Wednesday, August 25, 2004

என் அம்மா - ஜனகா

இன்னும் சில தினங்களில் மலேசியா செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் வேளை இது. வரும் சனிக்கிழமை ப்ராங்பர்ட்டிலிருந்து கோலாலம்பூர் பயணம். எப்போதும் மலேசியா செல்ல ஆயத்தம் செய்யும் போது மனமெல்லாம் சொல்ல முடியாத சந்தோஷம் சேர்ந்திருக்கும். குடும்பத்தினர், நண்பர்களை வருடத்திற்கு ஒருமுறை சந்திப்பது என்பது வழக்கமாகி விட்டது. ஆனால் எப்போதும் இருக்கும் அந்த அளப்பறிய சந்தோஷம் எனக்கு இப்போது இல்லை.

தாய் நாடு என்று சொல்லும் போது தாய் என்ற சொல்லும் சேர்ந்தே வருகின்றது. எனது அம்மா இவ்வுலகை விட்டு மறைந்து 2 மாதங்கள் ஆகின்றன. எனது இந்த மலேசிய பயணத்தை எவ்வளவோ ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் அம்மா.

செப்டம்பர் 11 அவர்களுக்கு பிறந்தநாள். அதனை சிறப்பாக என்னோடு சேர்ந்து கொண்டாட வேண்டும் என்று மிகுந்த ஆசை அவருக்கு. அதனை திட்டமிட்டு வைத்திருந்தோம். ஆனால் மனிதரால் திட்டமிட மட்டும் தான் முடியும். நடப்பது அனைத்தும் இறைவனின் கையில் தான் என்பதை உணர வைக்கும் வகையில் அம்மாவை இழந்து நிற்பது மனதிற்கு மிகுந்த வருத்தமாக இருக்கின்றது. தாய் இல்லாத எனது தாய் நாட்டிற்கு செல்வதே மணதிற்கு கணமாக இருக்கின்றது.

அம்மா மிகுந்த திறமைசாலி. தமிழகத்தில் பிறந்து பின்னர் திருமணமாகி மலேசியா வந்தவர். திருமணத்திற்குப் பிறகு குடும்பத்திற்குள் மட்டுமே அடங்கி விடாமல் தொடந்து சித்த வைத்தியம் படித்து மருத்துவத் துறையில் டிப்ளோமா பெற்றவர்.
சமூகப் பணிகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட அம்மா பினாங்கு பயணீட்டாளர் சங்கத்தில் சமூக சேவகியாக சில காலம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதன் பின்னர், தொடர்ந்து மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம், இந்து சங்கம் போன்ற தொண்டூழிய சங்கங்களில் பல வருடங்கள் சேவையாற்றியவர். தமிழ் சிறுகதை எழுத்தாளரும் கூட.

அம்மா கொஞ்சம் வித்தியாசமான ஒரு பிறவிதான். எனக்கு அவர் எழுதிய சில கடிதங்களை நான் பலமுறை படித்துப் பார்ப்பதுண்டு. அவை கவிதைகள் போல இருக்கும். பலமுறை இணையத்தில் எழுதப் பழகிக்கொள்ளுமாறு சொல்லியும் அதனை அவர்கள் முக்கியமாகக் கருதாமல் இருந்ததுதான் அவரது இறுதி காலங்களில் எனக்கு பல நேரங்களில் அவர் மேல் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த முறை எனது விடுமுறையில் நேரத்தை கொஞ்சம் செலவழித்தி தமிழில் டைப் செய்ய பழக்கித்தருவதாக சொல்லியிருந்தேன். அவையெல்லாம் இப்போது நிறைவேறாத ஆசைகளாகவே போய்விட்டன.

ஆனாலும் அம்மாவின் சிறுகதைகளை தொகுத்து (1000க்கும் மேற்பட்டவை) அவற்றை மின்பதிப்பாக்கம் செய்ய வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கான முயற்சிகளை இந்த முறை மலேசியாவில் இருக்கும் போது மேற்கொள்ள நினைத்திருக்கின்றேன்.
இறைவனின் அருளோடு இந்த முயற்சி வெற்றி பெறவேண்டும்.

