குழுவினரைப் பற்றிய ஒரு பதிவு ஒன்று இணையத்தில் கிடைத்தது. இது இத்துறையில் தகவல் தெரிந்து கொள்ள விழைபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
http://www.joshuaproject.net/countries.php?rog3=MY
19ம் நூற்றாண்டில் மலாயா வந்த தமிழர்கள் பெரும்பாலும் ரப்பர் மரத்தோட்டங்களில் பணிபுரிய வந்தர்கள். அதேபோல அக்காலகட்டத்தில் தெற்கு சீனாவிலிருந்து மலாயாவில் கூலி வேலைகளுக்காக சீனர்கள் அதிகமானோர் வந்தனர். சீனர்களின் இந்த 19ம் நூற்றாண்டில் அமைந்த மலாயாவுக்கான பயணம் முக்கியமாக ஈயம் தேடுதல் தொடர்பானது. மலேசியாவில் அதிகமாக சீனர்கள் நிறைந்திருக்கும் மானிலங்களில் ஒன்று பினாங்கு மானிலம். அதேபோல பேராக் மானிலமும் ஆகும். இங்கு ஈயம் தேடுதல் பணிக்காக வந்தவர்களில் பலர் இங்கேயே தங்கியதன் காரணத்தால் மலேசிய சீனர்களின் வரலாற்றில் மிக முக்கியமான பல நிகழ்வுகள் இப்பகுதியில் நிகழ்ந்துள்ளன.
ஹொக்கியன், ஹாக்கா, கண்டோனிஸ், தியோச்சு, மாண்டரின், ஹைனனிஸ் ஆகிய குழு சீனர்கள் தான் பெரும்பாலும் மலாயா வந்த குழுவினர். சீனர்களின் மலாயாவுக்கான வருகை 18, 19ம் நூர்றண்டில் தன் தொடங்கிழது என்பதல்ல. 3ம் 4ம் நூற்றாண்டுகளில் கூட வர்த்தகத்துக்காக சீனர்கள் மலாயா வந்து இங்கேயே சிலர் தங்கி வாழ்ந்து விட்டமையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒரு விஷயம்.
சுமத்ரா பலேம்பாங்கிலிருந்து வந்த பரமேஸ்வரா மலாக்கவை நிறுவினார். அவரது பரம்பரையில் ஆறாவதாக வந்த மன்சூர் ஷா என்ற சுல்தான் வணிக வளத்தை பெருக்குவதற்காக சீன அரசனுடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் பொருட்டு சீன அரசர் ஒருவரின் மகள் ஹங் லி போவை திருமணம் செய்து கொண்டார். அப்போது ஹங் லீ போவுடன் சீனாவிலிருந்து குழுவாக பல சீனர்கள் மலாக்கா வந்து சேர்ந்தனர். அச்சமயத்தில் சீனாவுக்கும் மலாயாவுக்கும் இடையிலான வர்த்தக் உறவு சிறந்த நிலையில் இருந்தது. 1459 - 1477 வரை ஆட்சி செய்தவர் சுல்தான் மன்சூர் ஷா. சீனர்கள் பலர் வர்த்தகம் தொடர்பாக அக்கால கட்டத்தில் மலாயா வந்தனர். இவ்வகையில் 16, 17ம் நூற்றாண்டு வாக்கில் மலாக்கா வந்து இங்கேயே தங்கி வாழ்ந்து வரும் சீனர்கள் தங்களை பாபா-ஞோன்யா (Baba-Nyonya) என அடையாளப்படுத்திக் கொண்டு தனித்துவத்துடன் வாழ்கின்றனர். இவர்கள் அடிப்படையில் சீனர்கள். வர்த்தகம் செய்ய வந்தவர்கள் மலாக்கவிலேயே தங்கி அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையோடு தங்களை இணைத்துக் கொண்டவர்கள். இந்த இன மக்கள் சற்று தனித்த இயல்புடன் இன்றளவும் மலாக்க மானிலத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் உடை, உணவு பழக்க வழக்கங்கள் பொதுவான சீனர்களை விட வித்தியாசமானது. மிக அதிகமாக இந்தோனீசிய, மலாய் இன மக்களின் பழக்க வழக்கங்கள் கலந்த ஒரு முறையாகத் திகழ்வது.
