Wednesday, May 21, 2025

மலாயா ஆவணங்கள் – 9: சிங்கை நேசன் பற்றிய கடிதம்

 




முனைவர் க.சுபாஷிணி

1888ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாக நாம் அறிகின்ற ”பினாங்கு விஜய கேதனன்” பத்திரிக்கையில் பல்வேறு செய்திகளுக்கிடையே வாசகர்களின் கடிதங்களும் இடம்பெறுகின்றன.

பத்திரிக்கைகளைச் சந்தா செலுத்தியும் பினாங்கு, கிள்ளான், சிங்கை போன்ற நகர்களில் முகவர்களிடமிருந்து பெற்று வாசிக்கின்ற வாசகர்கள் தங்கள் எண்ணத்தை பதிவதற்காக கடிதம் எழுதி பத்திரிக்கை அலுவலகத்துக்கு அனுப்பி வைப்பது இந்த 1888ஆம் ஆண்டு வாக்கிலேயே நிகழ்ந்திருக்கின்றது. அப்படி ஒரு கடிதம்  1888 ஜூலை மாத பத்திரிக்கையில் இடம்பெறுகின்றது. இதில் உள்ள சுவாரசியமான தகவல் என்னவென்றால், அதே காலகட்டத்தில் சிங்கை நேசன் என்ற ஒரு பத்திரிக்கையும் வெளிவந்து கொண்டிருந்தது என்பது  தான்.  

ஒரு சர்ச்சை தொடர்பான கடிதம் இது.  இதில் பயன்படுத்தப்பட்டுள்ள தமிழ் நடை சற்றே கடினமானதானதாகவும் சூசகமான பொருளைக் கொண்டதாகவும் அமைந்திருப்பதால் இக்கடிதத்தின் பின்னனியை முழுமையாகப் புரிந்து கொள்வது சவாலாக உள்ளது.  இதே கடிதத்தில்  “மஹாவிகடதூதன்” என கடிதம் எழுதியவர் குறிப்பிடுவதும் ஒரு பத்திரிக்கையாகவே இருக்க வேண்டும். இந்த மஹாவிகடதூதனையும் சிங்கை நேசனையும் இவை இரண்டுக்குள் ஏற்பட்ட ஏதோ ஒரு பிரச்சனைக்காக பினாங்கு விஜய கேதனன் பத்திரிக்கை நடுநிலை எடுத்து கருத்து பதிந்திருப்பதையொட்டி எழுதப்பட்ட ஒரு கடிதம் என்றே கருத வாய்ப்புண்டு.

இரு சொற்கள் பிரியும் போது அவை முழுமையாகத் தொடராமல் தொடர்ச்சியாகத் தொடரும் வகையில் எழுந்த கடித எழுத்து நடையையே முழுதாகக் காண்கிறோம்.  அதோடு ஆங்கிலச் சொற்களைத் தமிழாக்கும் முயற்சியையும் இதில் கான்கிறோம்.

எடுத்துக்காட்டாக ”எடிட்டோரியல்” அதாவது தலையங்கம் என குறிப்பிட வேண்டிய சொல்லை வாக்கியத்தினுள்ளே “அவ்வெடிற்றோரியலை”  என்று பயன்படுத்தும் பாங்கினைக் காண்கிறோம்.

சிங்கப்பூரிலிருந்து இக்கடிதத்தை வாசகர் ஒருவர் எழுதியிருக்கின்றார். பெயர் குறிப்பிடப்படாத கடிதம் இது.

இக்காலகட்டத்தில் பினாங்கு விஜய கேதனன் பத்திரிக்கை பினாங்குத் தீவிலிருந்துதான் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டது. எஸ்.பி.எஸ்.கே காதர் சாஹீபு அச்சமயத்தில் பினாங்கு விஜய கேதனன் பத்திரிக்கையின்  மேலாளராகவும் ஆசிரியராகவும் இருந்திருக்கின்றார்.  பினாங்கு ஹெரால்டு ப்ரஸ் அச்சகத்திலிருந்து அச்சிடப்பட்டு இப்பத்திரிக்கை வெளியிடப்பட்டது.


[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]

(இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் "உலகத் தமிழ்" இதழ் 285ல் இன்று வெளியிடப்பட்டது.)

No comments:

Post a Comment