முனைவர் க.சுபாஷிணி
இன்று சிங்கப்பூர் தனி நாடாக உள்ளது. ஆனால் மலேசியா பண்டைய மலாயா என்ற அடையாளத்திலிருந்து பிரிந்து, பிரித்தானிய ஆட்சியில் இருந்து 1957 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னரும் கூட சிங்கப்பூர் மலேசியாவின் ஓர் அங்கமாகத்தான் இருந்தது.
1959 ஜூன் மூன்றாம் தேதி முதல் சிங்கப்பூர் தனி ஆட்சியுடன் உருவாகத் தொடங்கியது. அதன் பின்னர் அதிகாரப்பூர்வ மலேசிய புரிந்துணர்வின் வழி 1963 செப்டம்பர் 16ஆம் தேதி முதல் சுதந்திர நாடாக படிப்படியாக பிரிட்டனிடம் இருந்தும் மலேசியாவிடமிருந்தும் பிரிந்து தனி நாடாக மாறியது.
இந்தப் பின்னணியோடு நாம் பார்க்கும் போது 1963 க்கு முன்னர் சிங்கப்பூர் மலாயாவின் ஓர் அங்கமாகத்தான் இருந்தது.
வரலாற்று காலத்தில் பண்டைய ஸ்ரீவிஜயா பேரரசு, அதன் பின்னர் மலாய் பேரரசு ஆட்சி காலத்தில் எல்லாம் மலாயா, இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் மூன்றும் பெரும் பேரரசின் ஆட்சிகளுக்குள் இருந்தன. பின்னர் படிப்படியாக பல்வேறு ஆதிக்கங்கள் இடைப்பட்ட காலத்தில் ஏற்படுத்திய சூழல் மாற்றங்களால் இவை தனித்தனி நாடுகளாக இன்று பிரிந்திருக்கின்றன.
19 ஆம் நூற்றாண்டு காலத்தில் தமிழ் பத்திரிகைகள் முயற்சிகள் என்று நோக்கும் போது பினாங்கு பகுதியில் எப்படி தமிழ் பத்திரிகை வெளியீட்டு முயற்சிகள் தொடங்கப்பட்டதோ, அதேபோல சமகாலத்தில் சிங்கையிலும் தமிழ் பத்திரிகை முயற்சிகள் வெளிவரத் தொடங்கின. அத்தகைய ஒரு பத்திரிக்கை தான் ”சிங்கைநேசன்”.
ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை தோறும் வெளியிடப்படும் பத்திரிக்கையாக ஒரு வாரப் பத்திரிக்கையாக சிங்கைநேசன் அன்று வெளிவந்து கொண்டிருந்தது.
1887 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி வெளிவந்த சிங்கைநேசன் இதழ் கூறும் ஒரு செய்தியைக் காண்போம். இது புடவைகள் பற்றிய ஒரு விளம்பரம்.
இன்றைக்கு மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் பல புடவைக் கடைகள் இருக்கின்றன. ஆனால் இன்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து புடவைகளைக் கொண்டு வந்து விற்பனை செய்வோர் உள்ளூர் வியாபாரிகளுடன் வணிகத்தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அதன் வழி பொருட்களை அனுப்பி வைப்பது என்பது நடைமுறை வழக்கமாக இருந்தது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இருந்து வருகின்ற ஒவ்வொரு கப்பலிலும் புடவைகளும், வேஷ்டிகளும், துண்டுகளும், கைலிகளும் மற்ற மற்ற பொருட்களும் வந்து சேர்வதும் மிக இயல்பாக நடந்து கொண்டிருந்தது. அத்தகைய, புடவைகள் விற்கும் ஒருவர் கொடுத்த விளம்பரத்தை இப்பத்திரிகையில் கீழ்காணும் செய்தி விளக்குகின்றது.
”மதுரை வெள்ளிக்கெண்டை வேஷ்டிகளும், உருமால்களும், சேலைகளும், காசி பேட்டு மாதிரி துப்பட்டிகளும், சிறுபிள்ளை வேஷ்டிகளும், சிற்றாடைகளும், சீர்மைக்கெண்டையில் மேற்கண்ட ஜவுளித் தினுசுகளும், சென்ன பட்டண மாதிரி ஜோடி லேஞ்சிகளும், பல்லாரி கடப்பை கர்நூல் முதலிய இடங்களில் இருந்து வருவித்த விரிப்புக்கடுத்த மேலான கம்பள திணிசுகளும், மல், காசா காரிக்கன் புடவைகளும், கொறநாடு, கும்பகோணம், சிதம்பரம் முதலில் இடங்களில் இருந்து பல மாதிரி பட்டு பளுக்கா சேலைகளும், சென்னப்பட்டின மாதிரி கைலி சாரம் தினுசுகளும் மற்றும் பலவித ஜவுளி தினசக்களும் வந்திருக்கின்றன. பலவித புஸ்தகங்களும் இருக்கின்றன. வேண்டியவர்கள் பால்கடை சைட்டியில் 49 ஆம் நம்பர் புடவை கடையில் வந்து வாங்கிக் கொள்ளலாம்.
இப்படிக்கு
திவான்முக்கியித்தீன்சாகி, சிங்கப்பூர், 3/8/87”
மேற்கண்ட செய்தியில் ”லேஞ்சி” என்ற சொல் கைத்துண்டுகளைக் குறிக்கின்றது. மலேசிய தமிழ்மக்கள் புழக்கத்தில் உள்ள ஒரு சொல் இது. அதே போல “சாரம்” எனும் சொல் கைலியை குறிப்பது. Sarong எனும் மலாய் மொழிச் சொல்லின் தமிழாக்கம். மலேசியாவிலும் இலங்கையிலும் தமிழ் மொழி பயன்பாட்டில் உள்வாங்கப்பட்ட ஒரு சொல் எனலாம்.
[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]
இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத் தமிழ் இதழ் 292ல் இன்று வெளியிடப்பட்டது
No comments:
Post a Comment