Wednesday, July 23, 2025

மலாயா ஆவணங்கள் – 18: கப்பல் டிக்கெட்

 




முனைவர் க.சுபாஷிணி

தமிழ்நாட்டில் பஞ்சகாலத்தில் தாம் வாழ்ந்த ஊரையும், கிராமத்தையும், நிலத்தையும் விட்டு புதிய வாழ்க்கையைத் தேடி பயணித்த எண்ணற்ற தமிழ் நிலத்து மக்கள் இன்று உலகின் பல நாடுகளிலும் தீவுகளிலும் வசிக்கின்றார்கள். அவர்கள் புலம்பெயர்ந்த காலத்தில் சொல்லொனா துயரத்தை அவர்கள் அனுபவித்தாலும் இன்று அம்மக்களது சந்ததியினர் தாங்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் கல்வி, பொருளாதாரம், வாழ்க்கை சூழல் ஆகியவற்றில் உயர்ந்து நல்ல வாழ்க்கையைப் பெற்று அந்தந்த நாடுகளில் சட்டப்படி குடியுரிமை பெற்ற மக்களாக வாழ்கின்றார்கள்.

பஞ்சம் என்றால் அது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிகழ்ந்தது என்பது நம் பொதுவான கருத்து என்றாலும், கிபி 13 ஆம் நூற்றாண்டு முதல் தமிழ் நிலத்தில் பஞ்சம் குறித்த ஆவணக் குறிப்புகளை நாம் காண்கின்றோம் (காண்க: நூல் "தமிழர் புலப்பெயர்வு - உலகளாவிய பயணங்கள் குடியேற்றங்கள் வரலாறு - ஆசிரியர் க.சுபாஷிணி)

மலாயாவிற்குத் தமிழ்நாட்டில் இருந்து தமிழ் மக்களின் புலம்பெயர்வு என்பது பல்வேறு காலகட்டங்களில், குறிப்பாக பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் நிகழ்ந்திருக்கின்றது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பஞ்சத்தின் காரணத்தால் தமிழ் மக்கள் மலாயா வந்திருக்கின்றனர். அவர்கள் மெட்ராஸ் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கப்பல்களில் மலாயாவிற்கு வரும்போது பெரும்பாலும் அவர்கள் இறங்கிக் கொள்வது பினாங்குத் தீவில். சிலர் கிள்ளான், இறுதியாக சிங்கப்பூர் என்று இறங்கினர்.

இப்படி வந்த மக்கள் மலாயாவின் எல்லா மாநிலங்களிலும் தோட்டக்காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் விவசாயத் தொழிலில் ஈடுபட்டனர்.  இது தொடர்பான பல ஆவணக் குறிப்புகள் இன்று நமக்கு கிடைக்கின்றன. அத்தகைய பயணத்தைப் பற்றிய ஒரு செய்தியை மலாயாவின் பினாங்கில் இருந்து வெளிவந்த சத்தியவான் என்ற பத்திரிக்கை நமக்கு வழங்குகின்றது.

12.5.1919 என்று தேதி இடப்பட்ட ஒரு இதழ் இச்செய்தியை குறிப்பிடுகிறது.

பஞ்சத்தால் சீர் அழிந்த தமிழ் மக்கள் தரகர்களிடம் காசு கொடுத்து பயணம் செய்வது என்பது ஒரு புறம். சிலரோ மெட்ராஸில் இருந்து புறப்படும் கப்பல் எந்த தேதியில் எத்தனை மணிக்கு புறப்படுகின்றது என்பதை தெரிந்து கொண்டு தாங்களே கூட டிக்கெட் வாங்கிக் கொண்டு பயணம் செய்து மலாயா வந்திருக்கின்றனர். அப்படி பயணச் சீட்டு பெறுகின்ற அலுவலகத்தில் அவர்கள் பணம் கட்டி பயணச்சீட்டு வாங்கும் போது அவர்கள் படுகின்ற கஷ்டம் மிகப் பெரிது என்பதை இச்செய்தி சுட்டிக்காட்டுகிறது.

