Tuesday, November 4, 2025

மலாயா ஆவணங்கள் – 23 : முன்னேற்றம் பத்திரிக்கையில் பெரியார்

 




முனைவர் க.சுபாஷிணி

24-1-1929 முன்னேற்றம் வாரப்பத்திரிக்கை அதன் முகப்பில் பெரியார் அவர்களது புகைப்படத்துன் வெளிவந்துள்ளது. அதில் பெரியார் நாற்காலியில் அமர்ந்திருக்க அவர் அருகில் ஒரு தூணில் Equality – Fraternity – and Liberty என எழுதப்பட்டுள்ளது. 

இப்பத்திரிக்கை இப்படத்திற்குக் கீழே, கீழ்க்காணும் செய்யுளை பதிப்பித்திருக்கிறது.

”அனைத்துயிர் ஒன்றென் றெண்ணி அரும்பசி யெவர்க்கும் ஆற்றி மனத்துளே பேதா பேதம் வஞ்சம் பொய் களவு சூது. 

சினத்தையும் தவிர்ப்பாயாதில் செய்தவம் வேறொன்றுண்டோ? உனக்கிது உறுதியான உபதேசம் ஆகும்தானே.”

”வைக்கம் வீரர்” என்ற தலைப்பில் லெக்ஷ்மி என்ற பெயரில் ஒருவரது கட்டுரை அந்த இதழில் உள்ளது. இது ஈவேரா அவர்களது அக்கால சமூக செயல்பாடுகளையும் அவர் சமூகத்தை நோக்கி முன்வைக்கின்ற கேள்விகளையும் விளக்கும் வகையில் அமைந்த கட்டுரை. அதில் வருகின்ற கீழ்க்காணும் பகுதியைக் காண்போம்.


"கடவுள் தேவையா?'' என்கிறார் திரு நாயக்கர். அதைப்பார்த்துப் பலர் மலைப்படைகிறார்கள். ஆனால் இந்தக் கேள்வியை திரு. நாயக்கர் மட்டுமா புதிதாகக் கேட்கிறார். இதற்கு முன்னும் பலர் கேட்டிருக்கிறார்கள். இப்பொழுதும் பலர் கேட்கிறார்கள். மேலும் பலர் கேட்க்கத்தான் செய்வார்கள்.

விவேகம், மனிதன் மனதில் குடி கொண்டி ருக்கும் வரை இந்தக் கேள்வி கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கும். கேட்கப்படத்தான் வேண்டும். விவேகம் சூனியம் ஆகும்போது அக்கேள்வியும் தானே மறைந்துவிடும். விவேக சூனியமான பாழுலகத்தைவிட, அத்தகைய கேள்விகள் கேட்கப்படும் அறிவுலகம் அன்றோ சிறந்தது! கடவுள் ஒருவர் உண்டானால், அவருக்கு நாயக்கர் கேள்வியால் ஒரு ஆபத்தும் உண்டாகாது. கடவுள் இல்லையானால் திரு நாயக்கர் ஆயிரம் முறை அக்கேள்வியைத் திருப்பித்திருப்பிக் கேட்கட்டும். எனவே கடவுள் தேவையா என்று கேட்டதற்காக, திரு. நாயக்கர் மேல் ஒருவரும் சீறி விழவேண்டாம். அவரைக் கழுவேற்றித்தான் ஆகவேண்டும் என்று ஒருவரும் சபதம் செய்ய வேண்டாம். ஒரு காரிய மட்டும் உறுதி. திரு.ஆர்.கே. ஷண்முகம் செட்டியாரவர்கள் கூறியதுபோல், சமூதாய சீர்திருத்தக்காரர்களால் 25 வருஷ காலமாக உண்டு பண்ணமுடியாத ஒரு உணர்ச்சியை, திரு. நாயக்கர் மூன்றே வருஷ உழைப்பினால் உண்டுபண்ணி விட்டார். திரு. நாயக்கர் போதனைக்கு செவி சாய்க்காத கிராமம் தென்னாட்டில் மிகச் சொற்பம்._  

..

நாத்திகப் பிரசாரத்தால் ஹிந்து மதத்தை நாயக்கர் அழிக்கிறார் என்று முறையிடுகிறவர்கள், அழிவு வேலையை திரு. நாயக்கருக்கு விட்டுச் கொடுத்து விட்டு ஆக்க வேலையைத் தாங்களே செய்து கொள்ளட்டும். உண்மையில் ஆக்க வேலைக்கும் அழிவு வேலைக்கும் இந்தியாவில் இடமிருக்கத்தான் செய்கிறது. (லெக்ஷ்மி)”


ஈ.வே.ரா அவர்களது ஆக்கப்பூர்வமான சமூகச் செயல்பாடுகளை ஆதரிக்கும் இக்கட்டுரை அவரது முயற்சிகள் நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்களிலும் 1929லேயே எதிரொலிக்கத் தொடங்கியதைப் பதிகிறது.   சமூகத்தில் புரையோடிக்கிடந்த புராணக் கதைகளின் அடிப்படையிலான கற்பனைகளையும் சமூகத்தில் நிலவிய அநீதிக்கு மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கியதையும் இக்கட்டுரை வெளிப்படுத்துவக் காண்கின்றோம்.

இக்கட்டுரையில் பெரியார் அவர்கள் ஸ்ரீ நாயக்கர் என்றும் திரு, நாயக்கர் எனும் அழைக்கப்படுவது, சாதி அடையாளத்திற்கு எதிரான சமூக மறுமலர்ச்சியின் தொடக்க காலகட்டம் என்பதையும்,  பெரியார் அவர்களும் அக்காலத்து சமூகப் போராளிகளும் இதற்கு அடுத்தடுத்த காலகட்டங்களில் சாதிப்பெயர்களை நீக்க முயற்சிகளை மேற்கொண்டனர் என்றும் அதன் தொடர்ச்சியாகத்தான் இன்று சாதிப்பெயரொட்டு தமிழ்நாட்டில் பெருமளவில் மறைந்துள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்! 