Monday, January 19, 2004

UM - Tamil Faculty

தமிழகத்தைத் தவிர்த்து உலகில் தமிழர்கள் வாழும் பல நாடுகளில் பல்கலைக்கழகங்களில் தமிழ் துறை ஆய்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு இங்கு ஜெர்மனியில் கெல்ன் நகரில் உள்ள பல்கலைக் கழகத்தில் தான் தமிழகத்திற்கு அடுத்தாற் போல மிகப்பெரிய புத்தக சேகரிப்பு இந்த பல்லைக்கழக தமிழ் பிரிவில் இருக்கின்றது. கெல்ன்
பல்கலைக்கழகம் தவிர ஹைடல்பெர்க் மற்றும் டூபிங்கன் போன்ற நகரங்களிலும் தமிழ் மொழியியல் சார்ந்த ஆராய்ச்சிகளும் தமிழ் வகுப்புக்களும் ஜெர்மானியர்களால் ஜெர்மானியர்களுக்குப் படிப்பிக்கப்படுகின்றது. ஐரோப்பாவில் ஜெர்மனி தவிர்த்து போலந்து, ப்ரான்ஸ், இங்கிலாந்தில் உள்ள தமிழ்துறை உலகப் பிரசித்தி பெற்றவையாகவே விளங்குகின்றன. ரஷ்யாவின் மோஸ்கோ பல்கலைக்கழகத்திலும் இப்படித்தான். தமிழ் பேசும் ரஷ்ய பேராசிரியர்கள் ரஷ்ய மாணார்களுக்குத் தமிழ் மொழியில் பாடம் நடத்துகின்றார்கள். வேற்று மொழியினர் (இனத்தவர்) தமிழ் பேசுவதைக் கேட்கும் போது ரொம்பவே செய்ற்கையாக இருந்தாலும் மனமெல்லாம் ஆனந்தத்தில் பூரிக்கத்தான் செய்கின்றது.


அந்த வகையில் எங்கள் மலேசிய நாட்டிலும் ஒரு பல்கலைக்கழகத்தில் ஒரு தமிழ்துறை இருக்கின்றது. மலேசிய நாட்டின் மிகப்பழமையான மலாயா பல்கலக்கழகத்தில் தான் இந்த தமிழ் துறை இயங்கி வருகின்றது. தலைநகரின் அருகில் உள்ள பெட்டாலிங் ஜெயாவில் இந்த பல்கலைக்கழகம் உள்ளது. இப்போது ஏறக்குறைய 7 விரிவுரையாளர்களுடன் இந்த தமிழ் துறை இயங்கி வருகின்றது. இந்த தமிழ் துறையின் மாபெரும் சிறப்பு என்னவென்றால் இங்குள்ள தமிழ் புத்தகங்கள் தான். கிடைப்பதற்கு அரிதான பல முக்கிய நூல்கள் இங்கு கிடைப்பதாக நண்பர்கள் மூலமாக அறிந்திருக்கின்றேன்.

மலேசிய தமிழர்களைப் பிரதிந்திக்கும் ஆராய்ச்சி நிலையமாக இந்த தமிழ் துறை இயங்க வேண்டும் என்பதே என்னைப்போன்ற பலருக்கும் இருக்கின்ற ஆசை. தமிழின் தொன்மைகள் ஆராயபட வேண்டும். நல்ல தரமான ஆய்வுகள் நடக்க வேண்டும். கணினியைக் கொண்டு இணையம் வழி தமது ஆராய்ச்சித் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் தற்சமயம் கேள்விப்படுகின்ற விஷயங்களை நோக்கும்போது மாணவர்கள் மேம்போக்காக பாடங்களை படித்து பட்டம் பெறுவதற்கு மட்டுமே படிக்கின்றார்களோ என்ற சந்தேகம் தோன்றும் வகையில் பல நிகழ்வவுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

பண்டைய காலத்தில் தமிழர்கள் மட்டுமல்ல; ரோமானியர்கள், ஜெர்மானியர்கள், யூதர்கள் எல்லோரும் ஆராய்ச்சி செய்வதை மிகப் பெரிய ஒரு விஷயமாக கருதி பல்கலைக்கழகங்களை உருவாக்கினர் என்பதை வரலாற்றின் மூலம் தெரிந்து கொள்ள
முடிகின்றது. மனிதனின் ஆழ்மனத் தேடல்களுக்கு, ஆழமான ஆராய்ச்சிகளுக்குப் பல்கலைக்கழகங்கள் தானே வித்திட வேண்டும். அந்த வகையில் இப்போது இந்த தமிழ் துறைகள் செயல்படுகின்றதா என்பது கேள்விக் குறியாகவே இருகின்றது.

