Wednesday, December 31, 2003

Recollecting my teaching experiences (1997) - 3

உலகில் பிறக்கின்ற நாம் ஒவ்வொருவருமே ஒரு புதுமை. மற்றவர்களிடமிருந்து நம்மை பிரித்துக் காட்டுவதற்காகவென்றே பற்பல தனிப்பட்ட குணாதிசயங்களை நாம் ஒவ்வொருவரும் பெற்றிருக்கின்றோம். அந்த வகையில் விஜியோடு ஒப்பிடும் போது மற்றொரு பெண் குழந்தையான புவனேஸ்வரி எதிர்மறையான குணங்களைக் கொண்டவளாகவே தோற்றமளிப்பாள்.



உருவத்தில் சிறியவள். அதிகமாக வாயைத்திறந்து பேசுவதே கிடையாது. வகுப்பிலும் சத்தம் வராது; எந்த பிரச்சனைகளும் அவளால் வகுப்பில் கிடையாது; ஆனால் மிக முக்கியமாக பாடத்திலும் கவனம் கொஞ்சமும் இருக்காது. அவளது உலகம் ஒரு வேறு பட்ட உலகம்.

பாடம் நடந்து கொண்டிருக்கும் போது புத்தகத்தை எடுத்து மேசை மேல் வைத்து பார்த்துக் கொண்டிருப்பாள். தானாகவே வந்து பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போதே எனது பக்கத்தில் வந்து நின்று கொண்டு எனது கையைப் பிடித்துக் கொள்வாள். என்ன விஷயம் என்று கேட்டால் பதில் வராது. என்னைப் பார்த்து வெட்கத்தோடு சிரித்துக் கொள்வாள்.

முதலில் இவளது நடவடிக்கை எனக்கு சிரமமாகத்தான் இருந்தது. சில வாரங்களுக்குப் பிறகு எனது பாட நேரத்தில் அவளை எனது ஆசிரியர் மேசைக்கு அருகிலேயே அமர்த்திக் கொள்ள ஆரம்பித்தேன். அவளுக்கு ஆசிரியர் நடத்தும் பாடத்தை விட அவரது அன்பும் நெருக்கமும் தான் மிகவும் தேவையாக இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. The teacher has tremendous impact on the lives of the kids with whom they interact. ஒரு நாளில் சில மணி நேரங்கள் தான் நான் அவளது கண்களுக்குப் புலப்பட்டாலும் எனது செயல்கள், எனது நடவடிக்கைகள், நான் அவளிடம் நடந்து கொள்ளும் விதம் போன்றவை அவளை பாதிக்கின்றன என்பது முற்றிலும் உண்மை என்பதை என்னால் உணர முடிந்தது. அதிலும் பெற்றோரின் தனிப்பட்ட கவனிப்பு என்ற ஒன்று இல்லாத நிலையில் இவ்வகை குழந்தைகளுக்கு ஆசிரியர்களே உலகமாகி விடுவது தான் நிதர்சனம்.

காலையில் நான் பள்ளிக்கு வரும் போது எனது கார் வருவதைப் பார்த்த உடனேயே ஓடி வருவாள். கார் கதவை திறப்பதற்குள் எனது பொருட்களை எனக்காக எடுத்து வரவேண்டும் என்பதற்காகப் போட்டி போட்டுக் கொண்டு நிற்பாள். என்னோடு கையைப் பிடித்துக் கொண்டு நடந்து வரவேண்டும் என்பதில் கொள்ளை ஆசை. அவளை அப்போது என்னால் ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் கால ஓட்டத்தில், அவளது சிந்தனைகள் இப்போது மாறி இருக்கலாம். ஆசைகள் மாறி இருக்கலாம். ஆனாலும் என்னை அவளால் மறந்திருக்க முடியாது என்பது நிச்சயம்!

Tuesday, December 30, 2003

Recollecting my teaching experiences (1997) - 2

ஆசிரியர் வேலை என்பது புனிதமான ஒரு பணி என்று பரவலாகச் சொல்லக் கேட்டிருக்கின்றேன். இங்கு, அதுவும் இராமகிருஷ்ணா பள்ளியில் வேலை செய்ய ஆரம்பித்தபோது இதனை உணரமுடிந்தது என்று தான் சொல்ல வேண்டும். நான் முன்னரே குறிப்பிட்டது போல ஆசிரமத்திலிருந்து எனது வகுப்பில் ஆறு குழந்தைகள் படித்து வந்தனர். அதில் விஜி ஒரு மாறு பட்ட குணம் உள்ள ஒரு பெண்.

9 வயது பெண் குழந்தையைப் போல இவள் இருக்க மாட்டாள். ஒரு பாடத்தை ஆரம்பித்து இரண்டு நிமிடம் முடிவதற்குள் அவள் ஏதாவது ஒரு பைத்தியக்காரத்தனமான ஒரு வேலையைச் செய்து கொண்டிருப்பாள். இப்படித்தான் ஒரு நாள். மாணவர்களை எல்லாம் அழைத்து வைத்து ஒரு
மூலையில் அமர்ந்து கதை சொல்லிக் கொண்டிருந்தேன். (என்ன பாடம் என்று தெரியவில்லை. மறந்து விட்டது.) திடீரென்று மாணவர்கள் எல்லாம் பயத்தில் கூச்சல் போடுவதைப் பார்த்து திரும்பிப்பார்த்த நான் உண்மையிலேயே பயந்து விட்டேன். ஏறக்குறைய மூன்று அடி உயரம் உள்ள ஒரு ஜன்னலில்
ஏறிக் கொண்டிருந்தாள் விஜி. கதையில் அனைவரும் கவனமாக இருக்கும் போது பின்னால் சென்று மேஜை மேல் ஏறி ஜன்னலிலிருந்து ஏறிக் குதிப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தாள். இப்படிப் பட்ட சூழலில் பார்க்கின்ற நமக்கு எப்படி இருக்கும்? ஒரு வகையாக அவளை இறக்கி கீழே கொண்டு வந்து சேர்த்தேன்.

இவளது குறும்புகள் சில வேளைகளில் எல்லை மீறி விடும். பல முறை தொடர்ந்து இவள் கொடுக்கும் நச்சரிப்பால் மற்ற மாணவர்கள் சிரமப்படுவதைப் பார்த்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் குறை கூறியிருக்கின்றேன். ஆனால் படிப்படியாக ஒரு சில மாதங்களில் எனக்கு அவள் மேல் அலாதியான அன்பு ஏற்பட்டு விட்டது. அது எப்படி என்பது எனக்கே தெரியவில்லை.

வகுப்பில் மிகச் சிறப்பாகப் படிக்கக் கூடிய மாணவியாக ஒரு சில மாதங்களிலேயே அவள் மாறிவிட்டாள். ஆனாலும் அவளது தாங்க முடியாத குறும்புகள் மட்டும் சிறிதும் மாறவில்லை. அது அவளுக்குறிய தனித்துவம். அதனை மாற்றிக் கொள்ள அவள் விரும்பவில்லை போலும்.

ஆசிரியர் பயிற்சியின் போது படித்த பல உளவியல் முறைகளை நான் இவளிடம் பயன்படுத்தியிருக்கின்றேன். அனைத்திற்கும் சவாலாக இவளது செயல் அமைந்து விடும். ஆனால் அதிகமான மாற்றங்களை படிப்படியாக அவளிடத்தில் காண முடிவதாக மற்ற மாணவர்களே என்னிடம் சொல்வார்கள்.

நல்ல திறமை இருந்தாலும் ஆசிரமத்தில் வாழும் போது தனிப்பட்ட கவனிப்பு என்பது இவ்விதமான குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை. பற்பல காரணங்களுக்காக பெற்றோர்களை இழந்த நிலையில் வாழ்கின்ற குழந்தைகள் இவர்கள். மற்றவர்கள் அதிலும் குறிப்பாக ஆசிரியர்களுக்கு
தங்களின் மேல் கவனம் வருமாறு செய்வதற்காக தன்னை அறியாமலேயே இம்மாதிரியான குழந்தைகள் பல வகை விஷயங்களை முயற்சி செய்கின்றனர். விஜியின் சேஷ்டைகள் அதில் புது விதம்.

Wednesday, December 24, 2003

Recollecting my teaching experiences (1997) - 1

கணினித் துறைக்கு வருவதற்கு முன் நான் ஆசிரியர் பயிற்சிக்காகப் படித்து ஏறக்குறைய ஒரு வருடம் ஆசிரியராகவும் பணியாற்றினேன். பயிற்சியை முடித்தவுடன் எனக்கு பினாங்கிலேயே உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் வேலையைச் செய்வதற்கு அரசாங்கம் நியமித்திருந்தது. இது ஒரு தமிழ்பள்ளி. பினாங்கு (தீவு) மாநிலத்தில் மட்டும் மொத்தம் 7 தமிழ் பள்ளிகள் அப்போது இருந்தன. நான் ஆசிரியராக வேலைபார்த்த பள்ளியின் பெயர் இராமகிருஷ்ணா தமிழ் பள்ளி.

தமிழ் பள்ளி என்றால் இங்கு தமிழ் மாத்திரம் கற்றுக் கொடுக்கப்படும் என்பதல்ல. மலேசியாவைப் பொருத்தவரை மலாய், சீன, தமிழ் மொழிகளில் ஆரம்பப்பள்ளிகள் உண்டு. இப்பள்ளிகளில் அரசாங்கம் அங்கீகரித்த எல்லா பாடங்களும் போதிக்கப்படும். தமிழ் பள்ளி என்று சொல்லும் போது தமிழ்தான் முக்கியப் பாடமாகப் போதிக்கப்படும். 7 வயது முதல் 12 வயதுவரை உள்ள ணவர்கள் தான் தொடக்க நிலைப்பள்ளியில் பயில்வார்கள். பணிரெண்டு வயதிற்குப் பின்னர் இந்த மாணவர்கள் தேசியப்பள்ளிக்குச் செல்லவேண்டும். இங்கு மலாய் மொழிதான் முக்கிய பாடமொழியாக அமைந்திருக்கும். நான் வேலை செய்த இராமகிருஷ்ணா பள்ளிக்கு ஒரு சிறப்புண்டு. இந்தப் பள்ளியோடு சேர்ந்து இராமகிருஷ்ணா மண்டபமும் அதனால் நிர்வாகிக்கப்படும் குழந்தைகள் அநாதை ஆசிரமும் இங்கு இருந்தது. ஆசிரமத்தில் வசிக்கும் குழந்தைகள் (எல்லோரும் தமிழர்கள்) இந்த தொடக்கப்பள்ளிக்குத் தான் வருவார்கள். ஆசிரம குழந்தைகள் தவிர்த்து, மற்றவர்களும் சேர்ந்து படிக்கக் கூடிய ஒன்றாகத்தான் இந்தப்பள்ளி இயங்கி வருகின்றது.

