Thursday, February 12, 2015

குழந்தை இலக்கியம் - முனைவர்.முரசு நெடுமாறன் முயற்சிகள்

அண்மையில் எனது மலேசிய பயணத்தின் போது எனது நெடுநாள் நண்பரான பெரியவர் முனைவர்.முரசு நெடுமாறன் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு மீண்டும் ஏற்பட்டது. இவரது புதல்வன் முத்து நெடுமாறன் அவர்களையும் உத்தமம் தொடங்கிய நால் முதல் நட்புடன் தொடர்பில் இருப்பவர். ஆயினும் இம்முறை மலேசிய பயணத்தில் திரு. முத்து நெடுமாறனைக் காண வாய்ப்பமையவில்லை என்ற போதிலும் அவரது தந்தையாருடன் பல வேளைகளில் உரையாடும் சந்தர்ப்பம் கிட்டியது.

முனைவர்.முரசு நெடுமாறன் அவர்கள் குழந்தை இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு  இத்துறையில் குழந்தைகளுக்கான நூல்களையும் சிடிக்களையும் உருவாக்கி வருகின்றார். தானே பாடல்களை எழுதி அதற்கு இசை கூட்டி மலேசிய உள்ளூர் பாடகர்களைக் கொண்டு பாட வைத்து கணிணியில் போட்டு குழந்தைகள் கேட்டு பாடலைப் பாடி தமிழ் கற்றுக் கொள்ளும் வகையில் சிறந்த முயற்சியில் தொடர்ந்து பல்லாண்டுகளாக ஈடுபட்டு வருகின்றார்.

இவரது அயராத முயற்சி போற்றுதலுக்குறியது. விரையில் குழந்தை இலக்கியம் தமிழில் என்ற வகையில் ஒரு கருத்தரங்கையும் எற்பாடு செய்ய நினைத்து அதன் ஆயத்த பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். குழந்தைகளுக்கான பாடல்கள் எனும் போது குழந்தைகளின் உச்சரிப்பு, உதட்டசைவுகள் என்ற விஷயங்களையும் கவனத்தில் கொண்டு இவர் சொற்களை சேர்த்து பாடல்களை எழுதுவதாக எனக்கு தெரிவித்தார்.

உலகத் தமிழாராய்ச்சி மானாடு முடிந்து மீண்டும் நண்பர்கள் எனக்கு விருந்து நிகழ்ச்சி ஒன்ற ஏற்பாடு கிள்ளான் நகரில் செய்திருந்தனர். அங்கே இவரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு அமைந்த போது அவரது 2 நூல்களை எனக்கு வழங்கி அவற்றை இணைய வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க கேட்டுக் கொண்டார்.
முனைவர்.முரசு நெடுமாறன் அவர்களின் முயற்சிகள் காலத்திற்கேற்றவை. இவரது பணி தொடரவும் மேலும் ஆர்வமுள்ளோர் இத்துறையில் இவருடன் இணைந்து பங்காற்றவும் தமிழ் மரபு அறக்கட்டளை வழியாக கேட்டுக் கொள்கின்றேன்.

அன்புடன்
சுபா

Wednesday, February 11, 2015

மலேசிய தமிழ்ச்சங்கம்

மலேசியாவில் நான் இருந்த இறுதி நாளில் தற்செயலாக ஒரு இலக்கிய நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு வந்திருந்தது. மலேசிய தமிழ்ச் சங்கம்.. கடந்த 15 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் தமிழ் பண்பாட்டு இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வரும் ஒரு கழகம் இது.

தமிழ்வேள் கோ.சாரங்கபாணி அவர்கள் சுதந்திரத்திற்கு முன் மலாயாவில் தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர். அவரது முயற்சியின் விளைவாக மலாயாவின் தோட்டப்புற மக்களின் கலை வளர்ச்சி நாடகம், ஆடல் பாடல் கலைகள் என்ற வகையில் எழுச்சி பெற்றன. அவர் உருவாக்கிய தமிழர் திருநாளை மலேசிய மக்கள்  மறந்து விடாமல்  இருக்க இந்த மலேசிய தமிழ்ச்சங்கம் ஆண்டு தோறும் கலை நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றது.

