Tuesday, June 24, 2025

மலாயா ஆவணங்கள் – 14: ஊர்க்கப்பல்

 





முனைவர் க.சுபாஷிணி

இளம் வயதில் மலேசியாவில் வசித்த காலங்களில் விமானம் சென்னையிலிருந்து வந்து அதில் உறவினர்களோ நண்பர்களோ வந்திருந்தால் ‚ஊர்க்கப்பல்’  வந்திருக்கு என்று எங்கள் சுற்றத்தில் சொல்லி உரையாடுவது இயல்பு. கடலில் பயணம் செய்யும் கப்பலைப் போலவே விமானத்தையும் “கப்ப” என்று பேச்சு வழக்கில் அழைப்பது மலேசியத் தமிழர்களிடையே உள்ள வழக்கம்.

தமிழ் நாட்டிலிருந்து யார் வந்திருந்தாலும் பொருட்கள் வந்திருந்தாலும்  ”ஊரிலிருந்து வந்திருக்கின்றார்கள்” என்று சொல்வதும், ”ஊர் சாமான்” வந்திருக்கின்றது எனச் சொல்வதும் மிக இயல்பான ஒன்று. தமிழ்நாட்டு மக்களையே மலேசியத் தமிழர்கள் ”ஊர்க்காரர்கள்” என்று சொல்வது வழக்கம். தமிழ்நாட்டுக்குச் செல்வதென்றால் அதனையும் ”ஊருக்குப் பயணமா?” என்று கேட்பதும் வழக்கம்.

ஆக மொத்தம் தமிழ்நாட்டை “ஊர்” என்று தான் மலேசியத் தமிழர்கள் அடையாளப்படுத்தி பேசுகின்றனர். அது இன்றும் தொடர்கின்றது.

1897ஆம் ஆண்டு மலாயாவின் பினாங்கிலிருந்து வெளிவந்த வார இதழ்களில் பினாங்கு வர்த்தமானி பத்திரிக்கையும் ஒன்று. இது 2 பக்கங்களில்  வெளிவந்த பத்திரிக்கை. உள்ளூர் மற்றும் அயல்நாட்டுச் செய்திகள் இதில் அடங்கும்.

அதில் வெளியிடப்பட்ட ஒரு செய்தி புதிதாக அச்சமயத்தில் தமிழ்நாட்டிலிருந்து மலாயாவிற்குச் சேவையைத் தொடங்கிய ஒரு புதிய கப்பலைப் பற்றி பேசுகிறது,

இந்தப் புதிய “ஊர்க்கப்பல்” ஒவ்வொரு வாரமும் தமிழ்நாட்டிலிருந்து மலாயாவிற்குச் சேவையைத் தொடங்கியிருக்கிறது.  ஏற்கனவே அச்சமயத்தில் வேறு சில கப்பல்களும் ஆட்களையும் பொருட்களையும் ஏற்றி வரும் சேவை இருந்ததால் இப்புதிய கப்பல் வந்த பின்னர் போட்டியில் பயணக் கட்டணம் குறைய வாய்ப்பிருப்பதை இப்பதிவு சுட்டிக்காட்டுகிறது.

போட்டிக்குப் புதிய கப்பல் வந்திருப்பதால் ஏற்கனவே பயணிக்கும் கப்பல்களில் சிறிய குறையைக் கண்டுபிடித்தாலும் உடனே புதிய கப்பலுக்கு வணிகர்கள் சென்று விடுவார்கள்.  ”வேண்டாப் பெண்டிர் கைப்படக் குற்றம் கால்படக் குற்றம்” என்பது போல என்கிறது இச்செய்தி.

இப்புதிய கப்பலைப் பற்றி உள்ளூரில் மக்கள் புகழ்ந்து பேசி மகிழ்வதைக் கேலி பேசும் வகையில் இப்புதிய கப்பலை இயக்குபவர்களை உள்ளூர் மக்கள் புகழ்ந்து பேசுவதை இச்செய்தி குறிப்பிடுவதைக் காண்கின்றோம்.