இங்கு நான் ஆசிரியராக வேலை செய்த அந்த நாட்கள் எனது வாழ்க்கையில் மறக்கமுடியாதவை. எத்தனையோ இனிமையான நிகழ்வுகள். தோழமையான ஆசிரியர்கள், அன்பைப் பொழியும் மாணவர்கள், மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகள் இப்படிப் பல விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

வந்தவுடனேயே எனக்கு வகுப்பு ஆசிரியர் என்ற பதவி கிடைத்து விட்டது. 42 மாணவர்கள் கொண்ட மூன்றாம் வகுப்பிற்கு ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்டேன். மூன்றாம் வகுப்பில் படிக்கும் குழந்தைகளுக்கு 9 வயது. வகுப்பில் ஆண் பெண் குழந்தைகள் சேர்ந்தே படிப்பார்கள். என்னுடைய வகுப்பில் இராமகிருஷ்ணா ஆசிரமத்தைச் சேர்ந்த 6 குழந்தைகளும் இருந்தார்கள். இவர்களில் விஜி, புவனேஸ்வரி இரண்டு பேரையும் என்னால் நிச்சயமாக மறக்கமுடியாது. [இவர்களைப் பற்றி அடுத்த கட்டுரையில் தொடர்வேன்.] காலையில் பள்ளி 7:45க்கு தொடங்கி விடும். மதியம் 1:10 அளவில் பள்ளி முடிந்து விடும். சில மாணவர்கள் அதற்குப் பிறகு மதியம் நடைபெறும் பிரத்தியேக வகுப்பில் கலந்து கொள்ள வருவார்கள்.

நான் அங்கு ஆசிரியராக இருந்த போது என்னுடன் வேலை பார்த்த சக ஆசிரியர்கள் கல்யாணி, சரஸ்வதி, சங்கரா, கலைச்செல்வி, ஜெயலெக்ஷ்மி, புஷ்பா, மகேஷ்வரி, சிவகாமி மற்றும் சிலர். இவர்களில் சிலர் இப்போது வேறு பள்ளிகளுக்கு மாற்றலாகிச் சென்று விட்டனர். வேலை முடிந்த பிறகு நாங்கள் பல முறை தமிழ் சினிமா படம் பார்க்கச் சென்றிருக்கின்றோம். படம் பார்ப்பதற்கு முன்னர் சுவையான உணவு சாப்பிடச் செல்வது வழக்கமாகிப் போனது. அதிலும் அடிக்கடி Dato Keremat சாலையில் இருக்கும் சீன சைவ உணவகத்தில் (இங்கு சோயாவைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சைவ கோழி, மீன், முட்டை போன்றவை புகழ்பெற்றவை) சாப்பிட்டு செல்ல மறப்பதில்லை. வேலை செய்கின்றோம் என்ற சிந்தனையே வராதவாறு மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இந்த கால கட்டம் அமைந்திருந்தது.

Saturday, December 20, 2003

மலேசிய 'லா'

நான் ஜெர்மனிக்கு வந்த புதிதில் இந்திய தமிழர்களைச் சந்திக்கும் போதெல்லாம் என்னிடம் ஒரே மாதிரியான கேள்வியைக் கேட்க அவர்கள் தவறியதில்லை. "மலேசியத் தமிழர்கள் பேசும் போது இறுதில் 'லா' சேர்த்துக் கொள்வார்களாமே. அது ஏன்?" என்பது தான் அது.
இப்படிப்பட்ட இக்கட்டான மொழி சம்பந்தப்பட்ட கேள்வியைக் கேட்கும் போதெல்லாம் விளக்கமளிப்பது கடமையாகிவிடுகின்றது. ஆனாலும் என்னோடு பேசுபவர்கள் நான் இந்த சிறப்பு இணைப்பை பயன்படுத்துவதில்லை என்பதை நன்றாகத் தெரிந்து வைத்திருப்பர். அதற்குக் காரணம் இருக்கின்றது.


மலாய் மொழியில் 'லா' என்ற சொல்லின் பயன்பாடு மிக முக்கியமானது. வாக்கியம் முடியும் போது இது பயன்படுத்தப்படுகின்றது. கூறுகின்ற ஒரு வாக்கியத்திற்கு மேலும் அழுத்தம் கொடுப்பதற்காகவும் பேசுகின்றவர்களுக்கிடையே அன்னியோன்னியத்தை ஏற்படுத்துவதற்கும் இந்த இணைப்பு முக்கியமாக பயன்படுத்தப்படுகின்றது.
உதாரணமாக ஒரு மலாய் மொழி சொல் ஒன்று:

'Cepatlah' - cepat என்பது விரைவாக என்று பொருள்படும் . அதோடு lah சேரும் போது கொஞ்சம் அழுத்தம் கொடுக்கப்பட்டு உணர்வுகளும் சேர்ந்து வெளிப்படுவதாக அமைந்து விடுகின்றது.

மலேசியத் தமிழர்களின் உரையாடல்களில் இந்த சேர்க்கை சுவாரசியமான ஒன்று. சாதாரணமாகப் பேசும் போது எப்படி இந்த சொல் தமிழில் சேர்ந்து கொள்கின்றது என்று பாருங்கள்.


உதாரணம்:
1. என்னலா செய்றீங்க?
2. வாங்கலா.. போகலாம்!
3. சரிலா.. நானே முடிச்சிடறேன்.

இப்படி சர்வ சாதாரணமாக 'லா' வாக்கியங்களில் சேர்ந்து கொள்வதுதான் நடைமுறை உண்மை.

நான் தமிழ் மொழியை கல்லூரியில் தனி ஒரு பாடமாக எடுத்துப் பயின்றதால் மிகக் கவனமாக 'லா' சேர்ப்பதை தவிர்த்து விடுவேன். (ஆனாலும் அவ்வப்போது பிற மொழி கலப்பு சேர்ந்து விடுவதை முழுதாகத் தவிர்க்க முடிவதில்லை என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்) இப்போதெல்லாம் மலேசியா திரும்பும் போது புதிதாக சந்திக்கும் தமிழ் நண்பர்களிடம் பேசும் போது என் பேச்சுத் தமிழை வைத்து நான் தமிழகத்திலேயிருந்து வந்திருக்கின்றேனா அல்லது இலங்கைத் தமிழரா என்று என்னைக் கேட்ட சம்பவங்கள் பல உண்டு.
என்னைப்போல 'மிகக் கவனமாக' பேசுகின்ற தமிழர்கள் பலர் மலேசியாவில் இருக்கின்றனர். ஆக, கொஞ்சம் கவனம் வைத்து பேச ஆரம்பித்தால் 'லா' சேர்ப்பதை தவிர்த்து விடலாம்.

ஆனாலும் மலேசியத் தமிழர்களின் தனித் தன்மையோடு வருகின்ற 'லா' சேர்ந்த தமிழுக்கும் ஒரு அழகு இருக்கத்தான் செய்கின்றது!.

Friday, December 19, 2003

தோல் பாவை - Wayang Kulit



இந்தியர்களுக்கு நன்கு பரிச்சயமான இராமயண காப்பியம் மலாய்க்காரர்களே அதிகமாக வாழும் மலேசியாவிலும் மிகப் பிரபலமான ஒரு பழங்கதையாக மதிக்கப்பட்டு வருகின்றது என்பது மற்ற இடங்களில் வாழ்கின்ற தமிழர்கள் பலருக்கும் தெரிந்திருக்கு வாய்ப்பில்லை. இராமன் சீதையைப் பற்றிய இந்த காப்பியம் இந்து அரசர்களால் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டே தீபகற்ப மலேசியாவிற்கு கொண்டுவரப்பட்டது.


இந்தக் கதையை, கற்றவர்கள் மற்றுமின்றி சாதாரண மக்களும் தெரிந்து வைத்திருக்குமளவுக்கு செய்த பெருமை தோல் பாவை என்று சொல்லப்படும் ஒரு வகை கலாச்சார விளையாட்டையே சாரும். இந்த விளையாட்டிற்கு Wayang Kulit என்பது மலாய் மொழிப் பெயர்.



பொம்மைகளைத் திரைக்குப் பின்னால் இருப்பவர் அசைத்துக் கொண்டிருக்க, கதையைப் பாடலாக மற்றொருவர் பாடிக் கொண்டிருப்பார். தோல் பொம்மையை அசைப்பவரை Dalang (டாலாங்) என்று சிறப்பாக அழைப்பார்கள். இவர் இந்த விளையாட்டில் கைதேர்ந்த விற்பன்னராக இருக்க வேண்டும். இந்த விளையாட்டிற்கென்று சில நியதிகளும் உண்டு. கதாநாயகன் மற்றும் ஏனைய நல்ல கதாமாந்தர்கள் வலது பக்கத்தில் காட்சியளிப்பார்கள். வில்னன்கலும் வில்லிகளும்:-) இடது பக்கத்தில் காட்சியளிப்பார்கள்.

மலேசியாவில் குறிப்பாக கிளந்தான் மாநிலத்தில் தான் இந்த வகை விளையாட்டை அதிகமாகக் காணமுடியும். உள்நாட்டில் இருப்பவர்களுக்கு இப்போதெல்லாம் இம்மாதிரியான பழங்கால கலாச்சார விளையாட்டுக்களில் ஆர்வம் ருப்பதில்லை. அதனால் வளர்ச்சியின்றி இந்தக் கலை படிப்படியாக மறைந்து வருகின்றது என்றே சொல்ல வேண்டும். அதோடு தீவிரவாத இஸ்லாமிய சட்டத்தை நிறுவ முயன்று கொண்டிருக்கும் கிளந்தான் மாநில அரசாங்கம் (கிளந்தான் திரங்காணு ஆகிய இரண்டு மாநிலங்களில் தான் இஸ்லாமிய தீவிரவாத கட்சி ஆட்சி அமைத்திருக்கின்றது) இஸ்லாமிய சமையத்துக்குப் புறம்பான பல விஷயங்கள் இந்த வகை கதைகளின் வழி மக்களுக்குச் செல்வதால் இதனைத் தடுக்க வேண்டும் என்று 1980ல் சட்டம் இயற்றியது. அதனால் சுற்றுப்பயணிகளுக்காக மட்டுமே தற்சமயம் ஒரு சில இடங்களில் Wayang Kulit காட்டப்படுகின்றது.

Tuesday, December 9, 2003

National service


இன்றைய ஸ்டார் (http://www.thestar.com.my) தலையங்க செய்திகளில் ஒன்றாக வந்திருக்கும் மலேசிய தேசிய சேவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டோரைப் பற்றிய தகவலைப் படித்தபோது ஒரு வாரம் நான் கெடா மாநிலக் காடுகளில் ஈடுபட்டிருந்த இராணுவப் பயிற்சி தான் ஞாபகத்திற்கு வந்தது.

அது ஒரு வகையில் சற்று எளிமையான ஒரு பயிற்சிதான். கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் கட்டாயமாக இந்தப் பயிற்சிக்குச் செல்ல வேண்டும் என்பது அப்போதிருந்த நிபந்தனை. இந்தப் பயிற்சியைப் பற்றி முதலிலேயே கேள்விப்பட்டிருந்ததால் எனது பெயர் இந்த பயிற்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்படக்கூடாது என்று எல்லா கடவுளையும் வேண்டிக் கொண்டிருந்தேன். ஆனால் கடவுள் காலை வாறி விட்டு விட்டார். என் பெயரும் சேர்க்கப்பட்டு நானும் ஒரு வார காலம் இந்த தீவிர பயிற்சிக்குச் செல்ல வேண்டும் என்று அழைப்பு வந்திருந்தது.

