முனைவர் க.சுபாஷிணி
கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அன்றைய மலாயாவின் பினாங்குத் தீவிலிருந்து குறிப்பிடத்தக்க தமிழ் பத்திரிகைகள் வெளிவந்துள்ளன. அத்தகைய முயற்சிகளில் ஒன்று சத்தியவான் என்ற பெயர் கொண்ட, வாரம் ஒரு முறை திங்கட்கிழமைகளில் வெளியிடப்பட்ட பத்திரிக்கை.
இதன் தலைப்பில் சத்தியவான் என தமிழிலும் ஆங்கிலத்தில் The Sathiawan என்றும் தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பத்திரிக்கையில் இது 1919 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக வெளிவந்திருப்பதைக் காண முடிகின்றது. ஆக, ஏறக்குறைய 1919 அல்லது இதற்கு ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் அல்லது மாதங்களுக்கு முன்னர் இப்பத்திரிக்கை முயற்சி தொடங்கப்பட்டிருக்கலாம் என்ற ஊகத்திற்கு இது இடம் அளிக்கிறது.
14 ஏப்ரல் 1919 அன்று வெளியிடப்பட்ட சத்தியவான் பத்திரிகையில் உள்ள தகவல்களை ஆராய்வோம்.
நான்கு பக்கங்களைக் கொண்ட வகையில் இது அமைந்திருக்கின்றது. இப்பத்திரிகை பினாங்குத் தீவில் உள்ள பினாங்கு ஸ்ட்ரீட் சாலையில் அமைந்திருந்த விக்டோரியா பிரஸ் என்ற அச்சகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தவர் டாக்டர். பாலகந்தக சிவம் என்பவர். பினாங்கு ஸ்ட்ரீட் என்பது தமிழர்கள் மிக அதிக எண்ணிக்கையில் வணிகம் செய்கின்ற ஒரு பகுதி என்பதை இன்றும் காண்கிறோம்.
ஏனைய பத்திரிகைகளைப் போலவே இந்த பத்திரிகைக்கும் சந்தாதாரர்கள் தேவை என்பதைக் குறிப்பிட்டு பத்திரிகை நிர்வாகத்தார் விளம்பரங்கள் செய்துள்ளார்கள்.
தங்கள் பத்திரிகை பற்றிய நல்ல கருத்துக்களையும் எண்ணங்களையும் வாசகர்களிடையே விதைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தங்களது பத்திரிக்கை பற்றி கீழ்காணும் வகையில் இதில் செய்தி இணைத்துள்ளார்கள்.
”உலகத்துக்குச் சிறப்புப் பொருள்.
பரலோகத்துக்குச் சிறப்பு அருள் அல்லது அன்பு.
மனிதன் தேர்ந்த பிறகு பிறருக்குப் போதிப்பது கல்வி.
மனிதன் ஞானத்தை அடைந்த பிறகு பிறருக்குப் போதிப்பது மார்க்கம் அல்லது மதம்.
பினாங்கு மலாயா தீபகற்பங்களில் பிரசுரமாகும் செந்தமிழ் பத்திரிகைகளில் இது ஒன்றே மிகச்சிறந்தது.”
செந்தமிழ் பத்திரிக்கை என்று தங்களைக் குறிப்பிட்டுக் கொண்டாலும் கூட மணிப்பிரவாள நடையும் ஆங்கிலக் கலப்பும் இப்பத்திரிக்கையில் நிறைந்து காணப்படுகின்றது.
பினாங்கு மாநில செய்திகள் தான் இந்தப் பத்திரிக்கையை முழுமையாக நிறைத்திருக்கின்றன. பினாங்கு அறநிலையத்துறை தொடர்பான செய்திகள், பினாங்கு முத்துமாரியம்மன் கோயிலின் செய்திகள், உள்ளூர் செய்திகள் ஆகியன அன்றைய சூழலை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
மலாயாவில் தமிழ்ப் பத்திரிக்கைகள் வெளியீட்டில் பினாங்குத் தீவில் வாழ்ந்த தமிழ் மக்கள் பெரும் பங்காற்றியுள்ளனர் என்பதற்கு இந்த சத்தியவான் வாரப்பத்திரிக்கையும் சான்றாக அமைகிறது.
[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]
(இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழ் 291இல் இன்று வெளியிடப்பட்டது.)
No comments:
Post a Comment