இது மலேசிய தமிழ் எழுத்தாளர் பேராசிரியர் ரெ.கார்த்திகேசுவின் அண்மைய நாவல்.
மின்னஞ்சல் வழி கேட்டதுமே சிரமம் பாராது எனது இல்ல மிகவரிக்கு புத்தகங்களை உடனே அனுப்பி வைத்த ரெ.கா. அவர்களுக்கு முதலில் எனது நன்றிகளைச் சொல்லத்தான் வேண்டும்..
சில நாவல்களின் முதல் ஒரு சில பக்கங்களைப் புரட்டியதுமே, நாளை படிக்கலாமே என்று தோன்றும். இந்த நாவல் அப்படியல்ல. படிக்க ஆரம்பிக்கும் போதே முழுவதையும் படித்து முடித்து விட வேண்டும் என்ற ஆவல் ஆரம்பத்திலேயே தோன்றுகின்றது. ஒரு எதிர்பார்ப்பை முதலிலேயே கொடுத்து வாசகர்களை நாவாலோடு சேர்த்துக் கொண்டு அழைத்துச் சென்றிருக்கின்றார் நூலாசிரியர். இந்த பாணியை அவரது முந்தைய நாவல்களிலும் கண்டிருக்கின்றேன். இதுவே இவரது நாவல்களின் வெற்றிக்கு அடைப்படையாக அமைந்திருக்கின்றது என்றும் சொல்லலாம்.
இந்நூலின் முன்னுரையில்(முன்னீடு) எஸ்.பொ அழகாக ஒரு கருத்தை வைக்கின்றார் - "மலேசியத் தமிழ் சூழல் இந்நாவலிலேயே கமழ்வதனால் தமிழ் இலக்கியத்தின் கதை நிகழ் களம் விசாலம் அடைகின்றது" என்கிறார் எஸ்.பொ. உலகம் முழுவதும் தமிழர்கள் பல்வேறு காரணங்களுக்காகப் புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வேறூன்றி நிற்கின்ற காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம். தமிழ் மக்களின் வாழ்க்கை என்பது தமிழகமோ, அல்லது இலங்கைக்கோ மட்டிற்கும் உரிய ஒன்றாக இருந்த நிலை மாறி பல் வேறு நாடுகளில் தமிழ் மக்களின் வாழ்க்கை பயணித்துக் கொண்டிருக்கின்றது. தமிழர்கள் தங்களது தாயகத்திலிருந்து மற்ற பல நாடுகளுக்குச் சென்று வாழும் போது அந்நாட்டுக் கலாச்சாரம், மொழி, பண்பாடு ஆகியவற்றோடு கலந்துவிட்ட ஒரு கலவையாகவே புலம் பெயர்ந்த தமிழர்களின் மொழியும் பண்பாடும் வெளிப்படுகின்றது. 180 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்திலிருந்து (இலங்கையிலிருந்தும் கூட) புலம் பெயர்ந்து மலேசியா சிங்கப்பூரில் வாழும் தமிழ் மக்கள் இதற்கு ஒரு நல்ல சான்று.
மலேசிய தமிழ் வித்தியாசமானது. பல மலாய் சொற்கள் அன்றாட பேச்சுத் தமிழில் பிரித்தெடுக்க முடியாத வகையில் கலந்து விட்டிருக்கின்றன; மலேசிய இந்துக் கோயில்களில் வழிபாட்டிற்கு வருகின்ற சீன மக்களையும் பார்க்க முடியும்; தைப்பூசம் தேசிய விடுமுறையாக எல்லா இன மக்களும் கொண்டாடும் திருவிழாவாக விளங்குகின்றது; இப்படிப் பல கலாச்சாரக் கலவைகள் மலேசியக் கலாச்சாரத்தூடே பிண்ணிப் பிணைந்துவிட்ட ஒரு நிலை இங்கு உண்டு.
இதை நோக்கும் போது, இந்தக் கலவையான மலேசியத் தமிழை, மக்களின் சிந்தனையை, இந்த தனித்துவம் வாய்ந்த வாழ்க்கை முறையை பதிவுசெய்வது மிக முக்கியமான ஒன்றாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் எனபது சந்தேகமற்ற ஒரு விஷயம்.
