முனைவர் க.சுபாஷிணி
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மலாயாவின் பினாங்கில் இருந்து வெளிவந்த தமிழ் பத்திரிகைகளில் ”சத்தியவான்” வாரப்பத்திரிக்கை சமூக சிந்தனையோடு இயங்கிக் கொண்டிருந்த ஒரு பத்திரிக்கையாக மிளிர்கிறது. அதில் 12.5.1919 அன்று வெளிவந்த பத்திரிக்கையில் தஞ்சாவூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மக்கள் அனுபவித்த கொடூரங்களைப் பற்றி ஒரு செய்தி வெளிவந்திருக்கின்றது.
இச்செய்தி தஞ்சாவூர் ஜில்லாவில் சாதி வேறுபாடுகளும் பண்ணையார்கள் வேலையாட்களை வைத்து விவசாயம் செய்யும் முறை பற்றியும் பேசுகின்றது. பண்ணை சாகுபடி முறை மிகக் கொடூரமாக இருக்கின்றது என்பதை இச்செய்தி பதிகின்றது.
”பண்ணை சாகுபடி என்ற மகா பெரிய தேர் சக்கரத்தில் கழுத்தை கொடுத்துக் கொண்டு கஷ்டப்படுகிறவர்கள் பஞ்சமர்களே. அவர்கள் குடியிருப்பதற்கு வசதியே கிடையாது. இவ்விஷயத்தில் அவர்களுக்கு மிராசுதார்களால் உண்டாகும் இம்சை மிகவும் அதிகம். சொற்ப குற்றத்திற்கெல்லாம் பண்ணை ஆட்களின் குடிசைகளைப் பிரிப்பதும் அல்லது அக்கினி பகவானுக்கு இரையாக்குவதுமே சகஜமான தண்டனை. ஏனெனில் அந்தக் குச்சி வீடுகள் இருப்பது மேற்படி மிராசுதார்களின் மனைக்கட்டு என்று தர்க்கம் செய்கிறார்கள்” என்று இச்செய்தி குறிப்பிடுகிறது.
பண்ணையார்கள் தங்கள் நிலங்களில் பஞ்சமர்கள் வாழ்கின்றார்கள் என்ற ஒரு காரணத்தைச் சொல்லி அவர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம் அவர்களின் வீட்டை எரிப்பது அல்லது அவர்களின் குடிசை வீட்டை பிரித்து போட்டு அவர்களை நிற்கதியாக நிற்க வைப்பது என்ற வகையில் கொடுமை செய்திருக்கின்றார்கள். உண்மையில் இப்பத்திரிகை செய்தி சொல்கின்ற கொடுமைகளை விட இன்னும் அதிகமாக கொடுமைகள் நிகழ்ந்திருக்கும். ஆனால் இதில் விரிவாக அவை விளக்கப்படவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
மேலும் இது பற்றி பேசும் இப்பத்திரிகை செய்தி, ”இது சம்பந்தமாக கவர்னருக்குப் பலமுறை மனு செய்யப்பட்டது. தென்னிந்தியா ஒடுக்கப்பட்டவர்கள் சங்கத்தாரும் சென்ற 10 வருஷமாக பண்ணையாட்களின் மனைக்கட்டு விஷயமாகப் பரிகாரம் செய்யும்படி சென்னை கவர்ன்மெண்டாருக்கு மனு செய்தார்கள். ரங்கூன், சென்னப்பட்டணம், திருச்சினாப்பள்ளி முதலான பிரபல தலங்களில் உள்ள ஆதிதிராவிட சபைகளால் கவுரவம் பொருந்திய இந்தியா தேச மந்திரி அவர்கள் திவ்ய சமூகத்திற்கு அனுப்பப்பட்ட விண்ணப்பங்களில் இருந்தும் இம்மனைக்கட்டு விஷயம் குறிக்கப்பட்டிருந்தது. சென்ற மாதம் சிதம்பரம் நந்தனார் சபையின் ஆதரவில் நடந்த பஞ்சமர் கான்பரென்சில் மனைக்கட்டு விஷயமாயும் ஒரு தீர்மானம் ஏற்படுத்தப்பட்டு மேற்படி மந்திரி அவர்களுக்கும் நமது பிரதிநிதி சென்னை கவர்னர் முதலான அரசாங்க தலைவர்களுக்கும் தந்தி மூலமாய் அனுப்பப்பட்டது” என்று குறிப்பிடுகிறது.