இப்படி நான் சொல்வதனால் குறை சொல்வதாக எடுத்துக் கொள்ள முடியாது. இது ஒரு ஆதங்கத்தின் வெளிப்பாடு. அவ்வளவுதான். ஒரு பள்ளிக்கூட அளவில் கல்வித்தரத்தை வைத்துக் கொண்டு இதுதான் ஆராய்ச்சி என்று சொல்லிக்
கொண்டிருந்தால் அதனால் நஷ்டம் வேறு யாருக்குமல்ல. மலேசிய நாட்டில் வாழ்கின்ற தமிழர்களுக்குத்தான்!

Tuesday, January 6, 2004

Recollecting my teaching experiences (1997) - 5


பெரும்பாலும் மலேசிய நாட்டுச் சூழலில் தமிழ் பள்ளிக் கூடங்களில் ஆரம்ப நிலைக்கல்வியைப் படிக்கின்ற குழந்தைகள் வருமையான அல்லது நடுத்தரவர்க்கத்திற்கும் கீழான வசதிகளைக் கொண்டிருப்பவர்களின் குழந்தைகளாகவே அமைந்துவிடுவது உண்மை. குவாலலம்பூர், ஈப்போ, ஜொகூர் போன்ற இடங்களில் இந்த நிலை இல்லை என்று சொல்லமுடியும். ஆனால் பினாங்கைப் பொருத்தவரை இது தான் உண்மை நிலை. வருமையில் இருப்போரின் ழந்தைகளுக்குக் கணினியைப் பயன்படுத்தும் வாய்ப்புக்கள் அமையாமலேயே போய்விடுவதால் இங்கு இராமகிருஷ்ணா தமிழ் பள்ளியில் ஆசிரியர் வேலையில் இருந்த போதே கணினி வகுப்பை குழந்தைகளுக்கு ஆரம்பிக்க வேண்டும் என்று ஒரு திட்டத்தை உருவாக்கினேன்.

எனது திட்டம் முறையாக வடிமைக்கப்பட்டிருந்ததால் பள்ளி தலைமை ஆசிரியரும் (திருமதி.லலிதா) பள்ளியின் Parent-Teachers Association அங்கத்தினரும் இந்த திட்டத்திற்கு ஆதரவும் பண உதவியும் தருவதாகக் கூறியிருந்தனர். இதன் அடிப்படையில் ஒரு வகுப்பறையை இரண்டாகப் பிரித்து நூல் நிலையமாகவும், கணினி அறையாகவும் மாற்றம் செய்தோம். பள்ளியில் இந்த முயற்சிக்கு எனக்கு ஆதரவாக மகேஸ்வரி, புஷ்பா, ஷங்கர் ஆகியோருடன் மற்ற ஆசிரியர்களும் பெரிய அளவில துணை புரிந்தனர். பள்ளி நேரம் முடிந்தவுடன் இந்த அறையை வடிவமைப்பதில் ஈடுபடுவோம். 3 வார கடும் உழைப்பில் எங்களது கணினி அறை உருவானது.



பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் உதவித் தொகையுடன் இரண்டு கணினிகளை முதலில் வாங்கினோம். சில மாதங்களிலேயே ம.இ.கா (மலேசிய இந்தியர் காங்கிரஸ்) பினாங்கு மாநில குழுவும் ஒவ்வொரு தமிழ் பள்ளிக்கும் கணினி வழங்குவதாக அறிவித்து இந்த பள்ளிக்கு 5 கணினிகளை வழங்கியது. (மிகப் பழைய மாடல் கணினிகள். இதனை எந்த காரணத்திற்காக் வழங்கினார்கள் என்று இன்னமும் எனக்குப் புரியவில்லை. கிடைத்த 5ல் ஒன்று கூட உருப்படியில்லை!)




