Wednesday, May 28, 2025

மலாயா ஆவணங்கள் – 10: 1898இல் பினாங்கில் கல்வி

 





முனைவர் க.சுபாஷிணி


1886இல் முதலில் வெளிவந்து பின்னர் 1888 வாக்கில் ஆங்கில பெயரையும் உள்ளடக்கியவாறு வெளிவந்த  ”பினாங்கு விஜய கேதனன்” பத்திரிக்கையின் 1898ஆம் ஆண்டு அக்டோபர் மாத இதழ் அக்காலகட்டத்தில் பினாங்கில் தமிழ் மக்களின் குழந்தைகளின் கல்வி நிலை பற்றி சில தகவல்களைப் பதிகின்றது.    இதில் இடம்பெறுகின்ற ஆசிரியர் தலையங்கம் போன்ற முதற்பகுதி கல்வி, தமிழ்ச்சமூக நிலைகளைத் தொட்டு கருத்து பதிகிறது.

தற்காலத்தில் பினாங்கில் வந்து வசிக்கும் தமிழ்நாட்டினர் கல்வியின் முக்கியத்துவம் தெரியாமல் இருப்பதாகவும் குழந்தைகளைப் பல்வேறு வேலைகளைச் செய்ய அனுப்புவதாகவும் குற்றம் சுமத்துகிறது. மேலும் கடைத்தெருக்களில் உள்ள திண்ணைப்பள்ளிக்கூடங்களில் அரிச்சுவடி, எண்கள் போன்றவற்றை ஆழ்ந்த அக்கறையின்றி ஆசிரியர்கள்  கற்றுத் தருகின்றனர் என்றும் சாடுகிறது.

இந்த அவல நிலைக்கு மாற்றாக ஆங்கிலேய முகம்மதிய பள்ளிக்கூடம் ஒன்று பினாங்கில் சூலியா ஸ்ட்ரீட் சாலையில் எண் 130இல் உள்ள கட்டிடத்தில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கடந்த ஆறு மாதங்களாக  இங்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருவதையும் இப்பத்திரிக்கை பதிந்திருக்கின்றது.

இந்த அடிப்படை பள்ளியில் ஆங்கிலேய அரசு ஏற்படுத்தியுள்ளபடி ஆங்கிலம், வாசிப்பு, எழுத்து, கணிதம், பூகோளம், இலக்கணம், சொற்கள், தமிழிலும் ஆங்கிலத்திலும் வாசிப்பு, எண்கணிதம், ஆத்திச்சூடி, அவ்வையார் இயற்றிய செய்யுட்கள், உரையுடன் பயிற்சி பெறும் வகையில் நடத்தப்பட்டன.

இப்பள்ளியில்  கல்வி கற்கும் மாணவர்கள் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளையும் கற்பார்கள்.  இங்கு ஆங்கிலத்தில் மூன்றாம் நான்காம் வகுப்பில் தேறிய மாணவர்களைப் பினாங்கின் முதல் பள்ளிக்கூடம் என அழைக்கப்படும் புகழ்மிக்க “பினாங்கு ஃப்ரீ ஸ்கூல்” பள்ளிக்கு அடுத்த கட்ட உயர் கல்விக்கு இணைத்துக் கொள்வார்கள் என்பதையும் குறிப்பிடுகிறது.

இத்தகைய பல்வேறு பயன்களை குழந்தைகளின் எதிர்காலத்திற்கு வழங்கக்கூடிய கல்வியை வழங்குகின்ற  இந்த ”ஆங்கிலேய முகம்மதிய”  பள்ளிக்கூடத்திற்குக் குழந்தைகளை அனுப்புங்கள் என்று கோரிக்கை வைக்கின்றது 1898 அக்டோபர் மாத பினாங்கு விஜய கேதனன்.

