27. லங்காவித்தீவில் பார்க்க வேண்டிய இடங்கள்
இப்பதிவை எழுதுவதற்காக லங்காவித்தீவின் எனது கடந்த பயணங்களின் படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். படங்களின் அழகில் மயங்கி எந்தப் படத்தைத் தேர்ந்தெடுப்பது என்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டு விட்டது. ஒவ்வொரு படமும் லங்காவியின் எழில் சொல்லும் வகையிலும் இத்தீவின் சிறப்பினை வெளிப்படுத்தும் வகையிலும் அமைந்திருப்பதால் குறிப்பிட்ட சில படங்களை மட்டுமே இப்பதிவில்இணைக்கின்றேன். அடுத்த பதிவிலும் படங்கள் தொடரும்.
லங்காவிக்கு வருகையளிப்பவர்களைக் கடந்த சில ஆண்டுகளாக மிகக் கவர்வது கேபிள் கார் பயணம். இந்தக் கேபிள் கார் அமைப்பு லங்காவியின் மலைப்பயண தொழில்நுட்ப அமைப்பை உலகுக்கு எடுத்துக் காட்டும் ஒன்று எனச் சொன்னால் அது மிகையாகாது. லங்காவித்தீவின் இரண்டாவது மிக உயரமான குன்றான மாட் சினாங் மலைக்குச் செல்லும் வகையில் இக்கேபிள் கார் பயணம் அமைக்கப்பட்டிருக்கின்றது. கரும்பச்சை நிறத்திலான அடர்ந்த காடுகளுக்கிடையே மிக வேகமாக ஊர்ந்து செல்லும் இக்கேபிள் கார் பயணத்தில் இரத்த அழுத்தம் உள்ளவர்களோ மாரடைப்பு போன்ற வகையிலான உடல் நோய் அறிகுறிகள் உள்ளவர்களோ வருவது தவிர்க்கப்பட வேண்டும் என்று கேபிள் கார் பயணக்கட்டணம் பெறும் போதே பயணிகள் அறிவுறுத்தப்படுவர். மலை உச்சிக்குச் சென்ற பின்னர் புது உலகமாக லங்காவித்தீவு காட்சியளிப்பது ஒரு கண்கொள்ளா காட்சி.
600 மீட்டர் பயணம் செய்த பின்னர் கேபிள் கார் முதல் ஸ்டேஷனை வந்தடையும். அங்கிருந்து மலையின் காட்சியை ரசித்து விட்டு அடுத்த கேபிள் காரில் பயணத்தைத் தொடர வேண்டும். மேலும் உயரமான பகுதிக்குச் சென்ற பின்னர் லங்காவித்தீன் அடர்ந்த மலைத்தொடரை அங்கிருந்து காணலாம். லங்காவித்தீவிலிருந்தே தாய்லாந்தின் மலைப்பகுதியின் தொடர்ச்சியும் தெளிவாகக் கண்களுக்குப் புலப்படும்.
இதனை அடுத்ததாக இத்தீவில் என்னைக் கவர்வது தீவுக்குத் தீவு தாவிச் செல்லும் போட் சவாரி. இத்தொடரின் முதல் பதிவிலேயே லங்காவி 99 குட்டித்தீவுகளையும் தன்னுள்ளே கொண்டுள்ள தகவலையும் குறிப்பிட்டிருந்தேன். ஆக இத்தீவுகளுக்குப் பயணம் சென்று வருவது மிக மிக சுவாரசியமான ஒரு அனுபவம். இதில் ஓரிரு தீவுகள் தவிர்த்து ஏனையவற்றில் மனிதர்கள் இல்லை. Island hopping tour என துறைமுகப்பகுதியில் கேட்டுப் பார்த்து தினம் சில முறை பயணிக்கும் இவ்வகை மோட்டார் போட் பயணத்தில் சுற்றுப்பயணிகள் கலந்து கொள்ளலாம்.
மோட்டார் போட் கடலின் நீரைக் கிழித்துக் கொண்டு வேகமாகப் பயணிப்பதே பயணத்திற்கு மேலும் ஆர்வத்தைக் கூட்டுவதாக அமையும். சில தீவுகளில் கழுகுகள் நிறைந்திருக்கின்றன. மோட்டார் போட் ஓட்டுநர் ஒவ்வொரு பயணத்தின் போதும் கழுகுகள் நிறைந்துள்ள ஏதாவது ஒரு தீவின் முன்னே படகினை நிறுத்தி சுற்றுப்பயணிகளைப் பார்த்து மகிழச் செய்வார். கழுகுகள் காலை நேரத்தில் நிச்சயமாக கண்களுக்குத் தென்படும்.
லங்காவித்தீவே இயற்கை எழில் நிறைந்ததோர் தீவு. இங்கே அதிகமான குரங்குகள் இருப்பது ஆச்சரியம் இல்லையே. இங்குள்ள குரங்குகளில் பல மிகுந்த தொல்லை தருபவை. இவற்றிடம் மிக ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். நான் பயணிப்பதற்காக ஒரு வாடகைக் கார் (புரோட்டான் சாகா) தீவில் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்திருந்தேன். அந்த வாகனத்தை ஓரிடத்தில் குரங்குகளைப் பார்த்து படம் பிடிக்க வேண்டும் என நிறுத்தி விட்டு சென்று படம் பிடித்துக் கொண்டிருக்கும் வேளையில் குரங்குகள் அந்தக் காரில் தங்கள் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்து விட்டன.
காரின் ரப்பர் வளைவுகள், ரேடியோ அண்டெனா, வைப்பர் என ஒவ்வொன்றாக கழற்றிப் போட ஆர்மபித்து விட்டன. நான் அதனை விரட்ட முயற்சித்து எந்தப் பலனும் இல்லை. அவை என்னிடமே சண்டைக்கு சீறிப்பாய்ந்து கொடு வர ஆரம்பித்து விட்டன. நல்லவேளையாக அப்பக்கமாக வந்த ஒரு மற்றொரு வாகனமோட்டி வாகனத்தை நிறுத்தி குரங்குகளை விரட்டி அடித்து விட்டு அந்த வாகனத்தைக் காப்பாற்றிக் கொடுத்தார். இல்லையென்றால் அன்று அந்த வாடகை வாகனம் பல கோளாறுகளுக்குட்பட்டிருக்கும். பெரும்பாலான குரங்குகள் சேட்டை செய்பவையாக இருந்தாலும் லங்காவி ஜியோலோகி பார்க்கில் நாங்கள் பார்த்த குரங்குகள் அமைதியாக இருந்ததையும் வருகின்ற பார்வையாளர்களைத் தொல்லை செய்யாமல் இருந்ததையும் நிச்சயம் குறிப்பிடத்தான் வேண்டும்.
மனிதர்களில் பல குணங்களைப் பார்க்கின்றோம். அப்படியே குரங்குகளிலும் சாதுக்களும் உண்டு, வம்பு செய்து பிரச்சனை செய்யும் குரங்குகளும் உண்டு என்பதை லங்காவித்தீவிலும் காணலாம். :-)
தொடரும்..
சுபா
No comments:
Post a Comment