Monday, January 19, 2004

UM - Tamil Faculty

தமிழகத்தைத் தவிர்த்து உலகில் தமிழர்கள் வாழும் பல நாடுகளில் பல்கலைக்கழகங்களில் தமிழ் துறை ஆய்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு இங்கு ஜெர்மனியில் கெல்ன் நகரில் உள்ள பல்கலைக் கழகத்தில் தான் தமிழகத்திற்கு அடுத்தாற் போல மிகப்பெரிய புத்தக சேகரிப்பு இந்த பல்லைக்கழக தமிழ் பிரிவில் இருக்கின்றது. கெல்ன்
பல்கலைக்கழகம் தவிர ஹைடல்பெர்க் மற்றும் டூபிங்கன் போன்ற நகரங்களிலும் தமிழ் மொழியியல் சார்ந்த ஆராய்ச்சிகளும் தமிழ் வகுப்புக்களும் ஜெர்மானியர்களால் ஜெர்மானியர்களுக்குப் படிப்பிக்கப்படுகின்றது. ஐரோப்பாவில் ஜெர்மனி தவிர்த்து போலந்து, ப்ரான்ஸ், இங்கிலாந்தில் உள்ள தமிழ்துறை உலகப் பிரசித்தி பெற்றவையாகவே விளங்குகின்றன. ரஷ்யாவின் மோஸ்கோ பல்கலைக்கழகத்திலும் இப்படித்தான். தமிழ் பேசும் ரஷ்ய பேராசிரியர்கள் ரஷ்ய மாணார்களுக்குத் தமிழ் மொழியில் பாடம் நடத்துகின்றார்கள். வேற்று மொழியினர் (இனத்தவர்) தமிழ் பேசுவதைக் கேட்கும் போது ரொம்பவே செய்ற்கையாக இருந்தாலும் மனமெல்லாம் ஆனந்தத்தில் பூரிக்கத்தான் செய்கின்றது.


அந்த வகையில் எங்கள் மலேசிய நாட்டிலும் ஒரு பல்கலைக்கழகத்தில் ஒரு தமிழ்துறை இருக்கின்றது. மலேசிய நாட்டின் மிகப்பழமையான மலாயா பல்கலக்கழகத்தில் தான் இந்த தமிழ் துறை இயங்கி வருகின்றது. தலைநகரின் அருகில் உள்ள பெட்டாலிங் ஜெயாவில் இந்த பல்கலைக்கழகம் உள்ளது. இப்போது ஏறக்குறைய 7 விரிவுரையாளர்களுடன் இந்த தமிழ் துறை இயங்கி வருகின்றது. இந்த தமிழ் துறையின் மாபெரும் சிறப்பு என்னவென்றால் இங்குள்ள தமிழ் புத்தகங்கள் தான். கிடைப்பதற்கு அரிதான பல முக்கிய நூல்கள் இங்கு கிடைப்பதாக நண்பர்கள் மூலமாக அறிந்திருக்கின்றேன்.

மலேசிய தமிழர்களைப் பிரதிந்திக்கும் ஆராய்ச்சி நிலையமாக இந்த தமிழ் துறை இயங்க வேண்டும் என்பதே என்னைப்போன்ற பலருக்கும் இருக்கின்ற ஆசை. தமிழின் தொன்மைகள் ஆராயபட வேண்டும். நல்ல தரமான ஆய்வுகள் நடக்க வேண்டும். கணினியைக் கொண்டு இணையம் வழி தமது ஆராய்ச்சித் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் தற்சமயம் கேள்விப்படுகின்ற விஷயங்களை நோக்கும்போது மாணவர்கள் மேம்போக்காக பாடங்களை படித்து பட்டம் பெறுவதற்கு மட்டுமே படிக்கின்றார்களோ என்ற சந்தேகம் தோன்றும் வகையில் பல நிகழ்வவுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

பண்டைய காலத்தில் தமிழர்கள் மட்டுமல்ல; ரோமானியர்கள், ஜெர்மானியர்கள், யூதர்கள் எல்லோரும் ஆராய்ச்சி செய்வதை மிகப் பெரிய ஒரு விஷயமாக கருதி பல்கலைக்கழகங்களை உருவாக்கினர் என்பதை வரலாற்றின் மூலம் தெரிந்து கொள்ள
முடிகின்றது. மனிதனின் ஆழ்மனத் தேடல்களுக்கு, ஆழமான ஆராய்ச்சிகளுக்குப் பல்கலைக்கழகங்கள் தானே வித்திட வேண்டும். அந்த வகையில் இப்போது இந்த தமிழ் துறைகள் செயல்படுகின்றதா என்பது கேள்விக் குறியாகவே இருகின்றது.

இப்படி நான் சொல்வதனால் குறை சொல்வதாக எடுத்துக் கொள்ள முடியாது. இது ஒரு ஆதங்கத்தின் வெளிப்பாடு. அவ்வளவுதான். ஒரு பள்ளிக்கூட அளவில் கல்வித்தரத்தை வைத்துக் கொண்டு இதுதான் ஆராய்ச்சி என்று சொல்லிக்
கொண்டிருந்தால் அதனால் நஷ்டம் வேறு யாருக்குமல்ல. மலேசிய நாட்டில் வாழ்கின்ற தமிழர்களுக்குத்தான்!

No comments:

Post a Comment