பயிற்சியின் ஆரம்பத்திலேயே விதிமுறைகளை எங்களுக்குத் தெரிவித்து விட்டனர். பெண்கள் எந்த வகையான அலங்காரப் பொருட்களையும் உபயோகப்படுத்த்தக் கூடாது, கண்ணாடியில் முகத்தைப் பார்க்கக்கூடாது என்பதெல்லாம் இதில் அடங்கிய கட்டளைகள். யாராவது அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள் போன்றவற்றை வைத்திருந்த்கால் அவற்றை வீசிவிடவேண்டும் என்று எங்கள் அதிகாரி தெரிவித்திருந்தார். ஆனாலும் எங்கள் குழுவில் இருந்த ஒரு மலாய் பெண் யாருக்கும் தெரியாமல் ஒரு Fair & Lovely face cream வைத்திருந்தாள். இதை எப்படியோ கண்டு பிடித்து விட்ட அந்த அதிகாரி, குழுவில் இருந்த எங்கள் அனைவருக்கும் தண்டனை வழங்கினார். தண்டனை என்ன தெரியுமா? கழுத்தளவு நீர் தேங்கிய ஒரு குளத்தில் நாங்கள் 30 நிமிடம் நிற்க வேண்டும் என்பது தான். இந்த குளம் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட ஒன்று; சேர் நிரம்பிய குளம். இதில் 30 நிமிடங்கள் நிற்பதை
இப்போது கற்பனை செய்து பார்த்தாலும் சகிக்க முடியவில்லை.



இப்படி சுவாரசியமான பல தண்டனைகளை இந்த பயிற்சியின் போது அனுபவித்திருக்கின்றேன். மலையிலிருந்து குதிப்பது, மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குக் கயிரைக் கட்டி அதிலேயே நடப்பது; நடுக் கடலில் தனியாக படகு ஓட்டிச் செல்வது; இப்படிப் பல பயங்கர அனுபவங்கள். இந்த பயிற்சியையெல்லாம் முடித்து விட்டு 7 நாட்களுக்குப் பிறகு திரும்பும் போது எனது பொருட்களை எல்லாம் காரில் வைத்து விட்டு எனது முகத்தைக் கார் கண்ணாடியில் பார்த்த எனக்கு அதிர்ச்சியாகி
விட்டது. என்னையே எனக்கு அடையாளம் தெரியாத அளவிற்கு நான் உருமாறியிருந்தேன்.

பல வகையில் எனக்கு வெறுப்பினை இந்தப் பயிற்சி உண்டாக்கியிருந்தாலும், அதற்குப் பிறகு எனக்கு ஏற்பட்ட மனோ தைரியத்தை நான் நிச்சயமாக உணர்ந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். மலேசிய மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி நிச்சயமாக பல வகையில் உதவும் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை!.

Sunday, December 7, 2003

Flood havoc in Penang

கடந்த சில நாட்களாக ஜெர்மனியில் மழை தூரல் அவ்வப்போது விடாமல் இருந்து கொண்டிருக்கின்றது. இங்கிருப்பது போலவே மலேசியாவிலும் நவம்பர் டிசம்பர் மாதங்கள் மழை மாதங்கள்தான். இந்த மாதங்களில் சில வேளைகளில் ஒவ்வொரு நாளும் விடாமல் மழை பெய்யும். பினாங்கில் இந்த மாதங்களில் வெள்ளம் வந்து மக்கள் சிரமப்படுவதும் உண்டு. அதிலும் குறிப்பாக Jalan P.Ramlee எனச் சொல்லப்படும் சாலையிலும் அதன் அருகாமையில் உள்ள இடங்களிலும் வெள்ளம் பெருகி விடுவது வாடிக்கை.

எனது பள்ளித் தோழி சீதாவின் வீடு இந்தப் பகுதியில் தான் இருக்கின்றது. டிசம்பர் மாதம் வந்து விட்டால் அவள் வீட்டில் இருக்கும் பொருட்களை எல்லாம் முன் ஜாக்கிரதையாக மேற்பகுதிழில் பாதுகாப்பாக எடுத்து வைத்து விடுவார்கள். இல்லையேல் ஒரு அடி உயரத்திற்குத் தேங்கி நிற்கும் வெள்ளத்தில் இந்தப் பொருட்கள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டு விடும்.

வெள்ளத்தைப் பற்றி ஒவ்வொரு ஆண்டும் செய்திகளின் வழியும் என் தோழியின் வழியும் கேள்விப்பட்டிருந்தாலும் அதனால் ஏற்படும் பாதிப்பினை நான் நேரடியாக உணர்ந்ததில்லை. என் வீடு இருக்கும் பகுதி உயர்ந்த நிலப்பகுதி என்பதால் நீர் தேங்கி வெள்ளம் வந்து அதில் விளையாடும் வாய்ப்பு இன்றளவும் கிட்டவில்லை. மழை விடாமல் பெய்யும் போது அதில் விளையாடுவது தான் நாம் எல்லோருக்குமே பிடிக்குமே. எனக்கும் அப்படித்தான். அப்போது சந்தோஷமாக இருக்கும். ஆனால் வெள்ளம் வந்து அதனால் சிலர் வசதிகளை இழந்து சிரமப்படுவதைக் கேள்விப்படும் போது சங்கடமாகப் போய்விடுவதுண்டு.

P.Ramlee சாலைப் பகுதியில் வெள்ளம் சில வேளைகளில் ஒரு வாரத்திற்கும் கூட வற்றாமல் இருக்கும். நீர் மட்டம் உயர்ந்து விடுவதால், மக்கள் படகுகளைப் பயன்படுத்தித் தான் வெளி இடங்களுக்குச் செல்ல முடியும். இதை சீதா சொல்லும் போது எனக்கும் அப்படி படகில் ஏறி சுற்றி வரவேண்டும் என்று தோன்றும்...:-)


சென்ற முறை மலேசியா சென்றிருந்தபோது எனது தோழியிடம் வெள்ளத்தை பற்றி விசாரித்தேன். இப்போதெல்லாம் மழை விடாமல் பெய்தாலும் வெள்ளம் வருதில்லை என்று சொன்னாள். சாலைகளைப் புணரமைப்புச் செய்து நீர் செல்லும் வழிகளை மாற்றி அமைத்து விட்டமையால் இப்போதெல்லாம் வெள்ளம் வருவதில்லை என சந்தோஷமாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். நல்ல செய்திதான். ஆனால் P.Ramlee சாலை வாழ் மக்களுக்குக் கிடைக்கும் இலவச படகுச் சவாரி இல்லாமல் போய்விட்டது தான் ஒரு குறை, இல்லையா..?? ..:-)

Tuesday, December 2, 2003

Durian - King of the fruit



நேற்று மதிய உணவிற்கு நண்பர்களோடு சென்றிருந்தபோது மலேசியாவைச் சுற்றிப் பார்க்க எது உகந்த மாதம் என்ற கேள்வி நண்பர்களிடமிருந்து எழுந்தது. ஒவ்வொரு மாதங்களைப் பற்றியும் அதன் தன்மைகள் சீதோஷ்ண நிலை போன்ற வற்றைப் பற்றியும் சொல்லிக் கொண்டு வரும் போது ஜூலை மாதம் தொடங்கி அக்டோ பர் வரை மலேசியாவிற்குச் சென்றால் உள்நாட்டுப் பழங்களையும் சுவைக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லி வைத்தேன். அப்படி என்ன வித்தியாசமான பழங்கள் உங்கள் நாட்டில் என்று கேட்க ஆரம்பித்தனர் என் ஜெர்மானிய நண்பர்கள். பாவம். இவர்கள் விடுமுறைக்கு பிரான்ஸ் எல்லையைக் கடப்பதே கூட அதிசயம் தான். அப்படி இருக்கும் போது ஆசிய நாடுகளின் சிறப்புக்களை அதுவும் மலேசியாவின் தனிச் சிறப்பைச் சொல்ல வேண்டியது எனது கடமையல்லவா..:-)

விடுமுறை எடுக்க வேண்டும் என்று நினைத்தவுடனேயே எனக்கும் கூட பல வேளைகளில் ஆகஸ்டு மாதம் மலேசியா போகலாமே என்று நினைக்க வைக்கும் அளவிற்கு இந்தப் பழங்களுக்கு ஒரு ஈர்ப்பு சக்தி உண்டு. டுரியான் பழத்தின் சுவைக்கு ஈடு இந்த உலகத்தில் எதுவுமே இல்லை என்று அடித்துச் சொல்லலாம். (யாரும் சண்டைக்கு வந்து விடாதீர்கள்..:-) ) அதனை சாப்பிட்டுப் பார்த்தவர்களுக்குத் தானே அதன் அருமை தெரியும்.


புதிதாக இந்தப்பழத்தைப் பார்ப்பவர்களுக்கு இந்தப் பழம் முதலில் ஒரு வித பயத்தை கட்டாயமாக ஏற்படுத்தி விடும். அதன் தோற்றம் அப்படி. அதற்கும் மேலாக அதன் வாசம். முள் நிறைந்த இந்த பழத்தை கையில் தூக்கிப் பிடிப்பதும் கூட சிரமமான ஒரு வேலைதான். ஆனால் பழத்தை கஷ்டப்பட்டு வெட்டு சாப்பிடும் போது இந்த அத்தனை துன்பங்களும் பஞ்சாகிப் போய்விடுவதுதான் உண்மை. இந்தப் பழத்தை வெட்டி உள்ளே இருக்கும் பழத்தை எடுப்பது கூட ஒரு தனிக்கலை; எல்லோராலும் அதனைத் திறமையாகச் செய்ய முடியாது. இன்றளவும் நான் அதில் முழுமையாக திறமை அடையவில்லை என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.


