Wednesday, May 22, 2013

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 18

18. கெடா உங்களை அழைக்கின்றது

பெர்லிஸ் சென்று வந்தோம். அதற்கு அடுத்ததாக கீழே பயணிக்கும் போது அடுத்து வருவது கெடா மானிலம். பெர்லிப்ஸை பற்றி விளக்கும் போதே கெடா மானிலத்தின் பண்டைய வரலாற்றை ஓரளவுக்குச் சில இடங்களில் குறிப்பிட்டிருந்தேன். ஆனாலும் கெடாவைப் பற்றிச் சொல்ல அதிக விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. சரி இனி கெடாவிற்குப் பயணிப்போமா?

கெடா என்றவுடனேயே பலருக்கும் சோழமன்னர்களின் நினைவு மனதில் நிழலாட ஆரம்பித்துவிடும். ராஜேந்திர சோழனின் கடாரத்திற்கான பயணம், பின்னர் இப்பகுதியைப் போரிட்டு வென்று ஆட்சி செய்தமை என ஆயிரம் ஆண்டு பழமை கொண்ட சரித்திரத்தை நம்மால் மறக்க முடியாது. கடந்த 2000 ஆண்டுகால சரித்திரத்தில் தீபகற்ப மலேசியாவில் மிகப் பிரசித்தி பெற்ற மானிலமாகவும் உலகின் பல பகுதிகளிலிருந்து வணிகர்களும், அரசியல் ஆர்வலர்களும், சமய போதகர்களும் வந்து, வாழ்ந்து, சென்ற ஒரு இடமாக இருந்ததில் கெடா மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. இன்றைய காலகட்டத்தில் பொருளாதார ரீதியில் சிலாங்கூர், பினாங்கு , பேராக், ஜோகூர் போன்ற  மானிலங்கள் அதிக வளர்ச்சியடைந்த மானிலங்களாகத் திகழ்ந்தாலும் கெடாவின் சிறப்புக்களை மறந்து ஒதுக்கி விட முடியாது.



பூகோள அமைப்பின் படி தாய்லாந்திற்கு மிக அருகில் இந்த மானிலம் அமைந்திருக்கின்றது.இது மலேசியாவின் வடக்கு மானிலங்களில் ஒன்று. பினாங்கு, பேராக், பெர்லிஸ் ஆகிய மூன்று மானிலங்களையும் எல்லையாகக் கொண்டுள்ளது.

7, 8ம் நூற்றாண்டில் ஸ்ரீவிஜயா பேரரசின் ஆட்சி, பின்னர் சோழ மன்னர்களின் ஆட்சி, பின்னர் இந்தப் பேரரசு வலிமை இழக்க, அரேபிய வர்த்தகர்களின் வருகையினால் இஸ்லாமிய மதம் பரவுதல், பின்னர் மலாய் மன்னர்கள் ஆட்சி, ஆங்கிலேய வருகையினால் ஆங்கிலேய ஆட்சிக்குட்படுதல், 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் ஜப்பானிய ஆட்சி,பின்னர் மீண்டும் ஆங்கிலேயர்களின் ஆட்சி என இருந்து 1957ல் சுதந்திர மலேசியா தோன்றிய போது அதன் பகுதியாகி இப்போது சுதந்திர மானிலங்களில் ஒன்றாகக் கெடா திகழ்கின்றது.


மலேசிய வரைபடத்தில் கெடா

ஆங்கிலேயர்களிடமிருந்து மலேசிய நாட்டின் சுதந்திரத்திற்கு உழைத்தவர்களில் மலேசிய மக்களின் மனதை விட்டு அகலாத சுதந்திரத் தந்தை துங்கு அப்துல் ரஹ்மான் அவர்கள். சுதந்திர மலேசியாவின் முதலாவது  முதலமைச்சராக இப்பதவியை அலங்கரித்தவர் அவர். அவர் இந்தக்  கெடா மானிலத்தைப் பூர்வீகமாக கொண்டவரே.

மலேசிய சுதந்திரத்திற்குப் பின்னர் மக்களாட்சி தொடங்கியது. ஆனாலும் தீபகற்ப மலேசியா பல சிறிய சிறிய பகுதிகளாகப் (மாநிலங்களாக) பிரிக்கப்பட்டு மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்தமையால் மன்னராட்சியை முழுமையாக ஒதுக்கும் நிலை ஏற்படவில்லை.  மன்னராட்சி என்பது இல்லையென்றாகிய போதிலும் 9 மானிலங்களின் சுல்தான்கள் ஐந்து ஆண்டுகள் ஆட்சிசெய்யும் வகையில் சுதந்திர மலேசியாவின் அரசியலமைப்புச் சட்டம் அமைந்துள்ளது. அந்த வகையில் தற்சமயம் மலேசியாவின் அதிகாரப்பூர்வ மன்னராக பதவி வகிப்பவர் கெடா மானிலத்தைச் சேர்ந்த சுல்தான் துவான்கு அப்துல் ஹலீம் அவர்கள்.

இத்தொடரின் அடுத்த பகுதிகளில் கெடா மானிலத்தைப் பற்றிய தகவல்களை எனக்குத் தெரிந்தவரை  பகிர்ந்து கொள்கின்றேன்.

சரி.. பயணம் செய்ய புறப்பட்டு விட்டீர்களா? ரிக்‌ஷா காத்திருக்கின்றது.. வாருங்கள். :-))



தொடரும்...

சுபா
குறிப்பு: படங்கள் இணையத்தில் எடுக்கப்பட்டவை.

No comments:

Post a Comment