அந்த வகையில் இந்த ஆண்டும் இந்த நிகழ்ச்சி 8.2.2015ம் நாள் ஏற்பாடாகியிருந்தது. இந்த நிகழ்வில் சிறப்புறையாற்ற தமிழகத்தின் பேச்சாளர் பேராசிரியை பர்வீன் சுல்தானா அவர்களும் வந்திருந்தார்கள்.

அந்த நிகழ்வில் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்ற அன்பு வேண்டுகோளை மலேசிய நாட்டின் புகழ்பெற்ற சமூகச் சேவையாளர், இந்த சங்கத்தின் புரவலர்  சகோதரர் சாமுவேல் ராஜ் அவர்கள் எனக்கு நிகழ்ச்சியின் முதல் மாலை மாலை தெரிவித்தார்.  நான் விமான நிலையம் செல்வதற்கு முன்னர் 1 மணி நேரம் வந்து சென்றால் போதும் என்ற அவரது அழைப்பை ஏற்று நிகழ்ச்சிக்குச் சென்று வாழ்த்துரையும் வழங்கினேன்.

எதிர்பாராத வகையில் என்னை பாராட்டி கேடயமும் மாலை பொன்னாடைகளும் என வழங்கி சிறப்பு செய்து மகிழ்ச்சியில் ஆழ்த்தினர் ஏற்பாட்டுக் குழுவினர். அவர்களின் அன்பிற்கு நான் கடமை பெற்றிருக்கின்றேன்.

இந்த நிகழ்விற்கு மலேசிய நிலநிதி கூட்டுறவு சங்க இயக்குனர். டத்தோ பா.சகாதேவன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு மலேசிய சட்ட மன்ற உறுப்பினர் மாண்புமிகு காமாட்சி அவர்களும் வந்திருந்தார். சில புகைப்படங்கள்  ...
டத்தின் டாக்டர்.சுப்ரமணியம், நான்,  மலேசிய சட்ட மன்ற உறுப்பினர் மாண்புமிகு காமாட்சி , பேராசிரியை பர்வீன் சுல்தானா டத்தோ பா.சகாதேவன் எனக்கு நினைவுச் சின்னம் வழங்குகின்றார்


​சிறப்பு பிரமுகர்களுடன்

​மலேசிய உள்ளூர் இசைக்கலைஞர்கள் பாடல் பாடுகின்றனர்


​பரத நாட்டியம் ஆடும் மலேசிய இளம் நங்கையர்கள்

சுபா

Saturday, February 7, 2015

பினாங்கு தைப்பூசம் - 6

நாட்டுக் கோட்டை செட்டியார்களின் காவடி தனிச் சிறப்புடன் அமைக்கப்பட்டிருக்கின்றது. இரு புறமும் மயில் இறகு கட்டப்பட்டு இருப்பதுடன் இரண்டு பக்கமும் சிறு செம்புகள் துனியால் கட்டப்பட்டிருக்கின்றன. ஒரு குடத்தை காவடி எடுத்தவர் அவிழ்க்கும் போது பார்த்தேன். காவடி எடுத்தவர் குடத்தில் இருக்கும் பொருளை தட்டில் கொட்டி வைத்தார். குடும்பத்தார் காவடி எடுத்தவர்களை சூழ்ந்து கொள்ள அவர்கள் செம்புகளைக் கழற்றி அதன் உள்ளிருக்கும் பொருளை தட்டில் வைக்கின்றன்ர். தினைமாவாக இருக்குமோ என நான் நினைக்கின்றேன். இது தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சில படங்கள்.
பினாங்கு தைப்பூசம் - 5