கணினி அறை மட்டும் வந்து விட்டால் போதுமா? அங்கு முறையாக பாடமும் நடைபெற வேண்டும் அல்லவா? அதற்காக 4ம் 5ம், 6ம் ஆண்டில் படிக்கும் ழந்தைகளுக்காக பிரத்தியேகமாக கணினி பாடங்களை (curriculum) உருவாக்கினேன். (இந்தப் பாடங்களைத் தமிழ்பள்ளிகளுக்கான தேசிய பாடத்திட்ட மேம்பாட்டு மையம் வருட மத்தியில் ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர்களுக்கான கணினி பாடத்தயாரிப்பு கருத்தரங்கிலும் வழங்கியிருந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது). இந்த பாடத்திட்டத்தின் அடிப்படையில் 1997 முதல் எங்கள் பள்ளியில் வகுப்பு நேரத்திலேயே கணினி பாடங்களையும் இணைத்து எல்லா தரப்பு மாணவர்களும் கணினியை அறிந்து கொண்டு அதனை பயன்படுத்தும் வகையில் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. பினாங்கிலேயே கணினி வகுப்புக்களை முதன் முதலில் தொடங்கிய பெருமை இராமகிருஷ்ணா பள்ளியைத் தான் சேரும்.

மாணவர்களுக்குக் கணினி வகுப்புகளுக்கு வருவதென்றால் கொள்ளை பிரியம். மிகுந்த உற்சாகத்துடன் இந்த வகுப்புக்கள் நடைபெற்றன. எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்களாகவும் இவை அமைந்து விட்டன.

Saturday, January 3, 2004

Recollecting my teaching experiences (1997) - 4

இந்தப்பள்ளியில் வேலை செய்த காலகட்டத்தில் மறக்க முடியாத மற்றொரு நபர் இங்கு தோட்டக்காரராக வேலை செய்துவந்த மோகன் என்பவர். இவர் இன்றும் இதே பள்ளிக்கூடத்தில் வேலை செய்கிறார் என்று கடந்த முறை பினாங்கு சென்றிருந்த போது தெரிந்து கொண்டேன். தோட்டக்காரராக பணி புரிவதோடு மட்டுமல்லாமல் மற்ற சில அலுவலக வேலைகளும் இவர் பொறுப்பில்தான் இருந்தது. இவருக்கு கொஞ்சம் M.G.R மோகம் இருந்திருக்க வேண்டும். இவரது பேச்சு அலங்காரம் எல்லாம் கொஞ்சம் M.G.R போலவே செய்து கொள்வார்.

நல்ல மனம் படைத்த மனிதர். ஆசிரியர்களுக்குத் தேவையான உணவை வாங்கி வருவதும் கூட இவர் பொறுப்பில்தான் இருந்தது. எங்களுக்கு எது எது பிடிக்குமோ அவையெல்லாம் அவருக்கு அத்துப்படி. காலையிலேயே எங்களிடம் எந்த பலகாரம் வேண்டும் என்று கேட்டு பட்டியல் தயார் செய்து கொள்வார். எங்களுக்குத் தேவையான உணவை வாங்கி வருவதில் வல்லவர். எனக்கும் எனது சக ஆசிரியர்கள் சிலருக்கும் கேசரி ரொம்ப பிடிக்கும். அதிலும் Dato Keramat சாலையில் இருக்கும் 'பால்சாமி' கடை கேசரி மட்டும் தான் எங்களுக்குப் பிடிக்கும். இந்த மாதிரி சுவையான சேசரியை வேறு எங்கும் நான் இதுவரை சாப்பிட்டதில்லை. (இந்தக் கடை இப்போது மூடப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றலாகிவிட்டதாக கேள்விப்பட்டேன்). எங்களுக்குக் கேசரி பிடிக்கும் என்பது மோகனுக்குத் தெரியும். நாங்கள் சொல்ல மறந்தாலும் மறக்காமல் வாங்கி வந்து விடுவார்.

நான் ஆசிரியராக இருந்த சமயத்திலேயே இவருக்குத் திருமணம் நடந்தது. இப்போது குழந்தைகளும் இருக்ககூடும் என்று நினைக்கிறேன்.

மரங்கள் செடிகொடிகள் மேலும் அவருக்கு அலாதியான பிரியம் இருக்க வேண்டும். சம்பளத்திற்கு வேலை செய்கிறோம் என்ற எண்ணமில்லாமல் ரசித்து ரசித்து தோட்டத்தைப் பார்த்துக் கொள்வார். பள்ளியைச் சுற்றியும் இவரது கைவண்ணத்தில் அழகான பூந்தோட்டம் இருப்பதை இப்போதும்
பார்க்க முடியும்.