[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 17.9.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]


(உலகத் தமிழ் இதழ் 309ல் இன்று வெளிவந்த கட்டுரை.)

Wednesday, October 29, 2025

மலாயா ஆவணங்கள் – 22 : சமகால தமிழ்ப் பத்திரிகைகள்




முனைவர் க.சுபாஷிணி


தமிழ்நாட்டிற்கு வெளியே இதழியல் முயற்சிகளைத் தொடங்கிய தமிழ் மக்கள் பல்வேறு சவால்களுக்கிடையே இதழியல் பணிகளைச் சாதித்திருக்கின்றார்கள். அத்தகைய ஒரு முயற்சியாக கடந்த நூற்றாண்டில் மலாயாவில் தமிழ் இதழியல் முயற்சிகளை மேற்கொண்டவர்கள் பதிந்துவைத்த செய்திகள் நமக்கு இன்று 20ஆம் நூற்றாண்டின் தொடக்ககால செய்தியை அறிந்து கொள்வதற்குத் தரவாக அமைகின்றன. 


அன்றைய மலாயாவின் சிங்கை பகுதியில் இருந்து வெளிவந்த பத்திரிக்கை ”முன்னேற்றம்”. இது 1920 களின் இறுதி காலகட்டங்களில் வெளிவந்து 1930 களிலும் தொடர்ந்தது. 

17.1.1929 ஆம் ஆண்டு தேதியிடப்பட்ட ”முன்னேற்றம்” வார இதழில் ஒரு பக்கத்தில் வழங்கப்பட்டிருக்கும் செய்தி நமக்கு ஒரு தகவலை வழங்குகிறது. 


அதாவது, சமகாலத்தில் அன்று தமிழ்நாட்டில் இருந்து வெளிவந்த அல்லது வெளிவந்து கொண்டிருந்த வாரப் பத்திரிகைகள், தினசரி பத்திரிகைகள் பற்றிய செய்தி இது. 

சிங்கையில் இருந்து வெளியிடப்பட்ட முன்னேற்றம் பத்திரிக்கை அக்காலகட்டத்தில் சமகால இதழியல் முயற்சிகள் பற்றி குறிப்பிடுகிறது. அதில் உள்ள ஒரு பக்கத்தில் அமைந்திருக்கின்ற நான்கு பத்திரிக்கைகள் தொடர்பான விளம்பரங்களை இச்செய்தி நமக்கு வெளிப்படுத்துகிறது. 

”குடியரசு” - இதன் ஆசிரியர் ஈ.வே.ராமசாமி. இவ்வாரப் பத்திரிக்கை ”அஞ்ஞானம் போக்கி மெய்ஞ்ஞானம் அளிக்கும் ஆத்ம ஞான சுடரொளி”  என்ற விளம்பரத்தோடு வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் அன்றைய மலாயாவில் இதனைப் பெற விரும்புவோர் வருட சந்தாவாக அன்றைய ரூபாய் 4 செலுத்தி இதனைப் பெற முடியும். குடியரசு வாரப் பத்திரிக்கையின் அலுவலகம் ஈரோட்டில் இயங்கியது என்பதைப் பற்றிய செய்தியையும் காண்கிறோம். 


அடுத்ததாக, ”திராவிடன்” என்ற பெயர் கொண்ட தினசரி பத்திரிக்கை. இதன் ஆசிரியர் சகன சங்கர கண்ணப்பர். ”பார்ப்பனர் அல்லாதாரின் முன்னேற்றத்திற்கு உழைக்கும் ஒப்பற்ற தமிழ் தினசரி பத்திரிகை இது” என்ற குறிப்போடு உள்ளது. மாத சந்தா மலாயாவில் ரூபாய் 1-8-0 என்றும் வருட சந்தா ரூபாய் 18-0-0 என்றும், இப்பத்திரிகை அலுவலகம் சென்னை மவுண்ட் சாலையில் இருந்தது என்பதையும் இச்செய்தி குறிப்பிடுகிறது. 


அடுத்ததாக, ”குமரன்” என்ற பெயர் கொண்ட ஒரு பத்திரிக்கை. இதன் ஆசிரியர் சொ.முருகப்ப செட்டியார். இப்பத்திரிகையின் அலுவலகம் காரைக்குடியில் இயங்கியது என்றும் இப்பத்திரிக்கை ”தீந்தமிழின் தெளிந்த கட்டுரைகள் நிறைந்து திகழும் சிறந்த வார பத்திரிகை” என்ற குறிப்போடு வருகிறது. மலாயாவிற்கு வருட சந்தா ரூபாய் 6 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இறுதியாக நாம் காண்பது ”நாடார் குலமித்திரன்”.  இதன் ஆசிரியர் சூ. ஆ. முத்து நாடார். இதன் அலுவலகம் அருப்புக்கோட்டையில் இருந்து செயல்பட்டதாகவும் "நாட்டு நலனுக்கும் நாடார் சமூகத்தினரின் நன்மைக்கும் நீதி நெறிக்கும் நிலைநின்று உழைக்கும் தமிழ் வாரப் பத்திரிக்கை" என்ற செய்தியும் இதில் வழங்கப்பட்டுள்ளது. 


ஆக, சிங்கையிலிருந்து வெளிவந்த முன்னேற்றம் என்று பெயர் கொண்ட இந்த வாரப்பத்திரிக்கை தமிழ்நாட்டில் இருந்து தமிழ் மக்களின், அதிலும் குறிப்பாகச் சமூக மாற்றத்தையும் எழுச்சியும் ஏற்படுத்த வேண்டும் என்று முனைப்போடு செயல்பட்ட சமகால நான்கு பத்திரிகைகள் பற்றிய செய்தியை நமக்கு வழங்குகின்றது.