இப்பள்ளியில் படிப்பதற்கு கட்டணமும் வசூலிக்கப்பட்டது.  அவ்வகையில், ஒவ்வொரு மாதமும் கீழ்க்காணும் வகையில் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

முதலாம் வகுப்பு – 50 காசு

இரண்டாம் வகுப்பு - 50 காசு

மூன்றாம் வகுப்பு - 75 காசு

நான்காம் வகுப்பு – 1 வெள்ளி (மலாயா)

பள்ளியில் சேர்க்கப்ப்டும் மாணாக்கர்களை இடையிலே நிறுத்தக்கூடாது என்றும் குறைந்தது ஒரு வருடமாவது அவர்களைப் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்றும் இப்பத்திரிக்கை அறிவுரை கூறுகிறது.

ஆக, 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் செயல்பாட்டில் இருந்த திண்ணைப்பள்ளிகள் தரமான கல்வியை வழங்கவில்லை என்பதும் அதற்கு மாற்றாக பினாங்கில் அரசு தமிழ் இஸ்லாமியர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட முயற்சிகளின் பலனாக ஒரு தமிழ்ப்பள்ளி ஒன்று 1898இல் தொடங்கப்பட்டதை இந்த ஆவணத்தின் வழி அறிகின்றோம்.

[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]

(தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத் தமிழ் இதழ் 286இல் வெளிவந்த கட்டுரை இது.)

Wednesday, May 21, 2025

மலாயா ஆவணங்கள் – 9: சிங்கை நேசன் பற்றிய கடிதம்

 




முனைவர் க.சுபாஷிணி

1888ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாக நாம் அறிகின்ற ”பினாங்கு விஜய கேதனன்” பத்திரிக்கையில் பல்வேறு செய்திகளுக்கிடையே வாசகர்களின் கடிதங்களும் இடம்பெறுகின்றன.

பத்திரிக்கைகளைச் சந்தா செலுத்தியும் பினாங்கு, கிள்ளான், சிங்கை போன்ற நகர்களில் முகவர்களிடமிருந்து பெற்று வாசிக்கின்ற வாசகர்கள் தங்கள் எண்ணத்தை பதிவதற்காக கடிதம் எழுதி பத்திரிக்கை அலுவலகத்துக்கு அனுப்பி வைப்பது இந்த 1888ஆம் ஆண்டு வாக்கிலேயே நிகழ்ந்திருக்கின்றது. அப்படி ஒரு கடிதம்  1888 ஜூலை மாத பத்திரிக்கையில் இடம்பெறுகின்றது. இதில் உள்ள சுவாரசியமான தகவல் என்னவென்றால், அதே காலகட்டத்தில் சிங்கை நேசன் என்ற ஒரு பத்திரிக்கையும் வெளிவந்து கொண்டிருந்தது என்பது  தான்.  

ஒரு சர்ச்சை தொடர்பான கடிதம் இது.  இதில் பயன்படுத்தப்பட்டுள்ள தமிழ் நடை சற்றே கடினமானதானதாகவும் சூசகமான பொருளைக் கொண்டதாகவும் அமைந்திருப்பதால் இக்கடிதத்தின் பின்னனியை முழுமையாகப் புரிந்து கொள்வது சவாலாக உள்ளது.  இதே கடிதத்தில்  “மஹாவிகடதூதன்” என கடிதம் எழுதியவர் குறிப்பிடுவதும் ஒரு பத்திரிக்கையாகவே இருக்க வேண்டும். இந்த மஹாவிகடதூதனையும் சிங்கை நேசனையும் இவை இரண்டுக்குள் ஏற்பட்ட ஏதோ ஒரு பிரச்சனைக்காக பினாங்கு விஜய கேதனன் பத்திரிக்கை நடுநிலை எடுத்து கருத்து பதிந்திருப்பதையொட்டி எழுதப்பட்ட ஒரு கடிதம் என்றே கருத வாய்ப்புண்டு.

இரு சொற்கள் பிரியும் போது அவை முழுமையாகத் தொடராமல் தொடர்ச்சியாகத் தொடரும் வகையில் எழுந்த கடித எழுத்து நடையையே முழுதாகக் காண்கிறோம்.  அதோடு ஆங்கிலச் சொற்களைத் தமிழாக்கும் முயற்சியையும் இதில் கான்கிறோம்.