டுரியான் பழங்களைத் தனியாக சாப்பிடுவது போல சமைத்தும் கூட உண்ணலாம். இதற்கான பல சமையல் குறிப்புக்கள் இருக்கின்றன. ஆனாலும் எனக்கு எப்போதும் இந்த பழத்தை சமைக்காமல் உண்பதற்குத்தான் பிடிக்கும். ஒரு பழத்தைச் சாப்பிட்டாலே போதும். மதிய உணவே தேவையில்லை. அவ்வளவு பெரிதாக இந்தப் பழங்கள் இருக்கும். இந்த டுரியான் பழங்களைப் பற்றிய பல தகவல்கள் அடங்கிய வலைப்பக்கங்க்ளை உங்களுக்காக இங்கு பட்டியலாக்கியிருக்கின்றேன்.
http://www.ecst.csuchico.edu/~durian/book.htm (Book Gallery)
http://www.ecst.csuchico.edu/~durian/rec/recipe.htm (Recipe)
http://www.durian.net/ (Info center)
http://agrolink.moa.my/comoditi/durian/durian.html(General info)

அடுத்த முறை மலேசியா சென்றால் அதிலும் குறிப்பாக ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் சென்றால் கட்டாயமாக டுரியான் பழத்தை சாப்பிட்டுப் பாருங்களேன். இறைவனின் படைப்பில் இந்தப் பழமும் ஒரு உன்னதமான வித்தியாசமான ஒரு படைப்பு தான்!..:-)

Thursday, November 27, 2003

பினாங்கு தமிழ் சினிமா திரையரங்குகள்

பினாங்கில் உள்ள சுற்றுலா தளங்களைப் பற்றி எனது முந்தைய குறிப்புக்களில் கொஞ்சம் சொல்லியிருந்தேன். கலாச்சார மையங்களாக இருந்தாலும் சரி, ஓய்வாக பொழுதைக் கழிப்பதாக இருந்தாலும் சரி, பினாங்கு மிகச் சிறந்த ஒரு ஊர் என்றே சொல்ல வேண்டும். பினாங்கில் ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் இருப்பது போல அடிக்கடி தமிழ் படங்களை திரையிடும் 2 திரையரங்குகள் இருந்தன. ஒன்றின் பெயர் Rex; மற்றொன்று Paramound. இந்த இரண்டு திரையரங்குகளிலும் குடும்பத்தோடு சென்று சில படங்களைப் பார்த்த ஞாபகம் எனக்கு இருக்கின்றது. (ஆட்டுக்கார அலமேலு என்ற சிவகுமார்-ஸ்ரீபிரியா நடித்த ஒரு படம் தான் அப்போது கடைசியாக நான் பார்த்த படம்)

அதற்குப் பிறகு இடையில் சில ஆண்டுகள் தமிழ் படங்களே திரையிடப்படாமல் இருந்தன. ரஜினியின் பாண்டியன், அண்ணாமலை போன்ற படங்கள் வர ஆரம்பித்தவுடன் பினாங்கிலும் சில திரையரங்குகள் தமிழ் படங்களைத் திரையிடுவதில் மீண்டும் ஆர்வம் காட்ட ஆரம்பித்தன. ரஜினியின் படத்தைப்பார்ப்பதற்காகத் திரையரங்கில் கூடிய மக்கள் கூட்டத்தையும் அதிலுள்ள ஆர்வத்தையும் பார்த்த சீன திரையரங்கு உரிமையாளர்கள், தமிழ் படங்களில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தனர். அந்த வகையில் ஓடியன் திரயரங்கு இதில்முன்னோடி. படிப்படியாக இப்போது பினாங்கு முழுவதும் இருக்கின்ற மொத்த திரயரங்குகளில் ஏறக்குறைய நான்கில் தமிழ் படங்கள் காட்டப்படுகின்றன.

பொதுவாகவே மலேசியாவில் இருக்கும் மலாய் இனத்தவர்களுக்கு ஹிந்திப் படங்கள் என்றால் கொள்ளைப் பைத்தியம். இளம் வயதுப் மலாய் பெண்களில் பலர் ஷாருக்கான் மற்றும் கமலஹாசன் பைத்தியங்களாகவே இருக்கின்றனர் இப்போது. மலாய் ஆண்களோ ஐஸ்வர்யாராயின் மேல் தீரா காதல் கொண்டிருக்கின்றனர். ஆக இந்தியக் கலாச்சாரம் என்பது அன்னியமான ஒன்றல்ல மலாய்க்காரர்களுக்கு. அதனால் மலாய் இனத்தவர்களும் கூட விரும்பிப் பார்க்கும் படங்களாக தமிழ் படங்கள் ஆகிவிட்டன.

Monday, November 24, 2003

என் இசை ஆசிரியர் - 2

சங்கீத வகுப்பு ஆரம்பித்த சில மாதங்களிலேயே ஆசிரியர் எங்களை ஹார்மோனியப் பெட்டி வாங்கிக் கொள்ளுமாறு சொல்லிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் தான் இந்தியாவிலிருந்து பினாங்கிற்கு இந்திய ஆடைகள் மற்றும் பல வழிபாட்டு பொருட்களையும் வரவழைக்கும் வியாபாரி ஒருவர் எங்கள் அம்மாவிற்கு தஞ்சாவூரிலிருந்து பொருட்கள் கொண்டு வந்திருந்தார். (எங்கள் அம்மா தஞ்சாவூரிலிருந்து வந்தவர். அவரது தம்பிகள் இருவர் இன்னமும் அங்கு தான் இருக்கின்றனர். ) இவர் வந்திருந்த சமயத்தில் எங்களுக்கு இசைவகுப்பு நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் எங்களுக்கு அடுத்த முறை வரும் போது ஒரு ஹார்மோனியப் பெட்டியைப் கொண்டுவரும்படி அவரிடம் கூறிவைத்தார்.

சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வந்த அந்த வியாபாரி எங்களுக்கு ஒரு ஹார்மோனியப் பெட்டியைக் கொண்டுவர மறக்கவில்லை. அதைப் பார்த்த எங்களுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. ஆனால் அது ஒரு புதிய ஹார்மோனியப் பெட்டி அல்ல. யாரோ பயன்படுத்திய பழைய ஹார்மோனியப் பெட்டிதான் என்பதை சில நிமிடங்களில் கண்டுபிடித்து விட்டோ ம். அதை தெரிந்து கொண்ட அந்த ஆசாமி, அந்த ஹார்மோனியப் பெட்டியின் வரலாற்றைப் பற்றிக் கூற ஆரம்பித்தார்.


இந்த ஹார்மோனியப் பெட்டியை இளையராஜா வைத்திருந்தாராம். ஆரம்ப காலத்தில் படங்களுக்காக முயற்சி செய்துகொண்டிருந்த போது மற்றும் கலை நிகழ்ச்சிகள் செய்யும் போதெல்லாம் இந்த ஹார்மோனியப் பெட்டியைத்தான் பயன்படுத்துவாராம். பிறகு கொஞ்ச நாள் இதனை மலேசிய வாசுதேவனிடம் கொடுத்திருந்தாராம். அவர் வேறு மற்றொரு ஹார்மோனியப் பெட்டியை வாங்கியவுடன் இந்த ஆசாமியிடம் கொடுத்து எடுத்துக் கொள்ளச் சொன்னாராம். அந்த ஹார்மோனியப் பெட்டியை எங்களுக்குக் கொடுப்பதாக முகம் முழுக்க புன்னகை வழிய எங்களுக்கு கதை (விட்டார்) சொன்னார். அப்போது ஆச்சரியம் தாங்கமுடியாமல் இந்தக் கதையைக் கேட்டு மகிழ்ந்திருக்கின்றோம். இப்போது நினைத்தால் சிரிப்பாகத்தான் இருக்கின்றது.

Thursday, November 20, 2003

என் இசை ஆசிரியர் - 1

என் அம்மா தமிழகத்திலிருந்து வந்தவர். கர்நாடக இசையையயும் ஓரளவுக்குக் கற்றவர்; அதனால் எனக்கும் ஒரு வயதே மூத்தவளான என் அக்காவிற்கும் சங்கீத ஞானம் கொஞ்சமாவது வர வேண்டுமே என்ற ஆதங்கத்தில் எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சில கீர்த்தனைகளைக் கற்றுக் கொடுப்பார். அதோடு தமிழில் அமைந்த தேவாரப் பாடல்களையும் ஆலயங்களுக்குச் செல்லும் போதெல்லாம் பாடுவதும் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கமானது. கர்நாடக இசையை முறையாகப் படிக்க வேண்டும் என்பது அவருக்கு ஆசை. ஆக எங்களுக்காக ஆசிரியரைத் தேட ஆரம்பித்தார். தமிழகத்தில் இருப்பது போல மிகச் சுலபமாக இசை ஆசிரியரை மலேசியாவில் கண்டு பிடிக்க முடியாது. முறையான இசை ஆசிரியர்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் கிடைப்பார்கள்.

என் அம்மாவின் தேடுதல் வீண் போகவில்லை. பேராக் மாநிலத்தில் பல இடங்களில் இசை வகுப்புக்களை நடத்தி வந்த திரு சிவ சுப்ரமணியத்தைப் பற்றி நண்பர்கள் வழியாக கேள்விப்பட்டு அவரை பினாங்கு மாநிலத்திற்கும் வரவழைக்க வேண்டும் என முடிவெடுத்தார். திரு சிவசுப்ரமணியம் அவர்கள் தமிழகத்தில் மிகப் பிரபலமான நாகசாமி பாகவதரின் இளைய சகோதரர். இவர் மலேசியாவிலேயே பல ஆண்டுகளாக தங்கி விட்டவர். இங்கேயே திருமணமாகி குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் வந்து விட்டனர்.


என் அம்மா தீவிர முயற்சி செய்து அவரை பினாங்கு மாநிலத்திலும் இசை வகுப்புகளை ஆரம்பிக்க வைத்து விட்டார். ஒவ்வொரு வாரமும் எங்கள் இல்லத்திலேயே செவ்வாய் கிழமைகளில் இசை வகுப்பு நடைபெறும். எங்கள் இருவரோடு மேலும் பலர் இந்த வகுப்புக்களில் கலந்து பயிற்சி எடுத்து வந்தனர். அதில் ஒரு கிறிஸ்தவ பாதிரியாரும் அடங்குவார். முதலில் அவ்வளவாக ஈட்டுபாடு வரவில்லையென்றாலும் போகப் போக கர்நாடக இசை எனது வாழ்க்கையில் மிக முக்கிய அங்கத்தை வகிக்கும் அளவுக்கு எனக்கு நெருங்கியது. ஆசிரியர் சிவசுப்ரமணியம் அவர்களோடு எப்போதும் அவரது மனைவியும் கூடவே வருவார்கள். இவர் பாடம் நடத்தும் நேரத்தில் கையில் துணியை வைத்து தைத்துக் கொண்டோ பின்னல் செய்து கொண்டோ இருப்பார். இவரோடு சேர்ந்து பாடுவது இல்லை (சிந்து பைரவியில் வரும் பைரவி போல்..:-) ).

மலேசியாவில் இருந்த வரையில் இவரிடம் பல ஆண்டுகளாக இசை பயின்றிருக்கின்றேன். ஆசிரியருக்குப் பிடித்த மாணவர்களில் நானும் ஒருத்தியாக இருந்தது எனக்கு கொஞ்சம் பெருமையாகவும் இருக்கும். அவரோடு சேர்ந்து 'சபாபதிக்கு வேறு தெய்வம்' என்ற கீர்த்தனையை ஒரு முறை மேடையில் கச்சேரியில் பாடியது எனக்கு மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்று. இவர் மூலமாக எங்களுக்குக் கிடைத்த ஹார்மோனியப் பெட்டியைப் பற்றிய ஒரு கதை உண்டு. அதனை வேறொரு முறை சொல்கிறேன்.

Saturday, November 15, 2003

நவராத்திரி - சீனர்களுக்கும்..??


இந்துக்கள் அனைவருக்கும் தெரிந்த சமையத் திருவிழா நவராத்திரி. இதனை சீனர்களும் வேறு வகையில் கொண்டாடுகின்றார்கள் என்பது தெரியுமா.?


