Friday, May 31, 2013

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 19

19. சுதந்திரத் தந்தை



கெடாவின் சிறப்புக்களில் எதனைப் பற்றி சொல்லி இந்த மானிலத்தின் சிறப்புக்களை விவரிக்கலாம் என நினைத்தால் மனதில் முதலில் தோன்றுவது துங்கு அப்துல் ரஹ்மான்  என்னும் ஒரு மனிதரைப் பற்றிய நினைவுகள் தான். சுதந்திர மலேசியாவின் முதல் பிரதமர், மலேசிய சுதந்திரத்திற்குப் போராடிய குழுவினருக்குத் தலைமை தாங்கியவர் என்பதோடு சுதந்திரம் பெற்ற மலேசியாவை உலக நாடுகளின்  வரிசையில் மூன்றாம் உலக நாடுகள் என்ற அந்தஸ்திலிருந்து படிப்படியாக மேலே கொண்டு வர ஆக்கப்பூர்வமான திட்டங்களை வகுத்து செயல்படுத்தியவர்களில் ஒருவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

கெடா அரச பரம்பரையில் உதித்தவர் இவர். ஆங்கில ஆட்சியிலிருந்த மலாயாவில் கெடா மானிலத்தின் சுல்தானாக இருந்த சுல்தான் அப்துல் ஹமீட் அலீம் ஷா அவர்களின் நான்காம் மனைவியான தாய்லாந்து நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட அரச வம்சத்தைச் சேர்ந்த மனைவிக்குப்  பிறந்த 7வது குழந்தை இவர்.



அரச வம்சத்தில் பிறந்திருந்தாலும் சாதாரண கிராமத்துக் குழந்தைகளோடும் பழகி சாதாரண மக்களின் வாழ்க்கை நிலையை அறிந்த ஒரு சாதாரண மனிதராகவே துங்கு வளர்ந்தார். அரச குடும்பத்தில் பிறந்திருந்தமையாலும்  கல்வியில் நன்கு சிறந்து விளங்கியமையாலும் லண்டனில் உயர்கல்வி கற்க வாய்ப்பு அமைய அங்கு சென்றார். ஒரு கல்வி நிதி உதவியும் கிடைக்க அவர் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க இணைந்தார். அவர் லண்டன் சென்ற போது ஒரு கார்கோ கப்பலில் மேலும் 12 பேருடன் தான் பயணித்தாராம்.

முதலில் வரலாறு சட்டம் ஆகிய இரு துறைகளில் பட்டம் பெற்று 5 ஆண்டுகள் கழித்து பினாங்கு திரும்பி அங்கு பணியாற்ற முயற்சித்த  வேளையில் கெடா அரசு அவர் மேலும் சட்டத்துறையில் படித்து ஹானர்ஸ் பட்டம் பெற வேண்டும் என கட்டளையிட இரண்டாம் முறை லண்டனுக்கு தனது 26ம் வயதில் பயணித்தார். அப்போது அரசில் சுல்தானாக இருந்தவர் இவரது மூத்த அண்ணன். இந்த இரண்டாம் பயணமும் புலம் பெயர்வும் துங்கு அப்துல் ரஹ்மான் அவர்களின் வாழ்க்கையில்  மேலும் புதிய உலகத்தைக் காணும் வாய்ப்பை அளித்தது. பல்வேறு நாடுகளிலிருந்து வந்து படித்த மாணவர்களும் உடன் இருந்தமையால் உலகப் பார்வை என்பது துங்கு அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு அனுபவப் பூர்வமாக அமைந்தது. ஏட்டில் படிப்பதை விட அனுபவத்தில் உணரும் கல்வி தரும் பாதிப்பு ஆழமாகத்தானே இருக்கும்.