எடுத்துக்காட்டாக ”எடிட்டோரியல்” அதாவது தலையங்கம் என குறிப்பிட வேண்டிய சொல்லை வாக்கியத்தினுள்ளே “அவ்வெடிற்றோரியலை”  என்று பயன்படுத்தும் பாங்கினைக் காண்கிறோம்.

சிங்கப்பூரிலிருந்து இக்கடிதத்தை வாசகர் ஒருவர் எழுதியிருக்கின்றார். பெயர் குறிப்பிடப்படாத கடிதம் இது.

இக்காலகட்டத்தில் பினாங்கு விஜய கேதனன் பத்திரிக்கை பினாங்குத் தீவிலிருந்துதான் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டது. எஸ்.பி.எஸ்.கே காதர் சாஹீபு அச்சமயத்தில் பினாங்கு விஜய கேதனன் பத்திரிக்கையின்  மேலாளராகவும் ஆசிரியராகவும் இருந்திருக்கின்றார்.  பினாங்கு ஹெரால்டு ப்ரஸ் அச்சகத்திலிருந்து அச்சிடப்பட்டு இப்பத்திரிக்கை வெளியிடப்பட்டது.


[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]

(இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் "உலகத் தமிழ்" இதழ் 285ல் இன்று வெளியிடப்பட்டது.)

Tuesday, May 20, 2025

என் மாணவி உஷாராணி

 



பள்ளிக்கல்வியை முடித்து ஒரு ஆசிரியராக எனது பணியை மலேசியாவில் பினாங்கில் சில மாதங்கள் நான் தொடங்கிய போது பள்ளியில் முதலாம் ஆண்டு என்னிடம் படித்த உஷாராணி தான் படத்தில் இருக்கின்றார்.
குட்டி குழந்தை பெண்ணாக இருந்த உஷாராணி இன்றைக்கு உயர்கல்வி முடித்து மலேசிய பிரதமர் அலுவலகத்தில் செய்தி தொடர்பு பிரிவின் அதிகாரியாக பணிபுரிகின்றார்.
ஆச்சரியமாக இருக்கும்.. ஒவ்வொரு முறையும் உஷாராணியைப் பார்க்கும்போது. ஆசிரியர் பணியை விட்டு கணினி துறைக்கு மாறி மலேசியாவை விட்டு வெளிவந்து ஆண்டுகள் கடந்துவிட்டன.
எனது தமிழர் புலப்பெயர்வு நூல் வெளியீட்டு விழாவிற்கு உஷாராணி என்னைத் தேடிக் கொண்டு வந்துவிட்டார். எப்போதும் என் மேல் மிகுந்த அன்பும் பாசமும் இவருக்கு உண்டு. டத்தோ ஸ்ரீ சரவணன் அவர்களிடம் எனது மாணவி என அறிமுகப்படுத்தி வைத்த போது அவருக்கு ஆச்சரியம், எனக்கு பெருமை.
மலேசியா பினாங்கில் ஒரு அரசு தமிழ் பள்ளியில் படித்த குழந்தை இன்று நல்லதொரு பணியில் உயர் அதிகாரியாக பணிபுரிவது எனக்கு மட்டுமல்ல தமிழுக்கும் கிடைத்த பெருமை.
நல்வாழ்த்துக்கள் உஷாராணி
-சுபா

Monday, May 19, 2025

மக்கள் ஓசை பத்திரிக்கையில் தமிழர் புலப்பெயர்வு நூல் வெளியீட்டு விழா செய்தி

 


மலேசிய நாளிதழ் மக்கள் ஓசை பத்திரிக்கையில் தமிழர் புலப்பெயர்வு நூல் வெளியீட்டு விழா செய்தி.