மலேசியாவில் குறிப்பாக நவராத்திரி வருகின்ற செப்டம்பர் அக்டோ பர் மாதங்களில் சீனர்களும் தொடர்ச்சியாக 9 நாட்கள் தங்களின் தெய்வத்திற்காக சிறப்பான வழிபாடுகளில் ஈடுபடுவர். சில வேளைகளில் இந்தத் திருநாள் நமது நவராத்திரி நாளோடு சேர்ந்தே வரும். முக்கிய வழிபாட்டு தெய்வமாக ஒரு பெண் தெய்வமே வடிக்கப்பட்டிருக்கும். சீனர்களின் ஆலயங்களில் பெரிய 2 மீட்டர் நீளம் கொண்ட ஊதுபத்திகள் நாள் முழுக்க எரிந்து கொண்டே இருக்கும். அந்த 9 நாட்களும் சீனர்கள் சுத்த சைவ உணவு பழக்கத்தையே கடைபிடிப்பார்கள்.



தெருக்களில் சீனர்களின் விதம் விதமான சைவ உணவு வகைகள் விற்கப்படும். இந்த சமயத்தில் பினாங்கில் சாலை மூலைகளிலெல்லாம் தற்காலிக உணவுக் கடைகள் புதிதாக முளைத்திருக்கும். நமக்கும் இந்த நாள் திருநாள் தான். நமது நவராத்திரி வழிபாட்டிற்கும் இந்த பூஜைக்கும் நிச்சயம் தொடர்பிருக்கின்றது. ஆனால் அதன் தொடர்பு இப்போது ஞாபகத்திற்கு வரவில்லை.

பொதுவாகவே மலேசியாவில் உள்ள சீனர்கள் அதிலும் குறிப்பாக புத்த மதத்தைச் சார்ந்தவர்கள் இந்துக்களின் கோவிலுக்கு வருவது சர்வ சாதாரணமான ஒரு விஷயம். வெள்ளிக்கிழமைகளில் ஆலயங்களில் பார்த்தால் ஒரு சீனராவது பக்தர்கள் கூட்டத்தில் நின்று கொண்டிருப்பார். தைப்பூசத்திருவிழாவில் சொல்லவே வேண்டியதில்லை. பால்காவடி, நீண்ட அலகுக் காவடி போன்றவற்றை இந்துக்களைப் போலவே விரதமிருந்து எடுப்பார்கள்.

Wednesday, November 12, 2003

My friend - Seok Hwa

பல நாட்களுக்குப் பிறகு எனது மலேசியத் தோழி சியோக் ஹூவா மின்னஞ்சல் அனுப்பியிருந்தாள். எனது மலேசிய நண்பர்களில் பலர் சீனர்கள் தான். மலேசியாவில் சீன மலாய் இனத்தவருடன் பழக வேண்டிய சூழல் ஆரம்பப் பள்ளியிலேயே தொடங்கி விடுவதால் எந்த பாகுபாடும் இல்லாமல் நல்ல நட்போடு பழகும் வாய்ப்பு அமைந்து விடுகின்றது. சியோக் ஹூவா ஒரு சீனப் பெண். என்னோடு பல்கலைக்கழகத்திலிருந்து ஒன்றாகப் படித்தவள். சீனர்களில் ஹொக்கியான் எனச் சொல்லப்படும் மொழியைப் பேசுபவள். பல ஆண்டுகளாக எங்கள் நட்பு விடாமல் தொடர்ந்து வருவது ஒரு வகையில் வரப்பிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும். இயற்கையிலேயே சாந்த குணம் படைத்தவள் சியோக் ஹூவா. எங்கள் நண்பர்கள் கூட்டத்திலேயே மிக மிக அமைதியானவள். சத்தமாகக் கூட பேச மாட்டாள். பெரிய குடும்பத்தில் கடைசிப் பெண்ணாகப் பிறந்தவள்.

முன்பெல்லாம் வாரம் ஒரு முறையாவது எங்கள் நண்பர்கள் எல்லோரும் சந்தித்துக் கொள்வோம். பொதுவாக எங்கள்பேச்சு பொருளாதாரம் மற்றும் கணினித் துறை சார்ந்ததாகவே இருக்கும். சீனர்கள் கடமையில் கண்ணானவர்கள் என்பது ஒவ்வொரு மலேசியத் தமிழருக்கும் தெரிந்த ஒரு மறுக்க முடியாத உண்மை. அதை மெய்ப்பிக்கும் வகையில் எங்களது பேச்சும் அமைந்து விடும். இந்த நண்பர்கள் குழுவில் இவள் கொஞ்சம் வித்தியாசமானவள். இவளுக்கு உலகியல் விஷயங்களுக்கும் மேலாக சமுதாய சிந்தனை, இறை வழிபாடு என்பதெல்லாம் கொஞ்சம் முக்கியம்.

சியோக் ஹூவா புத்த மதத்தைச் சேர்ந்தவள். ஒரு முறை விசாக தினத்தன்று என்னையும் அவள் குடும்பத்தாரோடு பினாங்கில் மிக முக்கிய புத்த விகாரமான Sleeping Buddha ஆலயத்திற்கு என்னை அழைத்துச் சென்றாள். புத்த மதத்தினருக்கு இது மிக முக்கிய சமயத் திருவிழா என்பதால் சாலைகளை எல்லாம் ஸ்தம்பிக்கச் செய்யும் வகையில் கூட்டம் அமைந்திருக்கும். பூஜைக்கு வருபவர்களுக்கெல்லாம் புத்தபிக்கு சுவாமி மந்திரம் ஜெபித்த அருள் நூலை கையில் கட்டிவிடுவார். அந்த கூட்டத்தில் மாட்டிக் கொண்டு கஷ்டப்பட்டாலும் இறுதியில் புத்தபிக்குவிடமிருந்து நூலை, வாங்கி கையில் எனக்கு கட்டி விட்ட பிறகு தான் அவளுக்கு நிம்மதியே தோன்றியது. நண்பர்களின் அன்பான வார்த்தைகள் மனதிற்கு இன்பமளிக்கக் கூடியவை அல்லவா? விடுமுறைக்கு மலேசியா திரும்பும் போது நிச்சயம் அவளைச் சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தை இப்போதே உறுதி செய்து கொண்டு விட்டேன்.

Tuesday, November 11, 2003

Penang - Little India (3)

பினாங்கின் பல மூலைகளில் தமிழர்கள் வர்த்தகத்தில் ஈட்டுபட்டிருந்தாலும் Little India என்று சொல்லப்படும் பகுதியில்தான் ஏராளமான இந்தியர்களுக்கானப் பொருட்கள் விற்கப்படும் கடைகளைக் காண முடியும். தீபாவளி, தைப்பூசம் மற்றும் பிற விழாக்காலங்களில் இந்தப் பகுதியில் நடப்பதற்கே இடம் இல்லாத வகையில் கூட்டத்தைக் காண முடியும். மலேசியாவிலேயே மிகப் பிரபலமான வர்த்தகப் பகுதிகளில் ஒன்றாக இது கருதப்படும் அளவுக்கு இங்கு கிடைக்கும் பொருட்கள் தரத்திலும் விதத்திலும் சிறந்து விளங்குவதைக் காண முடியும்.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சேலைகளையும் துணி வகைகளையும் விற்பனை செய்யும் சேலைக் கடைகள் இங்கு மிகப் பிரபலம். ஹனீபா, அனிதா, V.K.N., உமையாள், குமரன்'ஸ் என பல கடைகள் இங்கே. சென்னையின் பாண்டி பஜார், ரங்கநாதன் தெருக்களில் கிடைக்கக் கூடிய எல்லா துணிகளும் இங்கேயும் கிடைக்கின்றன.
மற்றும் புதிய தமிழ், ஹிந்தி பாடல் ஒலிப்பேழைகள், படங்கள், பாத்திரங்கள், அலங்காரப் பொருட்கள் என பல தினுசுகளில் இங்கே பொருட்களைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த சாலைகளில் நடக்கும் போதே தமிழ் பாடல்கள் பல திசைகளிலும் ஒலிப்பதைக் கேட்க முடியும். இது முற்றிலும் தமிழர்களின் தெருவாகவே மாறிவிட்டிருக்கின்றது.
இந்திய உணவுகளுக்கும் இங்கு பஞ்சமில்லை. இப்பகுதியிலுள்ள எல்லா தெருக்களிலும் இந்திய பலகாரங்கள் விற்கப்படும் கடைகள் உள்ளன. சுடச் சுட தோசை, பரோட்டா, சாதம் எல்லாம் கிடைக்கக் கூடிய இடம் இது.

தமிழர்கள் நகைப் பிரியர்கள் என்பதால் இங்கு தங்க வைர நகைகள் விற்கப்படும் கடைகளுக்கும் பஞ்சமில்லை. மக்கள் கூட்டம் விழாக்காலங்களில் ஈக்கள் மொய்ப்பது போல இங்கு கூடியிருப்பது தவிர்க்க முடியாத ஒரு காட்சி.

இந்தப்பகுதிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இந்தப் பகுதியின் ஆரம்பத்திலேயே மகாமாரியம்மன் ஆலயம் ஒன்றும் இருக்கின்றது. மிகப்பழமையான இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு அழகாக பாதுகாக்கப்படுகின்றது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் நடைபெறும் ராகு கால துர்க்கை அம்மன் பூஜை மிகச் சிறப்பானது. தமிழகத்தில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தக் கூடிய வகையில் பினாங்கின் மையப்பகுதியில் அமைந்துள்ள பகுதி இது. தொடரும்...

Thursday, November 6, 2003

மலாய் உடைகள்

மலேசியர்கள் பல வித வர்ணங்களில் ஆடைகளை உடுத்திக் கொள்ள விரும்புவர். மலாய்க்காரர்களில் ஆண்களும் சரி பெண்களும் சரி விதம் விதமான வர்ணங்களில் ஆடைகளை உடுத்திக் கொள்வர். பெண்களைப் பொறுத்தவரையில் மலேசியாவின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் என்று சிறப்பான ஆடைகள் உண்டு. ஆனால் ஆண்களுக்கு ஒரே விதம் தான்.



ஆண்கள் அணியும் ஆடையை Baju Melayu (உச்சரிக்கும் போது பாஜு மெலாயூ என்று சொல்ல வேண்டும்) என்பர். பெண்களின் உடைகளுக்குப் பல பெயர்கள் உண்டு, அதன் விதத்தைப் பொறுத்து. பொதுவாகவே சிறப்பு நாட்களில் விலையுயர்ந்த பட்டுத் துணியால் செய்யப்பட்ட ஆடைகளையே மலாய்க்காரர்கள் அணிவார்கள். விழாக்காலங்களிலும், சிறப்பு விருந்துகளுக்கும், திருமண வைபவங்களுக்கும் பட்டாடைகளில் வருவதை கடைபிடிப்பார்கள்.