அதுமட்டுமல்லாது மலாயாவிற்கு வந்து வாழ்கின்ற தமிழ்மக்கள் தமிழ்நாட்டில் நடக்கின்ற நிகழ்வுகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், அதன்வழி தங்களது வாழ்க்கை நிலையை முன்னேற்றிக் கொள்ளவும், அரசியல் ரீதியாக தங்களது தேவைகளை அறிந்து அடிமைத்தனத்திலிருந்து மீளும் சிந்தனையைப் பெறுவதற்கும் இந்த இதழியல் முயற்சிகள் பெரும் பங்காற்றியுள்ளன என்பதையும் காண்கின்றோம்.


[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 17.9.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]


(இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத் தமிழ்  இதழ் 308ல் இன்று வெளியிடப்பட்டது)

Tuesday, October 21, 2025

மலாயா ஆவணங்கள் – 21 : 1929இல் மலாயாவில் நடைபெற்ற அகில இந்தியர் கருத்தரங்கம்

 




முனைவர் க.சுபாஷிணி

„முன்னேற்றம்” என்ற பெயரில் வே.சி.நாரயணசாமி என்பவரை ஆசிரியராகக் கொண்டு ஒரு பத்திரிக்கை 1929இல் மலாயாவிலிருந்து வெளிவந்துள்ளது. பொது மக்களின் சமூக நலனில் அக்கறை கொண்ட ஒரு வாரப்பத்திரிக்கையாக இது அமைந்திருந்தது என்பதை இதனை வாசிக்கும் போது நாம் புரிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டிலிருந்து தோட்டக்காடுகளை வெட்டி ரப்பரும் செம்பனையும் காப்பியும் விளைவிக்க மலாயா வந்த தமிழ் மக்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு இப்பத்திரிக்கை இயங்கியிருக்கின்றது.
இப்படி சமூக நலனில் அக்கறை கொண்டு சிங்கையிலிருந்து வாரம் ஒருமுறை வியாழக்கிழமைகளில் இப்பத்திரிக்கை வெளியிடப்பட்டது என்பதை அறிகின்றோம்.
இதில் 10.1.1929 தேதியிடப்பட்ட இதழ் அக்காலகட்டத்தில் மலாயாவில் ஈப்போ நகரில் நடைபெற்ற ஒரு அகில மலாய இந்தியர் கருத்தரங்கம் பற்றிய செய்தியைப் பதிகின்றது.

இதில் சிறப்பு என்னவென்றால், அன்றைய மலாயா பிரித்தானிய ஆட்சியில் முக்கிய உறுப்பினராக இருந்த திரு. எஸ். வீராசாமி என்பவரது தலைமையில் ஈப்போவில் இந்தக் கருத்தரங்கம் நடைபெற்றது. மலாயாவின் பல பகுதிகளிலிருந்தும் பிரதிநிதிகள் இதற்கு வந்தனர் என்றும் தமிழ் மக்களின் முன்னேற்றம் பற்றி கலந்துரையாடப்பட்டது என்றும் அறிகின்றோம். இதில் நிறைவாக சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை:

1. மாநில அரசாங்கத்தில்(மலாயா மாநிலங்களில்) இந்தியர்களுக்குப் பதவி அளிக்கவேண்டுமென அரசாங்கத்தாரைக் கேட்டுக்கொள்வது.

2. இந்தியர்களுக்கு ஒருவியாபார சங்கத்தை அரசு ஏற்படுத்த வேண்டும்.

3. பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சமூக சேவைகள் ஆற்றுவதற்கும், பெண்கள் முன்னேற்றத்திற்கும் பயனளிக்கும் இயக்கங்களை ஆரம்பிக்க வேண்டும்.

4. கள்ளுக் கடைகள் பெருகியிருப்பதால் அது தொழிலாளர்களையும், மற்றவர்களையும் பாழ்படுத்துகின்ற காரணத்தால், எஸ்டேட்களிலும், பிற இடங்களிலுமுள்ள எல்லா கள்ளுக்கடைகளைகயும் எடுத்துவிடும்படி அரசாங்கத்தாரை மிகவும் வலியுறுத்துவது.

5. மலாயா நாட்டின் பலபாகங்களிலும் தமிழ் பள்ளிக்கூடங்களைத் தொடங்க வேண்டும். வயதான தொழிலாளர்களுக்கு இரவு பள்ளிக்கூடங்களை உருவாக்க வேண்டும்.

6. பி.ஐ. கப்பல்களில் இந்தியப் பிரயாணிகள் தாங்கமுடியாத கொடுமைகளுக்குள்ளாகின்றார்கள் என்பதால் அக்குறைகளை அரசு களைய ஏற்பாடு செய்ய வேண்டும். (இக்கால கட்டத்தில் கப்பல் பயணம் தான் தமிழர்கள் தமிழ்நாட்டிற்குச் சென்று வர இருந்த ஒரே போக்குவரத்து)

7. இந்தியர்களுக்கென தினசரி பத்திரிகை ஒன்று ஆரம்பிக்க வேண்டும்.

8. அகில மலாயா கூட்டுறவு சேமிப்பு சங்கத்தை ஆரம்பிக்க வேண்டும்.

9. தொழிலாளர் பாதுகாப்பு நிதி ஒன்றைச் சேர்க்கத் தொடங்க வேண்டும்.

10. இந்தியர்களின் தொண்டர் படை ஒன்றை நியமிக்க அரசாங்கம் உத்திரவளிக்க வேண்டும்.

11. இந்திய தொழிலாளர்கள் வசிப்பதற்குத் தகுதியான விவசாய நிலங்களை அனுமதிக்கவேண்டும்.

