முனைவர் க.சுபாஷிணி
19 ஆம் நூற்றாண்டில் மலாயாவின் பினாங்கிலிருந்து வெளிவந்த பத்திரிக்கை முயற்சிகளில் "பினாங்கு வர்த்தமானி" பத்திரிக்கையும் ஒன்று. இது வாரம் தோறும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் பதிப்பிக்கப்பட்டது.
பினாங்கு வர்த்தமானி என்ற பத்திரிக்கையும் அதனுடன் ஆங்கிலத்தில் இணைந்து வெளியிடப்பட்ட The Penang News என்ற பத்திரிக்கையும் ஒரே நிர்வாகத்தினரால் வெளியிடப்பட்டன. பினாங்கில் ’எண் 1, பிஷப் சாலை’யில் இயங்கிய சிலோன் வர்த்தக நிறுவனத்திற்காக எஸ் அயாத்தோர் என்பவரால் இப்பத்திரிக்கை வெளியிடப்பட்டது ( S.Ayatore for the Salon Trading Company) என்றும் க்ரைட்டேரியன் பதிப்பகத்தால் (Criterion Press, Penang) பதிப்பிக்கப்பட்டது என்ற செய்தியையும் இப்பதிரிக்கையில் காண்கிறோம்.
1897ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவந்த பினாங்கு வர்த்தமானி பத்திரிக்கை ஒன்று நமக்கு இப்பத்திரிக்கை தொடர்பான சில தகவல்களையும் அது வெளியிட்ட செய்திகளைப் பற்றியும் வெளிப்படுத்துகின்றது.
இப்பத்திரிக்கை ஆங்கிலத்தில் இரண்டு பக்கங்களும் தமிழ் செய்திகளுக்காக ’பினாங்கு வர்த்தமானி’ என்ற தலைப்புடன் இரண்டு பக்கங்களும் கொண்ட வகையில் அமைந்திருக்கின்றது. ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரே செய்திகள் வழங்கப்பட்டுள்ளன.
இப்பத்திரிக்கைகளை வாங்க விரும்புவோர் சந்தா பணமாக வருடம் ஒன்றிற்கு மூன்று மலாயா ரிங்கிட் செலுத்த வேண்டும்; அயல்நாட்டிலிருந்து, அதாவது தமிழ்நாடு, இலங்கை, பர்மா போன்ற நாடுகளிலிருந்து வாங்க விரும்புவோர் ஆண்டிற்கு நான்கு மலாயா ரிங்கிட் கட்டணம் செலுத்த வேண்டும்.
இப்பத்திரிக்கை ஒரு குறிப்பிட்ட மதத்தவருக்கு மட்டுமே என்றல்லாமல் எல்லா மதத்தை சார்ந்தவர்களுக்கும் தகவல்கள் வழங்க வேண்டியது அதன் முக்கிய நோக்கம் என்பதை உறுதி செய்யும் வகையில் முதல் பக்கத்தில் குறிப்புச் செய்தியாகப் பதிந்திருக்கின்றது. எந்த ஒரு மதத்தை பற்றி குறைகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வெளிப்படுத்தும் வகையிலான செய்திகள் இப்பத்திரிக்கையில் இடம்பெறாது என்ற ஆசிரியர் குழுவின் அறிவிப்பு இதனைத் தெரிவிக்கின்றது. இப்பத்திரிக்கையில் விளம்பரங்களும் இடம்பெறுகின்றன.
பினாங்கு உள்ளூர் செய்திகளும் கூடுதலாக ஏனைய மாநிலங்களான கோலாலம்பூர் மற்றும் அன்று மலாயாவின் ஒரு பகுதியாகத் திகழ்ந்த சிங்கப்பூர் உள்ளிட்ட செய்திகளும் இதில் இடம்பெறுகின்றன. அயல்நாட்டுச் செய்திகளுக்கும் ஒரு பக்கத்தில் இடமளிக்கப்பட்டிருக்கின்றது.
தங்க விலை பற்றிய, உண்டியல் விலை பற்றிய செய்திகள் இதில் இடம் பெறுகின்றன. அத்தோடு எண்ணை விலை, நிலக்கடலை, பிண்ணாக்கு விலை அச்சைகளிப்பாக்கு, கொட்டைப்பாக்கு போன்றவற்றின் விலை மட்டுமன்றி, விலை ஏற்றம் ஏன் ஏற்படுகின்றது போன்ற தகவல்களும் இடம்பெறுகின்றன.
இதில் வழங்கப்பட்டுள்ள செய்திகளில் இருந்து சர்க்கஸ் விளையாட்டுக்காரர்கள் இங்கு வருவதால் பொதுமக்களது பணம் வசூல் செய்யப்பட்டு செலவு செய்யப்படுகின்றது என்றும், ஒவ்வொரு தெருவுக்குத் தெரு பேய் ஓட்டிகளும், பாம்பாட்டிகளும், மாயவித்தை செய்பவர்களும் இருந்து மக்களை ஏமாற்றி வருவதால் மக்களின் பணம் மக்களிடமிருந்து தட்டிப் பறிக்கப்படுகின்றது என்பதையும் பத்திரிக்கை செய்தி வெளிப்படுத்துகின்றது.
இன்றைக்கு 150 ஆண்டுகள் அல்லது 100 ஆண்டுகள் கால மலாயாவின் தமிழ் பத்திரிகை முயற்சிகள் ஒவ்வொன்றிலும் மலாயாவின் பினாங்கு, கிள்ளான் மற்றும் சிங்கப்பூர் துறைமுகங்களில் இருந்து தமிழ்நாடு, பர்மா, வங்காளம், இலங்கை போன்ற நாடுகளுக்குப் பயணிக்கின்ற போக்குவரத்து கப்பல்கள் பற்றிய செய்திகள் இடம்பெறுவதும் வழக்கமான ஒன்றாக இருந்துள்ளது.
ஆக, அக்காலத்து சூழலுக்கு ஏற்ப மக்களுக்குத் தேவையான செய்திகளை வழங்குவதில் பினாங்கு வர்த்தமானி போன்ற பத்திரிகைகள் 1800 களின் இறுதியில் செயல்பட்டதை இத்தகைய ஆவணங்களின் வழி நம்மால் அடையாளம் காண முடிகிறது. இன்றைக்கு 200 ஆண்டு கால கிழக்காசிய சூழலில் தமிழ் மக்களின் வாழ்க்கை நிலையை அறிந்து கொள்ள இவை முதன்மை ஆதாரங்களாகவும் திகழ்கின்றன.
[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]
No comments:
Post a Comment