இந்த வகை உடை பாஜு கெடா என அழைக்கப்படும். மிக எளிமையான முறையில் தைக்கப்பட்ட ஆடை இது. கெடா என்பது ஒரு மாநிலத்தின் பெயர். இந்த மாநிலத்தில் நெல் வயல் அதிகம். வயலில் வேலை செய்யும் பெண்கள் அணிவதற்கு ஏதுவாக அமைந்த ஆடை இது. ஆனால் நாளடைவில் எல்லா பெண்களும் (நானும் தான்) அணியும் நவநாகரிக ஆடையாக இது மாறிவிட்டிருக்கின்றது.


இந்த வகை ஆடை தான் பெரும்பாலான மலேசியப் பெண்கள் விரும்பி அணியும் ஆடை. இதை பாஜு கெபாயா என்று சொல்வோம். Batik வகை துணியால் அமைக்கப்படும் இவ்வகை ஆடைகள் மலேசியாவில் மிகப் பிரபலம். Malaysian Airlines பணியாளர்கள் அணிந்திருக்கும் ஆடையும் இந்த வகைதான்.




பாஜு கூரோங் என்று அழைக்கப்படும் இந்த வகை ஆடைதான் பல மலாய் பெண்களால் அணியப்படும் ஆடை. மலேசியாவின் எல்லா மூலைகளிலும் இந்த வகை ஆடைகள் கிடைக்கும். மிகச் சாதாரணமாக மலேசிய ரிங்கிட் 40 லிருந்து இந்த வகை ஆடைகளை வாங்க முடியும். அலுவலகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் செல்லும் பெண்கள் பரவலாக அணியும் ஆடை இதுதான்.

உங்களுக்கும் இந்த ஆடைகளை அணிந்து கொள்ள ஆசையாக இருக்கின்றதா? இன்றே கிளம்புங்கள், மலேசியாவுக்கு!

Wednesday, November 5, 2003

மலேசிய ரப்பர் தோட்டங்கள்

19ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து மலேசியாவின் ரப்பர் தோட்டங்களில் உழைப்பதற்காகச் சென்ற இந்தியத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகம். இக்கால கட்டத்தில் மலேசியாவில் பெருமளவில் குடியேறிய தமிழர்கள் தோட்டங்களில் வேலை செய்வதற்காகவே அழைத்து வரப்பட்டவர்கள் என்பதை மறுக்க முடியாது. உலகின் மிகப் பெரிய ரப்பர் உற்பத்தி நாடாக மலேசியா தற்பொழுது விளங்குகின்றது. இந்த வெற்றிக்கும் சிறப்பிற்கும் உழைத்தவர்கள், உழைத்துக் கொண்டிருப்பவர்கள் இந்நாட்டில் வாழும் தமிழர்கள் தான்.


தொழிற்புரட்சிக்காலம் அது. 1876-ல் சர் ஹென்றி விக்ஹம் India office-ன் கட்டளைப்படி பிரேஸில் நாட்டிலிருந்து 70,000 ரப்பர் விதைகளைச் சேகரித்து இங்கிலாந்திற்குக் கொண்டு வந்தார். பின்னர் இந்த ரப்பர் விதைகளை லண்டனிலுள்ள Kew Garden-ல் பயிரிட்டு அவை வளர்க்கப்பட்டன. இதில் உயிர் பிழைத்த ரப்பர் மரக்கன்றுகள் 1877-ல் இலங்கைக்கும் பின்னர் மலேசியாவிற்கும் எடுத்துச் செல்லப்பட்டு பயிரிடப்பட்டன.


மலேசியாவின் சீதோஷ்னத்திற்கு ரப்பர் கன்றுகள் நன்றாக வளர்வதைக் கண்ட பிரித்தானியர்கள், பல காடுகளை அழித்து ரப்பர் பயிரிட ஆரம்பித்தனர். 19ம் நூற்றாண்டின் இறுதியிலேயே மேற்கு மலேசியாவில் ஏறக்குறைய 2500 ஹெக்டர் நிலப்பரப்பில் ரப்பர் பயிரிடப்பட்டிருந்தது. ரப்பரின் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கவே காடுகளை அழித்து அங்கு தோட்டங்களை உருவாக்க தென்னிந்தியாவிலிருந்து அதிலும் குறிப்பாக தமிழர்களை இறக்குமதி செய்தனர்.

ரப்பர் காடுகளில் வாழும் மலேசியத் தமிழர்களின் வாழ்க்கை பற்பல சிரமங்களை உள்ளடக்கியதே. குறைந்த ஊதியம்; பற்பல சமூகப் பிரச்சனைகள்; தரமற்ற கல்வி போன்ற பற்பல சிரங்களுக்கு தோட்டப்புற தமிழர்கள் ஆளாகியிருக்கின்றனர். சுதந்திரத்திற்குப் பின்னர் படிப்படியாக இப்போது பரவலாக நல்ல வளர்ச்சியைக் காணமுடிந்தாலும் முற்றாக இவர்களின் கஷ்டங்கள் தீர்ந்து விட்டன என்று சொல்வதற்கில்லை.



மலேசியத் தமிழர்களின் அதிலும் குறிப்பாகத் தோட்டத் தொழிளாலர்களின் வாழ்க்கை முறையைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் மலேசிய இலக்கியங்களை அதிலும் குறிப்பாக சிறுகதைகளைதான் அலசவேண்டும். மலேசிய தமிழ் எழுத்தாளர்களின் பட்டியல் ஒன்றுனை தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் நீங்கள் காணலாம். முகவரி http://www.tamil-heritage.org/photoarc/malaysia/msiawri.html

Tuesday, November 4, 2003

அப்பாவின் தோட்டம்

மலேசியா இயற்கை வளம் நிறைந்த ஒரு நாடு என்று எனது முந்தைய குறிப்பில் சொல்லியிருக்கின்றேன் அல்லவா? மலேசியாவின் சீதோஷ்ன நிலை சாதகமாக இருப்பதால் இங்கு பல விதமான காய்கறித்தோட்டங்கள், பழத் தோட்டங்கள் ஆகியவை அதிகம். பொதுவாக இல்லங்களிலும் தோட்டங்கள் வைத்திருப்பதைக் காண முடியும்.

என் அப்பாவுக்கு தாவரங்களை வளர்ப்பதென்றால் கொள்ளைப் பிரியம். வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பியதும் தனது நேரத்தையெல்லாம் வீட்டுத் தோட்டத்தில் தான் செலவிடுவார். அவரது கைவண்ணத்தில் பல பழமரங்களும் செடிகளும் வீட்டைச் சுற்றி காய்த்துக் குலுங்கும் அழகைக் காணலாம். அவரிடமிருந்து தான் எனக்கும் தாவரங்கள் மீது ஆர்வம் வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவரைப் போலவே எனக்கும் இந்த ஆர்வம் இருந்ததால் பிற்காலத்தில் நானும் எனது நேரத்தைத் தோட்டத்தில் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். [இப்போது அதற்கு வாய்ப்பில்லை. இங்கு ஜெர்மனியில் apartment-ல் இருந்து கொண்டு எங்கே தோட்டத்தைப் பற்றி நினைப்பது..:) ]

எங்கெங்கிருந்தோ பூச்செடிகளையும் பழமரங்களையும் தேடிப் பிடித்துக் கொண்டுவருவார். நண்பர்கள் வீட்டிற்குச் செல்லும் போது அவர்கள் வீட்டில் தனக்குப் பிடித்த ஏதாவது ஒரு செடி வகையைப் பார்த்து விட்டால் அதை வாங்கிக் கொண்டுவராமல் விடமாட்டார். அவ்வளவு தீவிரமான ஆசை அவருக்குச் செடிகளின் மேல்.



எங்கள் தோட்டத்தில் எங்களது தூரத்து உறவினர் ஒருவரிடமிருந்து வாங்கி வந்திருந்த தாய்லாந்து வகை பப்பாளி மரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அதில் என்ன ஆச்சரியம் என்றால் இந்த பப்பாளிப் பழத்தில் உள்ளே விதை இருக்காது. நல்ல சுவையான பழ வகை அது. அந்த மரம் பெரிதாகி காய்க்க ஆரம்பித்தவுடன் தான் ஆரம்பித்தது தொல்லையே. ஏற்கனவே எங்கள் தோட்டத்தில் ஒன்றுக்கு மூன்று பப்பாளி மரங்கள். அதில் இதுவும் சேர்ந்து கொண்டது. இப்போது நான்கு மரங்களும் காய்க்க ஆரம்பித்தால் அதை என்ன செய்வது? காய்க்கின்ற பழத்தை எல்லாம் சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்துவார் என் அப்பா. பழத்தை நன்றாக தோல் நீக்கி சுத்தம் செய்து நீளமான துண்டுகளாக வெட்டி எங்களுக்கு தட்டுக்களில் வைத்து பரிமாறி அதை நாங்கள் கோபத்தோடு சாப்பிட முடியாமல் சாப்பிடுவதை பார்க்க அவருக்கு அப்படி ஒரு ஆசை.

என் அப்பாவின் தொல்லை நாலுக்கு நாள் அதிகமாகும் வகையில் ஒவ்வொரு நாளும் பழங்கள் அதிகமாகக் காய்த்துக் கொண்டே தான் இருந்தன. சலிக்கச் சலிக்க பப்பாளிப் பழங்களை அப்போது சாப்பிட்டிருக்கின்றேன்.

இங்கு ஜெமனி வந்த பிறகு பப்பாளிப் பழத்தை வாங்குவதென்பது குதிரைக் கொம்பாக இருக்கின்றது. இது exotic fruits வகையைச் சார்ந்தது என்பதால் ஏகப்பட்ட கிராக்கி இந்தப்பழத்துக்கு. நண்பர் ஒருவர் வீட்டில் சென்ற சனிக்கிழமை இரவு உணவிற்குச் சென்றிருந்தேன். குட்டியான ஒரு பப்பாளிப்பழத்தைக் குட்டி குட்டி துண்டுகளாக வெட்டி வைத்திருந்தார்கள். என்ன செய்வது விலையான பழமாயிற்றே. பப்பாளிப் பழங்களை பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொண்டு எங்களை ஓட ஓட விரட்டும் அப்பாவின் ஞாபகம் அப்போது வராமல் இருக்குமா? ஏக்கம் தரும் நினைவுகள் அவை!

Monday, November 3, 2003

Penang - 2



பினாங்கில் உள்ள Botanical Garden பற்றி சில குறிப்பூக்களை முந்தைய குறிப்பில் கொடுத்திருந்தேன் அல்லவா. இன்று மேலும் சில அழகிய இடங்களைப் பற்றி உங்களுக்குச் சொல்லலாம் என நினைக்கிறேன்.


பினாங்கில் Air Itam (உச்சரிக்கும் போது ஆயர் ஈத்தாம் என்று சொல்ல வேண்டும்) என்ற ஒரு பகுதி இருக்கின்றது. வணிகர்கள் அதிகமாக இருக்கும் பகுதி என்று கூட இதனைச் சொல்லலாம். இந்தப் பகுதியில் வசிக்கும் மக்களில் பெரும்பாலோர் சீனர்கள். வாகனங்களில் இங்கு மதிய வேளைகளில் செல்வது என்பது ஒரு கஷ்டமான அனுபவம் என்று தான் சொல்ல வேண்டும். அவ்வளவு ஜன நெரிசல்; மற்றும் வாகன நெரிசல் உள்ள ஒரு பகுதி இது.


