முனைவர் க.சுபாஷிணி
சமகால பத்திரிகைகள் பற்றிய எதிர்மறையான கருத்துக்களை வெளியிடும் போக்கு இன்றைக்கு ஏறக்குறைய நூறாண்டுகளுக்கு முன் மலாயாவிலிருந்து வெளிவந்த பத்திரிகைகளிலும் இடம்பெற்ற நிகழ்வுகளை நாம் ஒதுக்கிவிட்டுச் செல்ல இயலாது. அப்படிப்பட்ட ஒரு செய்தியை 1912 ஆம் ஆண்டு பினாங்கிலிருந்து வாரம் இரு முறை வெளிவந்த ”பினாங்கு ஞானாசிரியன்” ஏப்ரல் மாத இதழில் காண்கின்றோம்.
இதே காலகட்டத்தில் "பினாங்கு கலாநிதி" என்ற பெயரில் ஒரு பத்திரிகை வெளிவந்திருக்கின்றது. இப்பத்திரிக்கையை நடத்தியவர் அல்லது இதன் உரிமையாளராக இருந்தவர் ஆ. முகமது அப்துல் காதிர் என்று இச்செய்தியிலிருந்து அறிந்து கொள்ள முடிகின்றது.
பினாங்கு கலாநிதி என்னும் இந்தப் பத்திரிகை 1911 ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி வெளிவரத் தொடங்கி இருக்கின்றது. இதனைக் கூறுகின்ற பினாங்கு ஞானாசிரியன் செய்தி, "கலாநிதி என்னும் சண்டைக்காரி தன் முக்காட்டை நீக்கிப் போட்டு ஊர் திரியப் புறப்பட்டாள்" என இப்பத்திரிகை வெளிவந்த தேதியைக் குறிப்பிட்டு எழுதுகிறது.
இப்பத்திரிக்கை வெளிவந்து ஆறு மாதங்கள் ஆகின்றன ஆனாலும் இப்பத்திரிக்கையாசிரியர்கள் இது வெளிவந்து 151 நாள், அதாவது ஐந்து மாதங்கள் மட்டுமே, என்று கூறுகின்றார்கள் என்றும் குற்றம் சாற்றுகின்றது. இதனைக் குறிப்பிடுகையில், ”கலாநிதி என்னும் இம் மங்கை பினாங்கென்னும் இம்மாபதயில் உற்பத்தியாகி சற்றேறக்குறைய ஆறு மாதங்கள் ஆகின்றன. ஆயினும் அவள் தன் வயதை 151 நாளெனக் கூறுகிறாள்" எனக் கேலி பேசுகிறது.
இப்பத்திரிக்கையின் ஆசிரியரைக் குறிப்பிட்டு சொல்லும் பொழுது ”பினாங்கு கலாநிதி மங்கையின் தந்தை” என்று மறைமுகமாகக் குறிப்பிடுவதையும் காண்கின்றோம்.
பினாங்கு ஞானாசிரியரினில் வந்திருக்கும் இச்செய்தி, பினாங்கு கலாநிதி பத்திரிகை ஆசிரியரையும் ஆசிரியர் குழுமத்தையும் சாடுவதாக அமைகின்றது. அச்செய்தியின் தலைப்பு "பினாங்கு கலாநிதி மங்கையின் புலால் நாற்ற விளக்கமும் அவள் தந்தையின் நற்சாட்சிப் பத்திரமும் மிலேச மொழிக் கண்டனமும்" என எழுதப்பட்டுள்ளது.
ஆக, பினாங்கு கலாநிதி பத்திரிகையைச் சாடும் வகையில் எழுதப்பட்ட ஒரு பதிவு என்றே இதனைக் கூறலாம்.
இப்பத்திரிக்கையின் தோற்றம் சிறப்பாக இல்லை என்பதை கேலி பேசும் வகையில் தொடர்ந்து வரும் செய்தி அமைகிறது. " இவள் அழகோ சொல்லத் தரமல்ல. முன்புறம் மட்டும் துருக்கி இத்தாலிய யுத்த விஷயமாகிய தசையும், மறுபுறம் சுத்த வெள்ளை காகிதமாகிய வெறும் எலும்பும் பூண்டு அகோர ரூபத்துடன் இளைத்து நலி கொண்டு வளர்ச்சியின்றி கூனிக்குறுகி சொந்த மனை இல்லாமல் அயல்மனையில் வளர்ந்து, அங்கிருந்து துரத்தப்பட்டு மறுபடி திரும்பி வந்து குட்டும், வெட்டுமுண்டு தத்தளித்து தள்ளாடி நடந்து வருகிறாள்" எனக் கடுமையாகச் சாடுகின்றது.
பினாங்கு கலாநிதி பத்திரிக்கை பினாங்கு ஞானாசிரியன் பத்திரிகையை "ஏ குழந்தாய்" எனக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டதைப் பற்றியும் பினாங்கு ஞானாசிரியனில் காண்கிறோம்.
இரண்டு பத்திரிக்கை ஆசிரியர்களுக்கு இடையிலான விவாதத்தை பத்திரிக்கை செய்தி நன்கு வெளிப்படுத்துகின்றது. "அவனுக்கு மூக்கில்லையாதலால் மற்றவர்கள் மூக்கையும் அறுக்க பிரயாசைபட்டனன் போல மகாமாணியாகிய கலாநிதி பத்திராதிபரும் எம்மை தூஷிக்க ஆரம்பித்தார்" எனக் கேலி பேசுகிறது.
இன்றைக்கு நூறு ஆண்டுகள் கால மலாயா நாட்டு தமிழ் உரைநடை எழுத்துமுறை மணிப்பிரவாள எழுத்து நடையில் அமைந்திருக்கின்றது. அக்கால வாக்கில் தமிழ்நாட்டு எழுத்து நடையை ஒத்த வகையிலான எழுத்து நடையைப் பின்பற்றுவது தமிழ்மக்கள் புலம்பெயர்ந்த மலாயா நாட்டிலும் தொடர்ந்து நிகழ்ந்திருக்கின்றது. பொதுவாகவே மொழி, பண்பாடு ஆகிய தளங்களில் தாய் தமிழகத்தைப் பின்பற்றும் இப்போக்கை இன்றும் மலேசிய தமிழ் மக்கள் சூழலில் காண்கின்றோம்.
பினாங்கு ஞானாசிரியன் பத்திரிகையின் இந்த ஏப்ரல் மாத இதழின் ஒரு பக்கம் முழுவதிலுமே பினாங்கு கலாநிதி பத்திரிக்கையுடனான் வாக்குவாதமே முழு பக்கத்தையும் நிறைக்கின்றது.
இப்பத்திரிக்கையில் இடம் பெற்றிருக்கும் இச்செய்தியின் வழி ”பினாங்கு ஞானாசிரியன்” பினாங்கு மாநிலத்திலிருந்து வெளிவந்த அதே காலகட்டத்தில் பினாங்கிலிருந்து வெளிவந்த மற்றொரு பத்திரிக்கையாக ”பினாங்கு கலாநிதி” இருந்தது என்பதும், இந்த இரண்டு பத்திரிகைகளுக்கிடையே சர்ச்சைகள் நிகழ்ந்துள்ளன என்பதும் இப்பதிவின் வழி தெளிவாகின்றது.
[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]
No comments:
Post a Comment