Wednesday, October 29, 2025

மலாயா ஆவணங்கள் – 22 : சமகால தமிழ்ப் பத்திரிகைகள்




முனைவர் க.சுபாஷிணி


தமிழ்நாட்டிற்கு வெளியே இதழியல் முயற்சிகளைத் தொடங்கிய தமிழ் மக்கள் பல்வேறு சவால்களுக்கிடையே இதழியல் பணிகளைச் சாதித்திருக்கின்றார்கள். அத்தகைய ஒரு முயற்சியாக கடந்த நூற்றாண்டில் மலாயாவில் தமிழ் இதழியல் முயற்சிகளை மேற்கொண்டவர்கள் பதிந்துவைத்த செய்திகள் நமக்கு இன்று 20ஆம் நூற்றாண்டின் தொடக்ககால செய்தியை அறிந்து கொள்வதற்குத் தரவாக அமைகின்றன. 


அன்றைய மலாயாவின் சிங்கை பகுதியில் இருந்து வெளிவந்த பத்திரிக்கை ”முன்னேற்றம்”. இது 1920 களின் இறுதி காலகட்டங்களில் வெளிவந்து 1930 களிலும் தொடர்ந்தது. 

17.1.1929 ஆம் ஆண்டு தேதியிடப்பட்ட ”முன்னேற்றம்” வார இதழில் ஒரு பக்கத்தில் வழங்கப்பட்டிருக்கும் செய்தி நமக்கு ஒரு தகவலை வழங்குகிறது. 


அதாவது, சமகாலத்தில் அன்று தமிழ்நாட்டில் இருந்து வெளிவந்த அல்லது வெளிவந்து கொண்டிருந்த வாரப் பத்திரிகைகள், தினசரி பத்திரிகைகள் பற்றிய செய்தி இது. 

சிங்கையில் இருந்து வெளியிடப்பட்ட முன்னேற்றம் பத்திரிக்கை அக்காலகட்டத்தில் சமகால இதழியல் முயற்சிகள் பற்றி குறிப்பிடுகிறது. அதில் உள்ள ஒரு பக்கத்தில் அமைந்திருக்கின்ற நான்கு பத்திரிக்கைகள் தொடர்பான விளம்பரங்களை இச்செய்தி நமக்கு வெளிப்படுத்துகிறது. 

”குடியரசு” - இதன் ஆசிரியர் ஈ.வே.ராமசாமி. இவ்வாரப் பத்திரிக்கை ”அஞ்ஞானம் போக்கி மெய்ஞ்ஞானம் அளிக்கும் ஆத்ம ஞான சுடரொளி”  என்ற விளம்பரத்தோடு வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் அன்றைய மலாயாவில் இதனைப் பெற விரும்புவோர் வருட சந்தாவாக அன்றைய ரூபாய் 4 செலுத்தி இதனைப் பெற முடியும். குடியரசு வாரப் பத்திரிக்கையின் அலுவலகம் ஈரோட்டில் இயங்கியது என்பதைப் பற்றிய செய்தியையும் காண்கிறோம். 


அடுத்ததாக, ”திராவிடன்” என்ற பெயர் கொண்ட தினசரி பத்திரிக்கை. இதன் ஆசிரியர் சகன சங்கர கண்ணப்பர். ”பார்ப்பனர் அல்லாதாரின் முன்னேற்றத்திற்கு உழைக்கும் ஒப்பற்ற தமிழ் தினசரி பத்திரிகை இது” என்ற குறிப்போடு உள்ளது. மாத சந்தா மலாயாவில் ரூபாய் 1-8-0 என்றும் வருட சந்தா ரூபாய் 18-0-0 என்றும், இப்பத்திரிகை அலுவலகம் சென்னை மவுண்ட் சாலையில் இருந்தது என்பதையும் இச்செய்தி குறிப்பிடுகிறது. 


