Tuesday, November 4, 2003

அப்பாவின் தோட்டம்

மலேசியா இயற்கை வளம் நிறைந்த ஒரு நாடு என்று எனது முந்தைய குறிப்பில் சொல்லியிருக்கின்றேன் அல்லவா? மலேசியாவின் சீதோஷ்ன நிலை சாதகமாக இருப்பதால் இங்கு பல விதமான காய்கறித்தோட்டங்கள், பழத் தோட்டங்கள் ஆகியவை அதிகம். பொதுவாக இல்லங்களிலும் தோட்டங்கள் வைத்திருப்பதைக் காண முடியும்.

என் அப்பாவுக்கு தாவரங்களை வளர்ப்பதென்றால் கொள்ளைப் பிரியம். வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பியதும் தனது நேரத்தையெல்லாம் வீட்டுத் தோட்டத்தில் தான் செலவிடுவார். அவரது கைவண்ணத்தில் பல பழமரங்களும் செடிகளும் வீட்டைச் சுற்றி காய்த்துக் குலுங்கும் அழகைக் காணலாம். அவரிடமிருந்து தான் எனக்கும் தாவரங்கள் மீது ஆர்வம் வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவரைப் போலவே எனக்கும் இந்த ஆர்வம் இருந்ததால் பிற்காலத்தில் நானும் எனது நேரத்தைத் தோட்டத்தில் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். [இப்போது அதற்கு வாய்ப்பில்லை. இங்கு ஜெர்மனியில் apartment-ல் இருந்து கொண்டு எங்கே தோட்டத்தைப் பற்றி நினைப்பது..:) ]

எங்கெங்கிருந்தோ பூச்செடிகளையும் பழமரங்களையும் தேடிப் பிடித்துக் கொண்டுவருவார். நண்பர்கள் வீட்டிற்குச் செல்லும் போது அவர்கள் வீட்டில் தனக்குப் பிடித்த ஏதாவது ஒரு செடி வகையைப் பார்த்து விட்டால் அதை வாங்கிக் கொண்டுவராமல் விடமாட்டார். அவ்வளவு தீவிரமான ஆசை அவருக்குச் செடிகளின் மேல்.



எங்கள் தோட்டத்தில் எங்களது தூரத்து உறவினர் ஒருவரிடமிருந்து வாங்கி வந்திருந்த தாய்லாந்து வகை பப்பாளி மரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அதில் என்ன ஆச்சரியம் என்றால் இந்த பப்பாளிப் பழத்தில் உள்ளே விதை இருக்காது. நல்ல சுவையான பழ வகை அது. அந்த மரம் பெரிதாகி காய்க்க ஆரம்பித்தவுடன் தான் ஆரம்பித்தது தொல்லையே. ஏற்கனவே எங்கள் தோட்டத்தில் ஒன்றுக்கு மூன்று பப்பாளி மரங்கள். அதில் இதுவும் சேர்ந்து கொண்டது. இப்போது நான்கு மரங்களும் காய்க்க ஆரம்பித்தால் அதை என்ன செய்வது? காய்க்கின்ற பழத்தை எல்லாம் சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்துவார் என் அப்பா. பழத்தை நன்றாக தோல் நீக்கி சுத்தம் செய்து நீளமான துண்டுகளாக வெட்டி எங்களுக்கு தட்டுக்களில் வைத்து பரிமாறி அதை நாங்கள் கோபத்தோடு சாப்பிட முடியாமல் சாப்பிடுவதை பார்க்க அவருக்கு அப்படி ஒரு ஆசை.

என் அப்பாவின் தொல்லை நாலுக்கு நாள் அதிகமாகும் வகையில் ஒவ்வொரு நாளும் பழங்கள் அதிகமாகக் காய்த்துக் கொண்டே தான் இருந்தன. சலிக்கச் சலிக்க பப்பாளிப் பழங்களை அப்போது சாப்பிட்டிருக்கின்றேன்.

இங்கு ஜெமனி வந்த பிறகு பப்பாளிப் பழத்தை வாங்குவதென்பது குதிரைக் கொம்பாக இருக்கின்றது. இது exotic fruits வகையைச் சார்ந்தது என்பதால் ஏகப்பட்ட கிராக்கி இந்தப்பழத்துக்கு. நண்பர் ஒருவர் வீட்டில் சென்ற சனிக்கிழமை இரவு உணவிற்குச் சென்றிருந்தேன். குட்டியான ஒரு பப்பாளிப்பழத்தைக் குட்டி குட்டி துண்டுகளாக வெட்டி வைத்திருந்தார்கள். என்ன செய்வது விலையான பழமாயிற்றே. பப்பாளிப் பழங்களை பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொண்டு எங்களை ஓட ஓட விரட்டும் அப்பாவின் ஞாபகம் அப்போது வராமல் இருக்குமா? ஏக்கம் தரும் நினைவுகள் அவை!

No comments:

Post a Comment