Wednesday, April 23, 2025

மலாயா ஆவணங்கள் – 6: டைட்டானிக் கப்பல் மூழ்கியது

 





முனைவர் க.சுபாஷிணி


இதே மாதம், அதாவது 15 ஏப்ரல் 1912 அன்று உலகம் முழுவதும் பரிதாபத்திற்குறிய ஒரு செய்தி பரவியது. ஆம்.  அன்றுதான் இங்கிலாந்தின் சவுத்ஹேம்டன் துறைமுகத்திலிருந்து அமெரிக்காவின் நியூ யோர் நகருக்குப் பயணித்த ஆர்.எம்.எஸ் டைட்டானிக் கப்பல் பனிக்கட்டியில் மோதி உடைந்தது.  அக்கப்பலில் பயணித்த ஏறக்குறைய 2200 பயணிகளில் ஏறக்குறைய 1500 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். வைட் ஸ்டார் கடல் வழிப்பயண போக்குவரத்து நிறுவனத்தின் இரண்டாவது துரதிஷ்டமான கப்பல் விபத்தாக அது அன்று அமைந்தது.

இங்கிலாந்தின் வசதி படைத்த பெரும் பணக்காரர்களும், அவர்களோடு அமெரிக்காவிற்குப் புலப்பெயர்வதற்காகத் திட்டமிட்டவர்களும் இக்கப்பலில் இருந்தோரில் பெரும்பாலனவர்கள்.  டைட்டானிக் கப்பல் இங்கிலாந்தின் லண்டன் நகரில் இருந்து செயல்பட்ட Harland and Wolff நிறுவனத்தாரால் உருவாக்கப்பட்ட கப்பல்.


கடந்த  நூற்றாண்டின் இறுதியில் ஏறக்குறைய மக்களால் மறக்கப்பட்ட இந்த விபத்தைப் பற்றிய செய்தியைத் தூசிதட்டி எடுத்து இன்று மக்களின் பேசுபொருளாக உருவாக்கி வெற்றி கண்டவர் ஆங்கில திரைத்துறையின் புகழ்மிக்க இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன். கேட் வின்ஸ்லட், லியானார்டொ டிகப்ரியோ ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படம் உலகமெங்கும் டைட்டானிக் கப்பல் பற்றியும் அதன் விபத்து பற்றிய செய்திகளைக் கொண்டு சேர்த்தது.

இந்த டைட்டானிக் கப்பல் விபத்து நடந்த செய்தியைப் பினாங்கு ஞானாசாரியன் இதழ் அதே 1912ஆம் ஆண்டு ஏப்ரல் இதழில் பதிகின்றது.

உடைந்த கப்பலில் 2378 பேர் இருந்ததாகவும், அதில் செய்தி அறிந்து வந்து சிலரைக் காப்பாற்றி ஏற்றிச்சென்ற கார்பேதியா கப்பலில் மீட்கப்பட்டவர்களுள் முதல் வகுப்பினர் 210 பேர், 2ஆம் வகுப்பினர் 125 பேர், 3ஆம் வகுப்பினர் 200 பேர், கப்பல் பணியாளர்கள் 4 பேர்,  கப்பற்காரர்கள் 37 பேர், விசாரணைக்காரர்கள் 96 பேர், நெருப்பவிப்போர் 71 பேர் என்றும் குறிப்பிடுகிறது. கப்பலின் கப்பித்தானும் முதல் பொறியாளரும் தற்கொலை செய்து கொண்டனர் என்று பிழைத்தவர்கள் தெரிவித்ததையும் குறிப்பிடுகின்றது.  அதோடு கடைசிப் படகு கப்பலை விட்டு நீங்கியவுடன் கப்பலில் இருந்த இசைக்கலைஞர்கள் குழுவினர் கப்பலின் அலங்காரமண்டபப் பகுதிக்குச் சென்று “ கடவுளே உனதருகில் வருகிறேன்” என்ற பாடலை பாடி மூழ்கிய கப்பலில் மாண்டனர் என்பதையும் பதிகிறது. பின்னர் பனிக்கட்டியின் நீர் அதிசூடாகிய கப்பல் இயந்திரத்தில் பட்டதும்  அது வெடித்து கப்பல் இரண்டாகப் பிளந்து போனதையும் குறிப்பிடுகிறது.

அதுமட்டுமன்றி கார்போதியா கப்பல் பிழைத்தவர்களை ஏற்றிக் கொண்டு அமெரிக்காவின் நியூ யோர்க் வந்த போது அங்கு அவர்களுக்கு உதவி செய்ய  அமெரிக்க மக்கள் 20,000 டாலர் பணம் சேகரித்து வைத்திருந்தார்களென்றும், மருத்துவர்களும், தாதிகளும் ஏராளமானோர் வந்திருந்தனர் என்பதையும் பதிகிறது.


ஆக, உள்ளூர்  மலாயா செய்திகள் மட்டுமன்றி அயல்நாடுகளில் சமகாலங்களில் நிகழ்ந்த செய்திகளை வழங்குவதிலும் பினாங்கு ஞானாசாரியன் போன்ற அப்போதைய மலாயா தமிழ் இதழ்கள் பங்களித்தன என்பதைக் காண்கின்றோம்.  உடனுக்குடன் உலகச் செய்திகளைச் சேகரித்து அதனை மலாயா வாழ் தமிழ் மக்களும் அறிந்து கொள்ளும் பெரும்பணியை மலாயாவின் இத்தகைய இதழ்கள் செயல்படுத்தியிருக்கின்றன என்பதை இந்த ஆவணங்கள் நமக்குச் சான்று பகர்கின்றன.


[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]

[- தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத் தமிழ் இதழ் 281இல் இன்று வெளிவந்திருக்கும் கட்டுரை]

No comments:

Post a Comment