அடுத்ததாக, ”குமரன்” என்ற பெயர் கொண்ட ஒரு பத்திரிக்கை. இதன் ஆசிரியர் சொ.முருகப்ப செட்டியார். இப்பத்திரிகையின் அலுவலகம் காரைக்குடியில் இயங்கியது என்றும் இப்பத்திரிக்கை ”தீந்தமிழின் தெளிந்த கட்டுரைகள் நிறைந்து திகழும் சிறந்த வார பத்திரிகை” என்ற குறிப்போடு வருகிறது. மலாயாவிற்கு வருட சந்தா ரூபாய் 6 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இறுதியாக நாம் காண்பது ”நாடார் குலமித்திரன்”.  இதன் ஆசிரியர் சூ. ஆ. முத்து நாடார். இதன் அலுவலகம் அருப்புக்கோட்டையில் இருந்து செயல்பட்டதாகவும் "நாட்டு நலனுக்கும் நாடார் சமூகத்தினரின் நன்மைக்கும் நீதி நெறிக்கும் நிலைநின்று உழைக்கும் தமிழ் வாரப் பத்திரிக்கை" என்ற செய்தியும் இதில் வழங்கப்பட்டுள்ளது. 


ஆக, சிங்கையிலிருந்து வெளிவந்த முன்னேற்றம் என்று பெயர் கொண்ட இந்த வாரப்பத்திரிக்கை தமிழ்நாட்டில் இருந்து தமிழ் மக்களின், அதிலும் குறிப்பாகச் சமூக மாற்றத்தையும் எழுச்சியும் ஏற்படுத்த வேண்டும் என்று முனைப்போடு செயல்பட்ட சமகால நான்கு பத்திரிகைகள் பற்றிய செய்தியை நமக்கு வழங்குகின்றது.


அதுமட்டுமல்லாது மலாயாவிற்கு வந்து வாழ்கின்ற தமிழ்மக்கள் தமிழ்நாட்டில் நடக்கின்ற நிகழ்வுகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், அதன்வழி தங்களது வாழ்க்கை நிலையை முன்னேற்றிக் கொள்ளவும், அரசியல் ரீதியாக தங்களது தேவைகளை அறிந்து அடிமைத்தனத்திலிருந்து மீளும் சிந்தனையைப் பெறுவதற்கும் இந்த இதழியல் முயற்சிகள் பெரும் பங்காற்றியுள்ளன என்பதையும் காண்கின்றோம்.


[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 17.9.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]


(இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத் தமிழ்  இதழ் 308ல் இன்று வெளியிடப்பட்டது)

Tuesday, October 21, 2025

மலாயா ஆவணங்கள் – 21 : 1929இல் மலாயாவில் நடைபெற்ற அகில இந்தியர் கருத்தரங்கம்

 




முனைவர் க.சுபாஷிணி

„முன்னேற்றம்” என்ற பெயரில் வே.சி.நாரயணசாமி என்பவரை ஆசிரியராகக் கொண்டு ஒரு பத்திரிக்கை 1929இல் மலாயாவிலிருந்து வெளிவந்துள்ளது. பொது மக்களின் சமூக நலனில் அக்கறை கொண்ட ஒரு வாரப்பத்திரிக்கையாக இது அமைந்திருந்தது என்பதை இதனை வாசிக்கும் போது நாம் புரிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டிலிருந்து தோட்டக்காடுகளை வெட்டி ரப்பரும் செம்பனையும் காப்பியும் விளைவிக்க மலாயா வந்த தமிழ் மக்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு இப்பத்திரிக்கை இயங்கியிருக்கின்றது.
இப்படி சமூக நலனில் அக்கறை கொண்டு சிங்கையிலிருந்து வாரம் ஒருமுறை வியாழக்கிழமைகளில் இப்பத்திரிக்கை வெளியிடப்பட்டது என்பதை அறிகின்றோம்.
இதில் 10.1.1929 தேதியிடப்பட்ட இதழ் அக்காலகட்டத்தில் மலாயாவில் ஈப்போ நகரில் நடைபெற்ற ஒரு அகில மலாய இந்தியர் கருத்தரங்கம் பற்றிய செய்தியைப் பதிகின்றது.

