முனைவர் க.சுபாஷிணி
பினாங்கிலிருந்து 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வெளிவரத் தொடங்கிய மாத பத்திரிகைகளுள் ஒன்று ”பினாங்கு விஜய கேதனன்”.
இக்காலகட்டத்தில் மலாயாவிலிருந்து தொடங்கப்பட்ட தமிழ் இதழியல் முயற்சிகளில் இந்த மாதப் பத்திரிக்கையும் அடங்குகிறது. ”பினாங்கு ஹெரால்ட் பிரஸ்” என்ற அச்சகத்தாரால் பினாங்கு மாநிலத்தில் அச்சிடப்பட்டு மாதம் ஒரு முறை இந்த பத்திரிகை வெளியிடப்பட்டிருக்கிறது. 1870 களில் இப்பத்திரிக்கை தொடங்கப்பட்டிருக்க வேண்டும். பிரித்தானிய நூலகத்தில் பாதுகாக்கப்படும் இப்பத்திரிக்கையின் 1888 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இதழ் நமக்கு இப்பத்திரிகை பற்றிய அடிப்படை விஷயங்களை விளக்குவதாக அமைகிறது.
அடிப்படையில் பினாங்கு விஜய கேதனன் என்ற பெயர் கொண்ட இது முற்றிலும் தமிழில் நான்கு பக்கங்களில் அமைந்திருக்கின்றது. இப்பத்திரிகையின் ஆசிரியர் அல்லது ஆசிரியர் குழுவினர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஏனெனில் இப்பத்திரிகையின் தொடக்கப் பகுதி இஸ்லாமிய தமிழில் இறைவனுக்கான துதியுடன் தொடங்குகிறது. இதில் இடம்பெறுகின்ற சொற்கள் அரபுத் தமிழ்ச் சொற்களாகவும் அமைகின்றன.
இப்பத்திரிகை மாதம் ஒருமுறை வெளிவருவதற்கு சந்தாதாரர்களைத் தேடுகின்ற முயற்சிகளும் முதல் பக்கத்திலேயே வழங்கப்பட்டுள்ளன. மலாயாவின் பினாங்கு மாநிலத்தில் அச்சிடப்பட்டாலும் தமிழ்நாடு, இலங்கை, பர்மா, சிங்கப்பூர் ஆகிய பகுதிகளில் இப்பத்திரிகை பொது மக்களுக்குக் கிடைக்கும் வகையில் முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன என்பதையும் அறிய முடிகின்றது.
கூடுதலாக, 1888 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினத்தில் இருந்து இயங்கிக் கொண்டிருந்த ”முஸ்லிம் நேசன்” என்ற ஒரு பத்திரிகையின் ஆசிரியர் இந்தப் பினாங்கு விஜய கேதனன் மாதப் பத்திரிக்கைக்கு ஒரு வாழ்த்துச் செய்தியையும் அனுப்பி இருக்கின்றார்.
ஏப்ரல் மாத பத்திரிக்கையாக வெளியிடுவதற்காக 21.3.1888இல் தயாரிக்கப்பட்ட இப்பத்திரிகையின் இறுதிப் பகுதியில் முஸ்லிம் நேசன் பத்திரிகையின் ஆசிரியர் கீழ்க்காணும் வகையில் தன் வாழ்த்தையும் எதிர்பார்ப்பையும் குறிப்பிடுகின்றார்.
”நாகரிகமும் சீர்திருத்தமும் உற்ற இந்தியர்கள் வர வர அவைகளைப் பெற்று விளங்கும்படி ஆங்கிலேயர் பல வழிகளைக் காட்டி வந்தும், மூடத்தன்மை அதிகரித்த நமது இந்தியர்கள் சற்றேனும் அவ்வழியில் ஒழுகாது எருமையின் குணம் கொண்டே நிற்கிறார்கள். ஆகையால் தங்கள் பத்திரிக்கையில் முறை முறையாய் ஐரோப்பியருடைய நாகரிகத்தையும் இந்தியர்களுடைய மடமையையும் எடுத்துக்காட்டி வருமாறு கேட்டுக்கொள்கிறேன்" என அதில் இடம்பெறுகின்றது.
பினாங்கு விஜய கேதனன் என்று பெயர் கொண்ட இப்பத்திரிக்கை எப்போது தொடங்கப்பட்டது, யாரால் தொடங்கப்பட்டது, எப்போது நிறுத்தப்பட்டது போன்ற செய்திகள் கிடைக்கவில்லை என்றாலும் 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ் மக்கள் உள்நாட்டு அயல்நாட்டுச் செய்திகளை அறிந்து கொள்ள செயல்பட்ட பத்திரிகைகளில் ஒன்றாக இது திகழ்ந்தது என்பதும், அது மலாயாவின் பினாங்குத் தீவைக் கடந்தும் பல பகுதிகளுக்குச் சென்றது என்ற செய்திகளையும் நம்மால் அறிய முடிகிறது.
[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]
இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் "உலகத்தமிழ்" இதழில் 283 வது இதழ் வெளிவந்தது.