மலாயா சூழலைப் பொறுத்தவரை இந்தியர்கள் எனக் குறிப்பிடப்படுவது தமிழர்களை என்பதை நாம் நினைவில் கூறவேண்டும். இந்த அமைப்பு தமிழ் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அக்காலச் சூழலுக்கு ஏற்ற தீர்மானங்களை நிறைவேற்றி செயல்படத் தொடங்கியிருக்கின்றது என்பதைக் காண்கின்றோம். சிங்கை அன்றைய மலாயாவின் ஒரு பகுதி. அங்கிருந்துதான் இப்பத்திரிக்கை வெளிவந்திருக்கின்றது.

[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 17.9.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]
(இக்கட்டுரை தமிழ் வளர்ச்சி துறையின் உலகத் தமிழ் இதழ் 307ல் இன்று வெளிவந்துள்ளது)

Wednesday, August 6, 2025

மலாயா ஆவணங்கள் – 20: "கூலிகள் பாடக் கூடாதா?"

 







முனைவர் க.சுபாஷிணி

அதிகாரத்தில் இருப்பவர்கள் சொல்வதுதான் பெரும்பாலும் நீதிக்கு முன் அடங்கிப் போய் விடுகிறது. ஜனநாயகமும் சமூக நீதியும் பெருமளவில் கடைபிடிக்கப்படுகின்ற இந்தக் காலகட்டத்திலேயே எத்தனையோ சமூக நீதிக்கு எதிரான செயல்பாடுகளை ஒவ்வொரு நாளும் செய்தி ஊடகங்களின் வழி பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இன்றைக்கே இப்படி இருக்கின்றது என்றால் இன்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்னர் மக்களின் நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை ஓரளவு நாம் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஆவணங்களின் வழி தான் அது நமக்குச் சாத்தியமாகும். அந்த வகையில் கடந்த நூற்றாண்டில் வெளிவந்த நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் ஆகியவை இப்படி சில செய்திகளை நமக்கு வழங்குகின்றன. வரலாற்றை திரும்பிப் பார்க்க இத்தகைய ஆவணங்கள் நமக்கு இன்று தேவைப்படுகின்றன.


மலாயாவின் பினாங்கு மாநிலத்தில் இருந்து வெளிவந்த தொடக்க கால பத்திரிகைகளில் "பினாங்கு ஞானசாரியன்" முக்கியமான ஒரு பத்திரிக்கை. 3.5.1912 வெள்ளிக்கிழமை எனத் தேதி இடப்பட்ட இப்பத்திரிக்கை தமிழ்நாட்டில் இருந்து சென்ற தோட்டக்கூலிகள் பெற்ற தண்டனையைப் பற்றி குறிப்பிடுகிறது.

கோலாலம்பூருக்கு பக்கத்தில் "காசில்பீல்ட்" என்று பெயர் கொண்ட ஒரு ரப்பர் தோட்டம். அதன் மேலாளர் மிஸ்டர் ஆர். ஆலன்.

அத்தோட்டத்தில் ஒரு புதன்கிழமை இரவு 9 மணிக்கு 10 பேர், தமிழ் தோட்டக்கூலிகள். இவர்கள் ஒன்றாகச் சேர்ந்து பாடல் கச்சேரி நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது மிஸ்டர் ஆலன் தனது வேலைக்காரப் பையனை அனுப்பி இந்தப் பாட்டு கச்சேரியை நிறுத்தும்படி உத்தரவிட்டிருக்கிறார். ஆனால் பாடிக்கொண்டிருந்த அந்த பத்து பேரும் பாடல் கச்சேரியை நிறுத்தவில்லையாம். அவர்கள் 10 மணி வரை பாடிக் கொண்டிருக்கலாம் என தோட்டத்தின் மேனேஜர் அனுமதி கொடுத்து இருந்ததால் தாங்கள் பாடலை நிறுத்த மாட்டோம் என்று சொல்லி விட்டு தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தனர்.

கோபமடைந்த மிஸ்டர் ஆலன் இந்த தமிழ் கூலிகள் பாடிக்கொண்டிருந்த இடத்திற்கு வந்து ஒரு பிரம்பை எடுத்து ஒரு கூலியை அடித்தாராம். இதனைப் பார்த்த மற்ற கூலிகள் அவர் மேல் பாய்ந்து தடிகளால் அவரை அடித்திருக்கின்றார்கள். இதனால் மிஸ்டர் ஆலனின் வலது கை சுண்டு விரல் உடைந்து போனது. அது மட்டுமல்ல. அவர் உடலில் பல இடங்களில் காயமும் ஏற்பட்டதாம். அவர் தரையில் விழுந்த பிறகும் அவரை நன்கு அடித்து புடைத்து இருக்கின்றார்கள். பின்னர் டாக்டர் அங்கு சென்று அவரை வைத்தியசாலைக்கு அனுப்பிவிட்டாராம்.

மறுநாள் மாலினிக்ஸ்ம் என்று பெயர் கொண்ட  ஓர் காவல் அதிகாரி அங்கு சென்று 9 தமிழ் ஆண் கூலிகளையும் ஒரு பெண் கூலியையும் பிடித்துக் கொண்டு போய் காவல் நிலையத்தில் அடைத்து விட்டனர். அதன் பின்னர் மிஸ்டர் டொனால்ட்சன் அவர்கள் முன் இந்தக் குற்றம் விசாரணைக்கு வந்து இவர்கள் குற்றவாளிகள் என்று காவலில் வைக்கப்பட்டனராம். இச்செய்தி பினாங்கு கெஸட்டில் எழுதப்பட்டிருக்கின்றது.

மேல் குறிப்பிட்ட செய்தியை இப்பத்திரிக்கை வெளியிட்டு கருத்துப் பதிகிறது.

