இன்னும் சில தினங்களில் மலேசியா செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் வேளை இது. வரும் சனிக்கிழமை ப்ராங்பர்ட்டிலிருந்து கோலாலம்பூர் பயணம். எப்போதும் மலேசியா செல்ல ஆயத்தம் செய்யும் போது மனமெல்லாம் சொல்ல முடியாத சந்தோஷம் சேர்ந்திருக்கும். குடும்பத்தினர், நண்பர்களை வருடத்திற்கு ஒருமுறை சந்திப்பது என்பது வழக்கமாகி விட்டது. ஆனால் எப்போதும் இருக்கும் அந்த அளப்பறிய சந்தோஷம் எனக்கு இப்போது இல்லை.
தாய் நாடு என்று சொல்லும் போது தாய் என்ற சொல்லும் சேர்ந்தே வருகின்றது. எனது அம்மா இவ்வுலகை விட்டு மறைந்து 2 மாதங்கள் ஆகின்றன. எனது இந்த மலேசிய பயணத்தை எவ்வளவோ ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் அம்மா.
செப்டம்பர் 11 அவர்களுக்கு பிறந்தநாள். அதனை சிறப்பாக என்னோடு சேர்ந்து கொண்டாட வேண்டும் என்று மிகுந்த ஆசை அவருக்கு. அதனை திட்டமிட்டு வைத்திருந்தோம். ஆனால் மனிதரால் திட்டமிட மட்டும் தான் முடியும். நடப்பது அனைத்தும் இறைவனின் கையில் தான் என்பதை உணர வைக்கும் வகையில் அம்மாவை இழந்து நிற்பது மனதிற்கு மிகுந்த வருத்தமாக இருக்கின்றது. தாய் இல்லாத எனது தாய் நாட்டிற்கு செல்வதே மணதிற்கு கணமாக இருக்கின்றது.
அம்மா மிகுந்த திறமைசாலி. தமிழகத்தில் பிறந்து பின்னர் திருமணமாகி மலேசியா வந்தவர். திருமணத்திற்குப் பிறகு குடும்பத்திற்குள் மட்டுமே அடங்கி விடாமல் தொடந்து சித்த வைத்தியம் படித்து மருத்துவத் துறையில் டிப்ளோமா பெற்றவர்.
சமூகப் பணிகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட அம்மா பினாங்கு பயணீட்டாளர் சங்கத்தில் சமூக சேவகியாக சில காலம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதன் பின்னர், தொடர்ந்து மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம், இந்து சங்கம் போன்ற தொண்டூழிய சங்கங்களில் பல வருடங்கள் சேவையாற்றியவர். தமிழ் சிறுகதை எழுத்தாளரும் கூட.
அம்மா கொஞ்சம் வித்தியாசமான ஒரு பிறவிதான். எனக்கு அவர் எழுதிய சில கடிதங்களை நான் பலமுறை படித்துப் பார்ப்பதுண்டு. அவை கவிதைகள் போல இருக்கும். பலமுறை இணையத்தில் எழுதப் பழகிக்கொள்ளுமாறு சொல்லியும் அதனை அவர்கள் முக்கியமாகக் கருதாமல் இருந்ததுதான் அவரது இறுதி காலங்களில் எனக்கு பல நேரங்களில் அவர் மேல் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த முறை எனது விடுமுறையில் நேரத்தை கொஞ்சம் செலவழித்தி தமிழில் டைப் செய்ய பழக்கித்தருவதாக சொல்லியிருந்தேன். அவையெல்லாம் இப்போது நிறைவேறாத ஆசைகளாகவே போய்விட்டன.
ஆனாலும் அம்மாவின் சிறுகதைகளை தொகுத்து (1000க்கும் மேற்பட்டவை) அவற்றை மின்பதிப்பாக்கம் செய்ய வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கான முயற்சிகளை இந்த முறை மலேசியாவில் இருக்கும் போது மேற்கொள்ள நினைத்திருக்கின்றேன்.
இறைவனின் அருளோடு இந்த முயற்சி வெற்றி பெறவேண்டும்.
No comments:
Post a Comment