முனைவர் க.சுபாஷிணி
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மலாயாவில் தமிழ் பத்திரிகைகள் வெளியிடப்பட்ட முயற்சி தமிழ் பற்றாளர்கள் சிலரால் முன்னெடுக்கப்பட்டன. அவ்வகையில் வெளிவந்த பத்திரிகைகளுள் ”பினாங்கு ஞானாசிரியன்” என்ற தினசரி பத்திரிக்கையும் ஒன்று.
இந்தப் பத்திரிக்கைக்கு சந்தாதாரர்களை சேகரிக்கும் திட்டத்தையும் ஆசிரியர் குழு செயல்படுத்திருந்தார்கள். மலாயாவிற்குள் இந்த பத்திரிகையை வாங்குபவர்கள் ஒரு மாதத்திற்கு மொத்தம் 75 காசு மாத சந்தாவாக கொடுக்க வேண்டும். வெளியூர் அதாவது, பர்மா சிங்கை, இலங்கை, இந்தியா போன்ற பகுதிகளில் இருந்து வாங்குவோருக்கு மாதம் ஒன்றுக்கு ஒரு ரிங்கிட் மாத சந்தா; தனி பத்திரிக்கையாக வாங்குவோருக்கு ஒரு பத்திரிக்கையின் விலை ஐந்து காசு என்றும் நிர்ணயம் செய்திருந்தார்கள்.
அது மட்டுமல்ல இந்தப் பத்திரிகைகளுக்கு 10 சந்தாதாரர்களை அறிமுகப்படுத்தி வைப்பவர்களுக்கு ஒரு பத்திரிக்கை இலவசமாக அனுப்பப்படும் என்ற சலுகைகளையும் அறிமுகப்படுத்தி இருந்தார்கள். இந்த வணிக உத்தி இப்பத்திரிகை தொடர்ந்து வெளிவருவதற்கு அப்போது உதவி இருக்கின்றது.
இந்த தினசரி பத்திரிகையில் மொத்தம் நான்கு பக்கங்கள் மட்டுமே அடங்கியுள்ளன. முதல் பக்கத்தில் இப்பத்திரிக்கை பற்றிய அல்லது இப்பத்திரிகை தொடர்பான அறிவிப்புகள், இதன் நிறுவனர்கள், இப்பத்திரிகை அச்சடிக்கப்படும் அச்சகம் பற்றிய செய்திகள் ஆகியவை முழு பக்கத்தை நிறைக்கின்றன. நடுவில் உள்ள இரண்டாம் பக்கமும் மூன்றாம் பக்கமும் உள்ளூர் செய்திகள், அயல்நாட்டு செய்திகள் பலவற்றை தாங்கி வெளிவரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. 1912 ஆம் ஆண்டு கால கட்டத்தில் முதலாம் உலகப் போர் தொடர்பான துருக்கி இத்தாலி இரண்டு நாடுகளுக்குமிடையிலான போர் தொடர்பான செய்திகள் ஒரு பக்கத்தில் மிகப்பெரிய அளவை எடுத்துக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. அக்காலகட்டத்தில் ஆசியாவில் தமிழர்களிடையே முதலாம் உலகப் போர் தொடர்பான தகவல்கள் சுவாரசியத்தை ஏற்படுத்துகின்ற செய்தியாக அமைந்திருந்தது என்பதை வெளிக்காட்டும் வகையில் இது அமைகிறது. இப்பத்திரிக்கையின் இறுதி பக்கத்தில் விளம்பரங்கள் இடம் பிடிக்கின்றன. அக்காலச் சூழலில் கடல் பயணம், மருந்து வகைகள், உணவு விற்பனை, அறிவிப்புச் செய்திகள் போன்றவை இறுதிப் பக்கத்தை நிறைக்கின்றன. இந்த வகையில் முதல் பக்கத்தில் இருந்து நான்காம் பக்கம் வரை செய்திகள் இப்பத்திரிக்கையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
1912 ஆம் ஆண்டு வாக்கில் இப்பத்திரிக்கையின் மேலாளராக கே கே சம்சுகனி ராவுத்தர் பெயர் குறிப்பிடப்படுகின்றது. விளம்பரங்கள் இப்பத்திரிக்கையில் வர வேண்டும் என நினைப்பவர்கள் மேலாளரை நேரடியாக தொடர்பு கொண்டு சந்தா தொகை மற்றும் விளம்பரத்திற்குக் கொடுக்க வேண்டிய தொகை ஆகியவற்றை அனுப்ப வேண்டும்; முன்பணம் அனுப்பினால் மட்டுமே பத்திரிக்கையும் விளம்பரமும் இணைக்கப்படும் என்ற செய்தியும் இதில் குறிப்பிடப்படுகின்றது.