4ம் தேதி புதன்கிழமை, அதாவது தைப்பூசம் முடிந்த மறுநாள் பினாங்கில் நகரத்தார் முருகன் கோயிலுக்கு 2 நாட்களுக்கு முன் வந்த வெள்ளி ரதம் மாரியம்மன் ஆலயத்திற்குச் திரும்பிச் செல்லும் நாள். அன்று காலையில் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் மட்டும் நகரத்தார் முருகன் கோயிலிலிருந்து குழுவாகப் புறப்பட்டு ஆடிக் கொண்டே வாட்டர்பால் வீரபத்ரன் ஆலயம் வரை நாதஸ்வர இசைக்குழுவினர் முன் செல்ல 83 மயில்காவடிகளை வரிசையாக எடுத்துக் கொண்டு சென்றனர். பின்னர் மீண்டும் நகரத்தார் கோயிலுக்கே வந்து சேர்ந்தனர். காலை 7 முதல் 8.30 வரை இந்த சிறப்பு நிகழ்வு நடந்தது.Tuesday, November 4, 2014

20ம் நூ. ஆரம்பகால நிலையில் மலேசியத் தமிழர்களின் தமிழ் மொழி பண்பாட்டு முயற்சிகள் - 1

ரப்பர் தோட்டத் தொழிளார்
மலேசியாவிற்கான தென்னிந்தியர்களின் அதிலும் குறிப்பாகத் தமிழக நிலப்பரப்பிலிருந்து கடல் கடந்து சென்ற தமிழர்களின் பயணம் என்பது பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்த வரலாற்று உண்மை. அதில் தற்கால மலேசிய இந்தியர்களாக இருப்போரில் பலர்  19ம் நூ. இறுதியிலும், 20ம் நூ ஆரம்ப காலகட்டங்களிலும் குடி பெயர்ந்தவர்கள். 1920-1940 வரை கடல் வழியாக சென்னையிலிருந்து நாகப்பட்டினம் வழியாகவும் தமிழகத்தின் நாமக்கல் பகுதியிலிருந்து சென்றோர் தஞ்சமடைந்த கேரித்தீவு விழியப் பதிவுகளையும் விளக்கப்பதிவுகளையும் முன்னர் வெளியிட்டிருந்தேன்.

இன்று தற்செயலாக ஒரு பதிவு ஃபேஸ்புக் பக்கத்தில் கிடைத்தது. காண்க!  https://www.facebook.com/video.php?v=778633225509197&set=vb.100000875796950&type=2&theater 

உடல் உழைப்பு பணிகளுக்காக, குறிப்பாக, இரயில் பாதை அமைக்கவும், செம்பனை, இரப்பர் தோட்டங்களில் பணியாற்றவும் பலர் மலாயா வந்தனர். இவர்களில் பெரும்பாலோர் அவர்களுக்கு வரையறுக்கப்பட்ட தோட்டப்பகுதி குடியிருப்புப் பகுதிகளிலிருந்து வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இவர்களுக்கு பொருளீட்டுதல் என்பதே முதல் நோக்கமாக இருந்தாலும் வந்து சேர்ந்த புதிய இடத்தில் தமது மொழியையும் பண்பாட்டையும் மறந்தோராக இல்லாமல், தமிழ் மொழி, கலை சமய பண்பாட்டு விஷயங்களை மறக்காது தொடர்ந்து பேணி வரும் நிலையை இக்குமுகத்தினர் உறுதியாக கையாண்டனர். 

மலாயா நாடகக் குழு

அப்படி நடைபெற்ற முயற்சிகள் அறிந்து கொள்ள படவேண்டியவையே. கால ஓட்டத்தில் அக்காலத்து நிகழ்ந்த முயற்சிகள் பல உள்ளூர் மக்களினாலேயே மறக்கப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது எனபதை நன்கு காண்கின்றோம். இதனை மீள்பார்வை செய்வது அவசியம் என்று நினைக்கின்றேன்.

