Tuesday, January 6, 2004

Recollecting my teaching experiences (1997) - 5


பெரும்பாலும் மலேசிய நாட்டுச் சூழலில் தமிழ் பள்ளிக் கூடங்களில் ஆரம்ப நிலைக்கல்வியைப் படிக்கின்ற குழந்தைகள் வருமையான அல்லது நடுத்தரவர்க்கத்திற்கும் கீழான வசதிகளைக் கொண்டிருப்பவர்களின் குழந்தைகளாகவே அமைந்துவிடுவது உண்மை. குவாலலம்பூர், ஈப்போ, ஜொகூர் போன்ற இடங்களில் இந்த நிலை இல்லை என்று சொல்லமுடியும். ஆனால் பினாங்கைப் பொருத்தவரை இது தான் உண்மை நிலை. வருமையில் இருப்போரின் ழந்தைகளுக்குக் கணினியைப் பயன்படுத்தும் வாய்ப்புக்கள் அமையாமலேயே போய்விடுவதால் இங்கு இராமகிருஷ்ணா தமிழ் பள்ளியில் ஆசிரியர் வேலையில் இருந்த போதே கணினி வகுப்பை குழந்தைகளுக்கு ஆரம்பிக்க வேண்டும் என்று ஒரு திட்டத்தை உருவாக்கினேன்.

எனது திட்டம் முறையாக வடிமைக்கப்பட்டிருந்ததால் பள்ளி தலைமை ஆசிரியரும் (திருமதி.லலிதா) பள்ளியின் Parent-Teachers Association அங்கத்தினரும் இந்த திட்டத்திற்கு ஆதரவும் பண உதவியும் தருவதாகக் கூறியிருந்தனர். இதன் அடிப்படையில் ஒரு வகுப்பறையை இரண்டாகப் பிரித்து நூல் நிலையமாகவும், கணினி அறையாகவும் மாற்றம் செய்தோம். பள்ளியில் இந்த முயற்சிக்கு எனக்கு ஆதரவாக மகேஸ்வரி, புஷ்பா, ஷங்கர் ஆகியோருடன் மற்ற ஆசிரியர்களும் பெரிய அளவில துணை புரிந்தனர். பள்ளி நேரம் முடிந்தவுடன் இந்த அறையை வடிவமைப்பதில் ஈடுபடுவோம். 3 வார கடும் உழைப்பில் எங்களது கணினி அறை உருவானது.



பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் உதவித் தொகையுடன் இரண்டு கணினிகளை முதலில் வாங்கினோம். சில மாதங்களிலேயே ம.இ.கா (மலேசிய இந்தியர் காங்கிரஸ்) பினாங்கு மாநில குழுவும் ஒவ்வொரு தமிழ் பள்ளிக்கும் கணினி வழங்குவதாக அறிவித்து இந்த பள்ளிக்கு 5 கணினிகளை வழங்கியது. (மிகப் பழைய மாடல் கணினிகள். இதனை எந்த காரணத்திற்காக் வழங்கினார்கள் என்று இன்னமும் எனக்குப் புரியவில்லை. கிடைத்த 5ல் ஒன்று கூட உருப்படியில்லை!)




கணினி அறை மட்டும் வந்து விட்டால் போதுமா? அங்கு முறையாக பாடமும் நடைபெற வேண்டும் அல்லவா? அதற்காக 4ம் 5ம், 6ம் ஆண்டில் படிக்கும் ழந்தைகளுக்காக பிரத்தியேகமாக கணினி பாடங்களை (curriculum) உருவாக்கினேன். (இந்தப் பாடங்களைத் தமிழ்பள்ளிகளுக்கான தேசிய பாடத்திட்ட மேம்பாட்டு மையம் வருட மத்தியில் ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர்களுக்கான கணினி பாடத்தயாரிப்பு கருத்தரங்கிலும் வழங்கியிருந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது). இந்த பாடத்திட்டத்தின் அடிப்படையில் 1997 முதல் எங்கள் பள்ளியில் வகுப்பு நேரத்திலேயே கணினி பாடங்களையும் இணைத்து எல்லா தரப்பு மாணவர்களும் கணினியை அறிந்து கொண்டு அதனை பயன்படுத்தும் வகையில் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. பினாங்கிலேயே கணினி வகுப்புக்களை முதன் முதலில் தொடங்கிய பெருமை இராமகிருஷ்ணா பள்ளியைத் தான் சேரும்.

மாணவர்களுக்குக் கணினி வகுப்புகளுக்கு வருவதென்றால் கொள்ளை பிரியம். மிகுந்த உற்சாகத்துடன் இந்த வகுப்புக்கள் நடைபெற்றன. எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்களாகவும் இவை அமைந்து விட்டன.

No comments:

Post a Comment