ரெ.கா மலேசிய தமிழ் சிறுகதை எழுத்தாளர்கள் பட்டியலில் நிதர்சனத்தை வெளிக்காட்டும் வகையில் கதை புனையும் ஒரு சில எழுத்தாளர்களில் சேர்க்கப் பட வேண்டியவர். மலேசிய தமிழ் சிறுகதைகளில், நெடுங்கதைகளில், நாவல்களில் பல ஆண்டுகள் அறிமுகம் உள்ள எனக்கு இது அனுபவித்துத் தெரிந்த ஒன்று. மலேசிய தமிழ் சிறுகதை எழுத்தாளர்களில் பலர் அதீத கற்பனையில், கனவுலக வாழ்க்கையை மனதில் கொண்டு, புனிதத்துவத்தை தங்கள் கதைகளின் வழி எடுத்துக் காட்ட முயல்பவர்கள் என்பது எனது (தனிப்பட்ட) கருத்து. பல சிறுகதை எழுத்தாளர்கள், நடைமுறையில் உள்ள ஒரு கருத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அவற்றை அதீத கற்பனையோடு சேர்த்து படைத்து வாசகர்களுக்குக் கொடுத்துவிடுவதன் வழி நிம்மதி அடைந்து விடுகின்றனர். பலரது எழுத்துக்களில் தனிமனித ஒழுக்கம் பண்பாடு போன்றவற்றிற்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கதை என்பது மாறி நன்னெறி பாட போதனை போன்ற வகையில் எழுதி வாசகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்திவிடும் நிலையயும் அமைந்திருப்பதை மறுக்க முடியாது. சில வேளைகளில் கதையின் கருவும், கதை செல்லும் நடையும் மனதைத் தொட்டாலும் மொழி வளம் குறைந்து சுவை குன்றி அமைந்திருக்கும். இந்த நிலையிலிருந்து மாறுபட்டு நடைமுறையில் உள்ள ஒரு விஷயத்தைத் தெளிவாகப் பார்த்து அதனை நல்ல கோர்வையாக மலேசியத்தமிழில் தருவதில் வெற்றி கண்டவர் ரெ.கா. அந்த வகையில் இந்த நாவலையும் சேர்த்துக் கொள்ளலாம்.
இலக்கியம் என்பது ஒரு வகையில் நடப்பை காட்டுகின்ற கண்ணாடி. பல நாவல்களும் சிறுகதைகளும் ஒரு கால கட்டத்தின் சரித்திர நிகழ்வுகளைக் கோடி காட்டுகின்ற முக்கிய ஆவணங்களாகக் கூட அமைந்துவிட்டிருக்கின்றன. என்னைப் பொறுத்தவரையில் சில விஷயங்களை அளவான கற்பனையோடு கலந்து கொடுப்பதில் தவறில்லை. ஆனால் எழுத்தாளர்கள் கற்பனையை மட்டுமே மையமாக வைத்து எழுதும் போது கதையின் ஊடாகச் சொல்ல நினைக்கும் செய்தி முழுமையாக, படிக்கின்ற வாசகர்களை வந்தடையாமல் போய்விடுகின்றது என்பதே வருத்தத்தைத் தரும் உண்மை.
சரி. நாவலுக்கு வருவோம். இந்த நாவலின் பெரும்பகுதி பினாங்கு மாநிலத்தையும் மலேசிய அறிவியல் பல்கலைக் கழகத்தையும் சுற்றி வருகின்றது. பல்கலைக்கழகத்தையும் அதன் சூழலையும் இந்த நாவலின் வழி நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றார் நூலாசிரியர். பல்கலைக்கழகத்தின் அங்கமான அருங்காட்சியகம், தொல்பொருள் ஆராய்ச்சித்துறை அலுவலகம், விருந்தினர் விடுதி, பதிவாளர் அலுவலம், என பல கட்டிடங்களை எந்த மாற்றமும் இன்றி இந்த நாவலில் உலவ விட்டிருக்கின்றார். சில உண்மையான நபர்களின் பெயர்களும் எந்த மாற்றமுமின்றி நாவலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. முன்னாள் உதவிப் பதிவாளர் அருணாச்சலம் இந்த நாவலில் உலவுவது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இப்படி பற்பல நிகழ்கால உண்மைகள் இந்த நாவலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
நாவலின் முழுமையும் ஒரு வகையில் மனித உணர்வின் போராட்டத்தை மையமாக வைத்தே பிண்ணப்பட்டிருப்பது படிக்கின்ற வாசகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுவதாக அமைந்துவிடுகின்றது. இது ஒரு வகையில் இந்த நாவலின் சிறப்பு என்றும் சொல்லலாம்.