1931க்குப் பிறகு சட்டக் கல்வியை முடித்து  தாயகம் திரும்பிய உடன் இவரைக்  கெடா அரசு கூலிம் நகரில் ஒரு அரசாங்கப் பணியில் அமர்த்தியது. இங்கே இருந்த காலகட்டத்தில் ஒரு சீனப் பெண்மணியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்பெண்மணி இஸ்லாமிய மதத்தைத் தழுவி மெரியம் சோங் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார். ஆனால் சில ஆண்டுகளில் இவர் இறந்து விட இங்கிலாந்தில் இவர் முன்னர் நட்பில் இருந்த ஆங்கிலப் பெண்மணி  வைலட்டுடன்  மீண்டும் ஏற்பட்ட நட்பு தொடரவே அடுத்த  சில ஆண்டுகளில் இவர் வைலட்டை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்தத் திருமணமும் நெடுநாள் நீடிக்கவில்லை. மணமுறிவில் முடிய விவாகரத்துப் பெற்று பிரிந்தனர். 2ம் உலகப்போர் சமயத்தில் இவரது அன்னையாரின் உதவியுடன் அரச குடும்பத்துக்கு நெருக்கமான ஒரு மலாய் குடும்பத்துப் பெண்மனியை இவர் மீண்டும் மணந்தார். இதற்குப் பின்னரும் நான்காவது முறையாக ஒரு திருமணமும் செய்து கொண்டார். தனிப்பட்ட வாழ்க்கையின் அனுபவங்கள் இவரது அரசியல் வாழ்க்கையைப் பாதிக்கவில்லை. சமூக சிந்தனை  என்பது தொழில் அளவில் என்றில்லாமல் மனத்தளவில் ஆழ இருந்தமையால் அவ்வப்போது தன்னைச் சுற்றி நிகழும் அரசியல் விஷயங்களிலும் பங்கெடுத்து வந்தார்.

இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியப் படைகள் தோல்வியடைந்து வெளியேறியபோது மலாயாவில் இப்படைகள் பெரிதும் ஆக்கிரமித்திருந்த கெடா மானிலத்திலிருந்தும் வெளியேறியது. இந்த நிகழ்வு அப்போதை மலாய் அரசியல் வட்டாரத்தில் சுதந்திரம் பெற வேண்டும் என்ற எண்ணத்தை மிகத் தீவிரப்படுத்த ஆரம்பித்தது. அப்போது 1946ல் மீண்டும் தனது சட்டக்கல்வியைத்  தொடர விரும்பி விண்ணப்பித்து லண்டன் பயணித்தார் துங்கு அப்துல் ரஹ்மான். மிகச் சிறப்பாகத் தேறி மீண்டும் 1949ல் மலாயா திரும்பினார். அப்போது குடும்பத்தாருடன் துங்கு அவர்கள் பினாங்கில் வசித்து வந்தார்.

மலாயாவின் அம்னோ அரசியல் கட்சியை டத்தோ ஓன் பின் ஜபார் ஆரம்பித்து சுதந்திர சிந்தனையை மக்கள் மத்தியில் பரவலாகக் கொண்டு சென்று கொண்டிருந்த  நேரம் அது. கல்வித்தகுதியுடனும் ஆர்வத்துடனும் வந்து சேர்ந்திருக்கும் துங்கு அப்துல் ரஹ்மானை டத்தோ ஓன் வரவேற்று கெடா மானிலத்திற்கான கிளையின் தலைவராகப் பொருப்பளித்தார். இதுவே துங்கு அப்துல் ரஹ்மானின் அதிகாரப்பூர்வ அரசியல் நுழைவு என்று கூறலாம்.

மலாயாவில் அச்சமயம் மலாய் இனத்தவர்கள் மட்டுமென்றில்லை. சுரங்கத் தொழிலுக்காக வந்து சேர்ந்த ஏராளமான சீனர்களும் ரயில் பாதை அமைக்கவும், ரப்பர் செம்பனைத் தோட்டங்களில் பணி புரிய வந்திருந்த தமிழகத் தமிழர்களும், ஆசிரியர்களாகவும் காவல் துறை அதிகாரிகளாகவும், அரசாங்கத்தில் பணியாற்றவும்  வந்திருந்த இலங்கைத் தமிழர்களும் மலாயாவில் நிறைந்திருந்தனர். மலாயா ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு உரிய ஒரு நாடு என்று சொல்வதற்கு இடமில்லை என்பது வரலாற்று உண்மை. சில ஆயிரம் ஆண்டுகளாக மடகாஸ்கார், இந்தியா, சீனா, கொரியா, ஜப்பான், இந்தோனீசியா, தாய்லாந்து, கம்போடியா பர்மா, ஐரோப்பா என பல நாடுகளிலிருந்தும் கண்டங்களிலிருந்து இங்கு மக்கள் குடியேற்றம் நடந்து தீவிர இனக்கலப்பு நிகழ்ந்த ஒரு நாடு என்பதையும் இவ்வேளையில் குறிப்பிட வேண்டியது அவசியமாகின்றது.