இதற்கு முன்னால் தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த கப்பலில் தொற்று நோய்க்காரணமாக மாடுகளை இறைச்சிக்காகக் கொண்டு வருவது தடைபட்டிருந்தது போலும். அதனால் மாட்டிறைச்சியின் விலை கட்டி ஒன்று (அளவை) 30 காசு விலையேற்றம் கண்டிருந்தது. ஆட்டிறைச்சி விலையேற்றம் கண்டால் கூட பரவாயில்லை; மாட்டிறைச்சி விலையேற்றம் காணக் கூடாது என்கிறது இச்செய்தி.

 [குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]

(இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழ் 290இல்  வெளியிடப்பட்டது.)

Tuesday, June 17, 2025

மலாயா ஆவணங்கள் – 13: முதல் தரமான சாப்பாட்டுக் கடை

 






முனைவர் க.சுபாஷிணி

1912ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி வெளிவந்த பினாங்கு ஞானாசாரியன் பத்திரிக்கையில்  ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. அது ஒரு உணவகம் பற்றிய விளம்பரம்.  

இந்த விளம்பரம் சொல்லும் செய்தியைக் காண்போம்.

எஸ்.எஸ் என்ற ஒருவரது   பெயரில் வணிக உரிமம்  பெற்று பினாங்கிலுள்ள குவின்ஸ்ட்ரீட் சாலையில் மாரியம்மன் கோயில் இருக்கும் சாலையில் ஒரு உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

 மா.நா.நா சுப்பிரமணியப்பிள்ளை என்பவருடைய இந்தப் புகழ்பெற்ற சாப்பாட்டுக் கடையில் தூய்மையான ருசியான உணவு விற்கப்படுகிறது.  அங்கேயே தங்கிக் கொள்ளவும் அறைகள் உள்ளன. இந்தியாவிலிருந்து, அக்கரை ஊர்களிலிருந்து வருபவர்களும் பினாங்கிலிருந்து இந்தியாவிற்கு செல்பவர்களும் இந்த சாப்பாட்டுக் கடையைத் தேடி வருகிறார்கள். ஒருமுறை இங்குச் சாப்பிட்டவர்கள் பின்னர் வேறெங்கும் செல்ல மாட்டார்கள். இங்குதான் உணவு உண்பார்கள்.  

இந்த விளம்பரத்தை வழங்கியவர் ”திருப்பத்தூருக்கு அடுத்த ஆத்திரம்பட்டி எனும் ஊரைச் சார்ந்த மா.நா.நா சுப்பிரமணியப்பிள்ளை என்பவரின் கணக்கு” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பினாங்கில் குவின்ஸ்ட்ரீர் எனப்படும் சாலை பிரசித்தி பெற்றது. இங்கு இன்று ஏராளமான தமிழர்கள் வணிகம் செய்கின்றார்கள். பினாங்கின் தமிழ் வணிகர்கள் மட்டுமே கோலோச்சும் பகுதி இது.  கடைவீதி என்றும் சொல்லலாம்.

இன்று “லிட்டல் இந்தியா” என அழைக்கப்படும் பகுதியில் இச்சாலையும் அடங்கும். இங்குதான் பிரமாண்டமான மாரியம்மன் கோயில் உள்ளது. இன்றும் கூட தைப்பூசத் திருவிழா இக்கோயிலில் தொடங்கி பின்னர் தண்ணீர்மலை முருகன் கோயில் வரை செல்வது வழக்கம்.

விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ”அக்கரை” என்ற சொல் மலேசிய தமிழர்கள் அடிக்கடி பயன்படுத்தும் சொல் எனலாம். தமிழ்நாட்டை குறிக்க பயன்படுத்தப்படும் சொல் என்றும் பினாங்கு தீவைக் கடந்த நிலப்பகுதி என்றும் இரு வேறு பொருளில் இது பயன்பாட்டில் உள்ளது.