மலேசிய உணவு வகைகள் சுவையில் சிறந்தவை என்பது மலேசிய உணவை சுவைத்தவர்களுக்கு நிச்சயமாகத் தெரியும் . வெளி நாடுகளில் இதே உணவு வகைகள் சில பிரத்தியேக உணவகங்களில் கிடைக்கின்ற போதிலும் உள்ளூரில் கிடைக்கும் உணவின் சுவையை கொண்டிருப்பதில்லை. இதனை கதையின் நாயகன் கதிரேசன் நாசி லெமாக் - சுவைத்து உண்ணுவதாகக் காட்டும் போது ரசித்து உணர முடிகின்றது. அதே சமையம் இந்த உணவை மலேசியாவில் இருந்து சுவைக்க முடியவில்லையே என்ற ஏக்கமும் ஏற்படாமல் இல்லை. கதாபாத்திரங்கள் உடுத்துகின்ற உடைகளின் தன்மையையும் விட்டு விடவில்லை ஆசிரியர். மலேசியத் தமிழ் மாதர்கள் பெரும்பாலும் வீட்டில் இருக்கும் போது கைலி சட்டை அணிந்திருப்பது வழக்கம். சாவித்திரி கதாபாத்திரத்தின் வழி இந்த விஷயம் காட்டப்படுகின்றது.
கதையின் மையக்கரு தாய்-மகன் என்ற பாசத்தை பற்றியதாக இருந்தாலும் கதையின் வழியாக மலேசிய நாட்டின் பத்திரிக்கை சுதந்திரத்தின் அளவுகோள் எந்த வரையரைக்கு உட்பட்டு வைக்கப்படிக்கிருக்கின்றது என்று கூறியிருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஒரு வகையில், மலேசியாவில் ஜனநாயகம் குன்றி பத்திரிக்கை சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலை அமைந்திருப்பதை, பண்ணாட்டு கருத்தரங்கம் ஒன்றில் நிகழும் கேள்வி பதில் அங்கத்தின் வழி வெளிக்காட்டுகின்றார். மலேசிய பல்கலைக் கழக விரிவிரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் உலவும் உட்பூசல், கருத்து விவாதங்கள், சுயநலமிக்க போக்கு, பிறரது உழைப்பில் பெயர்வாங்கும் தன்மை போன்ற உள்ளூர் மக்கள் அறிந்த பல உண்மை விஷயங்களும் பரவலாக கதையினூடே வந்து போகின்றன. தயக்கமின்றி இந்த உண்மை விஷயங்களை நாவலினூடே பதிவுசெய்திருப்பதற்காகவே நாவலாசிரியரை நிச்சயமாகப் பாராட்டலாம்.
கதையின் நாயகன் கதிரேசனின் சிந்தனையை, மனப் போராட்டத்தை அங்கங்கே அழகான தமிழில் படிக்கும் போது அந்த சொற்களில் உள்ள உண்மை மனதைத் தொடுகின்றது. இதற்கு உதாரணமாக பல வாக்கியங்களைக் சொல்லலாம். உதாரணமாக ஒரு பகுதி..
" ஒரு தெளிவு ஏற்படுவது போல தெரிகையில் தெரிந்த விஷயங்களின் விளிம்புகளில் இருந்து பார்க்கும் போதுதெரியாத விஷயங்களின் உலகம் இன்னும் பெரிதாக விரிந்து கொண்டே போவதைப் பார்த்து அவன் வியந்து சோர்ந்ததுண்டு. இந்த ஆரவாரமிக்க அறிவின் போதையில் தன்னை சுற்றியிருந்த மனிதர்களும் குடும்பமும் சுருங்கிப் போயிருப்பது உண்மை தான். தன் வாழ்வும் தன் விருப்பங்களுமே முக்கியம் என்ற நிலை தனிந்து சமுதாயம், உலகு என் அவன் சிந்திக்க ஆர்ம்பித்திருந்தான்.." பல விஷயங்களைக் கற்றுத் தெரிந்து அறிவில் விசாலம் அடையும் போது ஒரு மனிதன் தனது உலகத்தைப் பார்க்கும் பார்வையிலும் விசாலத்தை அடைவது உண்மை. தான் தனது குடும்பம் தனது நேசத்திற்கு உரியவர்கள் என்ற குருகிய வட்டம் மறந்து பொது நல சிந்தனை ஆட்கொண்டு விடுவது அறிவு விரிவடையும் போது ஏற்படும் விளைவு.
