முனைவர் க.சுபாஷிணி
தமிழ் இதழியல் முயற்சிகள் சீரிய வகையில் தொடங்கப்பட்ட காலமாக 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தைக் கூறலாம். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கப்பட்ட தமிழ் பத்திரிக்கைகள், வார மாத இதழ்கள் மேலும் பலருக்கு இத்துறையில் ஈடுபாட்டை உருவாக்கியதன் விளைவாக புதிய பத்திரிக்கைகளின் வரவுகளும் அமைந்தன. அவ்வகையில் தமிழ்நாடு மட்டுமன்றி, பர்மா, மலாயா, இலங்கை ஆகிய தமிழர் வசிக்கும் பகுதிகளில் புதிய பத்திரிக்கைகள் தொடங்கப்பட்டன.
1919ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி மலாயாவின் பினாங்கிலிருந்து வெளியிடப்பட்ட சத்தியவான் வாரப்பத்திரிக்கையில் ஒரு செய்தி இடம்பெறுகின்றது. அதில் அச்சமயத்தில் இலங்கையிலிருந்து ஒரு புதிய பத்திரிக்கை வெளிவரத் தொடங்கியிருக்கும் செய்தியை அறிகின்றோம். இப்பத்திரிக்கையின் பெயர் ”ஆதி திராவிடன்”. இந்த விளம்பரச் செய்தியைக் காண்போம்.
“ஆதி திராவிடன்”
இப் பெயர் வாய்ந்த ஒரு மாதாந்தப் பத்திரிகை இலங்கை தென்னிந்திய ஐக்கிய சங்கத்தாரால் ஆதிதிராவிடன் முன்னேற்றத்தைக் கருதி 16 பக்கங்களடங்கி மிக அழகாக அச்சிடப்பட்டிருக்கின்றது. பத்திரிக்கையின் போக்கை நோக்க அது தன்சந்தாதாரர்களுக்கு மிகவும் உபயோகமான விஷயங்களையே எடுத்து போதிக்கு மென்று நம்புகின்றோம். அப்பத்திரிக்கைக்கு வருஷ சந்தா ரூபா 1.25. சந்தாதரராக சேர விரும்புவோர் ஆதிதிராவிடன் பத்திராதிபர், தென்னிந்திய ஐக்கிய சங்கம், 221, சர்மாவிலா, கொள்ளுப்பட்டி,கொழும்பு என்னும் விசாலத்திற்கு எழுதிக்கொள்ளலாம். – திராவிடன் “
இந்த விளம்பரத்துடன் மேலும் சத்தியவான் பத்திரிக்கை ஆசிரியர் கீழ்க்காணும் வாழ்த்தையும் பதிகின்றார்.
[ஆதிதிராவிடர்கள் முன்னேற்றத்திற்குப் பத்திரிக்கை மிக அவசியம். திராவிடன் பத்திராதிபதியோடு இப்பத்திரிக்கையும் வாழும்படி ஆசி கூறுகிறோம்]
இலங்கையில் தொடங்கப்பட்ட ஆதி திராவிடன் இலங்கையில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் பத்திரிக்கையாகத் திகழ்ந்திருக்கின்றது. இந்த ஆதிதிராவிடன் என்ற பத்திரிக்கை இலங்கையின் முதலாவது தலித் இதழ் மட்டுமல்ல, மலையகத்தின் முதலாவது பத்திரிக்கையுமாகும் என்பதை நோர்வேயின் வசிக்கும் இலங்கை ஆய்வாளர் சரவணன் குறிப்பிடுகின்றார். (https://www.namathumalayagam.com/2023/04/AdiDraviden.html)
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இதழியல் செயல்பாடுகளில் அயோத்திதாசப் பண்டிதர் மிக முக்கியமானவர். அக்காலத்தில் இவரது ஆதிதிராவிடர்கள் நலன் சார்ந்த முயற்சிகளின் தாக்கத்தை தமிழ்நாடு மட்டுமன்றி மலாயா, இந்தோனீசியா, இலங்கை ஆகிய நாடுகளிலும் காணமுடியும். எடுத்துக்காட்டாக அயோத்திதாசப் பண்டிதரின் தாக்கத்தாலும் உதவியுடனும் இந்தோனிசியாவின் மேடான் நகரில் ஆதிதிராவிடர் அமைப்பு 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவாக்கம் கண்டு செயல்பட்டது (நூல்: தமிழர் புலப்பெயர்வு – க.சுபாஷிணி) அதே வகையில் இலங்கைக்கான அயோத்திதாசப் பண்டிதரின் வருகை எழுச்சியை ஏற்படுத்தியது என்பதும் மறுப்பதற்கில்லை.
இந்த ஆதி திராவிடன் பத்திரிக்கை 1919ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோர் அரசியல், கல்வி, சமயம், இலக்கியம், பெண்கள் முன்னேற்றம், சாதிப் பிரிவினை எதிர்ப்பு ஆகிய பொருளில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
சமூக மாற்றத்தை முன்வைத்து 20ஆம் நூற்றாண்டில் வெளிவந்த இதழியல் முயற்சிகளில் இலங்கையிலிருந்து வெளிவந்த இந்த ஆதி திராவிடன் என்ற மாதப் பத்திரிக்கையும் முக்கியத்துவம் பெறுகின்றது.
[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]
(இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழ் 293 இல் இன்று வெளியிடப்பட்டது)
No comments:
Post a Comment