இதன் ஒரு பகுதியில் தான் Penang Hill என்று சொல்லப்படும் கொடிமலை இருக்கின்றது. இந்த மலை மிக மிக ரம்மியமான ஒரு பிரதேசம். மலையின் உச்சிக்குச் செல்வதற்கு cable train இருக்கின்றது. 2 ரயில்களில் ஏறித்தான் மலை உச்சிக்குச் செல்ல முடியும். மலையின் மேல் ரயில் பெட்டி ஏறும் போது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கும். இதே போன்ற இரயில் சுவிஸர்லாந்தில் Jungfrau மலைப் பகுதியிலும் இருக்கின்றது. வித்தியாசம் என்னவென்றால் இங்கே சுவிஸர்லாந்தில் மலை பனியால் முற்றாக மூடப்பட்டிருக்கும். ஆனால் பினாங்கில் அப்படியில்லை. குளிர்ச்சியாக இருந்தாலும் பச்சை பசேலென எங்கு பார்த்தாலும் பசுமையாக இருக்கும். இந்த மலையின் உயரம் 830 மீட்டர் நீளமாகும். மலை உச்சியில் மதிய நேரம் கூட மிகக் குளிர்ச்சியாகத்தான் இருக்கும். மலைக்கு மேல் அழகான பூங்காக்கள், உணவு விடுதிகள் விளையாட்டு மையங்கள் ஆகியவற்றோடு அழகான முருகன் கோவில் ஒன்றும் இருக்கின்றது. இலங்கையில் கண்டி எனும் ஊரில் இதே போன்ற ஒரு கோவிலை நான் பார்த்திருக்கின்றேன். அதை குறிஞ்சிக் குமரன் கோயில் என்று சொல்வார்கள். பினாங்கிலேயே இரண்டு மலைகளில் முருகன் ஆலயத்தைக் காணமுடியும். தண்ணிர்மலையில் ஒன்று மற்றொன்று இந்தக் கொடிமலையில் இருக்கும் கோவில்.


கொடி மலையின் அடிவாரத்திலேயே மிகப் பெரிய புத்தர் ஆலயம் ஒன்று இருக்கின்றது. Kek Lok Si ஆலயம் என்று இது அழைக்கப்படுகின்றது. இந்த புத்தர் ஆலயத்தில் பர்மா, தாய்லாந்து மற்றும் சீன வகை புத்த வழிபாட்டு வகையிலான பூஜைகள் தினமும் நடந்து கொண்டிருக்கும். தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புத்த பீடத்தை தினமும் பார்க்க முடியும். பல பூஜை மண்டபங்கள், தியான அறைகள் இங்கு உள்ளன. இந்த புத்த ஆலயத்தை அடைவதற்கு நீளமான செங்குத்தான படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். படிகளில் சிறிய சிறிய கடைகளில் நினைவுச் சின்னங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும். இவற்றை பார்த்துக் கொண்டே படியேறி விடலாம். நடந்த களைப்பே தெரியாது. இந்த ஆலயத்தில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் இங்கிருக்கும் ஆமை குளம் தான். நூற்றுக்கனக்கான ஆமைகளை இங்கு குளங்களில் வைத்து வளர்க்கிறார்கள். பெரிய பெரிய ஆமைகள் இங்கும் அங்குமாக நகர்ந்து கொண்டிருப்பதை பார்ப்பதற்கே அழகாக இருக்கும். தொடரும்..

Saturday, November 1, 2003

Dr.Mahathir


மலேசியாவின் நான்காவது பிரதமராக நேற்று வரை இருந்து இந்த நாட்டின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர் துன் மாஹாதீர். 22 ஆண்டுகள் மலேசியாவின் பிரதமராக இருந்திருக்கின்றார். பல ஆண்டுகள் பிரதமராக இருந்து விட்டதால் இளைய தலைமுறையினர் நாட்டை ஆள வேண்டுமென அறிவித்து விட்டு ஓராண்டுக்குப் பின்னர் நேற்று பதிவியிலிருந்து ஓய்வு பெற்றிருக்கின்றார்.

டாக்டர். மஹாதீர் மருத்துவராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர். மலேசிய அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு, மலேசியாவின் ஈடு இணையற்ற தலைவராக செயல்பட்டு வந்திருக்கின்றார். இவரது தலைமையின் கீழ் மலேசியா கண்ட வளர்ச்சி மிகப் பெரிது. மலேசிய நாட்டில் இருக்கும் ஒவ்வொரு தனி மனிதரும் (எதிர் கட்சியினரும் கூட) இவர்மேல் வைத்திருக்கும் அன்பு அதிசயமான ஒன்றுதான். மலேசியா மற்றும் ஆசிய நாடுகள் மட்டுமின்றி உலகளாவிய அளவில் தைரியமாக தனது எண்ணங்களைப் பேசக்கூடியவர் என்று பெயரெடுத்தவர்.


மலேசியாவை வளர்ச்சியடைந்து வரும் நாடு என்ற நிலையிலிருந்து வளர்ச்சியடைந்த ஒரு நாடாக மாற்றியதில் இவரது பங்கு அதிகம். புதுமை விரும்பியான இவரது திட்டங்கள் அனைத்துமே நாட்டின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தன. வெளிநாட்டு பத்திரிக்கைகள் அதிலும் குறிப்பாக அமெரிக்க பத்திரிக்கைகள் மலேசியாவை மட்டம் தட்டி பேசுவதைக் குறியாகக் கொண்டு பல முறை செயல்பட்டிருக்கின்றன. மஹாதீரின் வெளிப்படியான தைரியமான பேச்சுக்களை கிரஹிக்க முடியாத பல நாளிதள்கள் கூட இவரைத் தாக்கி எழுதுவதில் அதிலும் குறிப்பாக இவரை ஒரு கொடுங்கோலராக வர்ணிப்பதில் அதிகமாக செயல்பட்டிருக்கின்றன. ஆனால் மலேசியாவிற்கு வந்து பார்த்து மக்களின் சுபிட்சம் நிறைந்த வாழ்க்கையைப்பார்ப்பவர்களுக்குத்தான் திரித்து எழுதப்படும் இவ்வகைச் செய்திகளில் இருக்கும் பொய் தெரியவரும்.



SIGNING OFF: Dr Mahathir, surrounded by ministers, putting down his signature to the minutes of the Cabinet meeting which he chaired for the last time in Putrajaya Wednesday.


டாக்டர் மஹாதீரைப் பற்றி சொல்வதற்கு நிறையவே இருக்கின்றது. கிழக்காசிய நாடுகளின் மிகப்பிரபலமான அரசியல் தலைவர் இவர். இவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழ்க்கானும் வலைத்தளத்தைப் பாருங்கள். http://pmproject.doubleukay.com/biography.html இது வரை பதவியில் இருந்தது போதும்; அடுத்தவர் தலைமைப் பதவிக்கு வரவேண்டும் என்று எத்தனைத் தலைவர்களால் நினைக்க முடியும். இவர் ஒரு அபூர்வ மனிதர்தானே!

Friday, October 31, 2003

Penang - 1

பினாங்கு மாநிலம் அழகான குட்டியான ஒரு மாநிலம். இந்த மாநிலத்திற்கு இரண்டு பகுதிகள் உண்டு. ஒன்று பினாங்குத் தீவு, மற்றொன்று பட்டர்வொர்த் என்று அழைக்கப்படும் தீபகற்ப மலேசியாவின் ஒரு பகுதி. இந்த மாநிலத்தின் தலைநகரத்தின் பெயர் Georgetown. இந்த மாநிலத்தின் சிறப்பே இதன் சுற்றுலா தலங்கள் தான். இந்த மாநிலத்தில் தான் அனைத்துலகப் புகழ் பெற்ற பலகலைக்கழகங்களில் ஒன்றான Universiti Sains Malaysia அறிவியல் பல்கலைக் கழகம் இருக்கின்றது.

பினாங்கில் வார ஓய்வு நாட்களைக் கழிப்பதற்கு இனிமையான பல இடங்கள் இருக்கின்றன. முன்பெல்லாம் வார இறுதி நாட்களில் நான் எனது நண்பர்களோடு எப்போதும் வெளியே கிளம்பி விடுவதுண்டு. ஒவ்வொரு நாளும் இங்கே திருநாள் தான். மனதிற்குப் பிடித்த அத்தனை விஷயங்களும் இங்கே கிடைக்கும்.


பினாங்குத் தீவையும் பட்டர்வொர்த் பகுதியையும் இணைக்கும் பாலம் ஒன்று 1988ல் கட்டப்பட்டது. இதன் நீளம் 13.5 km. ஒவ்வொரு முறை இந்தப்பாலத்தைக் கடக்கும் போதும் காரிலிருந்து இறங்கி தீவின் அழகை ரசிப்பதற்கு எனக்குப் பிடிக்கும். அதிலும் காலை நேரத்தில் பாலத்தில் பிரயாணம் செய்யும் போது பாதி பனி மூடியும் மூடாமலும் இருக்கும் காட்சி கொள்ளை அழகு.


பினாங்கு தீவிற்கு வருவதற்கு Ferry கப்பல் எடுத்தும் பிரயாணம் செய்யலாம். 30 நிமிடம் நீடிக்கும் இந்தப் பிரயாணம் சுவாரசியமாக இருக்கும். கடலில் நீந்தும் Jelly மீன்களை கண்டு ரசித்துக் கொண்டு பயணிக்கலாம்.

மலேசியா பொதுவாக பச்சை பசேலென்று இருக்கும் ஒரு நாடு. இங்கு வருடம் முழுதுமே (ஏப்ரல் மே தவிர்த்து) மழை பெய்து கொண்டே இருக்கும். ஆக பினாங்கில் இயற்கை ஆழகு நிறைந்த பல பூங்காக்கள் இருக்கின்றன. அதில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று Botanical Garden. இந்தப் பகுதியை தண்னீர் மலை என்று சொல்வதும் உண்டு. இந்தப் பகுதியில் மலேசியாவில் மிகப் பிரசித்தி பெற்ற 3 ஹிந்துக் கோயில்கள் இருக்கின்றன. தண்ணீர்மலை முருகன் கோயில் (மலைக்கோயில்), நாட்டுக் கோட்டை செட்டியார் முருகன் கோயில், அதோடு புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் மீனாட்ஷி சுந்தரேஸ்வரர் கோயில் ஆகிய மூன்றும் மலேசியாவின் மிகப் பிரசித்தி பெற்றவை. மலேசியாவைச் சுற்றிப் பார்க்க நினைத்தால் தைப்பூசம் நடக்கும் நாளை நாட்குறிப்பில் பார்த்து விட்டு வர மறக்க வேண்டும். (மலேசியாவின் சிறப்புக்களில் தைப்புசத் திருவிழாவும் ஒன்று) சரி Botanical Garden-க்கு வருவோம்.