மேலை நாடுகளில் பெற்றோர் குழந்தைகளை அடிப்பது, உடல் அங்கங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தண்டனை கொடுப்பது போன்றவை சட்டத்தால் தண்டிக்கப்படக்கூடிய தவறுகளாகப் பார்க்கப்படுகின்றன. மலேசிய நாட்டைப் பொறுத்தவரை இவ்வகைக் குற்றங்கள் சட்டத்தினால் தண்டிக்கப்படக்கூடியவையாக இருப்பினும் பலர் இதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. தங்கள் பிள்ளைகளை அடிப்பதற்கும் தண்டனை தருவதற்கும் பெற்றோர்களுக்கு இல்லாத உரிமையா என்று கேள்வி எழுப்பும் பெற்றோர்கள் பலர் இன்னமும் உண்டு. ஆக பல இடங்களில் பெற்றோர் குழந்தைகளை அடிப்பது இன்னமும் நடைமுறையில் உள்ள ஒரு விஷயம். இந்த விஷயம் இந்த நாவலில் முக்கிய அங்கமாக அமைந்திருப்பதும் அதனால் ஏற்படுகின்ற மன உளைச்சலும் மிக மிக சிறப்பாக விவரிக்கப்பட்டிருக்கின்றன. கதிரேசன் சிறு வயதில் அனுபவிக்கும் கொடுமைகள் பின்னாளில் மனதை விட்டு அகலாமல் பூதாகாரமாக விரிந்து வியாபித்து பய உணர்வை அவனுள்ளே ஏற்படுத்துவதும். பிறரை அண்டி வாழ வேண்டிய நிலை தனக்கு ஏற்பட்டு விட்டதே என்று வருந்துவதும் மனதைத் தொடுகின்றன.
கதையின் முடிவு நன்று. இறுப்பினும் கொஞ்சம் தமிழ் சினிமா சாயல் தென்படுகின்றது. கதிரேசனை அவன் தாயாரோடு சேர்ந்து வாழ்வது போலக் காட்டியிருக்கலாம். இது வாசகராகிய எனது விருப்பம் - கதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்ல முடியாது. ஆசிரியரின் விருப்பத்தைப் பொறுத்தது. ஆனாலும் இப்படியும் அமைந்திருக்கலாமே என்று எண்ணத்தோன்றுகிறது. தனது சவலைத் தம்பியை அனாதை இல்லத்திலேயே விட்டு வருவது நிதர்சனத்தைக் காட்டுகின்றது. கதிரேசன் பாரதியோடு வாழ்க்கையில் கைகோர்த்து செல்வது மலேசிய தமிழ் கதை உலகத்திற்கு கொஞ்சம் வித்தியாசமான விருந்து.
சுவாரசியமான கதை களம்; பல உண்மைப் பதிவுகள், சிந்திக்க வைக்கும் கதாபாத்திரங்கள்; படிக்கின்ற வாசகர்களை சிந்திக்கத் தூண்டும் சொல் பிரயோகங்கள் - இப்படி பல நல்ல அம்சங்களோடு மலேசியத்தமிழில் கலந்து விட்ட மலாய் சொற்களின் சேர்க்கையோடு இனிய தமிழில் ' சூதாட்டம் ஆடும் காலம்' என்ற தலைப்பிலான இந்த நாவலை வழங்கியிருக்கும் ரெ.கா அவர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் பல சுவையான கதைகளை, நாவல்களை நூலாசிரியர் எழுத வேண்டும், அது மலேசியத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு நிச்சயம் வளம் சேர்க்கும்.
1 comment:
அழகான விமர்சனம் சுபா. புத்தகத்தை படிக்க்த் தூண்டுகிறது. நல்ல நடையில் அருமையாக எழுதியுள்ளீர்கள் சுபா,வாழ்த்துக்கள்.
Post a Comment