
கோத்தா இந்திரா காயாங்கான் (Kota Indera Kayangan) எனப் பெயர் சூட்டி இந்த நகரை வளமாக்கி இதனை அன்றைய கெடா நாட்டின் தலநகரமாக மன்னர் சுல்தான் தியாவுடின் அல்-முக்கராம் ஷா இப்னி அல்மர்ஹூம் சுல்தான் முஹையிடின் மன்சூர் ஷா அவர்கள் ஆக்கினார்கள் என்று நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இந்த மன்னரின் பெயர் மிக நீளமாக அமைந்திருப்பதை கவனித்திருப்பீர்கள் என நம்புகின்றேன். இவ்வாறான நீண்ட அடைமொழிகளுடன் கூடிய அரச சிறப்புப் பெயர் இன்றளவும் அரசருக்குச் சிறப்பாக வழங்கப்பட்டாலும் நடைமுறையில் சுருக்கி சிறிதாக்கி அழைக்கும் வழக்கம் தான் தற்சமயம் பயன்பாட்டில் உள்ளது.
மன்னர் சுல்தான் தியாவுடின் அல்-முக்கராம் ஷா இப்னி அல்மர்ஹூம் சுல்தான் முஹையிடின் மன்சூர் ஷா அவர்கள் பெர்லிஸை கெடா நாட்டின் தலைநகரமாக ஆக்கியதோடு மட்டும் இருந்து விடவில்லை. அன்றைய கெடா நாட்டில் பல மேம்பாடுகளை உருவாக்கியவர் என்ற பெறுமையும் இவருக்கு உண்டு.
இவரது சமாதிக்கு அருகில் உள்ள கற்சுவரில் இவரைப் பற்றிய தகவல்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதன் படி, இம்மன்னர்,
-வெள்ளியினாலும் செம்பினாலும் ஆன காசுகளை அறிமுகப்படுத்தியவர்
-கெடா சட்டம் (The Kedah Laws) எனக் குறிப்பிடப்படும் 16 பாகங்கள் கொண்ட புதிய சட்டங்களை உருவாக்கி அறிமுகப்படுத்தியவர்
-செயற்கை நீர்ப்பாசனம் ஒன்றினை பெர்லிஸ் நதியின் தெற்குப் பகுதியிலிருந்து கெடாவின் அனாக் புக்கிட் பகுதி வரை வரும் வகயில் நிர்மானித்தவர்
என பட்டியல் விளக்கம் அமைந்துள்ளது.

இந்தச் சிறப்பு மிக்க மன்னரின் சமாதி பெர்லிஸ் மானிலத்தில் குவாலா பெர்லிஸ் நகருக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இந்தச் சமாதியைச் சேர்ந்தார் போல பெர்லிஸ் மானிலத்தின் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்தச் சமாதி ஏறக்குறைய 400 ஆண்டுகள் ஆகி விட்ட பொழுதும் மிகவும் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டு சுற்றுலா பயணிகளும் பார்த்துச் செல்லும் வகையில் இச்சமாதி பராமரிக்கப்பட்டு வருகின்றது.
இந்தச் சமாதியைச் சேர்ந்தார் போல உள்ள அருங்காட்சியகம் நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்டு பல் வேறு காலகட்டங்களில் பெர்லிஸ் மானிலத்தின் நிலை பற்றியும் இம்மானிலம் இப்போதுள்ள பகுதியில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுகள் பற்றியும், இங்கு பல்லாயிரம் ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் மக்கள் போக்கு வரத்து, வாழ்க்கை முறை பற்றியும், அரசியல் பற்றியும், ஹிந்து புத்த மத இஸ்லாமிய மத தாக்கம் பற்றியும் மலாய் மக்களின் வாழ்க்கை கல்வி முறை பற்றியும் விளக்கும் பல்வேறு தகவல்களை வழங்கும் களைக் களஞ்சியமாக அமைந்துள்ளது.

இந்த அருங்காட்சியகத்தின் பெயர் கோத்தா காயாங் அருங்காட்சியகம் (மலாய் - Muzium Kota Kayang)
பெர்லிஸ் மானிலத்தைச் சுற்றிப் பார்க்கச் செல்பவர்களின் பட்டியலில் தவறாமல் இந்த அருங்காட்சியகம் இடம் பெற வேண்டும். இங்கே வரலாற்று விஷயங்களை அறிந்து கொள்வதோடு மட்டுமல்லாது அருங்காட்சியத்தின் பின் புறத்தில் அமைந்துள்ள பூந்தோட்டத்தில் அமர்ந்து தூய காற்றை சுவாசித்து இயற்கை அழகில் ஒன்றிப்போகலாம்.



அரேபிய மொழியில் கையெழுத்தில் அமைந்த பழம் நூல் ஒன்று.
பெர்லிஸ் நகருக்கு கோத்தா இந்திரா காயாங்கான் என்னும் பெயர் பொறுத்தமானதுதான். சந்தேகமேயில்லை!
தொடரும்
சுபா
No comments:
Post a Comment