இன்று இப்பகுதியில் ஏராளமான தமிழர்கள் மற்றும் தமிழ் முஸ்லிம்களின் உணவகங்கள் செயல்படுகின்றன. “ஊர்க்காரர்கள்” தெரு என்றும் இப்பகுதி இன்று உள்ளூர் தமிழ்   மக்களால் அழைக்கப்படுகிறது. “ஊர்” என்ற சொல் தமிழ்நாட்டைக் குரிப்பதுதான். “ஊர்” என்றாலே மலேசியத் தமிழர்களுக்கு அது தாய் தமிழ்நாடுதான். இது மிக இயல்பாக மக்களின் பேச்சுப் பயன்பாட்டில் இடம்பெற்று விட்டது.

[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]

இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் உலக தமிழ் இதழ் 289ல் இன்று வெளியிடப்பட்டது.

Wednesday, June 11, 2025

மலாயா ஆவணங்கள் – 12: பட்டயத்தை எடுத்தவன் பட்டயத்தால் சாவான்

 





முனைவர் க.சுபாஷிணி


இன்று ஒரு பத்திரிக்கையின் பல பகுதிகளை ஆக்கிரமித்திருக்கும் செய்திகள் யாவை என ஆராய்ந்தால் ஆங்காங்கே நடைபெற்ற விபத்து, மரணம், தாக்குதல், அதிர்ச்சிகரமான செய்தி போன்றவைதான் நமக்குத் தென்படுகின்றன.  இவற்றோடு உள்ளூர் மற்றும் அயல்நாட்டு அரசியல் நிகழ்ச்சிகளும் இணைந்து கொள்கின்றன. இன்று மட்டுமல்ல. மலாயாவில் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த தமிழ்ப்பத்திரிக்கைகளின் உள்ளடக்கமும் இப்படித்தான் இருந்திருக்கின்றது.

1912ஆம் ஆண்டு பினாங்கு ஞானாசாரியன் தமிழ் வாரப்பத்திரிக்கையில் உள்ள உள்ளூர் செய்திகள் சிலவற்றைக் காண்போம்.

ஒரு செய்தி, பெப்ரவரி மாதம் 28ஆம் தேதி பினாங்கு அட்டன்லேன் சாலையில் ஒரு சீனரான சுவாகாங் என்பவரை வியாக் ஆ ஈ என்ற ஒரு சீனர் கொலை செய்ததை அறிவிக்கிறது. விசாரணையில் திட்டமிடாத ஒரு கொலை இது என நீதிபதிகள் முடிவு செய்ததாகவும் குற்றவாளிக்கு நான்கு ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது என்றும் அக்குற்றவாளியைப் பிடித்த சுல்தான் என்று பெயர் கொண்ட ஒரு மலாய்காரருக்குப் பரிசாக மலேசிய ரிங்கிட் பத்து வெள்ளி வழங்கப்பட்டது என்றும் செய்தி பதிகிறது.

மற்றொரு செய்தி பினாங்கில் கஸ்டாவ் வெஸ்ஸ்ன்ஸ் என்று பெயர் கொண்ட வைர வியாபாரி ஒருவர் 25900 டாலர் பெருமானமுள்ள வைரங்களை ஏமாற்றி திருடிவிட்டார் என்பதையும், இக்குற்றத்திற்கு வில்லியம் டி சல்வா என்னும் ஒரு வைர வியாபாரி உடந்தையாய் இருந்தார் என்பதையும் பதிகிறது. இக்குற்றம் பல நாட்கள் விசாரணையில் இருந்திருக்கிறது. ஆனால் சில நாட்களுக்கு முன்னர் நீதிபதிகள் அவர்கள் இருவர் மீதும் குற்றமில்லை என தீர்ப்பு வழங்கியிருக்கின்றனர்.  வாதியான மெஸர்ஸ்பெர் அண்ட் கம்பெனியார் எழுப்பிய சந்தேகம் உறுதி செய்யப்படவில்லை என்று அறிவித்து குற்றவாளைகளை விடுதலை செய்த செய்தியைப் பதிகிறது.

