முனைவர் க.சுபாஷிணி
18, 19, 20ஆம் நூற்றாண்டு காலம் என்பது மிக அதிகமான எண்ணிக்கையில் ஆசிய நாடுகள் பலவற்றிலிருந்தும் மக்கள் மலாயா நிலப்பகுதிகளுக்குக் குடியேறிய காலமாகும். இப்படிக் குடியேறிய மக்கள், அவர்களோடு கொண்டு வந்த பண்பாடும் தொழில்நுட்பமும், வாழ்க்கை முறைகளும் உள்ளூர் மலாய் நிலத்திலும் மக்கள் புழக்கத்தில் ஊடுறின.
மக்களை அமரவைத்து ஒரு மனிதன் தன் கைகளால் இழுத்து நடந்து செல்வது இழுக்கும் ரிக்ஷா எனப்படும். இது தொடக்கத்தில் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டதாக அறிகின்றோம். அங்கு Jiinrikisha என இது அழைக்கப்படுகிறது. ஆசிய நாடுகள் பலவற்றிலும் இந்த வகை ரிக்ஷா பயன்பாடு 19ஆம் நூற்றாண்டில் பரவத் தொடங்கியது. சம காலத்தில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலாயா, இந்தோனீசியா போன்ற நாடுகளிலும் இது புழக்கத்தில் வந்தது.
மலாயாவில் 1912இல் இவ்வகை இழுக்கும் ரிக்ஷாவில் பயணம் செய்தபோது நிகழ்ந்த ஒரு தாக்குதலைப் பற்றிய செய்தி நமக்கு இவ்வகை ரிக்ஷா பயன்பாடு மலாயாவில் புழக்கத்தில் இருந்ததைத் தெரிவிக்கின்றது. அப்படிப்பட்ட ஒரு செய்தியை 1912 ஆம் ஆண்டு பினாங்கிலிருந்து வாரம் இரு முறை வெளிவந்த ”பினாங்கு ஞானாசிரியன்” ஏப்ரல் மாத இதழில் காண்கின்றோம்.
இவ்வகை ரிக்ஷா பயன்பாடு 10ஆம் நூற்றாண்டில் மிகச்சாதாரணமான ஒரு போக்குவரத்துச் சாதனமாக மக்கள் புழக்கத்தில் இருந்துள்ளது. குறிப்பாக நகர்ப்புரங்களில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல பொருளாதார வசதிபடைத்த உள்ளூர் மக்களும் ஆங்கிலேயர்களும் ரிக்ஷா பயன்படுத்தியிருக்கின்றனர்.
பினாங்கு ஞானாசிரியன் பத்திரிக்கையில் வந்திருக்கும் செய்தி பீடோர் தோட்டத்தின் அன்றைய உரிமையாளராக இருந்த கார்ன்வால் என்ற ஓர் ஆங்கிலேயருக்கு நடந்த தாக்குதலைப் பதிகின்றது.
அவர் கையில் 200 மலேசிய வெள்ளியை எடுத்துக் கொண்டு சுங்கை தோட்டத்திலிருந்து பீடோர் தோட்டத்திற்குப் புறப்பட்டுச் சென்றிருக்கின்றார். இவர் பயணித்த ரிக்ஷாவண்டி ரயில்நிலையம் அருகாமையில் செல்லும் போது அவருக்கு அருகே இரண்டு சீனர்கள் வந்திருக்கின்றனர். அவர்கள் நல்லமுறையில் உடை உடுத்திக் கொண்டு சாதாரணமாகத் தென்பட்டிருக்கின்றனர். ரிக்ஷா வண்டியை நெருங்கியதும் கையில் கத்தியை உருவி எடுத்துக் கொண்டு மிரட்டத்தொடங்கியுள்ளனர். அதைக் கண்ட ரிக்ஷா வண்டிக்காரர் பயந்து வண்டியையும் கார்ன்வாலையும் அப்படியே விட்டு விட்டு ஓடியிருக்கின்றார்.
கார்ன்வால் அவர்களை எதிர்த்து சண்டை போட்டிருக்கின்றார். ஆனால் அந்த கொள்ளைக்காரர்களில் ஒருவன் துப்பக்கி ஒன்றை உருவி வெளியே எடுத்து கார்ன்வால் காலில் சுட்டிருக்கின்றான். காலில் காயப்பட்டலும் கூட தொடர்ந்து அவர்களை எதிர்த்து சண்டையிட்டிருக்கின்றார் கார்ன்வால். துரத்திப் பிடிக்க ஓடியபோது கயவர்கள் இருவரும் ஓடிவிட்டனர். பின்னர் ஒளிந்து கொண்டிருந்த ரிக்ஷா வண்டி ஓட்டுநர் அவரிடம் வந்து அவரை ஏற்றிக் கொண்டு மருத்துவமணை சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டு காவல்துறைக்கும் செய்தி கொடுத்திருக்கின்றனர்.
இப்படி ரிக்ஷா வண்டி தொடர்பான செய்திகளையும் கடந்த நூற்றாண்டு பத்திரிக்கையில் காண முடிகின்றது.
இழுக்கும் வகை ரிக்ஷா வண்டிகள் கால ஓட்டத்தில் மாற்றம் பெற்றன. சைக்கிளை வண்டியில் பொருத்தி சைக்கிள் ரிக்ஷாவாக இது உருமாற்றம் பெற்று விட்டது. கடந்த நூற்றாண்டின் இறுதிவரை மக்களின் இயல்பான புழக்கத்தில் இருந்த சைக்கிள் ரிக்ஷா படிப்படியாக இன்று இயல்பான ஒரு பொதுப்போக்குவரத்து வாகனமாகப் பயன்பாட்டில் இல்லை. ஆனால், உலகின் பல நாடுகளில் இன்று சுற்றுலா துறை அலங்கரிக்கப்பட்ட சைக்கிள் ரிக்ஷாக்களைச் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் ஏற்பாடு செய்திருக்கின்றனர். மலேசியாவில் இன்றும் இத்தகைய அலங்கரிக்கப்பட்ட சைக்கிள் ரிக்ஷாக்களைப் பினாங்கு, கோலாலம்பூர், மலாக்கா, ஜொகூர்பாரு போன்ற பெரு நகரங்களில் சுற்றுலா பயணிகள் வருகின்ற பகுதிகளில் காண்கிறோம். இங்கிலாந்தில் லண்டன் நகரில் சீனா தெருவில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் அலங்கரிக்கப்பட்ட சைக்கிள் ரிக்ஷாக்கள் இன்றும் புழக்கத்தில் உள்ளன.
[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]
No comments:
Post a Comment