மிஸ்டர் ஆலன் முதலில் அங்கு வந்து பிரம்பால் அக்கூலிகளை அடிக்காமல் இருந்தால் இந்தக் குற்றம் நடந்திருக்காது ஆகவே அவர் மீது குற்றம் இல்லையோ? என இப்பத்திரிக்கை கேட்கிறது.

இப்பத்திரிகை கேட்பதும் நியாயம் தானே? கூலிகள் அவர்கள் வேலையை செய்து விட்டு மகிழ்ச்சியாகப் பாடிக் கொண்டிருந்தால் அதனால் யாருக்கு என்ன துன்பம் வரப்போகிறது? கூலியாக பணி செய்ய வந்த மக்கள் வேலைகளை மட்டுமே செய்ய வேண்டும் என்ற கடுமையான, மனிதாபிமானமற்ற போக்கை எல்லோரும் எப்போதும் தாங்கிக் கொண்டிருக்க மாட்டார்கள்.

தங்களைத் தற்காத்துக் கொள்ள மீண்டும் தாக்குவது உயிரினங்கள் அனைத்துக்கும் உள்ள இயல்பு. இதனைத் தான் 1919 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து மலாயாவின் தோட்டக் காடுகளுக்கு உழைக்கச் சென்ற தமிழ் கூலிகளில் சிலரும் செய்திருக்கின்றார்கள்.


[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]


(தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத் தமிழ் இதழ் 296ல் இன்று வெளியிடப்பட்டது.)

Wednesday, July 30, 2025

மலாயா ஆவணங்கள் – 19: "தஞ்சாவூரில் சாதிக் கொடுமை"

 




முனைவர் க.சுபாஷிணி


இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மலாயாவின் பினாங்கில் இருந்து வெளிவந்த தமிழ் பத்திரிகைகளில் ”சத்தியவான்” வாரப்பத்திரிக்கை சமூக சிந்தனையோடு இயங்கிக் கொண்டிருந்த ஒரு பத்திரிக்கையாக மிளிர்கிறது. அதில் 12.5.1919 அன்று வெளிவந்த பத்திரிக்கையில் தஞ்சாவூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மக்கள் அனுபவித்த கொடூரங்களைப் பற்றி ஒரு செய்தி வெளிவந்திருக்கின்றது.

இச்செய்தி தஞ்சாவூர் ஜில்லாவில் சாதி வேறுபாடுகளும் பண்ணையார்கள் வேலையாட்களை வைத்து விவசாயம் செய்யும் முறை பற்றியும் பேசுகின்றது. பண்ணை சாகுபடி முறை மிகக் கொடூரமாக இருக்கின்றது என்பதை இச்செய்தி பதிகின்றது.

”பண்ணை சாகுபடி என்ற மகா பெரிய தேர் சக்கரத்தில் கழுத்தை கொடுத்துக் கொண்டு கஷ்டப்படுகிறவர்கள் பஞ்சமர்களே. அவர்கள் குடியிருப்பதற்கு வசதியே கிடையாது. இவ்விஷயத்தில் அவர்களுக்கு மிராசுதார்களால் உண்டாகும் இம்சை மிகவும் அதிகம். சொற்ப குற்றத்திற்கெல்லாம் பண்ணை ஆட்களின் குடிசைகளைப் பிரிப்பதும் அல்லது அக்கினி பகவானுக்கு இரையாக்குவதுமே சகஜமான தண்டனை. ஏனெனில் அந்தக் குச்சி வீடுகள் இருப்பது மேற்படி மிராசுதார்களின் மனைக்கட்டு என்று தர்க்கம் செய்கிறார்கள்” என்று இச்செய்தி குறிப்பிடுகிறது.

பண்ணையார்கள் தங்கள் நிலங்களில் பஞ்சமர்கள் வாழ்கின்றார்கள் என்ற ஒரு காரணத்தைச் சொல்லி அவர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம் அவர்களின் வீட்டை எரிப்பது அல்லது அவர்களின் குடிசை வீட்டை பிரித்து போட்டு அவர்களை நிற்கதியாக நிற்க வைப்பது என்ற வகையில் கொடுமை செய்திருக்கின்றார்கள். உண்மையில் இப்பத்திரிகை செய்தி சொல்கின்ற கொடுமைகளை விட இன்னும் அதிகமாக கொடுமைகள் நிகழ்ந்திருக்கும். ஆனால் இதில் விரிவாக அவை விளக்கப்படவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும் இது பற்றி பேசும் இப்பத்திரிகை செய்தி, ”இது சம்பந்தமாக கவர்னருக்குப் பலமுறை மனு செய்யப்பட்டது. தென்னிந்தியா ஒடுக்கப்பட்டவர்கள் சங்கத்தாரும் சென்ற 10 வருஷமாக பண்ணையாட்களின் மனைக்கட்டு விஷயமாகப் பரிகாரம் செய்யும்படி சென்னை கவர்ன்மெண்டாருக்கு மனு செய்தார்கள். ரங்கூன், சென்னப்பட்டணம், திருச்சினாப்பள்ளி முதலான பிரபல தலங்களில் உள்ள ஆதிதிராவிட சபைகளால் கவுரவம் பொருந்திய இந்தியா தேச மந்திரி அவர்கள் திவ்ய சமூகத்திற்கு அனுப்பப்பட்ட விண்ணப்பங்களில் இருந்தும் இம்மனைக்கட்டு விஷயம் குறிக்கப்பட்டிருந்தது. சென்ற மாதம் சிதம்பரம் நந்தனார் சபையின் ஆதரவில் நடந்த பஞ்சமர் கான்பரென்சில் மனைக்கட்டு விஷயமாயும் ஒரு தீர்மானம் ஏற்படுத்தப்பட்டு மேற்படி மந்திரி அவர்களுக்கும் நமது பிரதிநிதி சென்னை கவர்னர் முதலான அரசாங்க தலைவர்களுக்கும் தந்தி மூலமாய் அனுப்பப்பட்டது” என்று குறிப்பிடுகிறது.

