Wednesday, August 6, 2025

மலாயா ஆவணங்கள் – 20: "கூலிகள் பாடக் கூடாதா?"

 







முனைவர் க.சுபாஷிணி

அதிகாரத்தில் இருப்பவர்கள் சொல்வதுதான் பெரும்பாலும் நீதிக்கு முன் அடங்கிப் போய் விடுகிறது. ஜனநாயகமும் சமூக நீதியும் பெருமளவில் கடைபிடிக்கப்படுகின்ற இந்தக் காலகட்டத்திலேயே எத்தனையோ சமூக நீதிக்கு எதிரான செயல்பாடுகளை ஒவ்வொரு நாளும் செய்தி ஊடகங்களின் வழி பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இன்றைக்கே இப்படி இருக்கின்றது என்றால் இன்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்னர் மக்களின் நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை ஓரளவு நாம் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஆவணங்களின் வழி தான் அது நமக்குச் சாத்தியமாகும். அந்த வகையில் கடந்த நூற்றாண்டில் வெளிவந்த நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் ஆகியவை இப்படி சில செய்திகளை நமக்கு வழங்குகின்றன. வரலாற்றை திரும்பிப் பார்க்க இத்தகைய ஆவணங்கள் நமக்கு இன்று தேவைப்படுகின்றன.


மலாயாவின் பினாங்கு மாநிலத்தில் இருந்து வெளிவந்த தொடக்க கால பத்திரிகைகளில் "பினாங்கு ஞானசாரியன்" முக்கியமான ஒரு பத்திரிக்கை. 3.5.1912 வெள்ளிக்கிழமை எனத் தேதி இடப்பட்ட இப்பத்திரிக்கை தமிழ்நாட்டில் இருந்து சென்ற தோட்டக்கூலிகள் பெற்ற தண்டனையைப் பற்றி குறிப்பிடுகிறது.

கோலாலம்பூருக்கு பக்கத்தில் "காசில்பீல்ட்" என்று பெயர் கொண்ட ஒரு ரப்பர் தோட்டம். அதன் மேலாளர் மிஸ்டர் ஆர். ஆலன்.

அத்தோட்டத்தில் ஒரு புதன்கிழமை இரவு 9 மணிக்கு 10 பேர், தமிழ் தோட்டக்கூலிகள். இவர்கள் ஒன்றாகச் சேர்ந்து பாடல் கச்சேரி நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது மிஸ்டர் ஆலன் தனது வேலைக்காரப் பையனை அனுப்பி இந்தப் பாட்டு கச்சேரியை நிறுத்தும்படி உத்தரவிட்டிருக்கிறார். ஆனால் பாடிக்கொண்டிருந்த அந்த பத்து பேரும் பாடல் கச்சேரியை நிறுத்தவில்லையாம். அவர்கள் 10 மணி வரை பாடிக் கொண்டிருக்கலாம் என தோட்டத்தின் மேனேஜர் அனுமதி கொடுத்து இருந்ததால் தாங்கள் பாடலை நிறுத்த மாட்டோம் என்று சொல்லி விட்டு தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தனர்.

கோபமடைந்த மிஸ்டர் ஆலன் இந்த தமிழ் கூலிகள் பாடிக்கொண்டிருந்த இடத்திற்கு வந்து ஒரு பிரம்பை எடுத்து ஒரு கூலியை அடித்தாராம். இதனைப் பார்த்த மற்ற கூலிகள் அவர் மேல் பாய்ந்து தடிகளால் அவரை அடித்திருக்கின்றார்கள். இதனால் மிஸ்டர் ஆலனின் வலது கை சுண்டு விரல் உடைந்து போனது. அது மட்டுமல்ல. அவர் உடலில் பல இடங்களில் காயமும் ஏற்பட்டதாம். அவர் தரையில் விழுந்த பிறகும் அவரை நன்கு அடித்து புடைத்து இருக்கின்றார்கள். பின்னர் டாக்டர் அங்கு சென்று அவரை வைத்தியசாலைக்கு அனுப்பிவிட்டாராம்.

மறுநாள் மாலினிக்ஸ்ம் என்று பெயர் கொண்ட  ஓர் காவல் அதிகாரி அங்கு சென்று 9 தமிழ் ஆண் கூலிகளையும் ஒரு பெண் கூலியையும் பிடித்துக் கொண்டு போய் காவல் நிலையத்தில் அடைத்து விட்டனர். அதன் பின்னர் மிஸ்டர் டொனால்ட்சன் அவர்கள் முன் இந்தக் குற்றம் விசாரணைக்கு வந்து இவர்கள் குற்றவாளிகள் என்று காவலில் வைக்கப்பட்டனராம். இச்செய்தி பினாங்கு கெஸட்டில் எழுதப்பட்டிருக்கின்றது.

மேல் குறிப்பிட்ட செய்தியை இப்பத்திரிக்கை வெளியிட்டு கருத்துப் பதிகிறது.

மிஸ்டர் ஆலன் முதலில் அங்கு வந்து பிரம்பால் அக்கூலிகளை அடிக்காமல் இருந்தால் இந்தக் குற்றம் நடந்திருக்காது ஆகவே அவர் மீது குற்றம் இல்லையோ? என இப்பத்திரிக்கை கேட்கிறது.

இப்பத்திரிகை கேட்பதும் நியாயம் தானே? கூலிகள் அவர்கள் வேலையை செய்து விட்டு மகிழ்ச்சியாகப் பாடிக் கொண்டிருந்தால் அதனால் யாருக்கு என்ன துன்பம் வரப்போகிறது? கூலியாக பணி செய்ய வந்த மக்கள் வேலைகளை மட்டுமே செய்ய வேண்டும் என்ற கடுமையான, மனிதாபிமானமற்ற போக்கை எல்லோரும் எப்போதும் தாங்கிக் கொண்டிருக்க மாட்டார்கள்.

தங்களைத் தற்காத்துக் கொள்ள மீண்டும் தாக்குவது உயிரினங்கள் அனைத்துக்கும் உள்ள இயல்பு. இதனைத் தான் 1919 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து மலாயாவின் தோட்டக் காடுகளுக்கு உழைக்கச் சென்ற தமிழ் கூலிகளில் சிலரும் செய்திருக்கின்றார்கள்.


[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]


(தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத் தமிழ் இதழ் 296ல் இன்று வெளியிடப்பட்டது.)

No comments:

Post a Comment