பினாங்கில் நான் படித்த ஆரம்பப்பள்ளி வளாகத்திற்கு இன்று காலை சென்றிருந்தேன். கான்வ்வெண்ட் தமிழ்ப்பள்ளி - எனது தொடக்ககால கல்வி இங்கு அமைந்தது. கத்தோலிக்க தேவாலயத்திற்குச் சொந்தமான வளாகத்தில் அரசு உதவிபெற்ற ஒரு பள்ளியாக இது இயங்கி வந்தது. அன்று அப்பள்ளியின் தலைமை ஆசிரியராக திருமதி அன்னமேரி லூயிஸ் அவர்கள் இருந்தார்கள். எனது ஆசிரியராக திருமதி. வேலு நினைவில் இருக்கின்றார்.
பள்ளிக்கூடத்திற்கு பஸ் செக்கோலா அதாவது பள்ளிப்பேருந்து ஏறி வருவோம். வாகன ஓட்டி ஒரு தமிழர். சில நாட்களில் அவரும், சில நாட்களில் அவரது மனைவியும் இப்பேருந்தை ஓட்டுவர். பல நேரங்களில் முன் இருக்கையில் அமர்ந்து கொள்வேன்.
அவர்கள் வாகனத்தில் கேசட் ப்ளேயர் இருக்கும். தினமும் செந்தமிழ் தேமொழியாள்.. நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் என்ற பாடலும் காதலிலே தோல்வியுற்றாள் கன்னி ஒருத்தி என்ற பாடலும் தவறாமல் ஒலிக்கும். அந்தக் காலத்தில் இந்தப்பாடல்கள் மனப்பாடமாகியிருந்தன எனக்கு.
பள்ளிக்கூடத்தின் வாசலில் ஒரு சிறியக் பெட்டிக்கடை இருக்கும். அதில் தான் சாக்லெட், பலகாரங்கள் என வாங்கி சாப்பிடுவோம். அந்தப் பெட்டிக்கடை இன்றும் இருக்கின்றது. பள்ளிப்பேருந்துக்காக மதியம் வெளியே காத்திருப்போம். சாலையில் ஐரோப்பிய சுற்றுப்பயணிகள் நடந்து செல்வார்கள். அவர்களைப் பார்த்து கையசைப்பது எங்கள் வாடிக்கையாக இருந்தது. இன்று ஐரோப்பாவில் வாழ்வதை நினைத்ததில் மனதில் சிரிப்பு தோன்றி முகத்திலும் வெளிபட்டது.
வாரத்தில் ஒருநாள் தேவாலயத்திற்கு அனைவரும் செல்வோம். வரிசையாக நின்று புனித அப்பம் பெற்றுக் கொண்டு பின்னர் பள்ளிக்கு வருவோம்.
பள்ளிக்கூடத்தில் 3ம் ஆண்டில் இருக்கும் போது தோட்டம் போடும் பயிற்சி கிடைத்தது. பருத்தி செடி போட்டிருந்தோம். பருத்தி பஞ்சை எடுத்துப் பிரித்து சேகரித்து பருத்தி பற்றி அறிந்து கொண்டது பசுமையாக நினைவில் இருக்கிறது.
பள்ளிக்கூடத்தில் படித்ததை விட விளையாடிய பொழுதுகள் தான் நினைவில் அதிகம் பதிந்திருக்கின்றன. என்னுடன் விளையாடிய சரஸ்வதி, இன்பம், நாசீர், வீரபத்திரன், மீனாட்சி, சீதா, செல்லம்மாள் ஆகியோர் குழந்தைப்பருவ முகங்கள் மட்டும் மனதில் நிலைத்திருக்கின்றன.
பள்ளிக்கூடம் இருந்த பகுதியில் இன்று பள்ளிக்கூடம் இல்லை. ஏழை எளியோருக்கான இலவச உணவகம் ஒன்றினை தேவாலய அமைப்பு இங்கு செயல்படுத்தி வருகின்றது. ஒரு அனாதைக்குழந்தைகள் இல்லமும் இன்று இங்கு செயல்பட்டு வருகின்றது. தேவாலயம் பூட்டி இருந்தது.
பாதிரியார் வீட்டின் முன்னே வாசலில் பத்திரிகைகள் வாசித்துக் கொண்டு அமர்ந்திருந்தார். நான் அருகில் வரும் போது விபரம் கேட்டார். என்னைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டேன். அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பலகாரங்களும் தேனீரும் வழங்கினார். அவர் ஒரு தமிழர். தமிழிலேயே பேசினார்.
நான் எந்த மதத்தைச் சார்ந்தவர் எனக் கேட்டார். நான் மதங்களை பின்பற்றுவதில்லை. ஆனால் பிறரது மத நம்பிக்கையைக் குறைத்து மதிப்பிடுவதுமில்லை எனச் சொன்னேன். ”அப்படியே இரு. இந்த சிந்தனை உள்ளவர்களுக்கு மதம் தேவையே இல்லை” எனச் சொல்லி சிரித்தார்.
நனவிடைத்தோய்தலில் மகிழ்ந்திருந்து என் பள்ளி நினைவுகளைச் சுமந்தபடி வளாகத்திலிருந்து வெளியே வந்தேன்.
-சுபா
No comments:
Post a Comment