இப்பத்திரிக்கையின் புரவலர்களாக பலரது பெயர்கள் பட்டியலில் இடம் பெறுகின்றன.
பச்சி ஹாஜிமுகமது நூர், கோ கா கம்பெனி இப்ராஹிம் மரைக்காயர், கோ இ கம்பெனி மஞ்சூர் ஷா மரைக்காயர், கோ.இ.கம்பெனி, மஞ்சூர்ஷா மரைக்காயர், உ.மவுலாசா மரைக்காயர், கி.வாஞ்ஞூர்பக்கீர் மரைக்காயர், வ.மு.நைனா மரைக்காயர் கம்பெனி, சே. சீனிமதாறு ராவுத்தர், க. மு. செய்யது அபூபக்கர், கா. அ. காண்முகம்மது கம்பெனி, முகமது அலி அம்பலம், மொ. கா. காதிறுபாவா, காசிக்கடை நெய்னா முகம்மது, எம் கதிர்வேலு, மா. நா. கணக்கு சுப்பிரமணிய பிள்ளை, எல். சுப்பையா ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பெறுகின்றார்கள். பெரும்பாலும் இஸ்லாமியர்களால் வெளியிடப்பட்ட, ஏனைய சமூகத்தோரின் ஆதரவைப் பெற்ற ஒரு பத்திரிக்கையாக இது வெளிவந்தது.
தமிழ்நாட்டிலிருந்து மலாயாவிற்கு வணிகம் செய்யப் புலம்பெயர்ந்த மரைக்காயர்கள் தொடர்ச்சியாக தமிழ் இதழியல், நாளிதழ், இலக்கிய முயற்சிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். அம்முயற்சியின் தொடர்ச்சியை இன்றும் நாம் காண்கின்றோம்.
மலாயா 1957 ஆம் ஆண்டு ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றது. இக்கால கட்டத்திலும் சில பத்திரிகை முயற்சிகள் தொடர்ந்தன. அதன் பின்னர் தமிழ் முரசு, தமிழ் மலர், தமிழ் நேசன், மலேசிய நண்பன் போன்ற பத்திரிகைகளை மலேசிய மண்ணில் வெளிவந்த முக்கியமான பத்திரிகைகளாக நாம் கூறலாம்.
தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து எண்ணிக்கையில் அதிகமாக வாழ்கின்ற நாடுகளில் மலேசிய நாடு முக்கியத்துவம் பெறுகின்றது. இங்கு இன்றும் கூட தமிழ் பள்ளிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இன்றைக்கு நூறாண்டுகளுக்கு முன்னர் மலாயா மண்ணில் அன்றைய தமிழ் ஆர்வலர்கள் வித்திட்ட முயற்சிகள் இன்றும் மலேசிய மண்ணில் தொடர்ந்து தமிழ் மக்களிடையே வாழ்வதற்கு அடிப்படையை வகுத்துக் கொடுத்திருக்கின்றது. அதில் பினாங்கு ஞானாசிரியர் எனும் இப்பத்திரிக்கையின் பங்கு அளப்பரியது.
No comments:
Post a Comment