இதிலிருந்து மூன்று செய்திகளை முக்கியமாகக் காணலாம்.
1. 1919 வாக்கிலேயே தென்னிந்திய ஒடுக்கப்பட்டவர்கள் சங்கம் என்ற ஒன்று இயங்கி வந்தது என்பதையும் அது கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு இது தொடர்பாக கடிதம் எழுதி இந்த கொடுமைகளை விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.
2. ரங்கூன், அதாவது இன்றைய மியான்மார் தலைநகர் ரங்கூன், சென்னை, திருச்சி ஆகிய பகுதிகளில் ஆதிதிராவிட சபை ஏற்படுத்தப்பட்டு அவை மக்களின் நலனுக்காக போராடி இருக்கின்றன.
3. இந்த நிகழ்வுக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் சிதம்பரத்தில் உள்ள நந்தனார் சபை என்ற ஓர் அமைப்பு இருந்தது பற்றியும், அங்கு ஒரு மாதத்திற்கு முன்னர் பஞ்சம நலன்களைக் கவனத்தில் கொண்டு ஒரு மாநாடு நடத்தப்பட்டு அதில் பண்ணையார்களின் மனைக்கட்டு மற்றும் அதனால் ஏற்படுகின்ற கொடூரங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட்டது.
19 ஆம் நூற்றாண்டும் 20 ஆம் நூற்றாண்டும் ஒடுக்கப்பட்ட மக்களின் கொடூரங்களை ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியாளர்களிடம் கொண்டு சென்று சேர்த்து தங்களுக்கு நீதியும் நிவாரணமும் கிடைக்க வேண்டுமென ஒடுக்கப்பட்ட மக்கள் மேற்கொண்ட முயற்சிகளை வெளிப்படுத்துகின்ற காலங்களாக அமைந்தன. அடிமைகளாக பண்ணையார்களிடம் எந்த எதிர் கேள்விகளும் கேட்க முடியாமல் துன்பத்தில் உழன்று கொண்டிருந்த ஏராளமான ஒடுக்கப்பட்ட ஆதிதிராவிட அல்லது பஞ்சம சமூகத்து மக்கள் பட்ட இன்னல்கள் அதிகம். தமிழ் மக்கள் பலர் இக்காலகட்டங்களில் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு கூலிகளாகவும் அடிமைகளாகவும் ஒப்பந்தக் கூலிகளாகவும் புலம்பெயர்ந்து சென்ற வரலாறும் இதனோடு தொடர்புடையது தான்.
ஆக இப்பத்திரிகை செய்தி சொல்வதன் அடிப்படையில் தஞ்சாவூர் பகுதியில் பண்ணையார்களின் கொடுமைகளை அரசுக்குத் தெரிவிக்கும் ஒரு முயற்சியாக இதனைக் காண்கிறோம்.
இக்கோரிக்கைகளின் அடிப்படையில் மனைக்கட்டு விஷயமாக எல்லா விபரங்களையும் விசாரிக்கும்படி ஸ்ரீமான் ஸ்ரீநிவாச்சாரி என்ற ஒருவரை துணை உதவி ஆட்சியராக பிரித்தானிய அரசாங்கம் நியமித்திருக்கின்றது என்பதை இச்செய்தி குறிப்பிடுகின்றது. இந்த சீநிவாச்சாரி என்பவர் பஞ்சமர்களின் பரிதாப நிலையைக் கண்டு அனுதாபம் அடைந்து தீர விசாரித்து பிரித்தானிய அரசுக்கு அறிக்கை கொடுத்ததாகவும் அதற்காக பஞ்சமர்கள் அனைவரும் அவருக்கு நன்றி செலுத்துவதாகவும் இப்பத்திரிக்கை செய்தி மேலும் குறிப்பிடுகிறது.
[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]
(இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத் தமிழ் 295ல் இன்று வெளியிடப்பட்டது)