இதிலிருந்து மூன்று செய்திகளை முக்கியமாகக் காணலாம்.


1. 1919 வாக்கிலேயே தென்னிந்திய ஒடுக்கப்பட்டவர்கள் சங்கம் என்ற ஒன்று இயங்கி வந்தது என்பதையும் அது கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு இது தொடர்பாக கடிதம் எழுதி இந்த கொடுமைகளை விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.

2. ரங்கூன், அதாவது இன்றைய மியான்மார் தலைநகர் ரங்கூன், சென்னை, திருச்சி ஆகிய பகுதிகளில் ஆதிதிராவிட சபை ஏற்படுத்தப்பட்டு அவை மக்களின் நலனுக்காக போராடி இருக்கின்றன.

3. இந்த நிகழ்வுக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் சிதம்பரத்தில் உள்ள நந்தனார் சபை என்ற ஓர் அமைப்பு இருந்தது பற்றியும், அங்கு ஒரு மாதத்திற்கு முன்னர் பஞ்சம நலன்களைக் கவனத்தில் கொண்டு ஒரு மாநாடு நடத்தப்பட்டு அதில் பண்ணையார்களின் மனைக்கட்டு மற்றும் அதனால் ஏற்படுகின்ற கொடூரங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட்டது.


19 ஆம் நூற்றாண்டும் 20 ஆம் நூற்றாண்டும் ஒடுக்கப்பட்ட மக்களின் கொடூரங்களை ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியாளர்களிடம் கொண்டு சென்று சேர்த்து தங்களுக்கு நீதியும் நிவாரணமும் கிடைக்க வேண்டுமென ஒடுக்கப்பட்ட மக்கள் மேற்கொண்ட முயற்சிகளை வெளிப்படுத்துகின்ற காலங்களாக அமைந்தன. அடிமைகளாக பண்ணையார்களிடம் எந்த எதிர் கேள்விகளும் கேட்க முடியாமல் துன்பத்தில் உழன்று கொண்டிருந்த ஏராளமான ஒடுக்கப்பட்ட ஆதிதிராவிட அல்லது பஞ்சம சமூகத்து மக்கள் பட்ட இன்னல்கள் அதிகம். தமிழ் மக்கள் பலர் இக்காலகட்டங்களில் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு கூலிகளாகவும் அடிமைகளாகவும் ஒப்பந்தக் கூலிகளாகவும் புலம்பெயர்ந்து சென்ற வரலாறும் இதனோடு தொடர்புடையது தான்.

ஆக இப்பத்திரிகை செய்தி சொல்வதன் அடிப்படையில் தஞ்சாவூர் பகுதியில் பண்ணையார்களின் கொடுமைகளை அரசுக்குத் தெரிவிக்கும் ஒரு முயற்சியாக இதனைக் காண்கிறோம்.

இக்கோரிக்கைகளின் அடிப்படையில் மனைக்கட்டு விஷயமாக எல்லா விபரங்களையும் விசாரிக்கும்படி ஸ்ரீமான் ஸ்ரீநிவாச்சாரி என்ற ஒருவரை துணை உதவி ஆட்சியராக பிரித்தானிய அரசாங்கம் நியமித்திருக்கின்றது என்பதை இச்செய்தி குறிப்பிடுகின்றது. இந்த சீநிவாச்சாரி என்பவர் பஞ்சமர்களின் பரிதாப நிலையைக் கண்டு அனுதாபம் அடைந்து தீர விசாரித்து பிரித்தானிய அரசுக்கு அறிக்கை கொடுத்ததாகவும் அதற்காக பஞ்சமர்கள் அனைவரும் அவருக்கு நன்றி செலுத்துவதாகவும் இப்பத்திரிக்கை செய்தி மேலும் குறிப்பிடுகிறது.


[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]


(இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத் தமிழ் 295ல் இன்று வெளியிடப்பட்டது)


Wednesday, July 23, 2025

மலாயா ஆவணங்கள் – 18: கப்பல் டிக்கெட்

 




முனைவர் க.சுபாஷிணி

தமிழ்நாட்டில் பஞ்சகாலத்தில் தாம் வாழ்ந்த ஊரையும், கிராமத்தையும், நிலத்தையும் விட்டு புதிய வாழ்க்கையைத் தேடி பயணித்த எண்ணற்ற தமிழ் நிலத்து மக்கள் இன்று உலகின் பல நாடுகளிலும் தீவுகளிலும் வசிக்கின்றார்கள். அவர்கள் புலம்பெயர்ந்த காலத்தில் சொல்லொனா துயரத்தை அவர்கள் அனுபவித்தாலும் இன்று அம்மக்களது சந்ததியினர் தாங்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் கல்வி, பொருளாதாரம், வாழ்க்கை சூழல் ஆகியவற்றில் உயர்ந்து நல்ல வாழ்க்கையைப் பெற்று அந்தந்த நாடுகளில் சட்டப்படி குடியுரிமை பெற்ற மக்களாக வாழ்கின்றார்கள்.

பஞ்சம் என்றால் அது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிகழ்ந்தது என்பது நம் பொதுவான கருத்து என்றாலும், கிபி 13 ஆம் நூற்றாண்டு முதல் தமிழ் நிலத்தில் பஞ்சம் குறித்த ஆவணக் குறிப்புகளை நாம் காண்கின்றோம் (காண்க: நூல் "தமிழர் புலப்பெயர்வு - உலகளாவிய பயணங்கள் குடியேற்றங்கள் வரலாறு - ஆசிரியர் க.சுபாஷிணி)

மலாயாவிற்குத் தமிழ்நாட்டில் இருந்து தமிழ் மக்களின் புலம்பெயர்வு என்பது பல்வேறு காலகட்டங்களில், குறிப்பாக பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் நிகழ்ந்திருக்கின்றது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பஞ்சத்தின் காரணத்தால் தமிழ் மக்கள் மலாயா வந்திருக்கின்றனர். அவர்கள் மெட்ராஸ் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கப்பல்களில் மலாயாவிற்கு வரும்போது பெரும்பாலும் அவர்கள் இறங்கிக் கொள்வது பினாங்குத் தீவில். சிலர் கிள்ளான், இறுதியாக சிங்கப்பூர் என்று இறங்கினர்.

