Wednesday, March 19, 2025

மலாயா ஆவணங்கள் – 1: கப்பல் பயணச் செய்தி




முனைவர் க.சுபாஷிணி

மலாயாவிலிருந்து தமிழ் பத்திரிக்கைகள் வெளியிடப்பட்ட முயற்சி 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வேகமெடுத்தது. கிபி 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேலும் பல பத்திரிக்கைகள் வெளிவந்தன.  “பினாங்கு ஞானாசிரியன்” எனும் பெயர்கொண்ட வாராந்திர பத்திரிக்கை அப்படி அக்காலகட்டத்தில் வெளிவந்த ஒரு முக்கிய பத்திரிக்கை எனலாம்.

நான்கு பக்கங்கள் மட்டுமே கொண்டிருக்கும் பத்திரிக்கை இது. முகப்பில் பத்திரிக்கை, அதன் வெளியீட்டாளர்கள், புரவலர்கள் பற்றிய செய்திகளும், உள்ளே இரு பக்கங்களில் உள்நாட்டு அயல்நாட்டுச் செய்திகளும், கடைசிப்பக்கத்தில் விளம்பரங்களும் கொண்ட வகையில் இப்பத்திரிக்கை வெளியிடப்பட்டு வந்தது.

தமிழ்நாட்டிலிருந்து வணிகம் செய்ய வந்த தமிழ் மக்கள் பெரும்பாலும் பினாங்கு, கிள்ளான், சிங்கப்பூர் ஆகிய பகுதிகளிலிருந்து கப்பல் பயணம் எடுத்து தமிழ்நாட்டிற்குச் செல்வது அப்போது வழக்கமாக இருந்தது. அது மட்டுமின்றி இலங்கை, பர்மா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கும் இக்காலகட்டத்தில் வணிகம் செய்து வந்தனர். ஆகவே கடல் வழியாகக் கப்பல் பயனம் மேற்கொள்வது என்பது அன்று, அதாவது 18, 19, 20ஆம் நூற்றாண்டு மலாயாவில் வாழ்ந்து வந்த தமிழ் மக்களுக்கு முக்கியத் தேவையாகவே இருந்தது.

அவ்வகையில் கப்பல் பயணங்களைப் பற்றிய அறிவிப்புக்களை வெளியிடுவது பத்திரிக்கைகளின் விளம்பரப் பகுதியில் இடம்பெறும் ஓர் அங்கமாக இருந்துள்ளதைக் காண்கின்றோம். 1912ஆம் ஆண்டு ஏப்ரல் மாத ”பினாங்கு ஞானாசிரியன்” பத்திரிக்கையில் அவ்வகையில் வெளிவந்த ஒரு அறிவிப்பு நமக்குப் பல தகவல்கல்ளை வழங்குகின்றது.

அக்காலகட்டத்தில் சிங்கை மலாயாவின் ஒரு பகுதியாகவே இருந்தது. அங்கிருந்து இன்றும் தமிழர்கள் அதிகம் வசிக்கின்ற ஒரு பகுதியாகத் திகழ்கின்ற கிள்ளான் பகுதியில் அமைந்திருக்கும் கிள்ளான் துறைமுகத்திலிருந்தும் (Port Klang) கப்பல்கள் ஒவ்வொரு வாரமும் இயங்கின. கிள்ளான் துறைமுகம் ஆங்கிலேயர்களின் காலணிய ஆட்சிக்காலத்தில் சுவெட்டெனஹாம் துறைமுகம் (Port Swettenham)  என பெயர் கொண்டிருந்தது. பின்னர் Port Klang என சுதந்திரத்திற்குப் பின்னர் பெயர் மாற்றம் பெற்றது.

பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி எனப் பெயர்கொண்ட ஆங்கிலேயரின் கப்பல் நிறுவனம் இயக்கிய கப்பல்களும் இப்பகுதியில் மக்கள் போக்குவரத்துக்கு பயணச் சேவையை வழங்கி வந்தன.

வாரம் மூன்று முறை சிங்கப்பூரிலிருந்து  கிள்ளானின் சுவெட்டெனஹாம் துறைமுகம் (பத்திரிக்கையில் போர்ட்ஸ் வெட்னம்) கிள்ளான் துறைமுகத்திற்குப் பயணச் சேவை இருந்தது.   சிங்கப்பூரிலிருந்து வாரம் இருமுறை பெர்குயி, மோல்மின் பகுதிகளுக்குப் பயணம் இருந்தது.  மாதம் இருமுறை சீனா, ஜப்பான், சிங்கப்பூருக்கும் கப்பல் பயணம் செயல்பட்டது.  வாரம் ஒருமுறை ரங்கூன், கல்கத்தா துறைமுகங்களுக்கும் கப்பல் சேவையை இந்த நிறுவனம் வழங்கியது பற்றி இச்செய்தி வழி அறிகின்றோம்.  அதுமட்டுமன்றி நாகப்பட்டணம், மதராஸ், கூடலூர், காரைக்கால் பகுதிகளுக்கும் கப்பல் சேவை இயங்கியது.

அன்று கடல்போக்குவரத்து, வணிகத்திற்காகத் தமிழ்நாட்டிலிருந்து பயணிக்கின்ற மக்களுக்கு இன்றியமையாத ஒரு தேவையாக இருந்தது.  மலாயாவில் வணிகம் செய்து வந்த பெரும்பாலோர் தமிழ்நாட்டில் உறவினர்களைக் காணச் செல்வதும், பொருட்களை ஏற்றி வரச் செல்வதும், அயல்நாடுகளுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்வதும் மிக இயல்பாக நடைபெற்ற காலகட்டமாகவும் இதனைக் காணலாம்.

--------------------

[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]

No comments:

Post a Comment