அத்தகைய முயற்சிகளில்  திரு.கோ சாரங்கபாணி அவர்களது பெயர் மலேசிய பத்திரிக்கை உலகம் என்று மட்டுமல்லாது, தமிழ்க் கலை நாடக உலகில் சிறப்பிடம் பெறுவது. இவர் 1950ம் ஆண்டில் தமிழர் திருநாள் என்ற முயற்சியை  அன்றைய மலாயாவில் தொடக்கினார். இவர் சிங்கையிலிருந்து வெளிவந்த தமிழ் முரசு பத்திரிக்கையை 1935ம் ஆண்டில் தொடக்கியவர். இச்செய்திகளையும் இந்த சிறிய வீடியோ பதிவு சொல்கின்றது.  

சுதந்திரத்திற்கு முந்திய மலாயா தொடர்பான இத்தகைய விஷயங்களை இந்த இழையில் பதிவோம்.

நேரம் கிடைக்கும் போது மேலும் தொடர்கின்றேன்.

சுபா.

Friday, January 10, 2014

மலேசியா - காட்சியில் அறிமுகம் - 20

லிட்டல் இந்தியாபடத்தில் நாம் காண்பது குவாலம்பூரின் ப்ரீக்ஃபீல்ட்ஸ் சாலையில் அமைந்திருக்கும் லிட்டல் இந்தியா வர்த்தகப் பகுதி.  விரிவாக்கப்பட்ட சாலைகளின் மேல் கோலம் தீட்டப்பட்டும் சாலையின் ஓரங்களில் கோயில் மதில் சுவர் போன்ற அமைப்பினை அமைத்தும் இங்கு அழகு படுத்தியிருக்கின்றனர். இங்கே அமைந்திருக்கும் கடைகளுக்குச் சென்றால் ஒன்றும் வாங்காமல் வர முடியாது. தமிழர்கள் பயன்படுத்தும் எல்லா விதமான பொருட்களும் கிடைப்பதோடு நல்ல உணவகங்கள் பல அமைந்த பகுதி இது.

சுபா

Thursday, January 9, 2014

மலேசியா - காட்சியில் அறிமுகம் - 19

மலேசியக் குரங்குகள்ஆசிய நாடுகள் பலவற்றிலும் குரங்குகள் காடுகளில் திரிவதை பலரும் பார்த்திருக்கின்றோம். மலேசிய குரங்குகளுக்கு என்ன தனிச் சிறப்பு என்று கேட்க வேண்டாம். மலேசியாவில் இந்தப் புகைப்படம் எடுத்ததால் இது மலேசியக் குரங்கு. அவ்வளவே. :-)

இது பத்து மலை கோயில் கீழ் பகுதியில் பதிவு செய்யப்பட்ட படம். தூங்கும் தன் குட்டியை ஒரு கையால் அரவணைத்துக் கொண்டு எதையோ பார்க்கும் பார்வை அழகு. குரங்குக் குட்டியின் தலை மயிர் சிறு மனித குழந்தையின் தலைமயிரை ஒத்ததாகவே எனக்குத் தெரிகின்றது. தாயின் அனைப்பில் கவலையின்றி தூங்கும் குட்டி தன் தூக்கத்திலும் கூட தன் தாயை இறுக்கி கட்டிக் கொண்டேதான் இருக்கும்.

மலைப்பகுதிகளில் அமைந்திருக்கும் கோயில்களில் காணப்படும் குரங்குகளுக்கு பக்தர்கள் நிச்சயம் தனக்கு ஏதாவது உணவுகளைக் கொடுப்பார்கள் என்று நன்கு தெரியும். வாழைப்பழம் தேங்காய், பாக்கு  உலர்ந்த திராட்சை பழங்களை தேடிக் கொண்டு கோயிலில் பூஜை செய்து விட்டு வரும் பக்தர்களின் வருகைக்காக இவை கூட்டமாக காத்துக் கொண்டிருக்கும். சில நேரங்களில் நம் கைகளில் பழங்கள் தென்பட்டால் வந்து பிடிங்கிச் செல்லவும் இவை தயங்காது.

சுபா