ஆக அம்னோ அரசியல் கட்சி  மலாய் இனத்துக்காக மட்டுமென்றில்லாமல் பெரும்பான்மை சமூகங்களான  சீனர் தமிழர் பிரதினிதிகளையும் இணைத்து செயல்பட வேண்டும் என்று துங்கு விரும்ப தலைமைத்துவத்தில் விரிசல் வர ஆரம்பித்த்தது. இதனால் ஆதரவு குறைந்து அம்னோ ஸ்தாபகர் டத்தோ ஓன் பதவி விலக 1951ல் அம்னோ தலைமைத்துவம் முழுமையாக துங்கு அப்துல் ரஹ்மானுக்கு வந்து சேர்ந்தது. தான் தலைமை பொறுப்பேற்று உரையாற்றிய முதல் அம்னோ கூட்டத்தில் மலேசிய சுதந்திரம் விரைவில் உருவாக வேண்டும் என்று துங்கு அப்துல் ரஹ்மான் அவர்கள் வலியுறுத்தினார்கள்.

195ல் சர் ஹென்றி கர்னி அவர்கள்   மலாயாவில் செயல்பட்டு வந்த கம்யூனிஸ்ட்களால் கொல்லப்பட்டதும் சர் ஜெரால்ட் டெம்ப்லர்  பொறுப்பேற்றுக் கொண்டார். மலேசிய சுதந்திரத்திற்குப் போராடி வரும் பல்வேறு குழுக்களோடும் இணைந்து சுதந்திரத்திற்காக ஒத்துழைக்க இவர் ஆரம்பித்தார்.

இது சமயம்  கர்னல் எச்.எஸ்.லீ அவர்தம் சீனமக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து 1949ல் மலேசிய சீனர் சங்கத்தை ஏற்படுத்தியிருந்தனர். 1946ல் மலேசிய இந்தியர் காங்கிரஸ் உருவாக்கம் பெற்றிருந்தது.

1955ல் மலேசிய இந்தியர் காங்கிரஸின் தலைவராக துன் சம்பந்தன் அவர்கள் பொறுப்பேற்றார்கள். அது சமயம் மலாய்காரர்களைப் பிரதினிதிக்கும் அம்னோ, சீனர்களைப் பிரதினிதிக்கும் மலேசிய சீனர் சங்கம் இந்தியர்களைப் பிரதினிதிக்கும் மலேசிய இந்திய காங்கிரஸ் மூன்றும் கூட்டணி அமைத்து மலாயாவிற்கு சுதந்திரம் கோரின. இடையில் இங்கிலாந்தின் லண்டனில் ஒரு சந்திப்பு நிகழ்ந்து சுதந்திர மலேசியாவின் சட்டதிட்டங்கள் அரசியல் தரவுகள் ஆராயபப்ட்டன.

மலேசிய சுதந்திரத்திற்கான பல அரசியல் சந்திப்புக்கள் 1956ல் நிகழ்ந்தன. மலாயாவின் எல்லா மானிலங்களின் சுல்தான்களிடமும் பேசி சுதந்திர மக்களாட்சி பற்றிய  முயற்சிக்கு சம்மதம் பெற்று இரண்டு குழுக்கலாக சிங்கப்பூர் பிறகு காராச்சி சென்று இங்கிலாந்தில் மலேசிய சுதந்திரம் பற்றிய முடிவுகள் எடுப்பது என தீர்மானம் ஆனது. இந்தப் பயணத்தின் போது இந்த அரசியல் பிரமுகர்கள்  பயணித்த கப்பலின் பெயர் ஆசியா. இது ஒரு இத்தாலிய தயாரிப்பில் உருவான கப்பல்.  லண்டனில்  1956ல் நடந்த இந்தச் சந்திப்பில் துங்கு அப்துல் ரஹ்மானின் 53ம் பிறந்த நாள் அன்று அதாவது 8ம் தேதி பிப்ரவரி மாதம்  மலேசிய சுதந்திரம் கையெழுத்து உடன்படிக்கை மலாயா இங்கிலாந்து பிரதினிதிகளால்  லண்டனில் கையொப்பமிடப்பட்டது.