Sunday, May 18, 2025

காலங்கடந்தும் பேசப்படும் ஆவணமாக சுபாஷினியின் 'தமிழர் புலப்பெயர்வு' நூல்

 



காலங்கடந்தும் பேசப்படும் ஆவணமாக சுபாஷினியின் 'தமிழர் புலப்பெயர்வு' நூல் விளங்கும்: டத்தோஸ்ரீ எம்.சரவணன்


https://nambikkai.com.my/detail/35840?fbclid=IwY2xjawNdiVhleHRuA2FlbQIxMQABHvCnXMBv-0weOm1jlIZyoFTTm-bVuHZKbxtReGLXWeampYVyH2PellNa-j01_aem_LwWKvFvoowY_z-nU_4T1ig

காலங்கடந்தும் பேசப்படும் ஆவணமாக சுபாஷினியின் 'தமிழர் புலப்பெயர்வு' நூல் விளங்கும்: டத்தோஸ்ரீ எம்.சரவணன் கோலாலம்பூர்: உலகத் தமிழர்களின் புலப்பெயர்வு குறித்த விரிவான ஆய்வினை மேற்கொண்டு அதனைத் தொகுத்து 'தமிழர் புலப்பெயர்வு' நூலாக வழங்கியுள்ள முனைவர் க. சுபாஷிணி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் கூறினார். புலம்பெயர்ந்த மலேசியத் தமிழர்கள் தங்களோடு மொழி, கலை கலாச்சாரம், பண்பாடு, சமயம் இப்படி எல்லாவற்றையும் பேணிக்காத்து வந்தனர். அதனாலேயே மலேசியத் தோட்டங்களில் ஆலயங்களும், தமிழ்ப்பள்ளிகளும் நீங்கா இடம்பெற்றன. அப்படி உலகம் முழுதும் பரவியுள்ள தமிழர் வரலாற்றைத் தகுந்த சான்றுகளுடன் நிலைப்படுத்துவது அவசியமான ஒன்று. அதை வெற்றிகரமாகச் செய்து முடித்த முனைவர் சுபாஷினி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். காலங்கடந்தும் பேசப்படும் ஆவணமாக இந்த நூல் விளங்கும் என்று அவர் கூறினார். - மவித்ரன்


Saturday, May 17, 2025

தமிழர் புலப்பெயர்வு நூல் வெளியீடு

 


மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் தமிழர் புலப்பெயர்வு நூல் வெளியீடு நடந்தேறியது.




















பழைய மாடல் வின்டேஜ் வாகனங்கள்

 


மலேசியா ஷா ஆலாம் பகுதியில்..
வார இறுதி சனிக்கிழமை காலை என்பதால் தீயணைப்பு படையினர் சிறப்பு கண்காட்சி ஏற்பாடு செய்திருந்தார்கள். சிலாங்கூர் மாநில பேரரசி நிகழ்ச்சியைத் திறந்து வைத்து வந்தோருக்கு வாழ்த்து சொல்லி நடந்து சென்றார்.
பொதுமக்களுக்கு மருத்துவ முகாம்களும் வைத்திருந்தார்கள்.
புதிய வகை எலக்ட்ரிக் சைக்கிள், பழைய மாடல் வின்டேஜ் வாகனங்கள், பூனை, பாம்பு கண்காட்சி என பொதுமக்களை கவரும் பல விஷயங்களும் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றிருந்தன. காலையில் மராத்தான் ஓட்டத்துடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது.















Friday, May 16, 2025

தமிழர் புலப்பெயர்வு - மக்கள் ஓசை

 


இன்று சனிக்கிழமை மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் தமிழர் புலப்பெயர்வு ஆய்வு நூல் வெளியீடு காணவிருக்கின்றது.
நூலை இணையம் வழி பெற

தமிழர் புலப்பெயர்வு - பத்திரிக்கை செய்தி

 


இன்று சனிக்கிழமை மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் தமிழர் புலப்பெயர்வு ஆய்வு நூல் வெளியீடு காணவிருக்கின்றது.
நூலை இணையம் வழி பெற

ஷா ஆலாம் பெரிய பள்ளிவாசல்

 



மலேசியா, ஷா ஆலாம் பகுதியில் இரவு நேர எழில் காட்சிகள். பெரிய பள்ளிவாசல்