இப்படி வந்த மக்கள் மலாயாவின் எல்லா மாநிலங்களிலும் தோட்டக்காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் விவசாயத் தொழிலில் ஈடுபட்டனர்.  இது தொடர்பான பல ஆவணக் குறிப்புகள் இன்று நமக்கு கிடைக்கின்றன. அத்தகைய பயணத்தைப் பற்றிய ஒரு செய்தியை மலாயாவின் பினாங்கில் இருந்து வெளிவந்த சத்தியவான் என்ற பத்திரிக்கை நமக்கு வழங்குகின்றது.

12.5.1919 என்று தேதி இடப்பட்ட ஒரு இதழ் இச்செய்தியை குறிப்பிடுகிறது.

பஞ்சத்தால் சீர் அழிந்த தமிழ் மக்கள் தரகர்களிடம் காசு கொடுத்து பயணம் செய்வது என்பது ஒரு புறம். சிலரோ மெட்ராஸில் இருந்து புறப்படும் கப்பல் எந்த தேதியில் எத்தனை மணிக்கு புறப்படுகின்றது என்பதை தெரிந்து கொண்டு தாங்களே கூட டிக்கெட் வாங்கிக் கொண்டு பயணம் செய்து மலாயா வந்திருக்கின்றனர். அப்படி பயணச் சீட்டு பெறுகின்ற அலுவலகத்தில் அவர்கள் பணம் கட்டி பயணச்சீட்டு வாங்கும் போது அவர்கள் படுகின்ற கஷ்டம் மிகப் பெரிது என்பதை இச்செய்தி சுட்டிக்காட்டுகிறது.

ஏமாற்றுக்காரர்களாக அதாவது டம்பவேடம் பூண்டு உலவிக் கொண்டிருக்கும் சிலர் உபகாரமாய் நான் வாங்கித் தருகிறேன் என்றும், அதற்கு தனக்கு அன்றைய மலாயா ரிங்கிட் இரண்டு கொடுக்க வேண்டும் என்றும் ஏமாற்றி அவர்களிடம் தொகையை வாங்கிக் கொண்டு மறைந்து விடுகின்றார்கள்.  

சில ஏமாற்றுக்காரர்கள் மொத்தமாக 10 அல்லது 20 டிக்கெட்களை முன் பணம் கொடுத்து வாங்கிக் கொள்வதால் பயணச்சீட்டு அலுவலகத்தில் மக்கள் வரும்போது பயணச் சீட்டு கிடைப்பதில்லை. அத்தகைய சூழலில் மெட்ராஸ் நகரில் அவர்கள் அடுத்த கப்பல் வரும் வரை காத்திருக்கும் போது உணவுக்கு வழியில்லாமல் மிகுந்த துன்பத்திற்கு உள்ளான நிலையையும் இப்பத்திரிக்கை செய்தி சுட்டிக்காட்டுகிறது.

இப்படி ஏமாந்து போவதாலும், அடுத்த கப்பல் வரும் வரை காத்திருப்பதற்கு ஏற்ற செலவுகளை கவனிக்க முடியாமல் சிக்கித் தவிப்பதாலும் கட்டண அலுவலகங்களில் பணிபுரியும் மேலதிகாரிகள் இதனை கவனிக்க வேண்டும் என்பதை இப்பத்திரிகை கூறுகிறது.

இதற்கு நிவாரணமாக,  இத்தனை பயணச்சீட்டுகள் தான் ஒரு பயணத்திற்கு என்பதை பினாங்கிலேயே அலுவலகம் தீர்மானித்து பினாங்குக்கு எவ்வளவு,  கிள்ளான் சிங்கப்பூர் ஆகிய இடங்களுக்கு எவ்வளவு என்பதையும் தெரிவித்து அதனை நடைமுறைப்படுத்தினால் தமிழ்நாட்டிலிருந்து வருகின்ற ஏழை மக்களுக்கு அவர்கள் அனுபவிக்கின்ற சிரமம் குறையும் என்று இப்பத்திரிக்கை ஆலோசனையை முன் வைக்கின்றது.

இச்செய்தியின் வழி பினாங்கிலிருந்து வெளிவந்த “சத்தியவான்” வாரப் பத்திரிக்கை மக்கள் நலனில் அக்கறையோடு அக்காலகட்டத்தில் செயல்பட்டது என்பதையும், பொதுமக்கள் அதிலும் குறிப்பாக பஞ்சத்தில் வாடி வேலை தேடி மலாயா வருகின்ற மக்கள் சிரமம் இல்லாமல் மலாயா வந்து சேரும் வகையில் அவர்களது பயணங்கள் இருக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொண்டு பத்திரிக்கை தர்மத்தை செயல்படுத்தி இருக்கின்றது என்பதையும் இச்செய்தியின் வழி காண்கிறோம்.

செய்தி ஊடகங்கள் கடைக்கோடி எளிய மனிதர்களுக்கு உதவும் கருவியாக இருக்க வேண்டும் என்பதுதான் பத்திரிக்கை மற்றும் இதழியல் முயற்சிகளுக்கு அடிப்படை காரணமாகவும் நோக்கமாகவும் இருந்தது. ஆனால் இன்று பத்திரிகைகள் இத்தகைய நோக்கத்தோடு செயல்படுகின்றனவா என்பதை பத்திரிக்கை நிர்வாகத்தினர் ஒவ்வொருவரும் தங்களை நோக்கி கேட்டுக் கொள்ள வேண்டியதும் அவசியம் தான் அல்லவா!