இதில் சிறப்பு என்னவென்றால், அன்றைய மலாயா பிரித்தானிய ஆட்சியில் முக்கிய உறுப்பினராக இருந்த திரு. எஸ். வீராசாமி என்பவரது தலைமையில் ஈப்போவில் இந்தக் கருத்தரங்கம் நடைபெற்றது. மலாயாவின் பல பகுதிகளிலிருந்தும் பிரதிநிதிகள் இதற்கு வந்தனர் என்றும் தமிழ் மக்களின் முன்னேற்றம் பற்றி கலந்துரையாடப்பட்டது என்றும் அறிகின்றோம். இதில் நிறைவாக சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை:

1. மாநில அரசாங்கத்தில்(மலாயா மாநிலங்களில்) இந்தியர்களுக்குப் பதவி அளிக்கவேண்டுமென அரசாங்கத்தாரைக் கேட்டுக்கொள்வது.

2. இந்தியர்களுக்கு ஒருவியாபார சங்கத்தை அரசு ஏற்படுத்த வேண்டும்.

3. பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சமூக சேவைகள் ஆற்றுவதற்கும், பெண்கள் முன்னேற்றத்திற்கும் பயனளிக்கும் இயக்கங்களை ஆரம்பிக்க வேண்டும்.

4. கள்ளுக் கடைகள் பெருகியிருப்பதால் அது தொழிலாளர்களையும், மற்றவர்களையும் பாழ்படுத்துகின்ற காரணத்தால், எஸ்டேட்களிலும், பிற இடங்களிலுமுள்ள எல்லா கள்ளுக்கடைகளைகயும் எடுத்துவிடும்படி அரசாங்கத்தாரை மிகவும் வலியுறுத்துவது.

5. மலாயா நாட்டின் பலபாகங்களிலும் தமிழ் பள்ளிக்கூடங்களைத் தொடங்க வேண்டும். வயதான தொழிலாளர்களுக்கு இரவு பள்ளிக்கூடங்களை உருவாக்க வேண்டும்.

6. பி.ஐ. கப்பல்களில் இந்தியப் பிரயாணிகள் தாங்கமுடியாத கொடுமைகளுக்குள்ளாகின்றார்கள் என்பதால் அக்குறைகளை அரசு களைய ஏற்பாடு செய்ய வேண்டும். (இக்கால கட்டத்தில் கப்பல் பயணம் தான் தமிழர்கள் தமிழ்நாட்டிற்குச் சென்று வர இருந்த ஒரே போக்குவரத்து)

7. இந்தியர்களுக்கென தினசரி பத்திரிகை ஒன்று ஆரம்பிக்க வேண்டும்.

8. அகில மலாயா கூட்டுறவு சேமிப்பு சங்கத்தை ஆரம்பிக்க வேண்டும்.

9. தொழிலாளர் பாதுகாப்பு நிதி ஒன்றைச் சேர்க்கத் தொடங்க வேண்டும்.

10. இந்தியர்களின் தொண்டர் படை ஒன்றை நியமிக்க அரசாங்கம் உத்திரவளிக்க வேண்டும்.

11. இந்திய தொழிலாளர்கள் வசிப்பதற்குத் தகுதியான விவசாய நிலங்களை அனுமதிக்கவேண்டும்.

மலாயா சூழலைப் பொறுத்தவரை இந்தியர்கள் எனக் குறிப்பிடப்படுவது தமிழர்களை என்பதை நாம் நினைவில் கூறவேண்டும். இந்த அமைப்பு தமிழ் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அக்காலச் சூழலுக்கு ஏற்ற தீர்மானங்களை நிறைவேற்றி செயல்படத் தொடங்கியிருக்கின்றது என்பதைக் காண்கின்றோம். சிங்கை அன்றைய மலாயாவின் ஒரு பகுதி. அங்கிருந்துதான் இப்பத்திரிக்கை வெளிவந்திருக்கின்றது.

[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 17.9.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]
(இக்கட்டுரை தமிழ் வளர்ச்சி துறையின் உலகத் தமிழ் இதழ் 307ல் இன்று வெளிவந்துள்ளது)