Wednesday, May 14, 2025

மலாயா ஆவணங்கள் – 8: "Penang Standard”




முனைவர் க.சுபாஷிணி

பினாங்கிலிருந்து 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வெளிவரத் தொடங்கிய மாத பத்திரிகை ”பினாங்கு விஜய கேதனன்” பற்றி கடந்த இதழில் அறிமுகப்படுத்தியிருந்தேன். அதன் ஜூலை மாத இதழ் புதிய ஆங்கிலத் தலைப்பையும் இணைத்தவாறு வெளிவரத் தொடங்கியிருக்கின்றது.


பினாங்கு விஜய கேதனன்

மாதந்தோறும் பிரகடனம் செய்யப்படும்

This Tamil Journal

Penang Standard


என்ற தலைப்புப் பெயருடன் வெளிவந்திருக்கின்றது.

இஸ்லாமிய தமிழ் புரவலர்கள் சிலரும் இப்பத்திரிக்கைக்கு மாத சந்தா அனுப்பியிருக்கின்றனர். அவ்வகையில் அப்துல் காதிறு மரைக்காயர், ஹாசீம் நெயினா மரைக்காயர், ஆதாம்கான் சாயுபு, ஓசன் சாயுபு, முகவது அசன், முகம்மதலி மரைக்காயர், மீராலெவ்வை மற்றும் வீ.ற.முத்துசாமி செட்டியார் போன்றோர் அப்போதைய மலாயா  ரிங்கிட் 1 சந்தா செலுத்தி ஆதரித்திருக்கின்றனர்.

பினாங்கில் இருந்த அச்சகத்தில் வெளியிடப்பட்ட இப்பத்திரிக்கைக்கு சிங்கப்பூரில்  தொடர்பாளராகச் செயல்பட்டவர் ஓ மஸ்தான் சாயபு என்பவர். இப்பத்திரிக்கையின் இந்தோனீசியா ஆச்சே,  சமலங்கான் பகுதிகளுக்கு ப.தல்பாதர் என்பவர் தொடர்பாளராக இருந்திருக்கின்றார். ஆக இந்தோனீசியாவில் அச்சமயம் வசித்து வந்த தமிழர்கள் இவரிடம் தொடர்பு கொண்டு பெறலாம் என்ற செய்தியைக் காண்கிறோம்.

1888 ஜூலை மாத இதழ், புதிதாகப் பெயர் விரிவாக்கம் கண்ட விஜய கேதனன் பத்திரிக்கை அது தொடங்கப்பட்டு 3 மாதங்கள் தான் ஆவதாக இப்பத்திரிக்கையில் குறிப்பிடுகிறது. ஆகவே இதனை நோக்குகையில், பினாங்கு விஜய கேதனன் 1888 ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டிருக்கலாம் என்பதை ஊகிக்கலாம். ஆயினும் இதே பினாங்கு விஜய கேதனன் பத்திரிக்கை 1886ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதென்று அக்டோபர் 1898ஆம் ஆண்டு பினாங்கு விஜய கேதனன் பத்திரிக்கை தெரிவிப்பதைக் காணும் போது 1886ஆம் ஆண்டு தொடங்கி, பின்னர் ஆங்கிலப் பெயரையும் இணைத்துக் கொண்டு ஜூலை 1888இல் வெளிவந்திருக்கக்கூடும் என ஊகிக்கலாம்.

நான்கு பக்கங்களே கொண்ட இப்பத்திரிக்கையில் உள்நாட்டு வெளிநாட்டு செய்திகள் இடம்பெறுகின்றன.  அதில் இடம்பெறுகின்ற சில இந்திய மற்றும் அயல்நாட்டு செய்திகளைச் சுருக்கமாகக் காண்போம்.

1. பம்பாய் பல்கலைக்கழகத்தில் ஒரு பார்சியப் பெண்மணி பிஏ பட்டம் பெற்று தேரினார்.

2. ஏறக்குறைய 70 வயதான இந்தியச் சக்கரவர்த்தினி (மகாராணி) ஹிந்தி மொழி படிக்கத் தொடங்கியிருக்கின்றார். தமிழ் மொழியும் படிக்கலாமே என்ற ஆதங்கத்தை பத்திரிக்கை பதிகிறது.

3. ஜெர்மனி நாட்டில் போசன் மாநிலத்தில்  ஒருவர் 124 வயது வரை இருந்து இறந்திருக்கின்றார். அதே போல கொண்ஸ்டாண்டினிப்போல் (இன்றைய இஸ்தான்புல்)  நகரில் 115 வயது வரை வாழ்ந்து ஒரு பெண்மனி இறந்திருக்கின்றார்.

4. ஓசூரில் 7 வயதுடைய  பிராமணப் பெண் ஒருத்தி உடையில் நெருப்புப் பற்றி இறந்து போனதாகவும், இடுப்பில் ஒட்டியானம் அணிந்திருந்ததால் காப்பாற்ற முடியாமல் இறந்தாள்.

5. சிசுவிவாகம் – சென்னை பிளாக்டவுனில் வசித்து வரும் சாமர்த்தி விஜயராகவலு செட்டியாரின் 12 வயதுள்ள ஒரு தத்து புத்திரனுக்கு செட்டியாரின் மைத்துனனின் 2 வயதுள்ள பெண் குழந்தை விவாகம் செய்யப்பட்டதாம். ஆனால் கடந்த மே மாதம் அக்குழந்தை இறந்து விட்டதாம்.

இப்படி இன்னும் பல செய்திகள் இந்த நான்கு பக்கங்களில் அடங்குகின்றன.


[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]


குறிப்பு: தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழ் 284 இன்று வெளியிடப்பட்ட கட்டுரை இது.

No comments:

Post a Comment