இந்தப்பள்ளியில் வேலை செய்த காலகட்டத்தில் மறக்க முடியாத மற்றொரு நபர் இங்கு தோட்டக்காரராக வேலை செய்துவந்த மோகன் என்பவர். இவர் இன்றும் இதே பள்ளிக்கூடத்தில் வேலை செய்கிறார் என்று கடந்த முறை பினாங்கு சென்றிருந்த போது தெரிந்து கொண்டேன். தோட்டக்காரராக பணி புரிவதோடு மட்டுமல்லாமல் மற்ற சில அலுவலக வேலைகளும் இவர் பொறுப்பில்தான் இருந்தது. இவருக்கு கொஞ்சம் M.G.R மோகம் இருந்திருக்க வேண்டும். இவரது பேச்சு அலங்காரம் எல்லாம் கொஞ்சம் M.G.R போலவே செய்து கொள்வார்.
நல்ல மனம் படைத்த மனிதர். ஆசிரியர்களுக்குத் தேவையான உணவை வாங்கி வருவதும் கூட இவர் பொறுப்பில்தான் இருந்தது. எங்களுக்கு எது எது பிடிக்குமோ அவையெல்லாம் அவருக்கு அத்துப்படி. காலையிலேயே எங்களிடம் எந்த பலகாரம் வேண்டும் என்று கேட்டு பட்டியல் தயார் செய்து கொள்வார். எங்களுக்குத் தேவையான உணவை வாங்கி வருவதில் வல்லவர். எனக்கும் எனது சக ஆசிரியர்கள் சிலருக்கும் கேசரி ரொம்ப பிடிக்கும். அதிலும் Dato Keramat சாலையில் இருக்கும் 'பால்சாமி' கடை கேசரி மட்டும் தான் எங்களுக்குப் பிடிக்கும். இந்த மாதிரி சுவையான சேசரியை வேறு எங்கும் நான் இதுவரை சாப்பிட்டதில்லை. (இந்தக் கடை இப்போது மூடப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றலாகிவிட்டதாக கேள்விப்பட்டேன்). எங்களுக்குக் கேசரி பிடிக்கும் என்பது மோகனுக்குத் தெரியும். நாங்கள் சொல்ல மறந்தாலும் மறக்காமல் வாங்கி வந்து விடுவார்.
நான் ஆசிரியராக இருந்த சமயத்திலேயே இவருக்குத் திருமணம் நடந்தது. இப்போது குழந்தைகளும் இருக்ககூடும் என்று நினைக்கிறேன்.
மரங்கள் செடிகொடிகள் மேலும் அவருக்கு அலாதியான பிரியம் இருக்க வேண்டும். சம்பளத்திற்கு வேலை செய்கிறோம் என்ற எண்ணமில்லாமல் ரசித்து ரசித்து தோட்டத்தைப் பார்த்துக் கொள்வார். பள்ளியைச் சுற்றியும் இவரது கைவண்ணத்தில் அழகான பூந்தோட்டம் இருப்பதை இப்போதும்
பார்க்க முடியும்.
ஒரு தொழிலைச் செய்யும் போது அதை முழு மனத்தோடு செய்யும் போது செய்கின்ற வேலை சிறப்பாக அமைந்து விடுகின்றது. சம்பளத்திற்குத் தானே செய்கின்றோம் என்று கடமைக்காகச் செய்வதில் எந்த வித பயனும் இருப்பதில்லை. எப்படிப்பட்ட வேலையாக இருந்தாலும் அதில் ஒரு ஈடுபாடு இருக்க வேண்டும். இல்லையென்றால் வேலைக்கு வருவதற்கே பிடிக்காத மனநிலை, வெறுப்பு எல்லாம் கூடி மன அழுத்தத்தை உண்டாக்கிவிடும். நான் ஆசிரியராக வேலை செய்து கொண்டிருந்த காலகட்டத்திலேயே ஆசிரியர் தொழிலுக்கு சற்றும் பொறுத்தமில்லாத சில ஆசிரியர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் அவர்களோடு பழகும் சந்தர்ப்பமும் கிட்டியது. அவற்றையும் அடுத்த எனது நினைவலைகளில் பகிர்ந்து கொள்வேன்.
No comments:
Post a Comment