பின்னர் மலேசியா திரும்பியதும் சுதந்திர நாள் பிரகடனத்திற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகின. வரலாற்று சிறப்புமிக்க மலாக்க மானிலத்தில் சுதந்திரப் பிரகடனம் நடத்துவது என முடிவானது. ஆகஸ்டு மாதம் 31ம் நாள்  இந்த நிகழ்வு நடப்பதற்கான எல்லா தயாரிப்புக்களும் ஒவ்வொன்றாக நிகழ்ந்தன.

ஆகஸ்டு 30ம் தேதி நள்ளிரவில் மலாக்காவின் ஸ்டேடியம் மெர்டேக்கா அரங்கில் பொது மக்கள் கூட ஆரம்பித்தனர். 30ம் நாள் முடிந்து 31ம் நாள் தொடங்கும் நேரத்தில் மலேசிய தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. தேசிய கீதம் முடிந்த அடுத்த  நிமிடம் மெர்டேக்கா என்ற  துங்கு அப்துல் ரஹ்மானின் ஒலியை அடுத்து அங்கு கூடியிருந்த பத்தாயிரம் வருகையாளரும் தொடர்ந்து ஒலி எழுப்பி சுதந்திரத்தை வரவேற்றனர். மலேசிய வரலாற்றில் உணர்ச்சி  மிகுந்த மறக்க முடியாத ஒரு நன்னாள் இது. புதிய மலேசியா அன்று பிறந்தது.



தொடர்ந்து மலேசியாவின் பிரதம மந்திரியாக துங்கு அப்துல் ரஹ்மான் சில  ஆண்டுகள் பதவி வகிந்து வந்தார். பல திட்டங்கள் உருவாகின. ஆனால்  அரசியல் தலைவர்களுக்கே  உரிய பல முகங்கள் இவருக்கும் உண்டு. 1970ம் ஆண்டில் அரசியல் பிரச்சனைகளால் இவர் தனது பதவியை விட்டு விலக வேண்டிய சூழல் உருவானது.

அரசியலில் இருந்து விடுபட்டாலும் தனது இறுதிக் காலம் வரை அவர் தொடர்ந்து பல சமூக சங்கங்களில் இணைந்து செயல்பட்டு வந்தார். பினாங்கிலேயே பிறகு தங்கி விட்டார்.



எனது  பள்ளிக் காலங்களில் இடை நிலைப்பள்ளிக்குச் செல்லும் போது ஒவ்வொரு நாளும் அவரது இல்லத்தைக் கடந்து செல்வது வழக்கம். பின்னர் அவரது இல்லம் ஒரு கல்லூரியாக வடிவ மாற்றம் கண்டது. இப்போது இது துங்கு அப்துல் ரஹ்மான் காலேஜ் என்று இவர் பெயர் சொல்லி இந்த மண்டபம் நிற்கின்றது. இவருக்கு சொந்தக் குழந்தைகளோடு மேலும் சில வளர்ப்புக் குழந்தைகளும் உண்டு.

கெடாவின் வரலாற்றில் மட்டுமல்லாமல் மலேசிய வரலாற்றிலும் மறக்கப்பட முடியாத ஒருவர் துங்கு அப்துல் ரஹ்மான்.


மலேசிய சுதத்திர தினம் பற்றிய பழைய வீடியோக்கள் யூடியூபில்:
http://www.youtube.com/watch?v=SeMTEpQLudo
http://www.youtube.com/watch?v=J0SRKtivcQ8

படங்கள்: இணையத்தில் எடுக்கப்பட்டவை. 

தொடரும்..

சுபா

No comments:

Post a Comment