[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]

(இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத் தமிழ் இதழ் 294ல் இன்று வெளியிடப்பட்டது)

Wednesday, July 16, 2025

மலாயா ஆவணங்கள் – 17: இலங்கை “ஆதி திராவிடன்”

 







முனைவர் க.சுபாஷிணி


தமிழ் இதழியல் முயற்சிகள் சீரிய வகையில் தொடங்கப்பட்ட காலமாக 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தைக் கூறலாம். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கப்பட்ட தமிழ் பத்திரிக்கைகள், வார மாத இதழ்கள் மேலும் பலருக்கு இத்துறையில் ஈடுபாட்டை உருவாக்கியதன் விளைவாக புதிய பத்திரிக்கைகளின் வரவுகளும் அமைந்தன. அவ்வகையில் தமிழ்நாடு மட்டுமன்றி, பர்மா, மலாயா, இலங்கை ஆகிய தமிழர் வசிக்கும் பகுதிகளில் புதிய பத்திரிக்கைகள் தொடங்கப்பட்டன.

1919ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி மலாயாவின் பினாங்கிலிருந்து வெளியிடப்பட்ட சத்தியவான் வாரப்பத்திரிக்கையில் ஒரு செய்தி இடம்பெறுகின்றது. அதில் அச்சமயத்தில் இலங்கையிலிருந்து ஒரு புதிய பத்திரிக்கை வெளிவரத் தொடங்கியிருக்கும் செய்தியை அறிகின்றோம். இப்பத்திரிக்கையின் பெயர் ”ஆதி திராவிடன்”. இந்த விளம்பரச் செய்தியைக் காண்போம்.


“ஆதி திராவிடன்”

இப் பெயர் வாய்ந்த ஒரு மாதாந்தப் பத்திரிகை இலங்கை தென்னிந்திய ஐக்கிய சங்கத்தாரால் ஆதிதிராவிடன் முன்னேற்றத்தைக் கருதி 16 பக்கங்களடங்கி மிக அழகாக அச்சிடப்பட்டிருக்கின்றது. பத்திரிக்கையின் போக்கை நோக்க அது தன்சந்தாதாரர்களுக்கு மிகவும் உபயோகமான விஷயங்களையே எடுத்து போதிக்கு மென்று நம்புகின்றோம். அப்பத்திரிக்கைக்கு வருஷ சந்தா ரூபா 1.25. சந்தாதரராக சேர விரும்புவோர் ஆதிதிராவிடன் பத்திராதிபர், தென்னிந்திய ஐக்கிய சங்கம், 221, சர்மாவிலா, கொள்ளுப்பட்டி,கொழும்பு என்னும் விசாலத்திற்கு எழுதிக்கொள்ளலாம். – திராவிடன் “


இந்த விளம்பரத்துடன் மேலும் சத்தியவான் பத்திரிக்கை ஆசிரியர் கீழ்க்காணும் வாழ்த்தையும் பதிகின்றார்.

[ஆதிதிராவிடர்கள் முன்னேற்றத்திற்குப் பத்திரிக்கை மிக அவசியம். திராவிடன் பத்திராதிபதியோடு இப்பத்திரிக்கையும் வாழும்படி ஆசி கூறுகிறோம்]

இலங்கையில் தொடங்கப்பட்ட ஆதி திராவிடன் இலங்கையில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் பத்திரிக்கையாகத் திகழ்ந்திருக்கின்றது.  இந்த ஆதிதிராவிடன் என்ற பத்திரிக்கை இலங்கையின் முதலாவது தலித் இதழ் மட்டுமல்ல, மலையகத்தின் முதலாவது பத்திரிக்கையுமாகும் என்பதை நோர்வேயின் வசிக்கும் இலங்கை ஆய்வாளர் சரவணன் குறிப்பிடுகின்றார். (https://www.namathumalayagam.com/2023/04/AdiDraviden.html)

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இதழியல் செயல்பாடுகளில் அயோத்திதாசப் பண்டிதர் மிக முக்கியமானவர். அக்காலத்தில் இவரது ஆதிதிராவிடர்கள் நலன் சார்ந்த முயற்சிகளின் தாக்கத்தை தமிழ்நாடு மட்டுமன்றி மலாயா, இந்தோனீசியா, இலங்கை ஆகிய நாடுகளிலும் காணமுடியும். எடுத்துக்காட்டாக அயோத்திதாசப் பண்டிதரின் தாக்கத்தாலும் உதவியுடனும் இந்தோனிசியாவின் மேடான் நகரில் ஆதிதிராவிடர் அமைப்பு 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவாக்கம் கண்டு செயல்பட்டது (நூல்: தமிழர் புலப்பெயர்வு – க.சுபாஷிணி)  அதே வகையில் இலங்கைக்கான அயோத்திதாசப் பண்டிதரின் வருகை எழுச்சியை ஏற்படுத்தியது என்பதும் மறுப்பதற்கில்லை.

இந்த ஆதி திராவிடன் பத்திரிக்கை 1919ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோர் அரசியல், கல்வி, சமயம், இலக்கியம், பெண்கள் முன்னேற்றம், சாதிப் பிரிவினை எதிர்ப்பு ஆகிய பொருளில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

சமூக மாற்றத்தை முன்வைத்து 20ஆம் நூற்றாண்டில் வெளிவந்த இதழியல் முயற்சிகளில் இலங்கையிலிருந்து வெளிவந்த இந்த ஆதி திராவிடன் என்ற மாதப் பத்திரிக்கையும் முக்கியத்துவம் பெறுகின்றது.  


[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]


(இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழ் 293 இல் இன்று வெளியிடப்பட்டது)