முனைவர் க.சுபாஷிணி
இன்று ஒரு பத்திரிக்கையின் பல பகுதிகளை ஆக்கிரமித்திருக்கும் செய்திகள் யாவை என ஆராய்ந்தால் ஆங்காங்கே நடைபெற்ற விபத்து, மரணம், தாக்குதல், அதிர்ச்சிகரமான செய்தி போன்றவைதான் நமக்குத் தென்படுகின்றன. இவற்றோடு உள்ளூர் மற்றும் அயல்நாட்டு அரசியல் நிகழ்ச்சிகளும் இணைந்து கொள்கின்றன. இன்று மட்டுமல்ல. மலாயாவில் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த தமிழ்ப்பத்திரிக்கைகளின் உள்ளடக்கமும் இப்படித்தான் இருந்திருக்கின்றது.
1912ஆம் ஆண்டு பினாங்கு ஞானாசாரியன் தமிழ் வாரப்பத்திரிக்கையில் உள்ள உள்ளூர் செய்திகள் சிலவற்றைக் காண்போம்.
ஒரு செய்தி, பெப்ரவரி மாதம் 28ஆம் தேதி பினாங்கு அட்டன்லேன் சாலையில் ஒரு சீனரான சுவாகாங் என்பவரை வியாக் ஆ ஈ என்ற ஒரு சீனர் கொலை செய்ததை அறிவிக்கிறது. விசாரணையில் திட்டமிடாத ஒரு கொலை இது என நீதிபதிகள் முடிவு செய்ததாகவும் குற்றவாளிக்கு நான்கு ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது என்றும் அக்குற்றவாளியைப் பிடித்த சுல்தான் என்று பெயர் கொண்ட ஒரு மலாய்காரருக்குப் பரிசாக மலேசிய ரிங்கிட் பத்து வெள்ளி வழங்கப்பட்டது என்றும் செய்தி பதிகிறது.
மற்றொரு செய்தி பினாங்கில் கஸ்டாவ் வெஸ்ஸ்ன்ஸ் என்று பெயர் கொண்ட வைர வியாபாரி ஒருவர் 25900 டாலர் பெருமானமுள்ள வைரங்களை ஏமாற்றி திருடிவிட்டார் என்பதையும், இக்குற்றத்திற்கு வில்லியம் டி சல்வா என்னும் ஒரு வைர வியாபாரி உடந்தையாய் இருந்தார் என்பதையும் பதிகிறது. இக்குற்றம் பல நாட்கள் விசாரணையில் இருந்திருக்கிறது. ஆனால் சில நாட்களுக்கு முன்னர் நீதிபதிகள் அவர்கள் இருவர் மீதும் குற்றமில்லை என தீர்ப்பு வழங்கியிருக்கின்றனர். வாதியான மெஸர்ஸ்பெர் அண்ட் கம்பெனியார் எழுப்பிய சந்தேகம் உறுதி செய்யப்படவில்லை என்று அறிவித்து குற்றவாளைகளை விடுதலை செய்த செய்தியைப் பதிகிறது.
மற்றொரு செய்தி பாம்பாட்டி ஒருவரின் மரனத்தைப் பற்றியது. ”பட்டயத்தை எடுத்தவன் பட்டயத்தால் சாவான்” என்ற பழமொழியைக் கூறி இலங்கையின் கொழும்பில் வசித்து வந்த பம்பாய் ராமசாமி என்று பெயர் கொண்ட ஒருவர் ஒரு பாம்பை வித்தை காட்ட வளர்த்து வந்ததாகவும், அதனை வைத்து வித்தைகாட்டி பணம் சம்பாரிக்க துறைமுகத்தில் இருந்த டச்சு கப்பல் ஒன்றிற்குச் சென்றதாகவும், வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கையில் அங்கு திடீரென்று ஒரு சத்தம் ஏற்பட அதில் பயந்த பாம்பு சீறிக்கொண்டு வந்து பாம்பாட்டி பம்பாய் ராமசாமியின் வலது கரத்தைக் கொத்தி விட்டு பெட்டிக்குள் புகுந்து கொண்டது என்றும் குறிப்பிடுகிறது.
அப்பாம்பின் விஷப்பற்களை முன்னரே பிடுங்கியிருந்தாலும் அது மீண்டும் முளைத்திருந்ததைப் பாம்பாட்டி ராமசாமி கவனிக்கவில்லை போலும். அங்கேயே மயக்கமடைந்து விழுந்து விட்டார். அவரைத் தூக்கிக் கொண்டு மருத்துவமணை செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார். உடனே அரசாங்கத்தினர் அந்தப் பாம்பை சுட்டுக் கொன்று அதனைப் புதைத்திருக்கின்றனர் என்ற செய்தியை இப்பத்திரிக்கையில் காண்கிறோம்.
மக்களுக்கு பேசுபொருளாக சில சுவாரசியமான தகவல்களை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இத்தகைய அசம்பாவித சம்பவங்களைப் பத்திரிக்கைகள் வெளியிடுகின்றன. வாசிக்கின்ற மக்கள் அவற்றை பற்றி ஏனையோருடன் பேசி கலந்துரையாட விரும்புவார்கள், அவர்களது கவனத்தை இத்தகைய செய்திகள் ஈர்க்கும் என்ற உத்தியை அறிந்தே பத்திரிக்கை ஆசிரியர்கள் இயங்கி வந்திருக்கின்றனர். அத்தகைய போக்கை இந்த ஆரம்பகால பத்திரிக்கைகளிலும் காண்கின்றோம்.
[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]
இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் 288ஆம் இதழில் இன்று வெளிவந்தது)
No comments:
Post a Comment