ஏமாற்றுக்காரர்களாக அதாவது டம்பவேடம் பூண்டு உலவிக் கொண்டிருக்கும் சிலர் உபகாரமாய் நான் வாங்கித் தருகிறேன் என்றும், அதற்கு தனக்கு அன்றைய மலாயா ரிங்கிட் இரண்டு கொடுக்க வேண்டும் என்றும் ஏமாற்றி அவர்களிடம் தொகையை வாங்கிக் கொண்டு மறைந்து விடுகின்றார்கள்.  

சில ஏமாற்றுக்காரர்கள் மொத்தமாக 10 அல்லது 20 டிக்கெட்களை முன் பணம் கொடுத்து வாங்கிக் கொள்வதால் பயணச்சீட்டு அலுவலகத்தில் மக்கள் வரும்போது பயணச் சீட்டு கிடைப்பதில்லை. அத்தகைய சூழலில் மெட்ராஸ் நகரில் அவர்கள் அடுத்த கப்பல் வரும் வரை காத்திருக்கும் போது உணவுக்கு வழியில்லாமல் மிகுந்த துன்பத்திற்கு உள்ளான நிலையையும் இப்பத்திரிக்கை செய்தி சுட்டிக்காட்டுகிறது.

இப்படி ஏமாந்து போவதாலும், அடுத்த கப்பல் வரும் வரை காத்திருப்பதற்கு ஏற்ற செலவுகளை கவனிக்க முடியாமல் சிக்கித் தவிப்பதாலும் கட்டண அலுவலகங்களில் பணிபுரியும் மேலதிகாரிகள் இதனை கவனிக்க வேண்டும் என்பதை இப்பத்திரிகை கூறுகிறது.

இதற்கு நிவாரணமாக,  இத்தனை பயணச்சீட்டுகள் தான் ஒரு பயணத்திற்கு என்பதை பினாங்கிலேயே அலுவலகம் தீர்மானித்து பினாங்குக்கு எவ்வளவு,  கிள்ளான் சிங்கப்பூர் ஆகிய இடங்களுக்கு எவ்வளவு என்பதையும் தெரிவித்து அதனை நடைமுறைப்படுத்தினால் தமிழ்நாட்டிலிருந்து வருகின்ற ஏழை மக்களுக்கு அவர்கள் அனுபவிக்கின்ற சிரமம் குறையும் என்று இப்பத்திரிக்கை ஆலோசனையை முன் வைக்கின்றது.

இச்செய்தியின் வழி பினாங்கிலிருந்து வெளிவந்த “சத்தியவான்” வாரப் பத்திரிக்கை மக்கள் நலனில் அக்கறையோடு அக்காலகட்டத்தில் செயல்பட்டது என்பதையும், பொதுமக்கள் அதிலும் குறிப்பாக பஞ்சத்தில் வாடி வேலை தேடி மலாயா வருகின்ற மக்கள் சிரமம் இல்லாமல் மலாயா வந்து சேரும் வகையில் அவர்களது பயணங்கள் இருக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொண்டு பத்திரிக்கை தர்மத்தை செயல்படுத்தி இருக்கின்றது என்பதையும் இச்செய்தியின் வழி காண்கிறோம்.

செய்தி ஊடகங்கள் கடைக்கோடி எளிய மனிதர்களுக்கு உதவும் கருவியாக இருக்க வேண்டும் என்பதுதான் பத்திரிக்கை மற்றும் இதழியல் முயற்சிகளுக்கு அடிப்படை காரணமாகவும் நோக்கமாகவும் இருந்தது. ஆனால் இன்று பத்திரிகைகள் இத்தகைய நோக்கத்தோடு செயல்படுகின்றனவா என்பதை பத்திரிக்கை நிர்வாகத்தினர் ஒவ்வொருவரும் தங்களை நோக்கி கேட்டுக் கொள்ள வேண்டியதும் அவசியம் தான் அல்லவா!

[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]

(இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத் தமிழ் இதழ் 294ல் இன்று வெளியிடப்பட்டது)

No comments:

Post a Comment