முனைவர் க.சுபாஷிணி
இளம் வயதில் மலேசியாவில் வசித்த காலங்களில் விமானம் சென்னையிலிருந்து வந்து அதில் உறவினர்களோ நண்பர்களோ வந்திருந்தால் ‚ஊர்க்கப்பல்’ வந்திருக்கு என்று எங்கள் சுற்றத்தில் சொல்லி உரையாடுவது இயல்பு. கடலில் பயணம் செய்யும் கப்பலைப் போலவே விமானத்தையும் “கப்ப” என்று பேச்சு வழக்கில் அழைப்பது மலேசியத் தமிழர்களிடையே உள்ள வழக்கம்.
தமிழ் நாட்டிலிருந்து யார் வந்திருந்தாலும் பொருட்கள் வந்திருந்தாலும் ”ஊரிலிருந்து வந்திருக்கின்றார்கள்” என்று சொல்வதும், ”ஊர் சாமான்” வந்திருக்கின்றது எனச் சொல்வதும் மிக இயல்பான ஒன்று. தமிழ்நாட்டு மக்களையே மலேசியத் தமிழர்கள் ”ஊர்க்காரர்கள்” என்று சொல்வது வழக்கம். தமிழ்நாட்டுக்குச் செல்வதென்றால் அதனையும் ”ஊருக்குப் பயணமா?” என்று கேட்பதும் வழக்கம்.
ஆக மொத்தம் தமிழ்நாட்டை “ஊர்” என்று தான் மலேசியத் தமிழர்கள் அடையாளப்படுத்தி பேசுகின்றனர். அது இன்றும் தொடர்கின்றது.
1897ஆம் ஆண்டு மலாயாவின் பினாங்கிலிருந்து வெளிவந்த வார இதழ்களில் பினாங்கு வர்த்தமானி பத்திரிக்கையும் ஒன்று. இது 2 பக்கங்களில் வெளிவந்த பத்திரிக்கை. உள்ளூர் மற்றும் அயல்நாட்டுச் செய்திகள் இதில் அடங்கும்.
அதில் வெளியிடப்பட்ட ஒரு செய்தி புதிதாக அச்சமயத்தில் தமிழ்நாட்டிலிருந்து மலாயாவிற்குச் சேவையைத் தொடங்கிய ஒரு புதிய கப்பலைப் பற்றி பேசுகிறது,
இந்தப் புதிய “ஊர்க்கப்பல்” ஒவ்வொரு வாரமும் தமிழ்நாட்டிலிருந்து மலாயாவிற்குச் சேவையைத் தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே அச்சமயத்தில் வேறு சில கப்பல்களும் ஆட்களையும் பொருட்களையும் ஏற்றி வரும் சேவை இருந்ததால் இப்புதிய கப்பல் வந்த பின்னர் போட்டியில் பயணக் கட்டணம் குறைய வாய்ப்பிருப்பதை இப்பதிவு சுட்டிக்காட்டுகிறது.
போட்டிக்குப் புதிய கப்பல் வந்திருப்பதால் ஏற்கனவே பயணிக்கும் கப்பல்களில் சிறிய குறையைக் கண்டுபிடித்தாலும் உடனே புதிய கப்பலுக்கு வணிகர்கள் சென்று விடுவார்கள். ”வேண்டாப் பெண்டிர் கைப்படக் குற்றம் கால்படக் குற்றம்” என்பது போல என்கிறது இச்செய்தி.
இப்புதிய கப்பலைப் பற்றி உள்ளூரில் மக்கள் புகழ்ந்து பேசி மகிழ்வதைக் கேலி பேசும் வகையில் இப்புதிய கப்பலை இயக்குபவர்களை உள்ளூர் மக்கள் புகழ்ந்து பேசுவதை இச்செய்தி குறிப்பிடுவதைக் காண்கின்றோம்.
இதற்கு முன்னால் தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த கப்பலில் தொற்று நோய்க்காரணமாக மாடுகளை இறைச்சிக்காகக் கொண்டு வருவது தடைபட்டிருந்தது போலும். அதனால் மாட்டிறைச்சியின் விலை கட்டி ஒன்று (அளவை) 30 காசு விலையேற்றம் கண்டிருந்தது. ஆட்டிறைச்சி விலையேற்றம் கண்டால் கூட பரவாயில்லை; மாட்டிறைச்சி விலையேற்றம் காணக் கூடாது என்கிறது இச்செய்தி.
[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]
(இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழ் 290இல் வெளியிடப்பட்டது.)
No comments:
Post a Comment