இந்த Botanical Gardenக்கு வந்தவுடனே நம்மை வரவேற்க குரங்குகள் ஓடிவரும். அவ்வளவு குரங்குகள் இங்கே உண்டு. இங்கே செல்லும் போதெல்லாம் பழங்களும் கடலைகளும் வாங்கிக் கொண்டுதான் செல்வேன். நடக்கும் போது கைகளில் வந்து பிடிங்கிச் செல்லும் அளவிற்கு இந்தக் குரங்குகளுக்கு அவ்வளவு தைரியம் உண்டு. Botanical Garden வாசலிலேயே இளநீர் கடைகள் மற்றும் குளிர்பான சிற்றுண்டி கடைகளும் இருக்கும். Botanical Garden உள்ளே சென்றால் அருவி ஒன்று இருக்கும். இங்கே குளித்து மகிழலாம். மலை உச்சியிலிருந்து கொட்டும் அருவி சில்லென்ற அருவியாகியிருக்கின்றது.


மலேசியாவிற்கு வரவேண்டுமென்று இப்பவே ஆசை வந்துவிட்டதல்லவா..:-)

Thursday, October 30, 2003

People's Hero

இன்னைக்கு ஒரு கதை சொல்லலாம்னு நினைக்கிறேன்...

வீரபாண்டிய கட்டபொம்மனை எப்படி தமிழ் நாட்டிலே எல்லோரும் மகாவீரராக நினைக்கின்றனரோ அதேமாதிரி எங்க மலேசியாவிற்கும் ஒரு சில மகா வீரர்கள் இருக்கின்றனர். அவர்களில் மலாக்கா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற ஒரவர் இருந்தார். அவர் பெயர் ஹங் துவா. இவர் வாழ்ந்த காலம் 16ம் நூற்றாண்டின் ஆரம்ப காலம். அப்போது மலேசியா இஸ்லாமிய நாடாக மாறியிருந்தது. 15ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே மலாக்காவை ஆண்ட அரசன் பரமேஸ்வரன் இஸ்லாமிய பெண்ணை மணந்து தானும் மதம் மாறி மலேசிய நாட்டையே இஸ்லாமிய நாடாகவும் மாற்றி விட்டிருந்தான். அவனது பரம்பரையில் வந்த ஒரு ராஜாவின் அரண்மனையில் மிக முக்கிய பொருப்பில் இருந்தான் வீரன் ஹங் துவா.

இவனுக்கு 4 நண்பர்கள்; ஹங் ஜெபாட், ஹங் கஸ்தூரி, ஹங் லெக்கியூ, ஹங் லெக்கீர். இதில் ஹங் ஜெபாட் இவனது மிக மிக நெருங்கிய நண்பன். இருவரும் நகமும் சதையும் போல அவ்வளவு நெருக்கம். ஹங் துவா கத்திச் சண்டையில் வல்லவன்.

இந்த வகைக் கத்தியை 'கெரிஸ்' என்று சொல்வார்கள். இந்த கெரிஸ் சண்டையில் ஹங் துவா வல்லவன். இவனது வீரத்தை நாடே புகழ்ந்தது.

ஒரு முறை மன்னருக்கு சில அமைச்சர்கள் ஹங் துவாவைப்பற்றிய தவறான தகவல்களைத் தரவே, அரசன் ஹங் துவாவை தேடிக் கண்டுபிடித்து கொல்லுமாறு உத்தரவு பிறப்பித்து விட்டார். இதைக் கேட்ட ஹங் துவா தலைமறைவாகி விட்டான். அரச கட்டளையைக் கேட்ட நண்பர்கள் நால்வரும் மிகுந்த கோபம் அடைந்தனர். ஹங் துவா மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்த ஹங் ஜெபாட் இந்த கட்டளையைக் கேட்டு கொதித்து எழுந்தான். நாட்டிற்காக உயிரையே கொடுக்கவும் தயங்காத ஹங் துவாவின் மேல் ஏற்பட்ட பழிக்காக அரசரைக் கொல்ல முடிவெடுத்தான். அரசரின் அரண்மனைக்குச் சென்று அனைவரையும் பயமுறுத்தி விரட்டினான்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத அரசர் செய்வது அறியாது திகைத்தார். அமைச்சர்கள் உடனே, இந்த ஆபத்திலிருந்து அரசர் தப்பிக்க ஹங் துவா ஒருவனால் தான் முடியும் எனக் கூறவே அரசனும் ஹங் துவாவைத் தேட ஆட்களை அனுப்பினான். அரசர் ஆபத்தில் மாட்டிக் கொண்டதை அறிந்த ஹங் துவா உடனே நாட்டுப் பற்றின் காரணமாக அரசரைக் காப்பாற்ற விரைந்தான்.

அரசரை எதிர்ப்பவன் தனது உயிர் தோழன் ஹங் ஜெபாட் தான் என்பதை அறிந்ததும் திகைத்தான். நண்பனா அரசரா என்ற குழப்பத்தில் செய்வதறியாது திகைத்தான். இறுதியில் நாட்டின் நண்மைக்காக தனது நண்பனையே தனது கூரிய கெரிஸ் கத்தியால் குத்திக் கொன்று அரசரைக் காப்பாற்றினான். இந்த குழப்பம் மிகுந்த சண்டை 3 பகல் 3 இரவுகள் நடந்ததாம். பக்கத்தில் இருப்பதுதான் மலாக்காவில் இன்றளவும் இருக்கும் ஹங் ஜெபாட்டின் கல்லறை.
அரசர் இந்த நிகழ்வுக்குப் பின் ஹங் துவாவை (மன்னித்து??) ஏற்றுக் கொண்டார். ஆனால் இன்றளவும் இந்த நிகழ்வு ஒரு சர்ச்சையை கிளப்பிக் கொண்டுதான் இருக்கின்றது. என்னதான் இருந்தாலும் அரசர் செய்தது தவறு தானே! ஹங் ஜெபாட் தனது நண்பனுக்காகத் தானே போராடினான். ஆனால் ஹங் துவா செய்தது சரியா..? எனப் பல விவாதங்கள் இன்றளவும் மலேசியாவில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. [கற்பில் சிறந்தவள் கண்ணகியா மதாவியா என தமிழகத்தில் விவாதம் நடப்பது போல..:-) ]

Wednesday, October 29, 2003

Malaysian states & Flag



இப்போது பல தமிழ் சினிமா படங்களில் மலேசியாவின் பல அழகிய இடங்களைப் பாடல் காட்சிகளுக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அதிலும் முக்கியமாக, உலகின் மிக உயர்ந்த கட்டிடமான இரட்டைக் கோபுரங்களை இப்போது பல தமிழ் சினிமா பாடல் காட்சிகளில் காண முடிகின்றது. மலேசியாவிற்குச் செல்பவர்களும் எப்போதும் மலேசிய தலைநகரான குவாலாலும்பூர் (Kuala Lumpur) செல்வது தான் வழக்கம். அதற்கு அடுத்ததாக மலேசியாவில் பிரசித்தி பெற்ற மாநிலமாகத் திகழ்வது பினாங்கு மாநிலமாகும். நானும் பினாங்கில் தான் பிறந்தேன்..:-)

சிலர் தவறாக சிங்கப்பூரையும் மலேசியாவின் ஒரு பகுதியாக நினைத்துக் கொள்கின்றனர். இது முற்றிலும் தவறு; சிங்கப்பூர் ஒரு தனி நாடு. மலேசியா ஒரு தனி நாடு.

மலேசியாவில் மொத்தம் 13 மாநிலங்கள் இருக்கின்றன. அவை வடக்கிலிருந்து பெர்லீஸ், கெடா, பினாங்கு, பேராக், கிளந்தான், த்ரெங்கானு, பஹாங், ஜொகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூர், சபா, சரவாக் ஆகும். இந்த பதின்மூன்றோடு மேலும் ஒரு மாநிலமாகக் கூட்டரசு பிரதேசங்கள் குவாலாலும்பூர் மற்றும் லாபுவான் ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன.

மலேசியக் கொடியில் 14 (சிவப்பு + வெள்ளை) கோடுகள் இருக்கும். இவை பதினான்கு மாநிலங்களைக் குறிப்பவை.



நீல வர்ணம் பல இன மக்களும் ஒற்றுமையாக வாழ்வதைக் குறிக்கின்றது; பிறை நிலா, மலேசிய நாட்டின் மதம் இஸ்லாம் என்பதையும், மஞ்சள் வர்ணம் உயரிய தன்மையையும் குறிக்கின்றது. இந்த மஞ்சள் நிறம் மலேசியா அரசாட்சி செய்யப்படும் ஒரு நாடு என்பதைக் குறிப்பதாகவும் சில குறிப்புக்கள் கூறுகின்றன.

Monday, October 27, 2003

Population Statistics



2001ன் கணக்கின் படி மலேசிய நாட்டின் மக்கள் தொகை 23.27 மில்லியன் ஆகும். மலேசியாவின் 13 மாநிலங்களில் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநிலம் சிலாங்கூர். 18.0 சதவிகித மக்கள் இந்த மாநிலத்தில் தான் உள்ளனர். இதற்கு அடுத்ததாக அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் ஜொகூரும் சபா மாநிலமும் ஆகும்.


மலேசிய நாடு பல இனமக்கள் கூடி வாழும் ஒரு நாடு. பல தேசத்தவர்கள் இங்கு வந்து குடியேறிவிட்டாலும், பொதுவாக மலாய், சீன இந்திய இனத்தவர் தான் எண்ணிக்கையில் அதிகமாக இங்குள்ளனர். மொத்த மக்கள் தொகையில் 65.1 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள், 26.0 விழுக்காட்டினர் சீனர்கள், 7.7 விழுக்காட்டினர் இந்தியர்கள். மீத 1.2 விழுக்காட்டினர் பிற தேசத்தவர்கள்.

மலேசியா பிரித்தானிய காலனித்துவ அரசிடம் இருந்து 1957ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது.மூன்று இன மக்களும் எந்த பாகுபாடுமின்றி சுதந்திரமாக தமது மொழி மற்றும் சமய வழிபாட்டு முறைகளைப் பேணும் வகையில் மலேசிய சட்டங்கள் அமைந்திருக்கின்றன. மலேசியாவின் தேசிய மொழி மலாய். நாட்டின் சமயம் இஸ்லாம். இருப்பினும் தமிழர்கள் தமிழைப் படிக்கவும் இந்துக்கள் கோயில்களைக் கட்டி பராமரிக்கவும் சமய வழிபாடுகளை மேற்கொள்ளவும் இங்கு எந்த தடைகளும் இல்லை.

Posted at 11:32 pm by subaillamMake a comment
Welcome Aboard
மலேசியா ஒரு அழகிய நாடு. இங்கு மாலாய்காரர்கள், சீனர்களோடு, தமிழர்களும் வாழ்கின்றனர். எனது தாயகமான மலேசியாவைப் பற்றியும் அதன் சிறப்பு அம்சங்கள், மலேசியத் தமிழர்களின் வாழ்க்கை முறை போன்றவற்றை உலகத் தமிழர்களோடு பகிர்ந்து கொள்வதற்காக இந்த வலைப்பூவை உருவாக்கியிருக்கின்றேன். உங்கள் கருத்துக்களை தாராளமாக எழுதுங்கள். - சுபா