மற்றொரு செய்தி பாம்பாட்டி ஒருவரின் மரனத்தைப் பற்றியது. ”பட்டயத்தை எடுத்தவன் பட்டயத்தால் சாவான்” என்ற பழமொழியைக் கூறி இலங்கையின் கொழும்பில் வசித்து வந்த பம்பாய் ராமசாமி என்று பெயர் கொண்ட ஒருவர் ஒரு பாம்பை வித்தை காட்ட வளர்த்து வந்ததாகவும், அதனை வைத்து வித்தைகாட்டி பணம் சம்பாரிக்க துறைமுகத்தில் இருந்த டச்சு கப்பல்  ஒன்றிற்குச் சென்றதாகவும், வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கையில் அங்கு திடீரென்று ஒரு சத்தம் ஏற்பட அதில் பயந்த பாம்பு சீறிக்கொண்டு வந்து பாம்பாட்டி பம்பாய் ராமசாமியின் வலது கரத்தைக் கொத்தி விட்டு பெட்டிக்குள் புகுந்து கொண்டது என்றும் குறிப்பிடுகிறது.

அப்பாம்பின் விஷப்பற்களை முன்னரே பிடுங்கியிருந்தாலும் அது மீண்டும் முளைத்திருந்ததைப் பாம்பாட்டி ராமசாமி  கவனிக்கவில்லை போலும்.  அங்கேயே மயக்கமடைந்து விழுந்து விட்டார்.  அவரைத் தூக்கிக் கொண்டு மருத்துவமணை செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார். உடனே அரசாங்கத்தினர் அந்தப் பாம்பை சுட்டுக் கொன்று அதனைப் புதைத்திருக்கின்றனர் என்ற செய்தியை இப்பத்திரிக்கையில் காண்கிறோம்.


மக்களுக்கு பேசுபொருளாக சில சுவாரசியமான தகவல்களை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இத்தகைய அசம்பாவித சம்பவங்களைப் பத்திரிக்கைகள் வெளியிடுகின்றன. வாசிக்கின்ற மக்கள் அவற்றை பற்றி ஏனையோருடன் பேசி கலந்துரையாட விரும்புவார்கள், அவர்களது கவனத்தை இத்தகைய செய்திகள் ஈர்க்கும் என்ற உத்தியை அறிந்தே பத்திரிக்கை ஆசிரியர்கள் இயங்கி வந்திருக்கின்றனர். அத்தகைய போக்கை இந்த ஆரம்பகால பத்திரிக்கைகளிலும் காண்கின்றோம்.


[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]

இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் 288ஆம் இதழில் இன்று வெளிவந்தது)

Wednesday, June 4, 2025

மலாயா ஆவணங்கள் – 11: ரெக்கார்டு இசை – இசைவட்டு

 






முனைவர் க.சுபாஷிணி

ஆங்கிலத்தில் phonograph record (அல்லது gramophone record) என அழைக்கப்படும் ரெக்கார்டு இசைக்கருவி தமிழ் மக்களின் சூழலிலும் பரவத் தொடங்கியது 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் எனலாம். 1857ஆம் ஆண்டில்   Édouard-Léon Scott de Martinville  என்ற பிரெஞ்சுக்காரர்  phonautograph என்ற இதன் ஆரம்ப வடிவத்தைக் கண்டுபிடித்தார்.    

