Wednesday, May 28, 2025

மலாயா ஆவணங்கள் – 10: 1898இல் பினாங்கில் கல்வி

 





முனைவர் க.சுபாஷிணி


1886இல் முதலில் வெளிவந்து பின்னர் 1888 வாக்கில் ஆங்கில பெயரையும் உள்ளடக்கியவாறு வெளிவந்த  ”பினாங்கு விஜய கேதனன்” பத்திரிக்கையின் 1898ஆம் ஆண்டு அக்டோபர் மாத இதழ் அக்காலகட்டத்தில் பினாங்கில் தமிழ் மக்களின் குழந்தைகளின் கல்வி நிலை பற்றி சில தகவல்களைப் பதிகின்றது.    இதில் இடம்பெறுகின்ற ஆசிரியர் தலையங்கம் போன்ற முதற்பகுதி கல்வி, தமிழ்ச்சமூக நிலைகளைத் தொட்டு கருத்து பதிகிறது.

தற்காலத்தில் பினாங்கில் வந்து வசிக்கும் தமிழ்நாட்டினர் கல்வியின் முக்கியத்துவம் தெரியாமல் இருப்பதாகவும் குழந்தைகளைப் பல்வேறு வேலைகளைச் செய்ய அனுப்புவதாகவும் குற்றம் சுமத்துகிறது. மேலும் கடைத்தெருக்களில் உள்ள திண்ணைப்பள்ளிக்கூடங்களில் அரிச்சுவடி, எண்கள் போன்றவற்றை ஆழ்ந்த அக்கறையின்றி ஆசிரியர்கள்  கற்றுத் தருகின்றனர் என்றும் சாடுகிறது.

இந்த அவல நிலைக்கு மாற்றாக ஆங்கிலேய முகம்மதிய பள்ளிக்கூடம் ஒன்று பினாங்கில் சூலியா ஸ்ட்ரீட் சாலையில் எண் 130இல் உள்ள கட்டிடத்தில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கடந்த ஆறு மாதங்களாக  இங்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருவதையும் இப்பத்திரிக்கை பதிந்திருக்கின்றது.

இந்த அடிப்படை பள்ளியில் ஆங்கிலேய அரசு ஏற்படுத்தியுள்ளபடி ஆங்கிலம், வாசிப்பு, எழுத்து, கணிதம், பூகோளம், இலக்கணம், சொற்கள், தமிழிலும் ஆங்கிலத்திலும் வாசிப்பு, எண்கணிதம், ஆத்திச்சூடி, அவ்வையார் இயற்றிய செய்யுட்கள், உரையுடன் பயிற்சி பெறும் வகையில் நடத்தப்பட்டன.

இப்பள்ளியில்  கல்வி கற்கும் மாணவர்கள் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளையும் கற்பார்கள்.  இங்கு ஆங்கிலத்தில் மூன்றாம் நான்காம் வகுப்பில் தேறிய மாணவர்களைப் பினாங்கின் முதல் பள்ளிக்கூடம் என அழைக்கப்படும் புகழ்மிக்க “பினாங்கு ஃப்ரீ ஸ்கூல்” பள்ளிக்கு அடுத்த கட்ட உயர் கல்விக்கு இணைத்துக் கொள்வார்கள் என்பதையும் குறிப்பிடுகிறது.

இத்தகைய பல்வேறு பயன்களை குழந்தைகளின் எதிர்காலத்திற்கு வழங்கக்கூடிய கல்வியை வழங்குகின்ற  இந்த ”ஆங்கிலேய முகம்மதிய”  பள்ளிக்கூடத்திற்குக் குழந்தைகளை அனுப்புங்கள் என்று கோரிக்கை வைக்கின்றது 1898 அக்டோபர் மாத பினாங்கு விஜய கேதனன்.

இப்பள்ளியில் படிப்பதற்கு கட்டணமும் வசூலிக்கப்பட்டது.  அவ்வகையில், ஒவ்வொரு மாதமும் கீழ்க்காணும் வகையில் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

முதலாம் வகுப்பு – 50 காசு

இரண்டாம் வகுப்பு - 50 காசு

மூன்றாம் வகுப்பு - 75 காசு

நான்காம் வகுப்பு – 1 வெள்ளி (மலாயா)

பள்ளியில் சேர்க்கப்ப்டும் மாணாக்கர்களை இடையிலே நிறுத்தக்கூடாது என்றும் குறைந்தது ஒரு வருடமாவது அவர்களைப் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்றும் இப்பத்திரிக்கை அறிவுரை கூறுகிறது.

ஆக, 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் செயல்பாட்டில் இருந்த திண்ணைப்பள்ளிகள் தரமான கல்வியை வழங்கவில்லை என்பதும் அதற்கு மாற்றாக பினாங்கில் அரசு தமிழ் இஸ்லாமியர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட முயற்சிகளின் பலனாக ஒரு தமிழ்ப்பள்ளி ஒன்று 1898இல் தொடங்கப்பட்டதை இந்த ஆவணத்தின் வழி அறிகின்றோம்.

[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]

(தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத் தமிழ் இதழ் 286இல் வெளிவந்த கட்டுரை இது.)

No comments:

Post a Comment