ஒரு தொழிலைச் செய்யும் போது அதை முழு மனத்தோடு செய்யும் போது செய்கின்ற வேலை சிறப்பாக அமைந்து விடுகின்றது. சம்பளத்திற்குத் தானே செய்கின்றோம் என்று கடமைக்காகச் செய்வதில் எந்த வித பயனும் இருப்பதில்லை. எப்படிப்பட்ட வேலையாக இருந்தாலும் அதில் ஒரு ஈடுபாடு இருக்க வேண்டும். இல்லையென்றால் வேலைக்கு வருவதற்கே பிடிக்காத மனநிலை, வெறுப்பு எல்லாம் கூடி மன அழுத்தத்தை உண்டாக்கிவிடும். நான் ஆசிரியராக வேலை செய்து கொண்டிருந்த காலகட்டத்திலேயே ஆசிரியர் தொழிலுக்கு சற்றும் பொறுத்தமில்லாத சில ஆசிரியர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் அவர்களோடு பழகும் சந்தர்ப்பமும் கிட்டியது. அவற்றையும் அடுத்த எனது நினைவலைகளில் பகிர்ந்து கொள்வேன்.

Thursday, January 1, 2004

Happy New Year

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்




மலர்கின்ற ஒவ்வொரு நாளுமே ஒரு புது நாள் தான். ஆனாலும் டிசம்பர் 31 முடிந்து ஜனவரி 1 வரும் போது மட்டும் மனதில் ஒரு அதீதமான சந்தோஷம் நமக்கெல்லாம் தோன்றுகின்றது. இந்த நாளை பல எதிர்பார்pபுக்களுடனேயே எதிர் கொள்ளும் மனமும் கூட சேர்ந்து கொள்கின்றது. வருகின்ற புதிய ஆண்டில் மேலும் நல்ல நிகழ்வுகள் நடக்க வேண்டும், நல்ல செய்திகள் கிடைக்க வேண்டும் என்று நமது மனம் எதிர்பார்க்கின்றது.

திருவிழாவாக இருந்தாலும் சரி, புத்தாண்டு பண்டிகைகளாக இருந்தாலும் சரி, குடும்பத்தினருடன் கொண்டாடுவது போல வேறு மகிழ்ச்சியே இல்லை. இளம் வயதில் பெற்றோருடன் புத்தாண்டு கொண்டாடிய நினைவுகள் இனிமையாக இன்றும் மனதில் இருக்கின்றன. புத்தாண்டு ஸ்பெஷல் பூஜை வீட்டில் தவறாமல் இருக்கும். சுவையான பலகாரங்களையும் அம்மா தயாராக செய்து வைத்திருப்பார். அம்மாவின் சமையலுக்கு ஈடு சொல்வதற்கு உலகில் வேறு ஒன்றுமில்லை. ஒரு நாள் வீட்டில் குடும்பத்தாருடன் பொழுதைக் கழிப்பது இனிமையான ஒரு நிகழ்வுதானே.

ஜெர்மனிக்கு வந்த விட்ட இந்த 5 ஆண்டுகளில் புத்தாண்டை வரவேற்பது வித்தியாசமாகிப் போய்விட்டாலும் அம்மா அப்பாவுடன் இருந்த நாட்கள் மனதில் தோன்றி அந்த நினைவுகள் மகிழ்ச்சி படுத்துகின்றன. வேலை, உயர்கல்வி என குடும்பத்தாரை விட்டு பிரிந்து வாழும் பலருக்கும் இதே நிலைதானே!

நேற்றைய star பத்திரிக்கையை (http://www.thestar.com.my) படித்துக் கொண்டிருந்தபோது இதே போன்ற சிந்தனையுடன் வெளிவந்திருந்த ஒரு பேட்டியை படிக்க நேர்ந்தது. மலேசியப் பிரதமராக 22 ஆண்டுகள் இருந்த துன் மஹாதீர் அவர்களின் மகள் மரீனாவின் பேட்டி அது. தந்தை பதவி விலகிய பிறகு 22 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறையாக கடந்த ஆண்டு (2003) சேர்ந்து கொண்டாடிய ரமடான் பண்டிகையைப் பற்றியும், புதுவருடத்தைப்பற்றியும் அவரது எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் அமைந்த ஒரு பேட்டி. அதனை வாசிக்க: http://www.thestar.com.my/news/archives/story.asp?ppath=\2003\12\31&file=/2003/12/31/features/6977515&sec=features