1877இல் அமெரிக்கரான தோமஸ் எடிசன் வட்டுகளில் சேர்க்கப்படும் வகையில் முதல் phonograph  கருவியைக் கண்டுபிடிக்கின்றார். பின்னர் படிப்படியாக இதன் தொழில்நுட்பம் மேம்பாடு காணத் தொடங்கியது.  1880இல் ஜெர்மானியரான Emile Berliner என்பவர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கான இசைவட்டுக்களைக் கண்டுபிடிக்கின்றார். அதன் பின்னர் பெர்லினர் தனது வணிகக்கூட்டாளியான அமெரிக்கரான ஜோன்சனுடன் இணைந்து கேம்டன் நியூ ஜெர்சி அமெரிக்காவில் 1901இல் விக்டர் டால்கிங் மெஷின் கம்பெனியைத் தொடங்கி அது உலகப் பிரபலம் அடைகின்றது.

அமெரிக்க பயன்பாட்டில் பெரும்பாலும் phonograph record  என்றும் இங்கிலாந்தில் gramophone record  என்றும் இது அழைக்கப்பட்டது. அதன் பின்னர் gramophone record எனும் இசைவட்டு 1910 வாக்கில் மக்கள் புழக்கத்திற்கு வரத்தொடங்குகிறது.

பொதுவாக இசைவட்டின் சுற்றளவை வைத்து இது குறிப்பிடப்படும். உதாரணமாக 12, 10, 7 அங்குலத்தில் இவை தயாரிக்கப்பட்டன.

என்ன ஆச்சரியம் என்றால் மேற்கத்திய உலகில் அறிமுகமாகும் இந்த க்ராமஃப்போன் இசைவட்டுக்கருவி அதே 1912 வாக்கில் மலாயாவிலும் தமிழ் மக்களின் பொழுது போக்கு சாதனமாக புழக்கத்தில் வந்தது என்பதுதான்.

1912ஆம் ஆண்டு ஏப்ரல் மாத வாரப் பத்திரிக்கையான பினாங்கு ஞானாசாரியன் பத்திரிக்கையில் இடம்பெறுகின்ற ஒரு விளம்பரம் இதற்குச் சான்றாகின்றது.

இந்த விளம்பரத்தில் 1912 வாக்கில் தமிழிசை அல்லது உரைகளைக் கொண்ட இசைவட்டுக்களின் தகவல்கள் சில நமக்கு இப்பத்திரிக்கையின் வழி கிடைக்கின்றன. அவற்றுள் சில:

* இன்னும் என்மீதில் (கதிரையாத்திரை விளக்கம் – பண்: நாதனாமக்கிரியை –தாளம்: ரூபகம்.

* மயினமிசைவரும் – பண்: தன்னியாசி – தாளம்: ஆதி

* அங்கிங்கெனாதபடி – தாயுமானவர்

* தாயைவிட்டு: அரிச்சந்திரநாடகம் – மயான காண்டம்

* பரமேஸ்வரி – ராகம்:  கல்யாணி

* சண்டாளன் – ராகம்: ஆனந்தபைரவி

* எக்காலத்திலும் மறவேனே – ராகம்: நாட்டைக்குறிஞ்சி – தாளம்: ஆதி

* நான் படும்பாடு (அருட்பா) – ராகம்: பைரவி


மலாயாவின் கிள்ளான் நகரில் 38 ரெம்பாவ் சாலையில் அமைந்திருந்த கிள்ளான் அச்சு ஆலையில் திரு சி.கந்தையா பிள்ளை என்பவரது கடையில் இவை விற்கப்பட்டன என்ற தகவலும் இந்த விளம்பரத்தில் அடங்குகிறது.

மாலாயா வாழ் தமிழ் மக்களின் இசை ஆர்வத்திற்கும் பொழுதுபோக்கிற்கும் தமிழ் இசைவட்டுக்கள் உருவாக்கப்பட்டு 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புழக்கத்தில் இருந்தன என்பதும், தமிழ்நாட்டிலிருந்து அவை மலாயாவிற்குத் தருவிக்கப்பட்டு விற்பனை நிகழ்ந்திருக்கின்றது என்பதையும் பினாங்கு ஞானாசாரியன் பத்திரிக்கையின் வழி நாம் அறிகின்றோம்.

[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]

(இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத் தமிழ் இதழ் 287 இதழில் இன்று வெளிவந்தது.)