பெரும்பாலும் ஹொக்கியான் தியோச்சு, கண்டனிஸ் குழு மக்களே அக்கால கட்டத்தில் மலாக்கா வந்து பின்னர் பாபா-ஞோன்யாவாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு இன்றளவும் வாழ்பவர்கள். இவர்கள் திருமணம் என்று வரும் போது பெரும்பாலும் தெற்கு சீனாவில் பெண்ணெடுத்து திருமணம் செய்யும் வழக்கத்தை கொண்டிருந்தனர். இதில் முக்கியமான அம்சம் யாதெனில் இவர்கள் அடிப்படையாக தங்கள் மொழியை விட்டு, உள்ளூர் வழக்கு மொழியான மலாய் மொழியை தங்கள் மொழியாக கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக் கொண்டவர்கள். இவர்கள் பேசும் மொழி பாபா மலாய என அழைக்கப்படுவது. இது முழுமையாக தூய்மையான மலாய் மொழி இல்லாவிட்டலும் சீன மொழிக் குடும்பத்தின் ஒரு மொழின ஹிக்கியான் மொழியின் பல சொற்கள் கலந்தது.
இதே போல இக்காலகட்டத்தில் தென்னிந்தியாலிருந்து வர்த்தகம் புரிய மலாயா அதிலும் குறிப்பாக மலாக்கா வந்தவர்களும் தமது இயல்பு மாறாமல் இன்றளவும் மலாக்காவில் வாழ்கின்றனர். இந்த மக்கள் மலாக்கா செட்டிகள் என அழைக்கப்படுகின்றனர். இவர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்கு முன்னர் எனது பயண திட்டத்தைப் பற்றியும் கொஞ்சம் பகிர்ந்து கொள்கின்றேனே..
குறிப்பு-
சில விழியங்கள் இங்கே உள்ளன.
http://www.youtube.com/watch?v=fzLkkm0dQIY
http://www.youtube.com/watch?v=_Fi5UL9UmCM
http://www.youtube.com/watch?v=27ugLLNgUCw&feature=related
இந்த விழியங்களைப் பாருங்கள். சீன பக்தர்கள் இந்த 9ம் நாள் பண்டிகையின் போது அலகு குத்திக் கொண்டு சாமி வந்து ஆடுவதை!.
http://www.youtube.com/watch?v=dUpfpL-Vex4&feature=player_embedded#at=35
(கொதிக்கும் எண்ணையை எடுத்து குடிக்கும் பக்தர்கள்)
http://www.youtube.com/watch?v=VQL9TWISGss
(தீ உருவாக்கி அதில் தீமிதிக்கும் பக்தர்கள்)
இந்த விழாவைப் பற்றிய ஒரு ஆய்வுக் கட்டுரை ஒன்று ! http://nirc.nanzan-u.ac.jp/publications/afs/pdf/a1098.pdf
அடிப்படையில் துரதிஷ்டம் மறைந்து சந்தோஷம் பெற வேண்டும் என வேண்டிக் கொண்டு மக்கள் வழிபடும் ஒரு பண்டிகை இது. ஒன்பது கடவுளர்கள் பற்றி விக்கி பீடியாவில் இங்கே காணலாம். http://en.wikipedia.org/wiki/Nine_Emperor_Gods_Festival Nine Emperor Gods என தேடிப் பாருங்கள். பல தகவல்கள் கிடைக்கும். Zhou Yu Dou Fu Yuan Jun விற்கும் Dou Mu Yuan Jun இருவருக்கும் தோன்றிய இந்த ஒன்பது குழந்தைகளான
Tan Lang
Tai Xing Jun
Ju Men Yuan Xing Jun
Lu Cun Zhen Xing Jun
Wen Qu Niu Xing Jun
Lian Zhen Gang Xing Jun
Wu Qu Ji Xing Jun
Po Jun Guan Xing Jun
Zuo Fu Da Dao Xing Jun
You Bi Da Dao Xing Jun
ஆகியோரை வரவேற்பதும் பின்னர் அவர்களை வழியனுப்பி வைப்பதுமே இந்த விழா.
எனது இளம் வயதில் நீளமான அலகு குத்திக் கொண்டு இவ்வகையில் இந்த விழா நடைபெறுவதை நான் பார்த்ததில்லை. பல மாற்றங்கள் படிப்படியாக சேர்ந்திருகின்றன. ஹிந்துக்கள் கொண்டாடும் தைப்பூச விழாவில் உள்ளது போனற காவடி எடுத்தலின் தாக்கம் தற்சமயம் இந்த விழாவில் ஒரு அங்கமாகியிருப்பது தெரிகின்றது. 1998க்குப் பிறகு இந்த விழாவை நான் நேரில் பார்க்க வாய்ப்பு அமையவில்லை.
தொடரும்...
No comments:
Post a Comment